“ராவுக்கு எல்லாம் வந்திடுறேன்னு சொல்லிட்டுப் பூட்டான்... எங்கடி போயிருப்பான்..” என்று பார்த்தசாரதி கேட்டார்.

“கம்முன்னு கெட புல்லைங்களோட தானே போய்கிது... அது கண்டிப்பா ஊட்டுக்கு வந்து சேர்ந்துரும். நீ என்னதுக்கு டபாச்சினுகிரா... பேசாம கம்முனு கெட...”

 ”பின்னாடி யென்யா நிக்கிறா! போய் கம்முன்னு குந்து..” என்று முனியம்மா, தனது கணவன் பார்த்தசாரதிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.

பார்த்தசாரதியும் முனியம்மாவும், சிறுவயதிலிருந்து திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார்கள். பார்த்தசாரதி வெங்கட்ரங்கம் வீதியைச் சேர்ந்தவர். முனியம்மாள் கால்வாய்த் தெருவைச் சேர்ந்தவர்.

முனியம்மா, சென்னை பறக்கும் ரயில் திருவல்லிக்கேணி நிறுத்தத்தின் கீழ் உள்ள கால்வாய்த் தெருவில் தகரம் மற்றும் கட்சியினர் விளம்பரங்களுக்கு வைக்கும் பேனரையும் வைத்து தயார் செய்த ஒரு தகரக் கொட்டகையில் தான் வசித்து வந்தாள். பார்க் டவுண் மேம்பாலத்தின் இன் அருகிலுள்ள பாடிகாட் முனீஸ்வரன் சாமியை குல தெய்வமாகவும் வழிபட்டு வந்தாள்.

சென்னையின் பிரதானமான அடையாளமான கூவம் என்கிற கருப்பு நதியின் ரம்யமான வாசனையிலேயே வாழப் பழகியவாள்.

பார்த்தசாரதியின் குடும்பம், சற்று பொருளாதாரத்தில் அவளை விடக் கூடுதலாகவும், மாடி வீடு போன்ற வசதி அமைப்புடன் இருந்தார். தினமும் அவர்கள் வீட்டில் கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருக்கும் சுப்பிரமணியனை குல தெய்வமாக வழிபட்டு வந்தனர்.

முனியம்மாவின் அம்மா ருக்கு. கோஷா மருத்துவமனையின் சாலையோர நடைபாதையில் மீன்குழம்பு உணவு விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். ருக்குவின் மீன்குழம்புக்கு அடிமையான பார்த்தசாரதி அவ்வப்போது, ருக்குவின் கடைக்கு வந்து “அக்கா கொஞ்சமா சாதம் போடுங்கோ நிறைய குழம்பு ஊத்துங்கோ”. என தேவ பாஷையில் உரிமையுடன் கேட்பார். தேவர்கள் கடையும் அமுதத்தை விட ருக்கு அக்காவின் மீன் குழம்பு மேலானது என எண்ணிக் கொள்வார் பார்த்தசாரதி.

அவ்வாறு சாப்பிட வரும் பொழுதெல்லாம், பள்ளிக்கூடம் செல்லாத முனியம்மாள் கடையில் இருந்து உணவு விற்பாள். சாலைகளில் ஓடும் வாகன இரைச்சலிலும், புழுதி தூசி காற்றுக்கும் நடுவே, தினமும் பார்த்துப் பழகிய இவர்கள் இருவரும் காதல் வலைக்குள் விழுந்தனர்.

அதனாலேயே, தன் அம்மாவிற்குத் தெரியாமல் கைகளால் அரைக்கப்பட்ட மசாலாக்களில் ஊறிக் கொண்டிருந்த மீன்களை எடுத்துக் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயில் வறுப்பாள். அப்படி அவள் வறுக்கும் மீனின் வாசனை கோஷா மருத்துவமனையில் பிரசவ வலியால் மயங்கிக் கிடந்த தாய்மார்களின் மூக்கைத் துளைத்து, நாவில் எச்சில் ஊறும் அளவிற்குச் சுவை கொண்ட மீன்களைப் பார்த்த சாரதியின் தட்டில் அடுக்கி விடுவாள். பார்த்தசாரதியிடம் இருந்து “போதும்!”. என்கிற சொல் வரும்வரை அடிக்கிக் கொண்டிருப்பாள்.

