தாத்தா நீண்ட நாட்களுக்கு பிறகு இத்தனை வேகமாய் செல்வதை வீதியே பார்க்கிறது.
வந்து விஷயத்தை சொன்னவன் நடுங்கியபடியே நிற்கிறான்.
என்னாச்சு என்னாச்சு என்று அடுத்தடுத்து கேட்ட வீட்டார் பின்னாலயே ஓட்டமும் நடையுமாக செல்ல... தாத்தாவுக்கு... கால்கள் தலையில். தானே பாரமாய். தலை கீழாய் நடப்பது போல உணர்ந்தார். அவர் கண்களில் கலக்கம் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது.
தெருக்கோடியில் நின்றிருந்த இன்னொரு பெருசு... "இப்பதாம்பா கேள்வி பட்டன்... இதுக்கு ஒரு வழி பண்ணி ஆகணும்..." என்று கண்கள் சிவக்க கொதித்தார்.
அவரும் சேர்ந்து கொண்டார். வேண்டாம் வேண்டாம் என்று கை காட்டிய தாத்தாவின் நடையில் ஒரு கடுங்கோபம் கர்ஜித்தது. நானும் அவர் பின்னாலேயே ஒரு வெறி கொண்ட மிருகமாய் அவர் நடைக்கு ஈடு கொடுத்து சென்றேன். உள்ளே நடுக்கமும் பயமும் வீறிட... பின்னால் வீட்டாள்கள் முணுமுணுத்துக் கொண்டே வருவது கேட்டது.
"இத இப்டியே விட்ற கூடாது. இன்னைக்கு ஒரு முடிவு கட்டியாகணும்" என்று போன முறை பேசிய பேச்சுகள் காதில் எதிரொலித்தன. அடிக்கடி நடக்கிறது தான். ஆனாலும் நமக்கென்று வரும் போது தானே உள்ளம் கொதிக்கிறது.
எதிரே ஓடி வந்த மாணிக்கம்... "ஐயா... ஆமாங்கங்கய்யா.. கிடக்குது.... அதான் சொல்லலான்னு ஓடி வந்தேன்" என்றான். மூச்சிரைத்து நின்றவனை சமாதானப் படுத்துவது போல நான் பாத்துக்கறேன் என்று ஜாடை செய்தபடியே நடையில் வேகம் கூட்டினார். அக்கம் பக்கம் எதிர் பட்டோர் என்று ஆளாளுக்கு முகத்தில் அதே படபடப்பு.
"ஒவ்வொரு முறையும் இதேதான் நடக்குது. ஆனாலும்... இதுக்கு ஒரு தீர்வு கிடைக்க மாட்டேங்குது....!" ஒரு சம்சாரி தம் இழுத்தபடியே புகையோடு புலம்பினான்.
"ஆமாமா கோயில் வேணும்னு கூழை கும்புடு போட தெரியற கூட்டத்துக்கு... ஒரு சுடுகாடு வேணும்னு கேட்க தெரியலல....?" ஒரு சிவப்பு சட்டைக்காரன் துடுக்காக கேட்டான்.
"எப்ப எத பேசற...?" என்றது இன்னொரு பெருசு... வாயில் இருக்கும் பீடிக்கு பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டி எடுத்தபடியே.
" இப்ப கூட பேசலனா.... எப்பவும் பேச முடியாது...." என்றவனுக்கு முகமே சிவந்திருந்தது.
பின்னால் அப்படி இப்படி என்று பத்து பதினைந்து பேர் சேர்ந்து விட்டார்கள். தாத்தா ஒரு கணம் நின்று "வேண்டாம்பா... நான் பாத்துக்கறேன். நீங்க சுடுகாட்டு விரிவாக்கத்துக்கும் ஆக்கிரமிப்பை அகற்றத்துக்கும் மனு எழுதுங்க. குடுக்க வேண்டிய இடத்துல குடுத்துட்டு பேசிக்கலாம்...."என்று சொல்லி விட்டு இன்னும் நடையைக் கூட்டினார்.
