கல்லூரியிலிருந்து அரைமணி நேர இடைவெளிகளில் தாவித் தாவி இரண்டு பேருந்துகளில் பயணித்து ஒரு வழியாக அப்சல் ஊரை அடைந்திருந்த போது மணி மாலை ஐந்தரையாகியிருந்தது. நோன்பு நேரமென்பதால் பண்டிகைக் கால ஜோருடன் தெருவில் பலகாரக் கடைகள் விதவிதமான வாசனைகள் சூழ ஆங்காங்கே முளைத்திருந்தன.
அதிலும் அவனுக்கு மிகவும் பிடித்தமான ‘வாடா’ என்றைழைக்கப்படும் அரிசி மாவில் மசாலா மற்றும் இறால் ஸ்டஃப் செய்யப்பட்டு பொரித்த வடை போன்ற பதார்த்ததின் மணம் பேருந்திலிருந்து இறங்கியதிலிருந்தே நாவின் சுவைமொட்டுகள் ஊற்று நீர் போல் வெடித்து ஓடுமளவிற்கு வழியெங்கும் இழுத்துக் கொண்டிருந்தது.
அந்த லயிப்பின் வெளிப்பாடோ அல்லது அந்த மனோ இச்சையிலிருந்து விடுபடவோ அப்போது ட்ரெண்டிலிருந்த பாட்டொன்றை சன்னமானக் குரலில் முணுமுணுத்துக் கொண்டே சைக்கிளில் மிதமான வேகத்தில் வந்தவன் குறிப்பிட்ட அந்த வீட்டைக் கண்டதும் சற்று வளைப்போல் போல் அதன் வாசல் பக்கத்தை அடைந்தான். அவன் சைக்கிளை லேசாக சாய்த்த சாய்ப்பில் பின்புறத்திருந்துப் பார்க்க பைசா நகரத்து கோபுரம் பாசிப்பட்டினம் வரை நகர்ந்து வந்தது போலிருந்தது.
'காதல் விதை காற்றோடு தூவி..
காதல் மயம் ஆகட்டும் பூமி..
ஓ மரியா..! ஓ மரியா..! ஓ மரியா..!'
"என்ன மருமகனே நோம்பு நேரத்துலயும் பாட்டா..!" உள்ளிலிருந்து தான் எதிர்பார்த்த அந்த பிரியக் குரல் கேட்கவும், சர்ரென பிரேக்கை அழுத்திவாறு சைக்கிளை சிரித்துக் கொண்டே காலை ஊன்றி நிறுத்தினான்.
அது மைதீன். மைதீன், அப்சலுக்கு இரத்த உறவு இல்லையென்றாலும் அவனுடைய தந்தையான அல்லாப்பிச்சையும் மைதீனும் இவனுக்கு நினைவுத் தெரிந்த நாள் முதல் அண்ணன் - தம்பி என்றுதான் ஒருவருக்கொருவர் உறவுப் பாராட்டி வந்தார்கள். ஆனால் ஏனோ அப்சல் அவரை மாமா என்றே அழைத்து வந்தான்.
மைதீன், அல்லாப்பிச்சைக்கு வயதில் இளையவர். அவரைப் பற்றி பேசும்போதெல்லாம் மைதீனுக்கு பெருமிதம் கூடிவிடும். அண்ணன் அண்ணன் என்று வாய்க்கு வாய் குறிப்பிட்டு மனுசன் அப்படியே உருகிப் போவார். இருந்தபோதிலும் மைதீனும் அப்சலும் மாமா-மருமகன் உறவிலேயே அளவாவிக் கொள்வார்கள். இவர்களது உறவு முறை மட்டுமல்ல பழக்கம் கூட சற்று விசித்திரமானதும் சுவையானதும் கூட!
இவனைக் கண்டால் அவருக்கு பரவசம் தொற்றிக் கொள்ளுமா அல்லது அவரது குரலை எங்கிருந்தும் கேட்டுவிட்டால் அப்சல் சைக்கிள் தானாகவே நின்று விடுமா எனத் தெரியவில்லை. இயற்கையாவே அவர்களிருவருக்குள்ளும் ஏதோ ஒரு பற்றுதல் அவனுடைய சிறுபிராயத்திருந்தே வளர்ந்து வந்தது. அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு.
