அந்த ஊரில் ஏறக்குறைய ஐநூறு குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டு வண்ணார் குடும்பங்கள், ஒரு நாவிதர் குடும்பம், நான்கு நாடார் குடும்பங்கள், ஆறு பறையர் குடும்பங்கள் ஆகியவற்றோடு நான்கு ஆசாரி என்று அழைக்கப்படும் பொற்கொல்லர் குடும்பங்களும் இருக்கின்றன. மற்ற அனைத்துக் குடும்பங்களும் ஒரு இடைத்தட்டு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவை.
அந்த ஆசாரி குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் மல்லையா என்ற பெயரில் இருபது வயதுப் பையன் ஒருவன் இருந்தான். சற்று அசாதாரமான குணம் கொண்டவன். ஆஜானுபாகு வான உடம்பு. முரட்டுத்தனமான வேலைகளைக் கூட அனாயாசமாகச் செய்யக் கூடியவன். பொதுவாக சாதுவாக நடந்துகொள்ளக் கூடியவன்தான். ஆனால் சிலவேளைகளில் சாது மிரண்டால் காடு கொள்ளாது அல்லவா? அதுபோல் இந்த சாது மிரளும்போது அந்த ஊர் கொள்வதில்லை.
ஆதிக்க சாதியினர் தங்களது பெரும்பான்மை பலத்தால் மற்ற சாதிக்காரர்களை சற்று இகழ்ச்சியாக நடத்துவது வழக்கம். தங்களது சாதியைத் தவிர மற்ற அனைத்து சாதிகளும் தங்களுக்குக் கீழானவர்கள்தான் என்று எண்ணுபவர்கள். ஆசாரி இனத்தவரை அவர்கள் ‘'தட்டான்’ என்றும் ‘'தட்டாப் பயலே’ என்றும் அழைப்பது வழக்கம். ஊர்மக்கள் தன்னை அப்படி விளிப்பதை மல்லையா வெறுத்தான். அப்படி அழைப்பது தன்னை “நாயே” என்று அழைப்பதைப் போல் உணர்ந்தான். ஆரம்பத்தில் தன்னை ‘'டே தட்டாப் பயலே’ என்று அழைத்தவர்கள் மீது கடுங் கோபங்கொண்டு திட்டிக்கொண்டிருந்தான். அதுவே அவனது பலஹீனம் ஆகிவிட்டது. அவனைக் கேலிசெய்வதற்காகவே அந்த வார்த்தையைச் சொல்லி அனைவரும் கூப்பிட ஆரம்பித்துவிட்டனர். மிகவும் எரிச்சல் அடைந்த அவன் அப்படித் தன்னை அழைப்பவர்களை அடிக்க ஆரம்பித்துவிட்டான். நாளாக நாளாக கோபம் அதிகமாகித் தன்னைக் கேலி செய்பவர்களைத் துவம்சம் பண்ணத் தொடங்கிவிட்டான். அதன் காரணமாக அவனது தந்தை பலபேரிடம் மன்னிப்புக் கோர வேண்டியிருந்தது. மல்லையா அடித்த அடியில் ஒருவருக்கு மூன்று பற்கள் உடைந்துவிட்டன. அதற்கு மல்லைலையாவின் தந்தை அய்யாவு கட்டிய தண்டம் பத்தாயிரம் ரூபாய். மற்றொரு நபரின் மண்டையை உடைத்ததற்காக அய்யாவுக்கு செருப்படி கிடைத்தது. இவை சில உதாரணங்கள் மட்டுமே!
ஆசாரிமார்கள் தற்பொழுதெல்லாம் பெயருக்குத்தான் பொற்கொல்லர்கள்; ஒருவர்கூட தங்கநகை செய்யும் தொழில் செய்வதில்லை. அந்தத் தொழிலிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. இருந்த நான்கு குடும்பங்களில் இரண்டு குடும்பங்கள் விவசாயக் கூலிக் குடும்பங்களாக மாறிவிட்டன. ஒரு குடும்பம் ஜோதிடர் குடும்பமாகிவிட்டது. மிச்சமிருப்பது அய்யாவு மட்டும்தான். அவர் மளிகைக்கடை வைத்திருந்தார்.
