இயக்குனர் ரஞ்சித் உருவாக்கிய ‘காலா’ திரைப்படம் பம்பாய் ‘சேரிப் பகுதி’ மக்களின் குடியிருப்பையும் நிலங்களையும் பெரும் தொழில் நிறுவனம் அரசியல் அதிகாரத்தோடு கைப்பற்றுவதை எதிர்த்து மக்கள் நடக்கும் போராட்டத்தை ‘இராம-இராவண’ப் போராட் டத்தின் பின்புலத்தில் சித்தரித்தது. பெரும் முதலாளி இராமர் பஜனை செய்வார்; மக்களுக்காகப் போராடும் ‘காலா’, ‘இராவண காவியம்’ பேசுவார். தமிழ் ஊடகங்கள் இப் பிரச்சினையை விவாதத்துக்குக் கொண்டு வரா மல் பதுங்கி விட்டாலும் பல தெலுங்கு தொலைக்காட்சிகளில் இது குறித்து விவாதங்கள் நடந்தன.

அண்மைக்காலமாக கடவுள் மதத்தை மறுக்கும் நாத்திகராக தன்னைத் துணிவுடன் வெளிப்படுத்தி வரும் தெலுங்கு ஆவணப்பட இயக்குனர் ‘கத்தி’ மகேஷ், இந்த விவாதங்களில் பங்கேற்று ‘இராம’னுக்கு எதிராகப் பேசினார். சங்பரிவார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் தந்தன. உடனே அய்தராபாத் காவல்துறை பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. கடந்த 2018 ஜூலை 8ஆம் தேதி இரவு அவரை கைது செய்ததோடு 6 மாதங்களுக்கு அய்தராபாத் நகரத்துக்குள் நுழைய கூடாதென தெலுங்கானா காவல்துறை தலைமை இயக்குனர் மகேந்தர் ரெட்டி உத்தரவிட்டிருக்கிறார். உடனே காவல்துறை அவரை வேனில் ஏற்றி அவரது சொந்த ஊரான சித்தூரில் கொண்டுபோய் இறக்கி விட்டுள்ளது.

‘இராமன்’ 14 ஆண்டுகள் காட்டுக்கு கடத்தப் பட்டதைப்போல் இராமனை விமர்சித்ததற்காக ஒரு பகுத்தறிவாளர் 6 மாத காலம் ‘ஊர்’ கடத்தப்பட்டிருக் கிறார். தெலுங்கானாவில் நடக்கும் ‘இராமராஜ்யம்’ இது. ‘இராவணன்’ உருவத்தை புதுடில்லியில் தீ வைத்து எரித்து, ‘இராமலீலா’ கொண்டாட்டம் நடத்துகிறது ‘பார்ப்பன’க் கூட்டம் அதை திராவிடர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம்!

சரி; ‘கத்தி’ மகேஷ் பேசினால் குற்றம்; பார்ப்பனத் தலைவர் இராஜாஜியே - ‘இராமன்’ வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி யிருக்கிறாரே! அதற்கென்ன பதில்? இதோ இராஜாஜி ‘இராமனை’ தோலுரிக்கிறார்.

“உத்திர ராமசரிதம் என்னும் தலைப்பில், சமஸ்கிருதத்தில் பவபூதி என்பவர் எழுதி, க.சந்தானம் அய்யங்கார் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய நூலை சென்னை அலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்நூலுக்கு ராஜாஜி முன்னுரை ஒன்று எழுதியுள்ளார். இந்தக் கருத்துக்களைப் படிப்பவர்கள் இராஜாஜியா இப்படி எழுதியுள்ளார்? இருக்காதே! நம்ப முடியாது என்கிறீர்களா? உண்மை தான், இவை இராஜாஜி எழுதியவை. அது இதோ!

“நாரதர் சொல்லி வால்மீகி இயற்றினார்; இதில் ஒரு விதத் தவறும் இருக்கமுடியாது; ஓர் எழுத்து விடாமல் எல்லாம் ஒப்புக் கொண்டே தீர வேண்டும் என்பதாயிருந்தால் எனக்கு ஒன்றும் சொல்ல இட மில்லை. அப்படியில்லை; உனக்குத் தோன்றியதைத் தோன்றியவாறு சொல் லலாம்; குற்றமில்லை என்று பெரியோர் இடம் கொடுத்தால் இராமாயண உத்திர காண்டத்தைப் பற்றிச் சொல்ல விரும்பு கிறேன்.

நானும் எவ்வளவோ முயற்சி செய்து தான் பார்த்தேன் - சிறீ ராமன் உலகத்துக்கு வழிகாட்ட அவதரித்த கடவுள் - சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டபின் ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டுக் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்கிற கொடூரக்கதை என் மனசுக்குச் சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. அன்புடனும், பக்தியுடனும் முயற்சி செய்திருக்கிறேன்.

பெரியோர்கள் என்னை நாஸ்திகன் - சூனா மானாக் காரன் என்று சொல்லக் கூடாது. உண்மையில் இந்தக் கதையைச் சகிக்க என்னால் முடியவில்லை. நாஸ்தி கனாக இருந்தால் ஒரு வேளை சகித்தி ருப்பேன்.

ராமாயணத்தில் முதல் அத்தியாயத்தில் கதை முழுவதும் சொல்லப்படுகிறது. அதில் இந்த அனர்த்த விஷயம் சொல்லப்படவில்லை. நாடு நகரம் முழுவதும் அறிவு விவேகிகளும் சீலமும் நிறைந்த ஜனங்கள் எல்லோரும் தர்மாத்மாக்கள் வெகு சாஸ்திரங்களை அறிந்தவர்கள் என்றும், அற்ப குணமுள்ளவன் - வித்தை பெறாதவன் - நாஸ்திகன் துஷ்டன் மருந்துக்கும் கூட ஒருவன் அகப்படமாட்டான். என்றெல்லாம் ஓயாமல் பாடப்பட்டிருக்கிறது.இப்பேர்ப்பட்ட ஜனங்கள், சீதை ஊருக்குத் திரும்பி வந்ததும், இவ்வளவு கேவலமாகப் பேசியது எப்படி?