ஒன்று, அவன் இயல்பிலேயே விதவிதமாக உடையணியும் விருப்பங்கள் கொண்டவன். வெளிநாட்டு வாப்பாவின் செல்ல மகன் வேறு! இன்று போல் வீட்டு வாசலிலோ, தெருவிலோ, வழியிலோ இவர்களிருவரும் ஒருவருக்கொருவர் எதிர்பட்டுக் கொள்ளும் வேளைகளில் அவன் அணிந்திருக்கும் உடைகளைத் தவறாமல் அவதானித்து, "பாக்க சும்மா சினிமாக்காரன் போல இருக்கீய மருமகனே!" அவனை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துவிடுவார். அந்த நேரங்களில் அவனும் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் பட்டாம்பூச்சியை இதமான குளிர்க்காற்று சட்டெனத் தீண்டி விட்டது போல ஆனந்தப் பெருக்கில் ஹாஹாவெனச் சிரிப்பான். அவர் தனது பிள்ளையைப் போல இரசிப்பார்.
இன்னொன்று, அவர் தனக்கும் அப்சலின் தந்தையான அல்லாபிச்சைக்குமிடையில் இருந்துவந்த சகோதர மேன்மைகளை சிலாகித்தபடி அவர்களது இளமைக் காலங்களை மகிழ்ச்சி பொங்க அவன் முன் அசைப்போட்டுக் காட்டுவது. அவர் எந்த பேச்சை துவங்கினாலும் ஏதாவது ஒரு புள்ளியிலாவது அப்சலின் தந்தை சார்ந்த தரவுகளும், அனுபவங்களும் இரண்டறக் கலந்துப் பயணித்துவிடுவது அதன் சிறப்பம்சம்.
நீண்ட காலம் மாயவரம், கும்பகோணம், வலங்கைமான், மன்னார்குடி என்று வெளியூர் மளிகைக்கடைகளில் வேலைப் பார்த்து வந்த மைதீன், தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்பியதிலிருந்துதான் மனைவிக்கு துணையாக வீட்டிலேயே இருக்கிறார். வயதுக்கு மீறிய தளர்வும் அதற்கு முக்கிய காரணம். எப்படியிருப்பினும் ரபீக்கை காணும் சமயங்களில் அவையாவும் பஞ்சாய் பறந்துவிடும். அதனால்தான் என்னவோ அவர் அவனிடம் வலிந்து பகிர்ந்து கொள்ளும் கதைகளுக்கும் பஞ்சமிருக்காது.
"அல்லாப்பிச்சை அண்ணனும் நானும் ஒண்ணாதான் அப்போ நீடாமங்கலத்துல அம்மாடத்தார் (அம்மாப்பட்டினத்தார்) கடையில இருந்தோம்..! நான் கடைக்கு போனப்ப வயசு பதினஞ்சி இருக்கும். அல்லாப்பிச்ச அண்ணந்தான் எனக்கு பட்டறையில நிண்டு சுருள் போடுறதிலேர்ந்து, ராக்குல சாப் (ஷாப்) ஜாமான் அடுக்குறது, மூட்டைகள அதுரசம் மாதிரி சாக்குமுனையைச் சுருட்டிச் சுருட்டி சுலுவா சாமா எடுக்க ஏதுவா வர்ச பெஞ்சில கட்டி வக்கிறது, மனக்கணக்குலேயே தொட்டம் கிட்டம் வந்துறாம சரியா ரோக்கா (பில்லு)ப் போட்டு, கணக்குச் சொல்லி, காசு வேங்கிப் போடுறதுன்னு எல்லாஞ் சொல்லிக் குடுத்தது! உங்களுக்கு தெரியுமா அல்லாப்பிச்சண்ண தவறாம செகண்ட் சோவுக்கு படம் பாக்கப் போயிருவாப்ள! அப்போல்லாம் எங்கிட்ட காசு இருக்காது மருமகனே..! அவ்வொதான் அப்பப்ப அவ்வொளோட செலவுலேயே என்னையும் கூட்டிப் போனதும்! எனக்கு சம்பளம் கம்மினாலும், நாங்கூட நெனப்பேன்.. எங்கிருந்து இந்த மனுசனுக்கு இப்புடி காசு நிக்கிதுன்னு! உங்கள பாக்கும்போது கூட அவ்வொளப் பாக்குற மாதிரிதான் இருக்கு! அதான் போ வரையில ஒங்க மொகம் தட்டுப் பட்டுருச்சின்னா, பட்டுன்னுக் கூப்ட்டருர்றது!" இப்படியெல்லாம் ஒருவர் பிரியம் ஒழுகப் பேசினால் எவன்தான் நின்றுக் கேட்காமல் செல்வான்?
