மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு வலியுறுத்தல்
பெரியார் - அண்ணா - நடிகவேள் எம்.ஆர். இராதா காட்டிய வழியில் இராமாயண எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமாக நடக்க வேண்டும் என்று வற்புறுத்திய திருவாரூர் தங்கராசு அவர்கள், இராவணனைக் கொல்வதற்காகவே, விஷ்ணு ராமன் அவதாரமெடுத்து வந்தான் என்பதற்கு இராமாயணத்திலே ஏராளமான சான்றுகள் உண்டு என்றார். இராமாயணம் பற்றி 60 ஆண்டுகாலம் தான் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு பார்ப்பானிடமிருந்தும் பதில் வரவில்லை என்று மேலும் குறிப்பிட்டார்.
14.6.2008 அன்று சென்னை கலைஞர் கருணாநிதி சாலை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நடைபெற்ற கழகத்தின் மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு - ‘பெரியாரியல் பேரொளி’ எனும் விருதை வழங்கி கழகம் சிறப்பித்தது. அதில் கழகத்தின் மூத்த தலைவர் திருவாரூர் கே. தங்கராசு கலந்து கொண்டு ஆற்றிய ஏற்புரை:
எனக்குக் கிடைத்த பெருமையெல்லாம் பெரியாரையே சாரும். அவருடைய கருத்துக்களை என்னால் இயன்ற அளவு மக்களிடையே ஒரு 60 ஆண்டுகளுக்கு மேலாக பரப்பி வருகின்றேன். அவருடைய தொண்டர்களிலே ஒரு சிறிய தொண்டனாக இன்னமும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய அலுவலகத்திலே நீண்ட காலம் பணியாற்றிய பிறகு உனது பணி போதும் இத்தோடு நிறுத்திக் கொள் என்று பிரிவு உபசரிப்பாக நிகழ்ச்சி நடத்துவார்களே அது போன்று எண்ணி இவ்வளவு ஆடம்பரமும் பெருமைகளும் மிக்கதாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது. காரணம், நான் அமர்ந்து பேசுகிறேன் உடல்நிலை கருதி. (அப்போது அருகே இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அப்படி இல்லை என்று மறுத்தார்) அப்படி இல்லை என்று கழகத்தின் தலைவர் மறுத்துவிட்டார். நீங்கள் இன்னமும் பல்வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ளலாம் என்று. (கூட்டத்தினர் கைதட்டல்)
நானும் பெரியார் வழியில் வந்தவன் கட்டுப்பாடுகளை மதிக்கிறவன் என்ற முறையில் நேரம் கடந்தாலும் எனது உரையை கூடி இருக்கின்ற மக்கள் தொகையை பார்க்கும்போது ஏன் சுருக்க வேண்டும் (பலத்த கைதட்டல்) என்ற எண்ணம் எழுகின்றது.
காவல்துறையை சார்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் என்னுடைய பெரிய வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக் கொண்டு சற்று கூடுதலாக பேசுவதற்கு நேர வாய்ப்பு தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு என் உரையை துவக்குகின்றேன்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் அச்சடிக்கிற நோட்டுகளில்கூட கடவுளை பரப்புகிற பித்தலாட்டங்களை செய்து வருவதை, இங்கே, பேசிய மரியாதைக்குரிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் நல்லக்கண்ணு அவர்கள் குறிப்பிட்டார்கள். அது அமெரிக்கன் நாய் அவிழ்த்துவிடு இஷ்டப்பட்டதை பொறுக்கட்டும் (கைதட்டல்) என்று அந்தக் காலத்திலே கூறுவார்கள். அப்படித்தான் ஈராக்கிலே பொறுக்கி ஈரானிலே பாய்ந்து இந்தியாவிலும் ஒரு வழி படுத்துவதற்காக இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு கட்டுப்பட்டே தீரவேண்டும் என்று நாள் குறிக்கிறான். அதே நேரத்தில் அவன் நாட்டின் மக்கள் தொகை 30 கோடிக்கு உட்பட்டது. நாம் மக்கள் தொகையை 120 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள்.
