நூறாண்டுகள் பழமைமிக்க அந்தக் கற்களாலான பிரமாண்டக் கட்டிடமும் அதில் இயங்கிவரும் அலுவலகங்களும் அந்த எழுபத்து மூன்று வயதுடைய கர்ணனுக்குப் பழக்கமான இடமாக மாறி விட்டிருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் பல வாய்தாக்களுக்கு இங்கு வந்து சென்றுகொண்டிருப்பதே அதற்குக் காரணம். அரசு வாகனங்களும் தனியார் வாகனங்களும் அந்த அகண்ட அலுவலக வளாகத்தை எப்போதும் நிறைத்துக்கொண்டே இருந்தன. அதிகாரிகள் அரசாங்க அடையாளத்துடன் கூடிய ஜீப்புகளிலும் கார்களிலும் வந்து போயினர். ஊழியர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் வந்தனர். அதிக எண்ணிக்கையில் பெண் ஊழியர்களும் குறைந்த எண்ணிக்கையில் ஆண் ஊழியர்களும் பேருந்துகளில் அலுவலகம் வந்துசென்றனர்.
ஒரு சாமானியனின் பார்வையில் அதிகாரிகள் முகங்களில் ஆணவமும் உழியர்கள் முகங்களில் திமிரும் தென்பட்டன. பொதுமக்கள் அன்றாடம் கையில் மனுக்களுடன் சாரி சாரியாக வந்துகொண்டிருந்தனர். என்னதான் கடவுள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் சிலரால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலுக்குப் போகாமல் இருக்கமுடியாது. அதைப்போன்று பலர் பலமுறை மனுக்கள் கொடுத்து அவை பரிசீலிக்கப்படாமல் இருந்தாலும், மக்கள் குறைதீர்க்கும் நாட்கள் நடைபெறுகின்ற திங்கட்கிழமைகளில் இந்த அலுவலகத்திற்கு வந்து கால்கடுக்க வரிசையில் நின்று கலெக்டரையோ அல்லது வேறு உயர் அதிகாரியையோ பார்த்து மனுக் கொடுத்து, தமது குறைகளை முறையிடாமல் இருக்கமாட்டார்கள். ஆண்டவனிடத்தும் ஆட்சியாளர்களிடத்தும் அவ்வளவு நம்பிக்கை மக்களுக்கு.
அது ஒருபுறம் இருக்கட்டும், கர்ணன் கதைக்கு வருவோம். அவருக்கும் அவரது சித்தப்பா மகனுக்கும் இடையே ஒரு நிலத் தகராறு . நியாயம் கர்ணன் பக்கம்தான் இருந்தது. என்றாலும் அதை நிலைநாட்டுவது அவ்வளவு சுலபமா இந்த நாட்டில்?. வழக்கு தாசில்தார் அலுவலத்தில் மூன்று ஆண்டுகள் நடந்து பின்பு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒன்றரை வருடம் நடந்து இறுதியாக இந்த கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் டி.ஆர்.ஓ முன்பு இரண்டு ஆண்டுகள் விசாரணை நடைபெற்று கர்ணனுக்கு சாதகமாகத் தீர்ப்பாகியுள்ளது. அந்த உத்தரவின் நகலைப் பெறத்தான் கடந்த ஒருமாத காலமாக நடந்து கொண்டிருக்கிறார் கர்ணன். தீர்ப்புச்சொன்ன ஒருவாரத்தில் தீர்ப்பின் நகல் கிடைத்து விடும் என்று சொன்னார்கள். எதற்கும் இருக்கட்டுமே என்று பத்துநாட்கள் கழித்துத்தான் கர்ணன் பிரிவு எழுத்தரைப் பார்க்க வந்திருந்தார். ஒருகாலத்தில் பிரிவு எழுத்தர்கள் லோயர் டிவிஷன் கிளர்க் என்றும் அப்பர் டிவிஷன் கிளர்க் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள். அதன் பின்னர் இளநிலை உதவியாளர் என்றும் உதவியாளர் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தப் பெயர்கள் தங்களுக்கு கௌரவக் குறைச்சலாக இருக்கிறது என்று சங்கத்தின் மூலம் பலவருடங்களாகப் போராடித் தற்போது பெயரை அவர்கள் ‘'அந்தஸ்த்திற்கு'த் தக்கபடி மாற்றிக் கொண்டார்கள். அதன்படி அவர்கள் தற்போது இளநிலை வருவாய் ஆய்வாளர் என்றும் முதுநிலை வருவாளர் என்றும் அழைக்கப் படுகின்றனர். என்னதான் முத்துமாலை என்றோ பவளமாலை என்றோ பெயரை மாற்றிக் கொண்டாலும் கழுதை கழுதைதானே!
பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் எப்பொழுதும் கிளர்க் அல்லது குமாஸ்தாக்கள் தான். அவர்கள் செய்கின்ற பணியும் வெள்ளைக்காரன் காலம் தொட்டு இன்றைய தினம்வரை குமாஸ்தாப் பணிகள்தான். கர்ணன் தேடிவந்துகொண்டிருக் அந்த அலுவலர் ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளர். அதாவது மூத்த குமாஸ்தா. மேற்சொன்ன பத்துநாட்கள் கழித்து மிகுந்த நம்பிக்கையுடன் அந்த குமாஸ்தாவைப் பார்க்க வந்திருந்தார் கர்ணன். அவர் வந்தபோது மணி காலை பத்தரை இருக்கும். அதுவரை அந்த குமாஸ்தா இருக்கைக்கு வந்திருக்கவில்லை. பதினோரு மணிக்கு வந்துசேர்ந்தான். கர்ணன் அவனைப்பார்த்து இருகரங்களையும் கூப்பி வணங்கினார். குமாஸ்தா எந்தச் சலனமும் காட்டாமல்
“என்ன வேணும்”
என்று அதிகாரம் தொனிக்கக் கேட்டான். ஒரு நொடியில் கர்ணனின் நம்பிக்கை அனைத்தும் உடைந்து நொறுங்கியது. நான் யார், நான் எதற்காக வந்தாருக்கிறேன் என்பது அவனுக்குத் தெரியுமே, தெரிந்தும் எதற்கு இப்படியொரு கேள்வியைக் கேட்கிறான் என்று நினைத்த கர்ணன் கொஞ்சம் நிலை தடுமாறித்தான் போனார்.
தன் வயதில் பாதி வயதுகூட இருக்காத அந்தக் குமாஸ்தா முன்பு கும்பிட்ட கையை எடுக்காமல்
“ஐயா, உத்தரவு நகல் வாங்கிட்டு போகலாம்னு வந்திருகேன்யா”
என்றார்.
“எந்த உத்தரவு? உங்க பேரென்ன?”
என்று குமாஸ்தா கேட்டார்.
அந்த நீண்ட ஹாலில் இரண்டு வரிசைகளில் மொத்தம் இருத்திரண்டு மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஆண்களும் பெண்களுமாக பதினெட்டு குமாஸ்தாக்களும் நான்கு பிரிவுகளுக்குரிய நான்கு தலைமை குமாஸ்தாக்களும் விரவி உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போன்று தோன்றியது கர்ணனுக்கு. ஒருவகையான தாழ்வு மனப்பான்மையும் கூச்சமும் அவரைக் கவ்வியது.
கர்ணன் தன்னைப் பற்றிய விபரங்களைச் சொன்னதும் கோப்பினைப் பரிசீலனை செய்துவிட்டு அழைப்பதாகத் தெரிவித்து வராண்டாவில் கிடக்கும் பெஞ்சில் போய் இருக்குமாறு குமாஸ்தா சொன்னான். கர்ணன் நெடுநேரம் காத்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் குமாஸ்தா மூன்றுமுறை எங்கோ சென்றுவிட்டு வந்தான். இடையில் தேனீர் அவனது இருக்கைக்கு வந்தது. அதை அருந்தினான். தொடர்ந்து கணினியில் ஏதோ வேலை செய்துகொண்டிருத்தான். கர்ணனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மீன் பிடிப்பவன் மிதப்புக் கட்டையையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் கர்ணன் குமாஸ்தாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
நேரம் மதியம் இரண்டுமணி ஆகிவிட்டது. நான்கைந்து பேர்களாகக் கூடி உட்கார்ந்து உழியர்கள் சாப்பிடத் தொடங்கினர். குமாஸ்தா சாப்பாட்டுப் பையுடன் எழுந்தான். இதுதான் சமயமென்று கர்ணன் ஹாலுக்குள் சென்று தலையைக் காட்டினார்.