இவன் வயதில் அவருக்கும் ஒரு மகன் இருந்தாலும் சிறுவயதிலிருந்து இப்போது வரை அப்சலை வாங்க போங்க என்று மரியாதையோடு அழைப்பது அவர் இயல்பில் ஊறிப்போன ஒன்றாயிருந்தது. அந்த கண்ணியமும் கவுரவமும் தனது தந்தையின் மீதிருக்கும் அபிமானத்திலேயேக் கிடைக்கிறது என்று அவனும் உணராமலில்லை.
"ஏதோ ஒரு யோசனைல சைக்கிள் மிதிச்சிகிட்டு வந்தப்ப அதாவே பாட்டு வந்திரிச்சி மாமா..!" என்றான் நோன்பு நேரத்தில் பாட்டா என்று நளினமாகச் சுட்டிக் காட்டியவரை சமாளிக்கும் விதமாக.
"ம்ம் வெத ஒண்ணு போட்டா சொர ஒண்ணா மொளைக்கும் மருமகனே? அல்லாப்பிச்ச அண்ணனும் இப்புடித்தான திரிஞ்சிகிட்டு கெடப்பாங்க! நாங்க கடையில இருந்தப்ப, குடுத்த சாமானுக்கு, நான் பட்டறையில நிண்டுக்கிட்டே கணக்குச் சொல்லுவேனா.. சரியா காதுல வாங்குனாகளா இல்லையானேத் தெரியாது தலைய மட்டும் லேசா ஆட்டிக்கிட்டு ஏதாவது ஒரு பாட்ட முணுமுணுத்துக்கிட்டேல்ல ரோக்கா (பில்) போடுவாப்ள! அப்படிதான் ஒரு நாளு இவ்வொ பாட்டுக்கும் 'தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே'..ன்னு பாடிக்கிட்டே நான் சொல்லிக்கிட்டு இருந்த ஒவ்வொரு சாமானுக்கும் சர் சர்னு ரோக்காப் போட்டுக்கிட்டு இருக்க, ஓனரு இவ்வொளோட சங்கதிய கல்லாவிலிருந்து கவனிச்சிட்டு, என்னப்பா நீம் பாட்டுக்கு பாட்டுப் படிச்சிக்கிட்டே ரோக்கா போடுறா? கணக்கு பண்ணும்போது கவனமாயிருப்பா! எங்கே நீ போட்ட சீட்ட குடு!ன்னு ரோக்காவை வாங்கி பாத்தாரு, எதுவுமா சொல்ல முடியும்? எழுத்தும் சரி கூட்டலும் அவ்வளவு ஜோராவும் கச்சிதமாவும்ல இருக்கும்! அப்புறம் எங்கே ஓனரு கண்டிசன் கிண்டிசன்லாம் பண்றது? அதுக்கப்பறம் அவரும் அவ்வொ பிடிக்கே உட்டுட்டாருல்ல!"
அப்படியா என்று ‘ஆ’வென வாய் பிளந்து வாநீர் வழிந்தபடி அவரைப் பார்த்தான்.