நாம் அதிகம் சாப்பிடுவதால்தான் உலகத்திலே விலைவாசி ஏறிவிட்டது என்று சாதாரண அமெரிக்கன் அல்ல, ஜனாதிபதி சொல்லுகிறான் என்றால், நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். உண்மையை இன்மையாகவும், இன்மையை உண்மை யாகவும் நம்புகின்றவர்கள், சொல்லுகின்றவர்கள், பரப்புகின்றவர்கள், இங்கே நிறைய இருக்கின்றார்கள். இங்கே இராமாயணத்தை பரப்புவோரும் - அதே வகைக் கூட்டம் தான்.
இந்த இராமாயணத்தை பரப்புவதிலே இவர்கள் ஏன் ஆர்வத்தை காட்டுகிறார்கள். இவர்கள் ஏன் நம்மை அரக்கர்களாக கருதுகிறார்கள் அவர்களுடைய வேதங்களை, பொய்யுரைகளையும் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் என்று கேட்கக் கூடாது. ஆராயக்கூடாது என்கிறார்கள்.
என்னை பன்முகம் கொண்டவன் என்று சொன்னார்கள். அதற்கு நான் பொருத்தமானவனோ, இல்லையோ அதை வரும் காலம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் தந்தை பெரியார் பன்முகத் தோற்றத்தோடு தான் ஒவ்வொரு துறையிலும் கை வைத்தார். ஒவ்வொரு நிலையிலும் தன் சாதனையை நிலைநாட்டிச் சென்றார்.
நம்முடைய அய்யா நல்லக்கண்ணு மிக அமைதியானவர். ஒரு காலத்திலே பொதுவுடமை கட்சியைச் சார்ந்தவர்கள் எல்லாம் தந்தை பெரியாரை தங்களுடைய ஆசானாக மதித்து பாடுபட்டார்கள். பெரியார் சோவியத் நாட்டிற்குச் சென்று திரும்பிய பிறகு ‘ரிவோல்ட்’ என்ற ஆங்கில பத்திரிகையை தொடங்கினார்.
வெள்ளையனுடைய அரசு அந்த இதழ்களுக்கு தடைப்போட்டு பறிமுதல் செய்தது. அப்போது நாம் தொடர்ந்து தொண்டாற்றுவதா அல்லது இத்தோடு நிறுத்திக் கொள்வதா என்ற இக்கட்டான நேரத்தில் அவர் கொஞ்சம் வளைந்தார். ஆனால் எந்தக் கொள்கையும் விட்டுவிடவில்லை. அப்போது நீதிக் கட்சியை ஆதரித்தார். அப்போது பெரியாரை வசை கூறி சென்றவர்கள் நிறைய உண்டு. ஆனால் முடிவு என்ன ஆயிற்று.
1952 ஆம் ஆண்டு இதே வண்ணாரப் பேட்டையில் முதலாவது பொதுத் தேர்தல். மறைந்த ஜீவா அந்த தொகுதியிலே நிற்கிறார். பொதுவுடமை கட்சியின் மாபெரும் தலைவர். தந்தை பெரியார் தான் பிரச்சாரம் செய்கிறார். அப்போது ஜீவா கூறியது, “காரல் மார்க்சை நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் இதோ அமர்ந்திருக்கிறார் (பெரியார்) காரல் மார்க்ஸ். (கைதட்டல்) தந்தை பெரியார் தான் காரல் மார்க்ஸ்! என்றார். எந்த ஜீவா, பெரியாரை விமர்சித்து வெளியேறினாரோ, அதே ஜீவாதான் பிறகு இப்படிக் கூறினார்.
அதே நீதிக் கட்சியை சார்ந்த ராவ் பகதூர்கள், சர்கள், மிட்டாதாரர்கள், மிராசுதாரர்கள், குறுநில மன்னர்கள் அத்தனைப் பேரையும் கட்சியிலிருந்து வெளியேற்றியவர்தான் பெரியார். 1944 ஆம் ஆண்டிலே சேலத்திலே கூடிய நீதிக்கட்சி மாநாட்டிலே அறிஞர் அண்ணா ஒரு தீர்மானம் கொண்டு வந்து இனிமேல் வெள்ளையர்களின் பட்டயங்களை தாங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த இயக்கத்திலே இடமில்லை என்று தீர்மானம் கொண்டு வந்தார். பெரியார் கூறி, அண்ணாவால் அந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து பலர் வெளியேறினார்கள்.
