போலீஸ் ஸ்டேஷனில் கூட்டமாக இருந்தது. அவனும் அங்கே போய் நின்றான். ஒவ்வொருத்தனின் உயரத்தையும், சுற்றளவையும் அங்கே அளந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய முகவரியைக் கேட்டார்கள். அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அன்று எடுத்த நூற்றி ஐம்பது பேரில் அவனும் இருந்தான். அன்றைக்கே அவர்களைக் கொண்டு போனார்கள். பிரயாணம் சந்தோஷமாக இருந்தது. மூன்று வேளையும் நல்ல சாப்பாடு. கைச்செலவிற்குப் பணம். நல்ல நண்பர்கள்.
பல புதிய ஊர்களையும் கடந்து ரயில் போய்க்கொண்டிருந்தது. வழியில் பல பெரிய நகரங்களை அவன் பார்த்தான். எட்டுநாள் பயணத்திற்குப் பிறகு அவர்களை ஓரிடத்தில் கொண்டுபோய் இறக்கினார்கள்.
பயிற்சிக்காலம் தொடக்கத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது என்பதை நினைத்தபோது கஷ்டம் தெரியவில்லை. அவனுடைய வாழ்க்கை நாளுக்கு நாள் விரிந்துகொண்டும், முழுமையானதாக மாறிக்கொண்டும் இருந்தது. அநாதை என்கிற நினைப்பு இப்போதெல்லாம் இல்லை. படுக்கையை விரித்துப்போட்டால்தான் உறக்கம் வருகிறது. உறங்கும்போது தலைக்கு ஒரு உயரம் தேவையாக இருக்கிறது. நாக்கிற்கு ருசிகூட தெரியத் தொடங்கியிருக்கிறது.
செய்வதற்கு ஏதோ இருக்கிறது என்கிற நினைப்பினால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், கனவும் உண்டாகி இருந்தது. அவனுக்கும் சில கடமைகள் முளைத்திருந்தன. உரிமைகளும் உண்டாகி இருந்தன.
அந்தப் பட்டாளத்தை இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள ஒரு ஊருக்கு மாற்றினார்கள். அதற்கப்புறம் வேறொரு இடத்திற்கு மாற்றினார்கள். மூன்றாவதாகப் போன இடத்திலும் கொஞ்சகாலம் கழிந்தது. இப்போது அவனுக்கு ஹிந்தி தெரியும். இந்தியாவில் இருக்கிற பெரிய நகரங்களையெல்லாம் பார்த்து விட்டான். வாழ்வது எப்படி என்பதையும் தெரிந்துகொண்டான். கையில் பணம் இருக்கிறது. சர்க்காரிடமிருந்து அது வந்துகொண்டும் இருக்கிறது.
ஒருநாள் மேலதிகாரியிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. வீட்டுக்குப் போக விரும்புகிறவர்கள் ஒருமாதம் லீவு எடுத்துக்கொண்டுபோய் பார்க்கவேண்டியவர்களைப் பார்த்துவிட்டு வரலாமாம். போக விரும்புகிறவர்கள் உடனடியாக விண்ணப்பம் கொடுக்கணுமாம். அன்றைய தினம் அந்த பட்டாள முகாமில் நிலவிய உற்சாகத்தை வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது. அவனும் அந்த உற்சாகத்தில் பங்கெடுத்துக்கொண்டான். ஆனால் அந்த உற்சாகத்தில் எங்கேயோ ஒரு குறை இருந்தது. குறையை மீறிய உற்சாகமும் அவனுக்குள் இருந்தது.
அவனும் ஒரு விண்ணப்பம் வாங்கி பூர்த்திசெய்து கொடுத்தான். அன்று இரவு சாப்பிட்டபின் நாலைந்து பேர்களாக கூட்டம் கூடி உட்கார்ந்து பட்டாளக்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு மைசூர்க்காரன் திருநெல்வேலிக்காரனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
"நாம சேர்ந்து போகக்கூடாதா?"