சிறீராமன் அரசாண்டு வந்த அயோத்திய நகரம் நம் கலிகால சென்னப்பட்டணம், திருச்சிராப்பள்ளியை விடக் கேடுகெட்ட நிலைக்கு எவ்வாறு வந்துவிட்டது. இந்தக் கலிகாலத்தில் நம்மைப் போன்ற, தாழ்ந்த மதியும் சீர் கெட்ட பண்பும் கொண்டவர்களும் கூடச் சொல்லத் துணியாத பேச்சை, அயோத்தியா வாசிகள், சிறீராமனுடைய ‘பிரியதேவி’யைப் பற்றிப் பேசினார்கள் என்றால் எவ்வாறு ஒப்புக் கொள்வது?

அப்படி யாராவது பேசினாலும் ராமன் தன் காதில் போட்டுக் கொண்டான், அந்தப் பாமர ஜனங்கள் கூட சீதையைக் காட்டுக்கு அனுப்பச் சொல்லவில்லையே. ஏன் ஒரு விசாரணை யுமின்றி அக்கிரமமாக இவ்வாறு ராமன் செய்யத் துணிந்தான்? இதை எவ்விதத்திலும் ஒப்புக் கொள்ள முடியாது. இதனால் தான் நன்னெறிப் பயில்வதற்கு இந்தக் கதை உதவாது என்று நம் முடைய பெரியோர் இந்தக் கட்டத்தைப் பிர யோகத்தினின்றும் தள்ளி விட்டார்கள். ஆழ்வார் களும் இதை எடுத்துப் பாடாமல் நீக்கி விட்டார்கள்.

இம்மாதிரியான ஒரு பெரும் அநீதியை சிறீராமச்சந்தின் தன் தேவிக்குச் செய்ததாக எப்படியோ ஒரு கதை கர்ண பரம்பரையாகச் சொல்லிவிட்டு, அந்தக் காலத்திலும் கூட வால்மீகி முனிவரையும் தடுமாறச் செய்தி ருக்க வேண்டும். புண்ணிய கதையாகிய ராமாயணத்தைப் பாட உட்கார்ந்த போதே இந்தப் பொல்லாத அய்தீகத்தை என்ன செய்வது என்று அவர் யோசித்திருக்க வேண்டும்.

அதற்காகவே முனிவர் யுத்த காண்டத் தின் முடிவில், வேண்டாத ஓர் அக்கினிப் பரிட்சையை அமைத்து, அத்துடன் அந்த ஆபத்தும் ஒழியும் என்று எண்ணினார் போல் தோன்றுகிறது. ஆனாலும் அவர் எண் ணம் முடிவு பெறவில்லை. உத்தரகாண்டம் யாரோ எழுதி ராமாயணத்துடன் சேர்ந்தே போயிற்று, ஊர் வம்புக்குப் பயந்து ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியது ராவணன் செய்த செயலை விடப் பெரும் பாவச்செயல்.

ராவணன் அபாயங்களைப் பொருட்படுத் தாமல் இந்த கெட்ட காரியத்தில் இறங்கி ஜடாயுவோடு போர் புரிந்து அவனை வென்று சீதையை இலங்கைக்குத் தூக்கிப் போனான். துஷ்டத்தனமானாலும் தைரியம் கலந்த செயல். ராவணன் காமவெறி கொண்டவனானாலும் இலங்கையில் தேவியை பலாத்காரம் செய்ய எண்ணம் கொள்ளவில்லை. அசோக வனத்தில் வைத்து அவள் அன்பைப் பெற முயன்று, பலநாட்கள் தன் வெறியை அடக்கியே வந்தான்; அதற்காக உயிரையும் நீத்தான்.

ஆனால் இந்த உத்தர ராம சரித்திரத்தில் வெறும் ஊர் வம்பைக் கேட்டு ராமன் சீதையை, நீதி உண்மை எதையும் கருதாமல் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்று சொல் லப்படுகிறது. உண்மையில் இது நடந்திருந் தால் இறந்த ஜடாயு மீண்டும் உயிர் கொண்டு எழுந்து ராமனுக்கு நல்ல புத்தி புகட்டியிருப் பான். மகனே இது தகாது. இது பயங் கொள்ளித்தனம். இது தர்மத்தைக் கொன்ற தாகும் என்று சொல்லி தடுத்திருப்பான்... உத்திர காண்டத்தை விட்டு விட இஷ்டமில் லாமற் போனால், ராமாயண மாலையில் ரத்னங்களாக ஜொலிக்கும் வீர புருஷர் களையும் அவர்கள் பண்புகளையும் வெறுங் கதையன்று தள்ளிவிட வேண்டியதாகும்.

ஆயினும் பவபூதி என்ற பேராசிரியர் பொருத்தமற்ற இந்தக் கதையை அழகிய நாடகமாக சமஸ்கிருதத்தில் இயற்றினான்; அது மிகவும் புகழ் பெற்ற நூல், நண்பர் சந்தானம் என்னுடன் சிறையிலிருந்த காலத்தில் அதைத் தமிழில் எழுதி முடித்தார். மிகவும் சாமர்த்தியமாக வட மொழி நூலின் அழகு குறையாதபடி மொழி பெயர்த்தி ருக்கிறார்.”

இராஜாஜி இருந்திருந்தால் அவரையும் தண்டித்திருப்பார்களா?

Pin It