நான் அய்யாவு வீட்டிற்குப் பக்கத்து வீட்டுக்காரன். எனக்கு மதுரையில் அரசாங்க உத்தியோகம். அந்தக் கிராமத்தில் எனது வயது முதிர்ந்த பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க கிராமத்திற்கு அடிக்கடி வந்துபோவேன். அவர்களைப் பார்க்க நான் செல்லும் போதெல்லாம் தவறாமல் மல்லையா என்னைப் பார்க்க வந்துவிடுவான். இடுப்பில் ஒரு லுங்கி மட்டும் கட்டியிருப்பான். மேல்சட்டை போடும் பழக்கமில்லாதவன். தோளில் ஒரு துண்டைப் போட்டிருப்பான். அவனது வாயிலிருந்து உமிழ்நீர் சன்னமாக வழிந்துகொண்டிருக்கும்.அதை மறைப்பதற்காக தோளில் கிடக்கும் துண்டை இழுத்து வாயை மூடிவைத்திருப்பான். பேசும்போது மட்டும் துண்டை விலக்கிப் பேசிவிட்டு மறுபடியும் மூடிக்கொள்வான். அய்யாவு குடும்பமும் எங்களது குடும்பமும் வெவ்வேறு சமுகத்தைச் சார்ந்தவை என்றபோதிலும் மாமன் மச்சான் உறவு கொண்டாடிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் என்னை மல்லையா மாமாவென்று அழைப்பதும் அவனை நான் மாப்பிள்ளை என்று அழைப்பதும் வழக்கம். அதேபோல் மல்லையாவின் தந்தை அய்யாவுவை நான் மாமா என முறைசொல்லித்தான் அழைப்பேன். ஊருக்கு ஒரு கிலோமீட்டர் தள்ளி மெயின் ரோட்டில் ஒரு புரோட்டாக் கடை இருக்கிறது. அக்கடைக்குச் சென்று புரோட்டாவும் ஆம்லெட்டும் சாப்பிடுவதென்றால் மல்லையாவுக்கு உயிர். புரோட்டா ஆம்லெட் சாப்பிடக் காசு கொடுப்பதாயிருந்தால் போதும் எவ்வளவு கடினமான வேலையையும் செய்து முடிப்பான் அவன். என்னைப் போன்றவர்களைப் பார்த்தால் வேலை எதுவும் செய்யாமலேயே உரிமையுடன் காசு கேட்பான். வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் “ மாமா, பொரட்டா ஆம்லேட் சாப்புட காசு குடு” என்று உரிமையோடு கேட்பான். ஐம்பதோ நூறோ கொடுப்பேன். அந்த நொடியிலேயே புரோட்டா கடையை நோக்கி ஓடிவிடுவான்.
கடந்த இரண்டு வருடங்களாக நான் ஊருக்கு வரவில்லை. என் மகள் காதல் திருமணம் செய்துகொண்டதை எனது பெற்றோர்கள் ஏற்கவில்லை. அவர்கள் திருமணத்திற்கே வரவில்லை. அந்தக் கோபத்தில் நானும் அவர்களைப் பார்க்க வருவதை நிறுத்திக் கொண்டிருந்தேன். எனது தாயாருக்கு உடம்பு சரியில்லை எனக் கேள்வியுற்றேன். மனசு கேட்கவில்லை. இன்று அவரைப் பார்ப்பதற்காக ஊருக்கு வந்துவிட்டேன்.
அப்பாவையும் அம்மாவையும் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும் போதே மல்லையாவின் நினைவு எனக்கு வந்துவந்து போனது. அதுவொரு அந்தி சாய்ந்த நேரம். மின்சாரத்தடை வேறு ஏற்பட்டிருந்தது. அந்தப் பாதி இருளில் நான் எதிர்பார்த்த அந்த உருவம் கதவருகில் வந்து நின்றது. மேல்சட்டை இல்லாத மேனியில் போர்த்தியிருந்த துண்டு வாய்வரை இழுத்து மூடப்பட்டிருந்தது. தோற்றத்தில் ஏதோவொன்று குறைந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆம், உருவம் மல்லையாவினதைப் போன்று ஓங்கு தாங்காக இல்லை. ஒருவேளை மல்லையா நோய்வாய்ப் பட்டிருப்பானோ என்று நினைப்பதற்குள் அந்த உருவம் கையை நீட்டி “பொரட்டா ஆம்லேட் சாப்புட காசு குடு, மாப்பள” என்றது.
வந்திருப்பது யார் என்பதைப் புரிந்துகொள்ள அதிகநேரம் ஆகவில்லை. அய்யாவு! மல்லையாவின் தகப்பனார்!. ஆம்! அவரேதான். என்னவாயிற்று அவருக்கு!...யோசித்துக்கொண்டே ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். படக்கென்று பறித்துக்கொண்டு விறுவிறு என்று வெளியேறிவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. படுத்திருந்த அம்மா மெதுவாக எழுந்து அமர்ந்து விபரம் சொல்ல ஆரம்பித்தார்.