"போகலாம்தான். ஆனால் எனக்கு நாளைக்கு சாயந்திரமே புறப்படணும்."
"நான் கூட அதுதான் சரி என்று நினைக்கிறேன். என்னுடைய மகளைப் பார்த்து எத்தனை நாளாயிற்று தெரியுமா?"
அந்த மைசூர்க்காரன் ஒரு கணம் ஏதோ நினைத்துக்கொண்டான். மகளை மனக்கண்ணில் பார்த்ததுபோல முகம் பிரகாசித்தது.
"என்னுடைய வயதான அம்மாவிற்குத்தெரியாமல் நான் இங்கே வந்து சேர்ந்தேன். நான் ஒரே மகன்" என்றான் திருநெல்வேலிக்காரன்.
அவனும் சிந்தனையில் ஆழ்ந்துபோனான்.
"பாவம் அந்த சின்னக்குடிசையில் என்னுடைய வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பாள்" அவனுடைய வாய் முணுமுணுத்தது.
"நீங்கள் எப்போது போகிறீர்கள்? நாம் சேர்ந்து போகலாமா?" பாலக்காட்டுக்காரன் ராமனிடம் கேட்டான். ஒரு இயந்திரம்போல ராமன் நாயர் சொன்னான்.
"ஓ..."
மதராஸ்காரனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதை எல்லோரிடமும் தணிவான குரலில் கேட்டுக்கொண்டிருந்தான்.
"முப்பதுநாட்களுக்கு மேல் வீட்டிலேயே இருந்துகொள்ள என்ன செய்யணும்?"
பாலக்காட்டுக்காரன் அதற்கு வழிசொல்லிக்கொடுத்தான். "உடல் நலமில்லையென்று தந்தி கொடுக்கணும். நான் கூட அதைத்தான் நினைத்திருக்கிறேன். வீட்டில் பார்க்கவேண்டிய வேலை ஆயிரம் இருக்கிறது."
இன்னொருத்தனுடைய அபிப்பிராயம் வேறுவிதமாக இருந்தது.
"அதெல்லாம் நடக்கிற காரியமில்லை. இந்த விடுமுறை கொடுப்பது எதற்காகத் தெரியுமா? வீட்டைப்போய் பார்த்துவிட்டு வருவதற்காகத்தான். பார்த்துவிட்டு வந்துவிடவேண்டும். யோகம் இருந்தால்தான் இனிமேல் அம்மாவையும் மகளையுமெல்லாம் பார்க்கமுடியும். நம்மை சண்டைக்கு அனுப்பப் போகிறார்கள்." என்பது வேறொருவனுடைய அபிப்பிராயம்.
அதற்கப்புறம் யாரும் பேசவில்லை. அந்த சூழ்நிலை ஒரு கணத்தில் மாறிப் போய்விட்டிருந்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டு மைசூர்க்காரன்தான் மவுனத்தைக் கலைத்தான்.
"என்னுடைய மகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அது போதும்."
அவனைத் தொடர்ந்து திருநெல்வேலிக்காரன் பேசினான்.
"ஆயிரம் ரூபாய் இருந்தால் என்னுடைய அம்மாவை யாராவது கடைசிக்காலம் வரை காப்பாற்றுவார்கள்." பெருமூச்சுகளால் நிறைந்துபோன அந்த இரவில் யாரும் உறங்கவில்லை.
"அந்த முப்பது நாட்களுக்குள் செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடிக்கணும்."
ராமன் நாயர் விடுப்புக்காலத்தில் செய்யவேண்டியதை யோசித்துப் பார்த்தான். ஆனால் அவனுக்கு செய்யவேண்டிய காரியம் எதுவும் இல்லாததினால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அந்த முப்பது நாட்கள் அவனுக்கு முன்னால் வெறுமையாக நீண்டு கிடந்தன. பக்கத்தில் படுத்திருந்த பாலக்காட்டுக்காரன் ராமன்நாயரைப் பார்த்துக் கேட்டான்.