“கொஞ்சம் வேலை அதிகம். உங்க கோப்ப பார்க்க முடியல. மதியத்திற்குப் பின்பு மீட்டிங் இருக்கு. முடிய ரொம்ப லேட்டாகும். நீங்க போய்ட்டு நாளைக்கு வாங்க!”
எனச் சொல்லிக்கொண்டே ஒரு கூட்டத்தில் அமர்ந்து டிபன் பாக்ஸை திறக்க ஆரம்பித்துவிட்டான்.
அடுத்த நாள் கர்ணன் சென்றபோது “உங்க கோப்பு எங்கையோ ‘மிஸ்’ ஆயிடிச்சு. பயப்படாதீங்க! தேடிக் கண்டுபிடிச்சிடுவேன். நீங்க வெள்ளிக்கிழமை வாங்க” என்று குமாஸ்தா சொல்லி அனுப்பினான். வெள்ளிக்கிழமை வந்து பார்த்தபோது அன்று குமாஸ்தா விடுப்பில் சென்றிருப்பதாக அலுவலகத்தில் தெரிவித்தனர். இப்படியான அலைக்கழிப்பு ஒரு மாத காலத்திற்குமேல் தொடர்ந்தது. இறுதியாக அன்று குமாஸ்தாவைச் சந்தித்த போது
“ ஒங்க வேல ஒன்னுதானா எனக்கு? எனக்கு ஆயிரத்தெட்டு வேல இருக்கு! அவசரப்படக் கூடாது! இன்னும் ஒரு வாரம் பொறுத்து வந்து ஆர்டர வாங்கிட்டுப் போங்க!” என்று எரிச்சலாகச் சொன்னான் குமாஸ்தா.
சலித்துப்போன கர்ணன் தான் எப்பொபோதும் டீ குடிக்கும் அந்தக் கடைக்குச் சென்று டீ போடும்படி கேட்டார்.
கடந்த இரண்டு வருடங்களில் கர்ணனனுக்கும் டீக்கடைக்காரருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டிருந்தது. அன்றாடம் நடப்பவற்றை டீக்கடைக்காரரிடம் சொல்லி மனதை ஆற்றிக் கொள்வார். டீக்கடைக்காரர் கேட்டார்.
“ஒங்க ஊர் இங்கிருந்து எவ்வளவு தூரம்?”
“முப்பத்தஞ்சு கிலோமீட்டர்”
“இங்க வந்துபோக ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாம்”
“எரநூறு ரூபாய்”
இன்று டீக்கடைக்காரர் ஒரு யோசனை சொன்னார்.
“அஞ்சுதடவ வந்துபோனா ஆயிரம் ரூபாய் ஆகிறும். அந்த ஆயிரத்த ஒரு கவர்ல போட்டு அந்த நாய்க்குக் குடுத்தா என்ன?. காசுக்காகத்தான் அவன் இப்படிச் செய்றான்? நேத்து எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வந்தாரு! அதே குமாஸ்தாக்குக் காலைய ஆயிரம் ரூபாய வெட்டி விட்டாரு. மதியம் ஒரு மணிக்கெல்லாம் உத்தரவ வாங்கிக்கிட்டுக் கெளம்பிட்டாரு. நீங்களும் அதே மாதிரிச் செய்யுங்க. எதுக்கு வெட்டியா அலையிறீங்க”
“லஞ்சம் குடுத்துப் பொழப்புப் பொழக்கணுமின்ற அவசியம் எனக்கு இல்லீங்க. இனிமே இந்தப் பக்கமே நான் வரமாட்டேங்க. உத்தரவு வந்தா வருது இல்லன்னா நாசமாக்கூடப் போகுது” என்று சொல்லிக் கொண்டே துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து சென்றார் கர்ணன்.
- மனோந்திரா