இப்படிதான் மைதீன் எதை ஆரம்பித்தாலும் பெரும்பாலும் அவை யாவும் இவனுடைய தந்தை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு நினைவலைகளில்தான் போய் முடியும்!
அவருடைய கள்ளம் கபடமில்லாத, கலகலப்பான, ஃபிளாஷ்பேக் கதைகளைக் கேட்டபடி வழக்கம்போல உள்ளம் பூரித்து முறுவலித்தான். ஆனால் அவர் அதை சொல்லி முடித்ததும் அவர் முகம் அன்று சற்று சோர்ந்துப் போய்க்கொண்டிருந்ததையும் அவன் கவனிக்காமலில்லை!
"மருமகனே.. உங்ககிட்ட ஒரு ஒதவி தேவப்படுது.. செய்வியளா?" தழுதழுப்பாய் பிசிறு தட்டிய அவரது குரல் எப்போதும் பேசுவது போல இருக்கவில்லை. அவர் எதற்காகவோ தயங்கி நிற்பது போன்று தோன்றியது.
அவனும் அவருடைய குரலில் சட்டென்று வெளிப்பட்ட திடீர் தொய்வை உணர்ந்து கவலையுற்றவனாய்,
"என்ன மாமா?" என்றான் சைக்கிளை விட்டு கீழே இறங்கியபடி.
"செத்த இருங்க வரேன். உங்க மாமி இப்பதான் வெளில போனிச்சி, வர்றதுக்குள்ள எடுத்துக்கிட்டு வந்திர்றேன்.." என்று உள்ளே அவசர அவசரமாக ஓடியதும் இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர் எதற்காக உள்ளே ஓடுகிறார் என்று அவனுக்கு அனுமானிக்க முடியவில்லையென்றாலும், அவரது செயல்பாடுகள் யாவும் பூடகமாகவே வெளிப்பட்டன. விபரத்தை அறிந்து கொள்ளும் வரை யாரும் அந்தப் பக்கம் வந்துவிடக் கூடாதென தன்னையுமறியாமல் மனதிற்குள் வேண்டிக் கொண்டான்.
ஓரிரு நிமிடங்களில் உப்பிய மஞ்சள் பையொன்றை விரைந்து வந்துக் கொடுத்து கொஞ்சம் சிரமப்பட்டு சிரித்தவாறு கொஞ்சம் பிரித்துப் பார்க்கும்படிச் சொன்னார். அப்படியென்ன உள்ளே என்ன இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வாங்கியவன், அவருடைய அசாதாரண செயல்களால் அவனும் கூட வழக்கத்திற்கு மாறான பதற்றங்களைக் காட்டினான்.
"என்ன மாமா..?" யோசனையோடு, பிரித்துப் பார்க்கத் தயங்கினான்.
"பிரிச்சி பாருங்க மருமகனே..!" அவர் குரல் சகஜநிலைக்கு வர முயற்சித்தாலும், வறண்டு கம்முவது போல் வெளிப்பட்டது.
பிரித்துப் பார்த்தான். ஒரு கறுப்பு பேன்ட்டும் வெள்ளையில் நீல கட்டங்கள் போட்ட அழகானச் சட்டையொன்றும் இருந்தன. அதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே.. என்ற யோசனைகள் முடியுமுன்னரே, அவன் முன் ஒரு உருவம் நிழலாடியது.
"நம்ம ராஜமுதுவோட உடுப்புதான் மருமகனே.." ராஜா முகமது அவருடைய மகன். சற்றுமுன் அவனுடைய ஞாபகங்களில் வந்து மறைந்து போனதும் அவனது உருவமே!
என்ன சொல்ல வருகிறார் என்பது போல் ஒன்றும் புரியாமல் திகைத்தான்.