"ராமன் நாயர், வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?"
"யாருமில்லை"
"லீவுக்காலத்தில் எங்கே போகப் போகிறீர்கள்?"
அந்தக் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. நண்பன் மீண்டும் கேட்டான்.
"ஊர் திருவனந்தபுரம் தானே?"
ராமன் நாயருக்கு மறுபடியும் குழப்பம். அதற்கும் அவனிடம் பதில் இல்லை.
"என்னை திருவனந்தபுரத்தில் இருந்துதான் எடுத்தார்கள்."
"சொந்த ஊர் எது?"
"எனக்கு லீவு வேண்டாம். நான் லீவில் போகவில்லை" ராமன் நாயருடைய குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.
"நீங்கள் எதற்காக கோபப்படுகிறீர்கள்? வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு வந்திருந்தால் அதற்கு நான் என்ன செய்யட்டும்?" என்றான் கூட இருந்தவன்.
அத்துடன் அந்த உரையாடல் நின்றுபோயிற்று. அந்த இரவின் மூன்றாம் ஜாமத்திலும் ஒரு ஆள் மட்டும் அங்கே உறங்கவில்லை.
'ராமன்'
"இந்தப் பெயரை எனக்கு யார் வைத்திருப்பார்கள்?"
"நாயர், என்கிற ஸ்தானம் எப்படிக் கிடைத்தது? தெருத்தெருவாக அலைந்து திரிந்த நாட்களில் யாரும் அந்தப் பெயரைச்சொல்லி அழைத்தது இல்லை. வாழ்க்கையின் எந்த நாளில் இருந்து இந்தப்பெயர் அவனுடன் ஒட்டிக் கொண்டிருந்திருக்கும்?"
"எனக்கு லீவு வேண்டாம். நான் லீவில் போகவில்லை" இந்த வார்த்தைகள் ஒரு சாபம் போல அவனுடைய செவிகளுக்குள் முழங்கிக் கொண்டிருந்தன. கேரளத்தில் எங்கேயோ அந்த பாக்கியமில்லாத பெண்மணி இருந்துகொண்டிருப்பாள்.
அவள்தான்...அம்மா! இல்லையென்றால் அவளுடைய புருஷன்...அப்பா! அதுவும் இல்லையென்றால் நான் கிடந்த வயிற்றில் இருந்து எனக்கு முன்போ பின்போ வந்த ஒரு ஆளாவது! என்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆள் இந்த உலகத்தில் இல்லாமல் போய்விடுவார்களா? ஒருவேளை தேடிப் பார்த்தால் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவன் பல நாடுகளுக்குப் போயிருக்கிறான். பல இனத்தவர்களுடன் பழகியிருக்கிறான். எத்தனையோ மொழிகளை பேசக் கேட்டிருக்கிறான். ஆனால் கேரளத்தில் சும்மா சுற்றித் திரிந்தாலும் களைப்பே தெரியாது.
அங்கே பச்சைத் தண்ணீருக்குக்கூட ஒரு தனிச்சுவை இருக்கும். உச்சிவெய்யிலாக இருந்தாலும் வாட்டம் தெரியாது. மலையாளியின் சிரிப்பு இதயத்திலிருந்து வருகின்ற சிரிப்பு. அவர்களுடைய மொழிக்கு அன்பை மட்டும்தான் வெளிப்படுத்தத் தெரியும்.
பிறந்த நாடு பெற்ற தாயைப்போல் அவனைக் கூவி அழைத்தது. கேரளத்தில் தென்னை மரத்தடியில், ஆனந்தமான குளிர் நிழலில் அவனுக்கு கிடந்து உறங்கவேண்டும் போல் இருந்தது. வேலிப்படல்களின் வெளியே அலைந்து திரியவேண்டும். கேரளத்தில் உட்கார்ந்து ஒரு பிடி சோறு கூடுதலாக சாப்பிடவேண்டும்.