இப்படியாக, இருவருக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பார்த்தசாரதிக்கு முனியம்மாளுக்கும் பிறந்த மகன் தான் பில்கேட்ஸ். ஆள் பார்ப்பதற்கு ஓமக்குச்சிமாரி, நெடுமரம் போலவும் வளர்ந்திருப்பார்..

பில்கேட்ஸ், சென்னை மாநகராட்சி பள்ளியில் மூன்றாவது படிக்க வேண்டிய மாணவர். தனது மற்ற சிறுவர்களோடு மெரினா கடற்கரையின் ஓரம் பட்டம் விடுவதற்குச் சென்றுவிடுவார்.

எப்போதும் போல விளையாடக் கிளம்பிய பில்கேட்ஸ், இரவு 8 மணி ஆகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. எப்பொழுதும் விளையாடச் சென்றாலும் பில்கேட்ஸ் பொழுது சாய்வதற்குள் வீடு வந்து விடுவார். அன்றைக்கு இரவு நேரம் கடந்து செல்லச் செல்லப் பார்த்தசாரதிக்கு ஒருவிதமான பயமும் பதட்டமும் ஏற்படத் தொடங்கியது.

தனது மனைவியின் பேச்சையும் மீறி பார்த்தசாரதி வீட்டிலிருந்து பிள்ளையைத் தேடக் கிளம்பினார். கடற்கரையோரம் பார்க்கச் சென்றிருந்தார். அங்கே எந்தச் சிறுவர்களும் விளையாடுவதாக அவருக்கு தெரியவில்லை. லைட் ஹவுசில் இருந்து கலைஞர் சமாதி வரையிலும் தேடி அலைந்தார். எங்கேயும் பில்கேட்சை காணவில்லை. உடனடியாகத் திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்திற்கு விரைந்தார்.

“ஐயா.. ஐயா.. என் புள்ளையக் காலையில விளையாடுறதுக்குப் போச்சுயா சாயங்காலம் ஆயிப்போச்சு. உன்னும்மு ஊட்டுக்கு வரலையா. எப்பவும் கரெக்கிட்டா வந்துடும். இன்னைக்கு என்னமோ ஆளையே காணோம். எங்க போய்கிதுனு தெரியல. எனக்கு வேற ஒரே பேஜாராகீது ஐயா.” எனக் கூறிவிட்டு கை, கால்கள் நடுங்க, கண்களில் பதட்டமும் பரிதவிப்புடனும் பார்த்தசாரதி காவல் நிலையத்தில் நின்றார்.

“யாருயா அது? உள்ள வரச் சொல்லு.” என்கிற குரல் உள்ளிருந்து ஒலிக்க, பார்த்தசாரதி உள்ளே சென்றார். அந்த அலுவலகத்தின் மேஜையில் புதிதாக உதவி ஆய்வாளராகப் பதவி ஏற்றிருந்த திருநங்கை சுபத்ரா அமர்ந்திருந்தாள்.

“என்னய்யா புள்ளையா காணுமா…?”

“ஆமாங்க அம்மா...”

“காலையில எப்பொ போனான்..?”

“அது விடியர்த்க்காட்டியும் எழுந்து புடுச்சுமா..”

“என்ன டிராஸ்போட்டு இறுந்தான்..?”

“செகப்பு கலர் டீ-சர்ட்ங்கம்மா. அதுல சேகுவாரா படம் போட்டு இருக்கும். ஒரு கருப்பு டவுசர் போட்டு இருந்தான்மா..”

சுபத்ரா கேட்ட அனைத்து விவரங்களையும் பதட்டத்துடனும், படபடப்புடன் பார்த்தசாரதி கூறிக் கொண்டிருந்தார்.

இரவு 10 மணி. பார்த்தசாரதி காவல்நிலையம் வந்த செய்திக் கேட்ட முனியம்மாள், திருவல்லிக்கேணி D1 காவல் நிலையம் நோக்கி விரைந்தாள்.

காவல் நிலையத்தின் வாசலில் அமர்ந்து “ஐயோ…ஐயையோ.. என் புள்ளைய காணோமே..!!” என்று கத்திக் கூப்பாடு போட ஆரம்பித்து விட்டாள்.