"ஒண்ணு ரெண்டு மொறதான் போட்டிருப்பான். பாக்க இன்னும் கோடி (புதுத்துணி) போலத்தான இருக்கு! அவன் பயணம் போனபோது இங்கேயே வுட்டுட்டு போயிட்டான் மருமகனே.. ரெண்டு பேரும் பாக்க ஒத்த ஒசரத்துலத்தான இருப்பிய? இத வச்சிக்கிட்டு ஒரு ஐநூறுவா தர்றியளா? உங்களுக்கு போட்டா ரொம்ப நல்லாவும் கச்சிதமாவும் இருக்கும்!" அப்படிச் சொன்னபோது மீண்டும் தான் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது போல உணர்ந்தாலும், தனது மகனுடைய உடுப்பை ஐநூறு ரூபாய்க்காக அவர் விற்க நிற்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! சட்டென முகம் தொங்கி விட்டது! நோன்பை மீறிய வாட்டம் அவனுக்குள் படரத் தொடங்கியது.
"மருமகனே.. அது ஒண்ணுமில்ல ராஜமுது போயி ஆறு மாசம் ஆவுது.. இதுவர செலவுக்குன்னு எதுவும் வரல. கடன உடன வாங்கித்தான் போனான். கடுதாசியில நல்லா இருக்கேனுதான் எழுதியிருந்தான்.. இருந்தாலும் இதுவரை சம்பளம் கிம்பளம்னு எதுவும் போடல போல. புள்ள அங்க பசி கிசினு எதுவும் கஸ்டப்படாம பொழச்சி கெடந்தா போதும்னு நாங்களும் காசு பணத்த பத்தி எதுவும் கடுதாசில கேட்டு சங்கடப்படுத்திக்கல.
பெருநா வருதுல.. மனுச மக்க மத்தியில நம்மளோட கோலத்த காட்டிகிட்டா நிக்க முடியும் மருமகனே..? நானாவது கடை கண்ணிக்கு போயிருக்கணும்! என்ன பண்றது முன்ன மாதிரி ஒடம்பு ரொம்ப நேரம் பட்டறையில நிக்க ஒத்துழைக்க மாட்டுக்குதே..! வயசுல இந்த முதுவும் தோளுந்தான் சீனி மூட்ட, அரிசி மூட்டன்னு எல்லாத்தையும் ஏத்தி எறக்கி நோவு சோர்வு பாக்காம பம்பரமா சொழண்டுக்கிட்டு இருந்திச்சி! இப்ப இடுப்புக்கு தூக்கினாவே கை காலெல்லாம் வெடவெடன்னு நடுங்க ஆரம்பிச்சிருது! அல்லாப்பிச்ச அண்ணன் மாதிரி நானும் சவுதிக்கு போயிருக்கலாம்! ஹ்ம்.. எல்லாத்துக்கும் காசு பணம் வேணுமே மருமகனே! அண்ணன் மாதிரி நானும் போவ உங்க மாமிக்கிட்டேயும் நக நட்டுன்னு ஏதாவது இருந்திருக்கணும்ல..!" அவருடைய இயலாமையும், வேதனையும், பெருமூச்சாய் உருவெடுத்து காற்றின் வெப்பத்தை கூட்டிக் கொண்டிருந்தது.
அவர் சொல்வதைக் கேட்க கேட்க அவன் உடல் உதற ஆரம்பித்தது, கண்ணீர் படலமிட்டு உடைந்து விழத் தயாரானது.
ஒரு விதத்தில் எப்போதும் போலவே அந்த உரையாடலும் கூட தனது தந்தையை ஒட்டியேச் சென்றுக் கொண்டிருந்தாலும், அப்சலால் இம்முறை எதையும் ஊன்றிக் கேட்க முடியவில்லை. பெருநாளைக்காக புதுத் துணிமணி எடுக்க தனது உம்மாவிடம் கேட்டிருந்த அந்த ஆயிரம் ரூபாயை எப்படி சீக்கிரமாகவே வாங்குவது என்ற யோசனைக்குள் மூழ்கலானான்.
இன்னோர் புறம் அவன் காசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்.. கஷ்டங்கள் ஒரு புறம் கிடக்கட்டும், அந்த தந்தைக்கும் தன் மகனை பெருநாளன்றோ மற்ற நாளிலோ அந்த உடையில் ஒரு முறை பார்க்க வேண்டும் போலிருந்தது.
- இத்ரீஸ் யாக்கூப்.