அடுத்தநாள் அதிகாலையில் எல்லோரையும்விட முன்னதாகவே அவன் எழுந்துகொண்டான். மற்றவர்கள் விழிக்கும் நேரத்தில் அவன் பயணத்திற்குத் தயாராக இருந்தான்.
ஆலப்புழை நகரத்தின் சாலைகளிலும், சந்திப்புகளிலும் ஒரு பட்டாளக்காரன் மூன்று நான்கு நாட்களாக தென்படுகிறான். அந்த நகரத்தின் முக்கியமான இடங்களில் மூன்று நான்கு முறையாவது அவனைப் பார்க்கலாம். பகலில் மட்டுமில்லை. இரவுநேரங்களில் கூட அவனைப் பார்க்க முடிகிறது. ஒரு நாள் இரவில் படகுத்துறையில் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரனிடம் சுமைதூக்கி முஹம்மதீயன் அவனைப்பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் எங்கே தங்கியிருக்கிறான் என்பதோ எந்த ஊர்க்காரன் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.
ஒரு நாள் அவனைக் காணவில்லை. அடுத்தநாள் காலையில் கொல்லத்தில் ஆனந்தவல்லீஸ்வரம் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த வீட்டில், மூடிக்கிடந்த சிறுவீட்டின் முன்னால் தென்பட்டான். கையில் ஒரு பெட்டியும் இருந்தது. ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒரு சிறுவன் அந்த வீட்டில் யாரும் இல்லையென்ற விவரத்தை அவனிடம் சொல்லிவிட்டுப் போனான்.
அப்போது கோயிலில் இருந்து ஒரு மனிதர் வெளியே வந்து கொண்டிருந்தார். அவன் அவருடைய பின்னால் நடக்கத் தொடங்கினான். கொஞ்சதூரம் போனதும் அந்த மனிதர் ஒரு படிக்கட்டில் ஏறத் தொடங்கினார்.
"நான்...ராமன்..."
இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அந்த மனிதர் திரும்பிப் பார்த்தார். பெட்டியை தூக்கிக்கொண்டு ஒரு சிலையைப்போல் நின்ற ஒரு பட்டாளக்காரனைத்தான் அவருக்குத் தெரிந்தது.
"ராமனா?...எந்த ராமன்?" அந்த மனிதர் கேட்டார்.
ஒன்றும் பேசாமல் ஒரு கணம் அங்கேயே நின்றபின்னர் அவன் நடக்கத் தொடங்கினான். சாலையின் திருப்பத்தில் அவன் மறைந்துபோகும் வரை அந்த மனிதர் அதே இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். "ராமன்!..." அப்படி ஒரு ஆள் அவருடைய நினைவில் இல்லை.
சின்னக்கடையில் ஓர் ஓட்டலின் வாசல் பலகையில் கத்திமுனையால் "ராமன்" என்ற பெயர் கீறப்பட்டிருந்தது. ஓட்டல்காரன் போத்தியிடம், "இது...நான் கீறியது.." என்றான் அவன். போத்தி பதில் ஒன்றும் சொல்லவில்லை.
பரமு அண்ணன் என்கிறவனைத் தேடி திருவனந்தபுரத்தில் அவன் அலைந்து நடந்தான். ஆள் கிடைக்கவில்லை.
இவ்வாறாக, பதினேழு நாட்கள் உருண்டு ஓடின. பழக்கப்பட்ட ஒரு புன்னகை அவனுக்கு எங்கும் கிடைக்கவில்லை. "எப்போ வந்தே?" என்கிற ஒற்றைக் கேள்விக்காக அவன் கேரளத்தின் நகரங்களெங்கும் அலைந்து திரிந்தான். ஒரு பழக்கமுள்ளவனைக் காண பாடுபட்டான். ஐந்து, ஆறு, ஏழு என்று நாட்கள் உருண்டோடின. பார்க்கிறவர்களோடெல்லாம் பேசினான். பலரையும் "தம்பி" என்று அழைத்தான். பார்க்கிறவர்களுக்கெல்லாம் முகம் மலர்ந்தான்.