உத்தமர், வல்லவர் உலக வரலாற்றையே கரைத்துக் குடித்தவர் மிகப் பெரிய மேதை ஜவகர்லால் நேரு. 1947 ஆகஸ்டு 15 இந்த நாடு விடுதலை அடைவதாக சொல்லப்பட்ட நாள். இந்திய அரசாட்சி 1946லேயே நேரு தலைமையில் அமைந்தது. அதற்குரிய நிதி அமைச்சர் பின்னால் பாகிஸ்தான் முதல் நிதிஅமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட லியாகத் அலிகான். அவர் பாகிஸ்தான் பிரிந்து அங்கு போய்விடுகிறார். நிஜாம், கவர்னர் ஜெனரலாகவும், லியாகத் அலிகான் நிதி அமைச்சராகவும் அங்கே பொறுப்பேற்கிறார்கள். இங்கே (இந்தியாவில்) யார் நிதி அமைச்சராக இருப்பது? எந்த நீதிக்கட்சியை பெரியார் ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார்களோ, அதே நீதிக்கட்சியின் ஆர்.கே.சண்முகச் (செட்டி)யார் தான் நேருடைய அமைச்சரவையில் நிதி அமைச்சர்.
ஆகவே யார் என்ன என்று பார்க்காது - அவருடைய செயல் என்ன, அறிவு ஆற்றல் என்ன, இன்னார் இந்தத் தகுதிக்கு உரியவரா என்பதை ஆய்வதிலே தந்தை பெரியாருக்கு நிகரில் யாருமில்லை. ஆகவேதான் அவர் 1927, 1928-லேயே மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு இராமாயணத்தை சந்திரசேகர பாவலர் அவர்களைக் கொண்டு, காண்டம் காண்டமாக இராமாயணத்தை ஆய்வு செய்து ‘குடி அரசிலே’ பெரியார் வெளியிட்டார். சந்திரசேக பாவலர் என்ற புனைப் பெயரிலே ‘இராமாயணத்தை’ ஆய்வு செய்து எழுதியவர், நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இ.மு.சுப்பிரமணிய பிள்ளை. இராமாயணத்தை ‘குடி அரசு’ அம்பலப்படுத்தும் போது, அது வைணவ புராணம் என்பதால் சைவப் பார்ப்பனர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த ஆய்வுக் கருத்துக்களை எல்லாம், மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா . 1942 ஆம் ஆண்டிலேயே அறிஞர் அண்ணா தன்னுடைய வீட்டிலே திராவிடர் கழகம் என்ற பெயர்ப் பலகையை மாட்டிவிட்டுக் கொண்டவர். வாய்ப்பு வந்த உடனே 1944-லே சேலத்திலே நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்றியவர் அண்ணா. அதன் பிறகு 1945-லே திருச்சியிலே கூடிய மாநாட்டிலே அவரே தீர்மானம் கொண்டு வந்து, அவரே தளகர்த்தராக இருக்க ஒப்புக் கொண்டு இந்த கருஞ்சட்டை இயக்கத்தை அண்ணா தொடங்கினார்.
அன்று அணிந்த கருஞ்சட்டையைத் தான் இனமானம் காக்க, இன்றும் நாம் அணிகிறோம். அதே அண்ணா தான் ‘நீதி தேவன் மயக்கம்’, நாடகத்தை எழுதி, நடித்து, இராமாயணத்தில் இருக்கின்ற உண்மையை சொன்னதால் நீதி தேவனே மயங்கிப் போவதுபோல் எழுதினார்.
