கீற்றில் தேட...

உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் வரும் முதல் ரயில்வே கேட்டைத் தாண்டி வலது புறமாக இறங்கி ஒரு மைல் நடந்தால் பெரும்பட்டு என்ற கிராமம் வரும். அந்த கிராமத்திற்கு முதன்முறையாக சென்னையில் இருந்து பதினைந்து வயது மோகனா தன் பெற்றோருடன் அங்கிருக்கும் தன் ஒன்றுவிட்ட பெரியம்மா காந்தா வீட்டுக்குச் சென்றாள். காந்தா நல்ல கம்பீரமான தோற்றம் கொண்டவள், அளவோடு பேசுபவள், ஓரளவுக்கு நல்ல வசதி. அவர் கணவர் பக்தவச்சலம் எப்பொழுதும் ஒரு பெருமித முகபாவத்துடனேயே இருப்பார்.

மோகனா அவர்கள் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் வந்தவர்கள் குரல் கேட்டு அறையினுள் இருந்து ஒரு பெண்மணி வெளியே வந்து ஆச்சரியத்துடனும், சந்தோஷத்துடனும் மோகனாவின் அம்மாவைப் பார்த்து,

- வா விஜயா

என வாய் நிறைய சிரிப்போடு அழைக்க, பதிலுக்கு விஜயா

- வரேன் இந்திராணி

இந்திராணி வாஞ்சையோடு,

- எப்படி இருக்க?

- ஆங் நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்க? நல்லா இருக்கியா?

என விஜயா பதிலுக்கு நலம் விசாரிக்க,

- நல்லா இருக்கேன், இது யாரு உன் மகளா?

விஜயா ஆமாம் என தலையாட்ட

இந்திராணி ஆசையோடு மோகனாவின் கன்னத்தைத் தொட்டு முத்தம் கொடுத்து,

- நல்லா இருக்கியா செல்லம்?

மோகனாவுக்கு கூச்சமாக இருந்தது, தலையாட்டினாள். இந்திராணிக்கு வயது நாற்பத்தைந்து. ஒல்லியான உருவம், மாநிறம், அளவான உயரம், களையான முகம். மோகனாவுக்கு இந்தப் பெண்மணி யார் என்று தெரியவில்லை. இந்திராணியின் பேச்சும், நடத்தையும் குழந்தைத்தனமாக இருப்பது மோகனாவுக்கு வித்தியாசமாகவும் குழப்பமாகவும் இருந்தது. இந்திராணி மோகனாவின் அப்பாவை வாங்க என மரியாதையோடு அழைத்துவிட்டு ஒரு ஓரமாகப் போய் நின்று கொண்டு வந்தவர்களை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

மோகனாவின் அப்பா தயாளனும் பக்தவச்சலமும் அவரவர் வேலைகளை பற்றி விசாரித்துக் கொண்டிருக்க, காந்தா விஜயாவிடம் சற்று நேரம் பேசி இருந்துவிட்டு டீ போட்டுக் கொண்டுவர அடுப்படிக்குச் சென்றாள். அவள் பின்னால் இந்திராணியும் செல்ல, மோகனா மெதுவாக தன் அம்மாவிடம் இந்திராணியைக் காட்டி

 - யாரு அவங்க?

- அவங்களும் உன் பெரியம்மாதான்.

மோகனா புரியாமல் பார்க்க,

- காந்தா அக்காவோட தங்கச்சி.

மோகனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது,

- நான் பாத்ததேயில்லை

- அவங்க எங்கயும் வெளியிலே வரமாட்டாங்க

- ஏன்

அருகில் தயாளனிடம் பக்தவச்சலம் இன்னும் பேசிக்கொண்டிருக்க விஜயா தர்மசங்கடமானாள். லேசாக கண்டிக்கும் தோரணையில்

- அது அப்படிதான்.

மோகனாவுக்கு குழப்பமாக இருந்தது. விஜயா திரும்பி பக்தவச்சலத்திடம் பேசத் தொடங்கி விட்டாள். மோகனா அவள் அம்மா சொன்னதை நம்ப முடியாமல் உட்கார்ந்திருந்தாள். விஜயா பிறந்த ஊரில் அவள் பெரியப்பா, சித்தப்பா வீடுகள் அனைத்தும் அருகருகேதான் இருக்கும். ரத்த உறவு ஒன்றுவிட்ட உறவு என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் நெருக்கமாகப் பழகுவார்கள். மோகனாவுக்கு அனைவரையும் தெரியும். இப்படி ஒரு பெரியம்மா இருப்பது தனக்கு இத்தனை நாட்களாக தெரியாமல் இருந்தது அவளுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. சற்று நேரத்தில் பக்தவச்சலத்தைப் பார்க்க ஒருவர் வாசலில் வந்து நிற்க, பக்தவச்சலம் எழுந்து சென்றார். அவர் சென்றதும் மோகனா தன் அம்மாவிடம்

- எப்படி இத்தன நாளா இந்திராணி பெரியம்மாவை எனக்குத் தெரியவேயில்ல.