ஒருவரைக்கூட அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை.
கோழிக்கோடு முதல் நாகர்கோவில் வரை ஒரு பறவையைப்போல் அவன் பயணம் செய்தான். இருபத்தெட்டு நாட்கள் அலைந்து திரிந்ததில் ஓடி மறைந்தன. இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. இத்தனை நாட்களாகியும்கூட சாப்பாடு கொடுக்கிறவர்கள் பணத்திற்காக கைநீட்டுகிறவர்களாக இருக்கிறார்கள். பெயரைச்சொல்லி அழைக்க ஆளில்லை. இந்தப் பெயரை எதற்காக வைத்தார்கள்?
பைத்தியங்கள் நிறைந்த பட்டணத்தில் இருந்து வெகுதூரத்தில் அமைதி குடிகொண்ட குக்கிராமம்.
மலையின் சரிவில், வயலின் சரிவில், பச்சைக்காட்டில் ஒரு சிறிய வீடு. வீட்டின் திண்ணையில் ஒரு குத்து விளக்கின் முன்னால் உட்கார்ந்து அந்த பட்டாளக்காரன் அமைதியாகவும் பொறுமையாகவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு கிழவி சோற்றையும் குழம்பையும் பக்கத்தில் கொண்டுவந்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பரிமாறிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறாள்.
அவன் அவளை "அம்மா" என்கிறான்.
அவள் அவனை "மகனே" என்கிறாள்.
அவளுக்கு சொல்லுவதற்கு வேண்டிய வீட்டு விஷயங்கள் எவ்வளவோ இருந்தன.
"ஆறுபேர் மகனே!...உடுத்தணும்...சாப்பிடணும்...கழுவணும்...இல்லையா?... எல்லாம் நடக்கணும். கொஞ்சூண்டு நிலமிருக்கிறது. போன வெள்ளாமையில் அஞ்சு கண்டி கிழங்கு கிடைத்தது."
"கொஞ்சூண்டு ரசம் ஊத்துறேம்பா... அப்புறமா மோர் போட்டுக்கலாம்..." கிழவி கொஞ்சம் ரசம் பரிமாறினாள்.
"சோறு சாப்பிடமுடியலேம்மா...இன்றைக்கு ரொம்பவும் சாப்பிட்டுவிட்டேன். ஒரு படி சோறு சாப்பிட்டிருப்பேனில்லையா அம்மா?
"கூத்துதான்!.. வச்சதே அரைப்படி சோறுதான்."
கிழவி பேச்சைத் தொடர்ந்தாள்...
"அப்போ...அம்மாவுக்கு ஆண்பிள்ளைகள் இல்லையா?" ராமன் நாயர் கேட்டான்.
கிழவி ஒரு பெருமூச்சுவிட்டாள்.
"ஒரு பையனை தெய்வம் கொடுத்தது. அதைக் கொண்டுபோகவும் செய்தது. இப்போ இருந்திருந்தால் இருபத்து மூணு வயதாகியிருக்கும். என்னோட நாணிக்கு இளையவன். இரண்டு வயது மூத்தவள் அவள்.”
கிழவி மீண்டும் சோறு பரிமாறினாள். வேண்டாமென்று சொல்லியும் விடவில்லை.
"நீ கையை விடுப்பா..."
"போதும்மா...இனிமே சாப்பிடமுடியாது..மூச்சு முட்டுது.."
அந்த சாப்பாடு அத்தனை இதமாயிருந்தது. அந்த ராத்திரிநேரத்தில் அந்தக் குடிசையின் முன்னால் தவிப்போடு அவன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். இந்த குக்கிராமத்தில் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஓர் உறவு ஏற்பட்டிருக்கிறது. அவனுடைய இதயம் மகிழ்ச்சியோடு துடிப்பதாக அவன் நினைத்தான். அது வார்த்தைகளிலும் வெளிப்பட்டது. அவனுக்கு ஒரு அம்மா கிடைத்துவிட்டாள்.