எனக்கு செய்ய ஒன்றும் இல்லை. தாத்தாவோடு நடப்பது தான் குறிக்கோளாக இருந்தது. அவர் ஏற்கனவே நொந்து தான் இருக்கிறார். இதில் இப்படி ஒரு பிரச்சனை வேறு. அப்படி இல்லாமல் இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. துக்கம் தொண்டையை அடைப்பது என்பது இது தான். காலை நேரத்திலும் கணீர் வெயில் தன்னை கவிழ்த்துக் கொண்டிருக்கிறது.
முன்னூறு குடும்பம் இருக்கிற ஊர்ல மூணு பேர் சேர்ந்தாப்பல செத்துட்டா புதைக்க இடமில்லைன்னா எப்படி. சரி கொண்டு போய் மெஷின்ல வெச்சு எரிச்சு தொலைங்கடான்னாலும் சாங்கியம் சம்பரதாயம்பானுங்க. சரி போராடுங்கன்னாலும் ஒருத்தனும் வர மாட்டான். அசம்பாவிதம் நடந்த அன்னைக்கு மட்டும் பயங்கரமா குதிப்பானுங்க. அப்புறம் இந்தா இப்பிடி தான்.. செய்தி பரிமாற்றம் மட்டும் தான். மற்றபடி வேடிக்கை வேடிக்கை வேடிக்கை தான். அரசாங்கமும் தான் இந்த ஊர்ல இருக்கறவன மனுஷனாவே மதிக்க மாட்டேங்குதே... என்ன பண்ண.
உள்ளே என்னென்னவோ ஓடினாலும்.. தாத்தாவோடு ஓடுவது தான் முக்கியம். பின்னால் வந்த யாவரையும் அப்படி அப்படியே நிறுத்தி விட்டார்.
தாத்தா சுடுகாட்டு வேலியைத் தாண்டி உள்ளே வேக வேகமாய் போனார்.
சுடுகாட்டு வாசம்... சுடுகாட்டு வெளிச்சம்... சுடுகாட்டு மேடு என்று... ஒரு சுழல் சட்டென எங்களை சூழ்ந்து கொண்டது. நான் பின்னாலயே விதிர்த்தபடி சென்றேன். சுடுகாட்டு காலை வெயில் ஈரத்தோடு சுழன்று கொண்டிருந்தது. இறுகி கிடக்கும் ஒவ்வொரு குழிமேடும் நேற்றைய மழைக்கு நொதித்து கிடந்தது. உழுது விட்டது போல ஆங்காங்கே நரியின் கால்தடங்கள்... நரியோ... ஓநாயோ... கண்டுபிடிக்க முடியவில்லை. நாலைந்து இடத்தில் பறிக்கப்பட்ட மண் காயங்களை பார்க்க முடிந்தது. மனதில் இருந்த பதட்டத்தில் ஒன்றும் புலப்படவில்லை. கெட்ட வாடை அங்கே சுழன்று கொண்டிருந்தது. மூச்சை நிறுத்தும் நெடி.
உள்ளே ஒரு பிசாசைப் போல அங்கும் இங்கும் தேடிய தாத்தாவுக்கு பாட்டியின் குழியைக் கண்டுபிடிப்பதில் தடுமாற்றம் இருந்தது. நான் மூச்சை சமாளித்தபடியே அருகே சென்று கண்களால் துழாவினேன். கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகி விட்ட குழி. புற்கள் வளர்ந்து அடையாள கற்கள் நகர்ந்து....குழிமேடு சமநிலையில் இருக்க.... இது தான் என்று புரிபடவில்லை. கல்லறை கட்டாத குழி மேடுகளில் எப்போதும் உள்ள பிரச்சனை இது. இப்போது அது பிரச்சனை இல்லை. தாத்தாவின் கண்கள் நடுங்க அதன் நேர்கோட்டில் கண்ட என் கண்களில் அந்த மண்டையோடு தலையில் குதறப்பட்ட முடியோடு குப்புற கிடந்தது. கண்ட நொடியே கண்டந்துண்டமாய் ஆனது போன்ற படபடப்பு. சொல்லொணா குமட்டல். தலையை திரும்புகிற தைரியம் தான் இருந்ததே தவிர அந்த தலையை திருப்புகிற தைரியம் இல்லை.