அதேபோல்தான் இப்போது நம்முடைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மயங்கி இருக்கிறார்கள் (கைதட்டல்). நம்முடைய சேது கால்வாய் திட்டத்திற்கு இணங்கி நம்முடைய கலைஞர் ஒரு படி கீழ் இறங்கிவந்து, அது இராமன் சேது என்றாவது பெயர் வைத்துக் கொள்ளுங்கள். அதனால் மக்களுக்கு பலன் வேண்டும். இந்த நாடு செழிக்கட்டும். இந்த நாட்டின் பொருளாதாரம் சிறக்கட்டும் என்று கூறுகிறார். எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், கலைஞர் இவ்வளவு தூரம் இறங்க வேண்டாம் என்பது எங்களுடைய கருத்து. அவர் இறங்கி அவ்வளவு பணிவோடு வேண்டுகோள் விடுத்தும், அதை இன்னும் ஒப்பாதவர்கள் தான் இருந்து கொண்டிருக் கிறார்கள்.
இராவணன் எங்கே இருந்தான், அனுமான் எங்கே போனான், இலங்காபுரிக்கு போனான். அது என்ன இலங்காரிபுரி என்பது ஒரு ஊரா? சீதையை எங்கே சிறை வைத்தான். யாரையாவது சொல்லச் சொல். ஒரு பாப்பான், ஒத்த பார்ப்பான், சவுண்டி (கைதட்டல்) யாராவது ஒரு ஆள், பதில் சொல்லத் தயாரா? இதையேதான் 60 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். சீதையை ராவணன் மட்டகளப்பில் வைத்தானா, திரிகோணமலையில் வைச்சானா, கொழும்பில் வைச்சானா, யாழ்ப்பாணத்தில் வைச்சானா எங்கே வைத்தான்? இலங்கை என்பது ஊரா பதில் சொல். ஒரு அறிவும் இல்லாத பக்தன் நம்மைப் பார்த்து வாதத்துக்கு வா என்கிறான்.
நான் இராமாயணத்தை ‘காலட் சேபமாக’ 3 நாள், 5 நாள், 7 நாள் என்று, பார்ப்பனர்கள் நிறைந்த பகுதியிலே நடத்தி, இதே கேள்விகளை கேட்டேன். தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பனர் செல்வாக்குள்ள நன்னிலம் வட்டத்தில், இதே போல் காலட்சேபம் நடத்தி கேட்டேன். பார்ப்பனர்கள் சூழ்ந்து நின்று கேட்டார்களே தவிர பதில் இல்லை.
இராவணனை ஏன் பார்ப்பான் ஒழிக்கணும் என்கிறான். இவர்கள் ஏர் கலப்பையை வைத்து உழுதாலே பூமா தேவியின் வயிற்றைக் கிழிக்கும் என்கிறார்கள். அப்படித்தான் அவனுடைய வேதம், சாஸ்திரம், தர்மம் சொல்லுது. நாம் ஏர்க் கருவிகளை கொண்டு மாடு களை பூட்டி விவசாயம் செய்து கொண்டிருந்த கூட்டம். பார்ப்பான் ஒன்றுமே செய்யாமல், ஆடு மாடுகளை திருடிக் கொண்டு போய் நெருப்பிலே போட்டு கொளுத்தி சோமபானம், சுராபானம், மைத்திரேயம், மைத்கல்யம் இவை எல்லாம் அவர்கள் குடிக்கும் சாராயத்தின் பெயர். (கைதட்டல்) குடித்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் தடுத்ததுதான் இராவணன் செய்த குற்றம்.
இன்னும் நம்புறான் பத்துத் தலை இராவணன் என்று. புலவர் குழந்தை இதை விளக்குகிறார்; அது 10 தலை யல்ல, அய்யிரண்டு பத்து திசையிலும் தன் அதிகாரத்தை நிலை நாட்டியவர் என்று. அதனால் தான் இராவணன். இப்போது இருக்கிறதே பீர், விஸ்கி, பிராந்தி என்று அதுபோல அப்போ இருந்ததை தடை செய்தான். ஆடு, மாடுகளை திருடியவர்களை தடை செய்தான். திருட்டுப் பயல்களை விட முடியுமா? கோயிலுக்குள்ளேயே சாமிக்கு போட்டிருக்கிற நகையை திருடிக்கிட்டுப் போயிடுறான். அப்புறம் என்ன, சாமி வெங்காயம் வாழுது அங்கே. (கைதட்டல்)
தேவர்கள் என்பவர்களே, ஆடு மாடுகளை திருடியவர்கள்தான். சாரா யம், மைத்ரேயம், மைத்கல்யம் குடிப்பவர்கள்தான். இராமன் அவதாரம் எடுப்பதே இராவணனைக் கொல்வதற்குத் தான் என்று இராமாயணமே கூறுகிறது.