"அம்மா...அம்மா..."
"இன்னும் ஒரு கைசோறு வெச்சுக்கோ...குழம்பு ஊத்துறேன்" அந்தக் கிழவியின் புன்சிரிப்பை நினைவிலிருந்து அகற்ற முடியவில்லை. நான் வயிராற சாப்பிடவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். நான் வயிராற சாப்பிடாமற்போனால் அவளுக்கென்ன? அதனை நினைத்துக்கொண்டு ராத்திரியில் அவள் தூங்காமல் இருக்கப்போவதில்லை. ஒரு படிச்சோற்றை வடித்து வைத்துக்கொண்டு விளக்கணைக்காமல் எனக்காக காத்திருக்கவேண்டிய அவசியம் அவளுக்கென்ன வந்தது? பிரசவத்தின் பெருவலியை அனுபவித்திராத அந்தக் கிழவிக்கு அதெற்கெல்லாம் அவசியமும் இல்லை.
யாரும் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. ஆழ்கடலின் தொடுவானத்திற்கப்புறம் யுத்தகளத்தில் இந்த சரீரம் சின்னாபின்னமாகிப் போகும்போது யாருக்கும் ஒரு நஷ்டமும் வரப்போவதில்லை. அப்படியொரு சம்பவம் நடக்காமல் இருக்குமாறு வேண்டிக்கொள்வதற்கு கூட யாருமில்லை.
அடுத்த நாள் காலையில் அவன் அந்தக் கிழவியிடம் சொன்னான்:
"அம்மா, நான் ஒன்று சொல்லட்டுமா?"
"சொல்லுப்பா.."
"நான்...நான்...ஒரு நாயர்.."
"அதுதான் நேத்தே சொன்னியேப்பா.."
"எனக்கு வீடு வாசல் இல்லை. யாரும் இல்லை."
“நேத்து ராத்திரி சாப்பிடும்போது நீ சொன்ன சேதி தானே அது!"
"எனக்கு யாரும் இல்லையம்மா." அவனுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்தக் கிழவி உறைந்து நின்றாள்.
அன்று மத்தியானம் ஒரு எளிமையான கல்யாணம் அந்த வீட்டில் நடந்தது. இருபத்தைந்தாம் வயதில் நாணிக்கு ஒரு கணவன் கிடைத்தது இப்படித்தான்.
அந்த சாயுங்கால நேரம் மனதை மயக்கும் அழகோடு ஜொலித்தது. அறுப்பு முடிந்த வயல்களில் மாலைக் கதிரவனின் மஞ்சள் ஒளி பொன்னின் நிறத்தோடு போட்டியிட்டது. அந்த வீட்டின் நித்திய சுவாசம் போல தென்றல் வீசிக்கொண்டிருந்தது. தோளில் கலப்பையுடனும், முகத்தில் களைப்புடனும், காளைகளை ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்த ஒரு குடியானவன் ராமன் நாயரிடம் குசலம் விசாரித்தான்.
"என்ன... இங்கே நிக்கிறீங்க?"
"சும்மாதான்.." ராமன் நாயரின் பதில்.
அவனுக்கும் ஒரு உறவு உண்டாகிவிட்டது.
"இன்றைக்கே எதற்காகப் போகிறீர்கள்?" இந்தக் கேள்வி வந்த திசையை நோக்கி ராமன் நாயர் திரும்பினான். பின்னால் அவள் நின்று கொண்டிருந்தாள். அவன் அவளை நன்றாகப் பார்த்தான். அவள் நாணி நின்றாள்.
"நான் போகணும். நான்... நான்...விதி இருந்தால் மறுபடியும் நாம் சந்திக்கலாம்.. நீ கன்னியாகவே இரு..."
அவனுடைய தொண்டை இடறியது.