விஜயா மெதுவாக,

 -அதுக்கு கொஞ்சம் புத்தி மந்தம். அதனால வெளியில எங்கயும் கூட்டிக்கிட்டு வர்றதில்ல

- ஓ... அதான் அப்படி பேசறாங்களா

விஜயா ஆமாம் என தலையாட்டினாள். காந்தாவும் இந்திராணியும் கையில் டீயும் நொறுக்குத் தீனியும் கொண்டு வந்து கொடுத்தனர். மோகனாவும் அவள் பெற்றோரும் அதை சாப்பிட்டு முடிக்கும் வரை இந்திராணி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்திராணிக்கு அவர்கள் வந்ததில் பெரும் சந்தோஷம். மோகனா இந்திராணியைப் பார்க்க, இந்திராணி அவளைப் பார்த்து சிரித்தாள். மோகனா பதிலுக்கு புன்னகைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

மோகனாவும் அவள் பெற்றோரும் விடை பெற்றுக்கொண்டு வெளியே வர, திண்ணையில் அமர்ந்திருந்தவர் இவர்களைப் பார்த்து புன்னகைத்தார். விஜயாவும் தயாளனும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு விஜயா அவரிடம்,

- நல்லா இருக்கீங்களா?

அவர் புன்னகைத்தபடியே தலையாட்ட, விஜயா அவரிடம்

- வரேன்

அவர் அதற்கும் அதே போல் புன்னகைக்க இவர்கள் விடைபெற்றார்கள். மோகனாவுக்கு அவர் யார் என்று விளங்கவில்லை.

பேருந்து நிலையத்தில் காத்திருக்கையில் விஜயாவே மோகனாவிடம் பேச ஆரம்பித்தாள்,

- வெளியில திண்ணையில் உக்கார்ந்திருந்தார் இல்ல அவருதான் இந்திராணியோட வீட்டுக்காரரு.

மோகனாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்க அவளால் சட்டென ஒரு தெளிவுக்கு வர முடியவில்லை, விஜயா மேலும் தொடர்ந்தாள்

- இந்திராணி மாதிரி அவருக்கும் புத்தி சுவாதீனம் கிடையாது. உடம்புலயும் ஏதோ பிரச்சன. அவரு பக்தவச்சலம் பெரியப்பாவோட அண்ணன்தான். அவங்களுக்கு ஒரு அக்கா ஒரு தங்கச்சி இருக்கு. அதனால நாளைக்கு சொத்துல எதுவும் பங்கு கேட்டு குழப்பம் வந்துடக் கூடாதுன்னு இந்திராணிக்கு கட்டி வச்சி ரெண்டு பேரையும் இவங்களே வச்சி பாத்துக்கறாங்க. இந்திராணிக்கும் அது வீட்டுக்காருக்கும் வாரிசு இல்லாததனால சொத்து முழுக்க அவங்களுக்கு அப்புறம் பக்தவச்சலம் பெரிப்பாவோட பசங்களுக்கு வந்துடும். என் பெரிப்பா காந்தாவுக்கு மாப்புள பாத்த சமயத்திலேயே இது எல்லாத்தையும் யோசிச்சிதான் கல்யாணம் பண்ணி வச்சாரு. காந்தாவுக்கு கல்யாணம் ஆன ஒரே மாசத்துல இந்திராணிக்கு கீரனூர்ல பெரிப்பாவோட சினிமா தியேட்டர் இருக்குல்ல அங்கயே கால காட்சிய மட்டும் நிப்பாட்டிட்டு முக்கியமானவங்கள மட்டும் கூப்டு கல்யாணத்த முடிச்சிட்டாங்க. அப்பதான் நான் வயசுக்கு வந்த சமயம். அப்பயில இருந்தே இந்திராணி இங்கதான் இருக்கு. அப்ப காந்தா, இந்திராணியோட மாமனார் மாமியார் இருந்தாங்க அப்புறந்தான் போய் சேந்தூட்டாங்க. சின்னதுல இருந்தே இந்திராணிய எங்கயும் வெளியில கூட்டிக்குட்டு போறதில்ல, அதனால நெறையா பேருக்கு இப்படி ஒரு ஆள் இருக்கறதே தெரியாது.

விஜயா சொல்ல சொல்ல அனைத்தும் மோகனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பின் பத்து வருடங்கள் கழித்து மோகனவுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. சொந்தக்காரர்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று ஒருவர் விடாமல் நினைவுபடுத்தி தேடித் தேடி அனைவருக்கும் அழைப்பு வைக்கப்பட்டது. காந்தா வீட்டுக்கு மோகனாவின் அப்பாவும் அம்மாவும் வந்து அழைப்பு வைத்தனர். வழக்கம்போல் விஜயாவைப் பார்த்ததில் இந்திராணிக்கு பெரும் சந்தோசம். மோகனாவின் கல்யாண விஷயம் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டாள். இப்போது இந்திராணியின் புருஷன் உயிரோடு இல்லை. விஜயா இந்திராணியிடம்

- கல்யாணத்துக்கு நீயும் வந்துடு

என அழைக்க, இந்திராணி சிரித்தாள், காந்தா புன்னகைத்தாள்.

திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெரும்பாலும் அழைப்பு வைத்த அனைவரும் வந்திருந்தனர். மோகனா பூரிப்பிலும் சந்தோஷத்திலும் நிறைந்திருந்தாள். அனைவரும் பேசி சிரித்து அளவளாவிக் கொண்டிருந்தனர். அதேநேரம் இந்திராணி பெரும்பட்டு கிராமத்தில் தனியாக மூடிய வீட்டில் படுத்தபடி விட்டத்தைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தாள். அவள் என்ன யோசிக்கிறாள்?

அவள் அதை யாரிடமும் சொல்லப் போவதுமில்லை, யாரும் அவளிடம் அதைக் கேட்கப் போவதுமில்லை.

- பாலாஜி தரணிதரன்