இராவணனை திட்டமிட்டே இராமன் கொல்கிறான். இந்திய கிரிமினல் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர் பட்டியலிலே வருகிறவன் ராமன். உங்களுக்கு எத்தனை ஆதாரம் வேணும். சீதையே கேக்குறா, ஒரு பாவமும் அறியாத இவர்களை ஏன் கொல்கிறாய் இராமா என்று.
அயோத்திக்கு வடக்கே தான் இமயமலை அடிவாரம் அங்கே தான் காடுகள் எல்லாம் இருக்கிறது. இவன் அங்கே தானே போக வேண்டும். எதற்காக தெற்கே வரான். ஆகவே இராவணனையும் அவர்களை சார்ந்தவர்களையும் அழிக்க வேண்டும் என்பதற்காகத்தான்!
பேரறிஞர் அண்ணா அப்பொழுது பெரிய அறிஞர்கள் என்பாரையெல்லாம் வாதத்திற்கு அழைத்தார். அண்ணாவின் வாதத்திற்கு பதில் சொல்ல முடியாத சொல்லின் செல்வன் இரா.பி.சேதுப்பிள்ளை, நேரம் கடந்து விட்டது. நான் தயார் செய்துக் கொண்டு மீண்டும் வாதத்திற்கு வருகிறேன் என்று சென்றவர் தான்; திரும்ப வரவில்லை.
நாவலர் சோமசுந்தர பாரதியோடு சேலத்தில் அண்ணா எடுத்து வைத்த வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் இரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று சென்று விட்டார். பதில் சொல்ல யோக்கியதை இல்லை, திராணிஇல்லை. அவரும் ஓடி ஒளிந்தார். பிறகு தான் அண்ணா, “நீதி தேவன் மயக்கம்” என்ற நூலை எழுதுகிறார். பிறகு கம்பரசத்தில் பிழிந்தெடுத்தார். இவைகளையெல்லாம் படித்த பிறகு தான் நான் எழுதினேன் இராமாயண நாடகம் என்று. அந்த நாடகத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா, இராமன் வேடம் அணிந்து நடித்தது தான் அந்த நாடகத்தின் சிறப்புகளிலே ஒன்று. அவ்வளவு சிறப்பாக நடித்துக் காட்டி நாடாளுமன்றத்திலேயே கேள்விக் கேட்கக் கூடிய நிலை ஏற் பட்டது நேரு அவர்கள் பதில் சொல்லும்போது, உங்களுடைய இராமராஜியத்தில் சம்பூகன் என்ற ஒரு காட்டு வாசி. தீண்டத்தகாதவன் சகல வேதங்களையும் கற்று தேர்ந்த பிறகு காட்டிலே தவம் செய்கிறான். உடனே இந்த ஆரியப் பார்ப்பனர்கள் தங்களுடைய 5 வயது குழந்தை இறந்துவிட்டது என்று இராமன் முன்னால் கொண்டு சென்று இராமா உன்னுடைய இராமராஜ்ஜி யத்திலே எங்கோ நீதி கெட்டுவிட்டது என கூற, நீதி தவறாமல், மனு தர்ம சாஸ்திரப்படி தானே நான் ஆட்சி செய்கிறேன் என்றான். ராமன். அதற்கு பார்ப்பனர்கள் குழந்தை இறந்து விட்டதே எனக் கூற அதற்கு ஆயுள் முடிந்திருக்கும் என்கிறான் இராமன். பார்ப்பனர்களோ இல்லை அவையெல்லாம் சூத்திரர்கள் வீட்டிலே. எங்கள் ஆத்திலே பிறக்கிற குழந்தைகள், பால்யம், பிரபஞ்சரியம்... என படிப்படியாக 5 கட்டங்களை தாண்டி சந்நியாசம் வாங்கி தான் சாவோம் என்கின்றான். உடனே இராமன் சம்பூகன் தவத்தால் தான் பார்ப்பனர் குழந்தை இறந்தது என அறிந்து அவனை அம்பு வீசி கொல் கிறான். அடுத்ததாக துரோணாச்சாரி தாழ்த்தப்பட்ட ஏகலைவனின் கட்டை விரலை வெட்டுகிறான். இவ்வளவு கதைகளை நீங்கள் வைத்துக் கொண்டு இருக்கிற வரை அவர்கள் இது போன்ற நாடகங்களை நடத்தத்தான் செய்வார்கள் அதைத் தடுக்க முடியாது என்றார் நேரு அவர்கள்.