“அது ஒன்னுமில்லப்பா, அவன் மகன் செத்ததில இருந்து இப்பிடி ஆயிட்டான்” என்றார்.
“என்ன மல்லையா எறந்துட்டானா?” அதிர்ச்சியுடன் கேட்டேன் நான்.
“ஆமாப்பா அது ஒரு பெரிய கத. இந்த மல்லையாப் பய தெனமும் ஒருத்தன அடிச்சுப் போட்டு வந்துக்கிருந்தான். அய்யாவு தெண்டங்கட்டியே ஓஞ்சுபோனான். மளிகைக் கடை மொதலு பூராவும் காலியாப் பூயி கடசியில கடையே இல்லாமப் போச்சு” என்ற அம்மாவை இடைமறித்து “அதுலயே அவர் பைத்தியமாகிட்டாரா?” எனக் கேட்டேன்.
“பொறு! முழுக்கதையையும் சொல்றேன்” என்றவர் தொடர்ந்தார்.
“வடக்குத்தெரு வாசித்தேவன் இருக்கானே அவன் ஒருநாள் மழ வாரது மாதிரி இருந்தனால அந்த வழியா போய்க்கிட்டு இருந்த மல்லையாவக் கூப்புட்டு ‘ ஏப்பா இந்த சிமிண்டு மூட்டைகள கொஞ்சம் வீட்டுக்குள்ள தூக்கிப் போடுப்பா’ ன்டு சொல்ல, அதுக்கு மல்லையா வழக்கம் போல ‘பொரட்டா ஆம்லேட் சாப்புட காசுகுடு’ன்னு கேக்க, ‘நாலு மூட்டயத் தூக்கிப் போடுறதுக்கு தட்டாப் பயலுக்குக் காசு குடுக்கணுமாக்கும்! போடா தட்டாப் பயலே’ ன்னு சொல்லிப்புட்டான். உடனே மல்லையனுக்குத் தாங்க முடியாத கோவம் வந்ருச்சு. வாசித்தேவன தலைக்குமேல தூக்கி சுவத்துல எறிஞ்சிருக்கான். அதுல அவனுக்குப் பலமான அடி; இடுப்பு ஒடிஞ்சுபோச்சு. ரொம்ப நாளா ஆஸ்பத்திரியில கெடந்தான். சொகமாகல. இப்ப வீட்டுல படுத்த படுக்கையாக் கெடக்கான். அவன் மகங்க ரெண்டு எளந்தாரிப் பயங்க இருக்காங்க. அப்பன் அடிபட்டவொடன அருவாள எடுத்துக்கிட்டு வெளியேறிட்டாங்க மல்லையா வெட்டுறதுக்கு. ‘ஒன்னு மல்லையாவக்குடு இல்லன்னா உன் குடும்பத்தையே அழிச்சுப்புடுவோம்’ அப்படீன்னு அய்யாவுவத் தொல்ல பண்ணுணாங்க. அய்யாவு மல்லையாவ காப்பத்த முடியாதுங்குறதத் தெரிஞ்சுகிட்டு ஒரு தப்பான காரியம் பண்ணிப்புட்டான்” என்றார்.
மேலும் எனது தாயார் சொன்னவற்றின் சாரம்: அய்யாவுக்கு இன்னும் இண்டு பெண்பிள்ளைகள் உண்டு. அவர்கள் மல்லையாவுக்கு மூத்தவர்கள். இருவரும் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கிறார்கள். வாசித்தேவனின் மகன்களால் அவர்களுக்கு ஏதும் தீங்கு ஏற்படக்கூடும் எற்று அய்யாவு அஞ்சினார். அவர்கள் தொல்லை இல்லாமல் வாழ்வதற்கான வழியைத் தேடினார். அவருக்கு எந்த வழியும் தெரியவில்லை. ஒருநாள் இரவு வேண்டிய அளவு புரோட்டா ஆம்லெட் வாங்கிவந்து, சால்னாவில் பூச்சி மருந்தைக் கலக்கி, தனது மனைவியையும் மல்லையாவையும் சாப்பிட வைத்துப் பின்னர் தானும் சாப்பிட்டிருக்கிறார். மயங்கிக் கிடந்த மூவரையும் மறுநாள் கிராமத்தார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது மனைவியும் மகன் மல்லையாவும் இறந்து விட்டனர்.அய்யாவு மட்டும் காப்பாற்றப்பட்டார். அன்றுமுதல் அய்யாவு மல்லையாவாக வாழ்ந்து வருகிறார்.
- மனோந்திரா