உள்ளிருந்து காவலர்கள் ஓடி வர, அவளை உள்ளே இழுத்துச் சென்று “உங்க வீட்டுக்காரர் இப்போத்தாமா கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்காரு, நாங்க இப்ப தான் கம்ப்ளைன்ட் எழுதி வாங்கியிருக்கிறோம். எப்படியும் உங்க பிள்ளையைக் கண்டுபுடிச்சுத் தாரோம். நீங்க ரொம்பத் தைரியமா இருங்க..” என்று சுபத்ரா, முனியம்மாவிற்க்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.

அவர்களின் ஆறுதலைக் காதில் கேட்காத, அவள், மயங்கிய நிலையில் பிள்ளையை எப்போது காண்போம் என்ற ஏக்கமும் துக்கமும் அவளை மெல்ல மெல்ல.. கொல்லத் தொடங்கியது.

இந்த நிலையில் சுபத்திரா, ஏட்டு ரங்கராஜனை அழைத்து ஜீப்பை எடுக்கச் சொல்லி, பில்கேட்சைத் தேடக் கிளம்பினாள்.

“ரங்கராஜன், இந்த ஏரியா பசங்க எல்லாம், நைட் டைம்ல எங்க அதிகமாக தங்குவாங்கன்னு உங்களுக்குத் தெரியும்ல.” என்று சுபத்திரா கேட்க..

உடனே ரங்கராஜன் தலையில் தொப்பியை மாட்டிக் கொண்டு ஒரு சல்யூட் வைத்து, “அவனுங்க லைட்ஹவுஸ் கீழாதான் அட்டில எப்பவும் இருப்பாங்க, எப்பவும் இருபது முப்பது பசங்க கும்பலா நின்னு பேசிக்கிட்டு கானா பாட்டு பாடிக் கிட்டும், விளையாடிக்கிட்டும் இருப்பானுங்க மேடம். நாம, அங்க போனா இந்தப் பொடியன் கிடைக்கலாம்.”

“சரி, அப்புறம் என்ன..வண்டிய அங்க விட வேண்டியதுதானே..” என்று சுபத்திரா சொன்னவுடன் ஜீப் வேகமாக லைட் ஹவுசை நோக்கிப் புறப்பட்டது.

அங்கே, நிறையப் பசங்க கும்பல் கும்பலாக உட்கார்ந்து டோலக்கு வாசிச்சிகிட்டு இருந்தார்கள்.. அதில் ஒரு நபர், மிகவும் அழகான கானாப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டு இருந்தார்.

“ஏ கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
எனடாகத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்..

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்…!”

என்கிற பாடல் ஜீப் வந்தவுடன் நின்று விட்டது. ரங்கராஜன் ஜீப்பில் அமர்ந்தபடி கையசைத்தார். அந்தக் கும்பலில் இருந்து சில பசங்க எழுந்து வந்தார்கள்.

“என்ன சார் இன்நெத்திக்கி? நம்ம அட்டிக்கு.” என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் குரல் கொடுத்தான்.

“சும்மாதான் உங்கள எல்லாம் பார்த்து நலம் விசாரிச்சுட்டு போகலாமுனு..”

சொல்லிக்கிட்டே சுபத்திரா ஜீப்பை விட்டுக் கீழே இறங்கினாள்.

சுபத்ராவைப் பார்த்ததும், அங்கிருந்த பசங்க அனைவரும் பள்ளியில் ஆசிரியருக்கு வணக்கம் வைப்பதைப் போல, சுபத்திராவிற்கும் வணக்கம் வைத்தனர்.

“வணோக்கம் அக்கா.”

பில்கேட்ஸின் புகைப்படத்தைக் காட்டி,.

“இந்தப் பையன எங்கையாவது பார்த்து இருக்கீங்களாடா? இன்னைக்குப் பூரா உங்க கூட தான் விளையாடிக்கிட்டு இருந்தானாமே?” என்று சுபத்ரா கேட்டாள்.

புகைப்படத்தை வாங்கிப் பார்த்த பசங்கள், தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டார்கள்.

“என்னடா உங்களுக்குள்ளேயே பேசிகிட்டு இருக்கீங்க இன்னைக்கு வந்து விளையாட்டான இல்லையா.” சுபத்ரா அதட்டலாகக் கேட்டாள்.