அகில இந்திய வானொலியிலே, ‘இன்று ஒரு தகவல்’ கூறும் தென்கச்சி சாமிநாதன் கூட, அதில் ஒன்றைக் கூறினார். ராமனுக்கும் சீதைக்கும் திருமணம், மிதிலையில் முடிந்தவுடன், ராமன் எழுந்து, நேரே யாருக்கு மரியாதை செலுத்த வருகிறான்? ‘தசரதன், ஜனகன், கோசலை, சுமத்திரை, இவர்கள் யாருக்கும் முதல் மரியாதை செலுத்தவில்லை. நேரே, கைகேயிடம் போய் கும்பிட்டு வணங்குகிறான். எங்கள் திருமணம் முடிந்துவிட்டது. இனி நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று, கைகேயிடம் தான் கேட்கிறான்!
உண்மையிலே ராமன் யோக்கியனாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தனது குடும்பத்திலே தனக்கு திருமணம் நடக்கும்போது, அதற்கு தம்பி பரதனை அழைத்திருக்க வேண்டுமா, இல்லையா? பரதனையும், சத்ருகனையும், அவர்களின் தாத்தா வீட்டுக்கு அனுப்பிவிட்டு, திருமணத்தை செய்து கொள்கிறான். தசரதன், பரதனுக்கு முடிசூட்டுவதாக, கைகேயிக்கு வாக்கு கொடுக்கிறான், அதற்குப் பிறகுதான் கைகேயியை மணம் முடிக்கிறான். கைகேயிக்குப் பிறந்த பிள்ளைகளுக்கே மகுடம் சூட்டுவேன் என்று கைகேயிக்கு தந்த வாக்குறுதிக்கு எதிராக ராமன், கைகேயியின் பிள்ளைகள் இல்லாத நேரத்தில், வஞ்சகமாக மகுடம் சூட்டிக் கொள்ள முடிவு செய்கிறாள். இதுதான் உயர்ந்த பண்பாடா? இவன்தான் வணங்கத்தக்க அவதாரமா? ராமர் பக்தர்கள் பதில் சொல்லட்டும்!
இந்தக் கருத்துகளை எல்லாம் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பிரச்சாரங்கள், கருத்துகள் தீவிரமாகப் பரப்பப்படாத காரணத்தால்தான் இன்றைக்கு பார்ப்பனர்கள் ‘ராமன்’ பெயரைக் கூறி, ஒரு பெரிய திட்டத்தையே முடக்கி விடத் துணிந்து விட்டார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான அய்யா நல்லக்கண்ணு அவர்களுக்கு, நான் இந்த நேரத்திலே வைக்கும் வேண்டுகோள், இங்கே நீங்கள் பேசியதுபோல் மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இராமாயண எதிர்ப்புக் கருத்துகளை, பொதுவுடைமை கட்சியினரும், மக்களிடையே பரப்ப வேண்டும். இவ்வளவு நேரம் பேசுவதற்கு அனுமதித்த காவல் துறையினருக்கும், பெரும் திரளில், இங்கே, இது வரை அமர்ந்திருந்து எனது கருத்துகளை செவிமெடுத்த மக்களுக்கும், எனது நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். - இவ்வாறு திருவாரூர் கே. தங்கராசு அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டார்.