தாத்தா உற்றுப் பார்த்தார். திரும்பிக் கொண்ட மறுநொடி மறுபடியும் பார்க்க வைத்தது மன சூழல். வந்த செய்தி மீண்டும் காதில் உளறியது.
"உங்க சம்சாரத்து குழி பறிச்சுருக்கு. தலை தனியா வெளிய வந்து கிடக்கு..."
தாத்தா கண்களை அழுந்த மூடி திறந்தார். முடிவுக்கு வந்தவராய் அருகே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அந்த தலையை மெல்ல திருப்பினார். திக்கென திகைத்தோம். சிமிட்ட மறந்த கண்களில் நிலை குத்திய இயலாமை. மண்ணோடு பிசுபிசுத்த முகத்தில் எலும்பும் ஈக்களும்... கூட சில புழுக்களும் பூச்சிகளும். வெளிறிய விகாரம். தலைமுடி உதிர்ந்து உலர்ந்தும் இறுகியும்... மண் பூத்த மலர்க்கொடியாக சுருண்டு கிடந்தது. வாயிருந்த இடத்தில் விரிசல். கண்ணிருந்த இடங்களில் ஓட்டை. அழுகிய மிச்ச மீதி சதை ஒட்டிய முகத்தில் சாவு சங்கடம். ஊறிப் போயி உடைந்து விடும் போல தோற்ற மயக்கத்தை துள்ள மறந்த உருக்குலைந்த... உருகிய பந்து போல காட்டிக் கொண்டிருந்தது.
பாட்டியின் மண்டை ஓட்டை இப்படி பார்க்க... பார்க்க எனக்கு அழுகையே வந்து விட்டது.
அவரும் உற்று பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் உதடு துடித்தது. கண்களில் பதற்றம் குறையவில்லை. கால்களில் நடுக்கம். பாட்டி செத்த அன்று அவர் அழுத அழுகை ஒரு முறை என் கண் முன்னே வந்து போனது. ஆலமரம் சரிவது போல. ஒரு நீள ரயில் கவிழ்வது போல. அவர் சுருங்கி ஒரு சிறுவனாகி ஒடுங்கிய தருணம் வந்து வந்து ஈக்களாய் முகத்தில் அப்பியது.
ம்ஹும்... இது பாட்டி இல்லை. கூர்ந்து பார்த்த எனக்கு அப்படித்தான் சொல்ல தோன்றியது.
வேகமாய்...." தாத்தா.... இது பாட்டி இல்ல.... " என்றேன். கண்கள் அவரைப் பார்ப்பதை தவிர்த்தது. என்னவோ ஆசுவாசம். உள்ளே உருண்ட பாறை இதய சரிவில் நின்று விட்டதாக உணர்ந்த போது சட்டென மண்டைக்குள் வேண்டப்பட்ட ஒரு குளுமை.
பிறகு அவருமே சொன்னார். "ஆமா இது பாட்டி இல்ல. பாட்டி கழுத்து இப்பிடி இருக்காது..."
நான் சட்டென அவரைப் பார்த்து விட்டு திரும்பி கொண்டேன். பிறகு கழுத்தில்லா மண்டையோட்டை பார்த்துக் கொண்டே நின்றேன். கொஞ்ச நேரம் இருவரும் அப்படியே நின்றிருந்தோம். அவரே மௌனம் கலைத்தார்.
"யாரா வேணா இருக்கட்டும். உயிர் போன உடம்பு இப்பிடி வெளிய கிடக்க கூடாது... குழி தோண்டு.... புதைச்சிட்டு போய்டலாம்" என்றார்.
இந்த வார்த்தைக்கு காத்திருந்த எனக்கு நிம்மதி. அவர் கண்களில் இருந்து கடகடவென கண்ணீர் கொட்டுவதை பார்க்காதது மாதிரி.... குழி தோண்ட ஆரம்பித்தேன்.
கண்ணீர் காடு நிம்மதிக்குள் புதைந்து கொண்டிருந்தது.
- கவிஜி