"நான்...இருக்கிறேன்...இருந்தாலும்..."
அவன் இல்லையென்பதாக தலையசைத்தான். இரவின் பத்துநாழிகை நேரம் கழிந்தது. முழுநிலவு உதித்து உயர்ந்து கொண்டிருந்தது. அந்த வயலுக்குள் பெட்டியை தூக்கிக்கொண்டு போகிற அந்த உருவத்தைப் பார்த்தபடி அவள் நின்று கொண்டிருந்தாள்.
அருவி அதன் போக்கில் பாடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தது.
அந்த கிராமத்திற்கு ஒரு பட்டாளக்காரனின் ‘பேமிலி அலாட்மெண்ட்' வந்துகொண்டிருக்கிறது. மாதத்திற்கு நாற்பது ரூபாய். ஒரு உருளி, இரண்டு செம்புத்தவலைகள், மூன்று நான்கு கட்டில்கள் இவையெல்லாம் அவள் வாங்கிச் சேர்த்தாள். அதிலெல்லாம் அவளுடைய பெயரையும் வெட்டிவைத்தாள். அந்த வீட்டை பழுது பார்த்துவைத்தாள். கொல்லையைச் சுற்றிலும் வேலி வைத்தாள். கொல்லை முழுவதும் வாழை வைத்தாள். அந்த ஊரில் இப்போது அவளையும் மதிக்கிறவர்கள் இருந்தார்கள். அம்மா கூட அவள் சொல்லுவதைத்தான் கேட்பாள்.
கோயிலில் சாமியைக் கும்பிடும்போது அவள் ஏதேதோ வேண்டிக் கொள்வாள். அந்த வீட்டில் எப்போதும் ஒரு ஆளுக்குத் தேவையான சோறு இருந்துகொண்டே இருக்கும். ராத்திரியில் ஏதாவது சத்தம் கேட்டால் யாரது என்கிற அம்மாவின் குரல் கேட்கும். அதைக்கேட்டு அவள் அரக்கப்பரக்க எழுந்து பார்ப்பாள். உன்னோட நாயர் எப்போ வருவார் என்று சினேகிதிகள் கேட்கும்போது மட்டும் அவளுக்கு பதில் சொல்லத் தெரியாது.
ஒரு நாள் தபால்காரர் ஒரு பெரிய கவரைக் கொண்டுவந்து கொடுத்தார். அதில் அந்த பட்டாளக்காரனின் போட்டோ இருந்தது. அன்று முதல் அந்த வீட்டின் மண்சுவரை ஒரு போட்டோ அலங்கரித்தது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அவளுடைய விலாசத்திற்கு மாதாமாதம் நூறு ரூபாய் வந்து கொண்டிருந்தது. ஆறு மாதத்திற்கப்புறம் அது இன்னும் அதிகரித்தது.
ஒரு நாள் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு தகவல் வந்தது. மூன்று பெரிய இரும்புப்பெட்டிகள் வந்திருப்பதாகவும், வாங்கிப் போகச்சொல்லியும் போலீஸ்காரர் வந்து சொல்லிவிட்டுப் போனார். அந்தப் பெட்டிகளில் நிறைய உடுப்புகள் இருந்தன. அவையெல்லாம் உயரதிகாரிகள் அணியக் கூடியவையாக இருந்தன. அதே பெட்டியில் அவள் அவனுக்குப்போட்ட கல்யாண மாலையும் இருந்தது. அது கருகிப் போயிருந்தது.
நாணியின் உடம்பு அவளையும் அறியாமல் நடுங்கியது.
ஒரு வாரம் கழித்து பத்தாயிரம் ரூபாய்க்கான 'செக்' அவளுக்கு வந்தது. அதற்குப் பிறகு அவளுக்கு வந்து கொண்டிருந்த மணியார்டர் வரவேயில்லை.
- மு.குருமூர்த்தி (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பட்டாளக்காரன்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சிறுகதைகள்