பேருந்திலிருந்து இறங்கியவன் அங்குமிங்கும் தனது விழிகளை அலையவிட்டான். அவனுக்குப் பின்புறமாக இருந்து ‘எப்பா….தோ…கீறன்’ என்று ஒரு குரல் வந்தது. அந்தக் குரல் வந்த திசையை நோக்கிப் புறப்பட்டுப் போனவனின் கைகளில் ஒன்றுமில்லை. அவன் இரண்டு கைகளும் தனது இரண்டு பக்கங்கங்களிலும் உள்ள பேண்ட் பாக்கெட்டுகளில் நுழைந்து துழாவிக்கொண்டிருந்தன.

            தரையில் குத்தங்காலிட்டு உட்கார்ந்திருந்த அவனது தந்தை தரையில் தனது இரண்டு கைகளையும் ஊன்றி மெதுவாக மேலெழ முயற்சித்துக் கொண்டிருக்கும்போதே அவருக்கு அருகில் போய்விட்டான் அவன்.

            தோளில் கிடந்த துண்டை எடுத்து தனது முகத்தைத் துடைத்துக் கொண்டவர் அதைத் தனது மகனிடம் நீட்டித் “தலைல போடுபா…இன்னா வெயில் அடிக்குது பாரு…” என்று அவனிடம் கரிசனம் காட்டினார். அதை வாங்கிய அவன் தனது கைகளில் மடித்து வைத்துக்கொண்டான். இருவரும் எதையோ நோக்கி நடப்பதுபோல் நடந்து கொண்டிருந்தனர். “ஏம்பா… பணம் பொரட்டிகினுதாம்பா உன்னப் பாக்க வந்தேன். நீ கவலப்படாத. புள்ளயோட படிப்புதான் முக்கியம். நாளைக்கிப் போயி அந்த பள்ளிக்கூடத்துல உட்டெறிப்பா…எல்லாம் செரியாப் பூடும்” வேட்டிக்குள் அறைஞான் கயிற்றில் முடிபோட்டு கட்டி வத்திருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார் அவர். அதை வாங்கி பிரித்தான் அவன். அந்தப் பணம் பல பிலாஸ்டிக் கவர்களாளும் பேப்பர்களாலும் சுற்றப்பட்டிருந்தது. அவை எல்லாவற்றையும் வீசியெறிந்துவிட்டு பணத்தை எண்ணிக்கொண்டிருந்தன அவனது விரல்கள். அதில் பத்து ரூபாய் நோட்டிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுவரை இடம்பெற்றிருந்தது. லாவகமாய் பாக்கெட்டில் சொருகிக் கொண்டான்.

            “இன்னாப்பா…துணியெல்லாம் இவ்ளோ அழுக்கா இருக்குது…தொவிச்சி போடக்கூடாதா? சேவிங் பண்ணக் கூடமாப்பா நேரமில்ல” என்று அவனை ஓட உருவப் பார்த்த அவர் போட்டிருந்த சட்டையும் கட்டியிருந்த வேட்டியும் அழுக்கேறி இருந்தது. அவரையே சற்று நேரம் உற்று பார்த்துக்கொண்டிருந்தவன் அவரை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஒரு உணவகத்திற்குப் போனான். அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட அவர், “நான் வரும்போதே சாப்டுதாம்பா வந்தேன். எனுக்கு வாணாம். நீ சாப்புடு” அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். இரண்டு மூன்றுமுறை அவரை சாப்பிடும்படி வற்புறுத்தினான். அவர் கேட்கவில்லை. வயிற்றைத் தட்டிக் காட்டினார். தனக்கு வயிறு வேறு சரியில்லை என்று காரணம் சொன்னார்.

            பிளேட்டிலிருக்கும் இட்லியை மெதுவாக பிட்டு பிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன். அழுக்கேறிய துணி, எண்ணெய் தேய்க்காத செம்பட்டை நிறத்திலான தலைமயிர், சவரம் செய்யப்படாத முகம் பார்க்க இன்னமும் பட்டை தீட்டப் படவேண்டிய ஓவியம் போல் இருந்தார் அவர். கைகளைக் கழுவிக்கொண்டு வெளியில் வந்து தனது தகப்பனிடம் சொல்லிவிட்டுப் புறப்படுவதற்குத் தயாரானான் அவன்.

            “ஏம்பா…இவ்ளோ தூரம் வந்திருக்க. இன்னும் கொஞ்சந்தூரம்தான நம்ப ஊரு. அம்மாவ ஒரு எட்டு வந்து பாத்துட்டுப் போயிடாம்பா” அவரது கண்கள் அவன் பதிலை எதிர்நோக்கியிருந்தன. அவர் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக தனது கிராமத்திற்குப் போகும் சாலையை நோக்கி நடந்தன அவனது கால்கள். தனது முகத்திலும் கழுத்திலும் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே அவரும் அவன் பின்னோக்கி நடக்கலானார்.

            அவர்கள் இருவரும் வீடு போய் சேர்வதற்கு மணி ஒன்றாகியிருந்தது. தரையில் படுத்தபடி கிடந்த அந்த கேஸ் அடுப்பில் லைட்டரை வைத்து ‘டொக் டொக்’ என்று அடித்துக்கொண்டிருந்தாள் அவன் அம்மா. சாக்கடைக்குப் போய் ஒரு சொம்புத் தண்ணீர் ஊற்றி காலைக் கழுவிக்கொண்டு உள்ளே போனார் அவன் அப்பா. தனது செருப்பை வெளியே கழற்றிவிட்டு உள்ளே போய் வெறுந்தரையில் உட்காரப்போனவனைத் தள்ளிவிட்டு விருட்டென்று பாயொன்றை விரித்து அதில் உட்காரச் சொன்னாள் அவன் அம்மா.

            அவனைச் சாப்பிடச் சொன்னாள். சற்றுநேரம் கழித்துச் சாப்பிடுவதாகச் சொல்லி அந்தப் பாயில் படுத்துக்கொண்டான். அவன் அப்பா உள் அறைக்குள் உட்கார்ந்துகொண்டிருந்தார். தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டுபோய் வைத்தாள் அவன் அப்பா. சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டு முடித்தவர் துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வெளியில் எங்கோ புறப்பட்டுப் போனார்.

            சற்று நேரம் கண்ணயர்ந்து எழுந்தவனுக்குச் சோற்றைத் தட்டில் போட்டு வைத்துவிட்டு அவன் அம்மா சொன்னாள் “பாவம்பா உங்கப்பன் காலைல கஞ்சி ஆவறதுக்குள்ள உன்ன பாக்க கெளம்பி வந்துட்டாரு. பாவி மனுசன் ரெண்டு இட்லி சாப்டு வந்தாதான் இன்னா” என்றாள். அவன் அம்மா போட்டு வைத்த சோற்றையே பார்த்துக்கொண்டிருந்தான். ஏனோ அவனுக்குப் பசியே எடுக்கவில்லை.

- சி.இராமச்சந்திரன்

Pin It