“அக்கா இந்தப் பையனை எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனா ! இவன் இங்கெல்லாம் வந்து விளையாடல, இவன் செத்துப் போயி ரொம்ப நாளாகுது.”

“என்னடா சொல்ற.?” கண்கள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டாள் சுபத்ரா.

“ஆமாக்கா இந்த பையன் முனியம்மா அக்காவோட பையன். மீன் குழம்பு கடை ஓட்டலெலாம்… வச்சிருக்காங்கள… அந்த அக்காவோட பையன். அவன் ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒன்னாவது படிச்சிக்கிட்டு இருந்தானு நினைக்கிறேன். கோஷா ஆஸ்பத்திரி பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல அவங்க கடை வைச்சு வியாபாரம் பண்ணிணு இருந்தாங்க.

இந்தப் பையன ரோட்டு ஓரமா உட்கார்ந்து விளையாடினுருந்த அப்போ.. அந்தக் கடையில் ஒரு ஆள்! இருப்பாரு ஆ… பார்த்தசாரதி அண்ணா. அந்த அண்ணாவுக்குச் சொந்தக்காரங்க கார் ஒன்னு வேகமாக நம்ம பாரதியார் ரோட்டில போச்சு, அப்போ, இந்த பையன் விளையாடிகினே குறுக்கால வந்ததால், அந்தக் கார் அப்படியே அவன அடிச்சி தூக்கிப் போட்டுச்சு அவங்க கண்ணு முன்னாடியே. அன்னையிலிருந்து அவங்க ரெண்டு பேருமே அதிர்ச்சி ஆயிட்டாங்க..”

“எப்பவுமே வீட்டில் தான் கிடைப்பாங்க. வருஷம் வந்த நினைவு நாள் கொண்டாடுவாங்க.. இன்னைக்கு அந்தப் பையன் நினைவுநாள்னு நினைக்கிறேன். அதான் ரொம்ப மெர்சலாகிப் போயி உங்கக் கிட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க. அந்தப் பையனை நினைச்சு நினைச்சு தினமும் அழுவாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அவன் டெய்லியும் வீட்டுக்கு வந்துடுவான்னு எல்லார் கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க…”

“தகரக் குடிசையில் பிறந்தாலும் அந்த பில்கேட்ஸ் மாதிரி ஒரு ஆளா வரணும்னு சொல்லிட்டு தான் அந்த அக்கா அவனை வளத்துச்சு.”

“அந்தப் பார்த்தசாரதி அண்ணன் கூட அவனை நெனச்சு அப்போ அப்போ பீலிங்காயிடுவாரு. அந்த அக்காவ விட அண்ணனுக்கு தான் ரொம்பக் கவலை.”

“அந்தக் கார் மட்டும் அன்னிக்கு நினைச்சிருந்தா பிரேக் போட்டு இருக்கலாம் என்ன பண்றது? பிரேக்கு தான் போடலேயே,. எந்தப் பணக்கார கார் தான் பிரேக் புடிக்குது.”

“அந்த அண்ணன் இன்னை யாரும் அக்காவைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டு இருப்பாரு.. நீங்க ஒன்னும் கண்டுக்காம ஸ்டேஷனுக்குப் போய்டுங்க..” என்று அங்கு இருந்த பசங்க சொன்னார்கள்.

ஜீப் அங்கிருந்து கிளம்பியது. கண்ணகி சிலை தாண்டி பாதி தூரம் வந்தவுடன் ஒரு கிழிந்த சட்டையையும், கந்தல் கோலமான லுங்கியையும், ஒரு அழுக்குச் சாக்கு முட்டையுடன் தலையெல்லாம் சடைபிடித்து ஒரு பைத்தியக்காரன் போல இருப்பவன் ஜீப்பை வழிமறித்து,

“நீங்க தேடினாலும் கிடைக்க மாட்டான் திரும்பியும் வர மாட்டான் அவன் ரொம்ப தொலைவு பூட்டான்!...” எனக் கூறிவிட்டு அந்த சாலையின் இருண்ட பகுதியில் மறைந்து விட்டான்.

ரங்கராஜன் சுபத்ராவின் கண்ணில் இருந்த குழப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்….

-  மு.தனஞ்செழியன்

Pin It