அப்பொழுது வரை சாதரணமாக சென்றுக்கொண்டிருந்த நாள், அந்த கணத்தில் மறக்க முடியாத நாளாக மாறியது. அதோ அங்கு தூரத்தில் அமர்ந்திருக்கும் அவளை பார்த்தபோது அது அசாதரணமான நாளாக ஆனது.

... டோக்கன் எண் 41 கவுன்ட்டர் எண் 1...

          அவளை பார்த்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆனது. முதலில் அது அவள் தானா? கண்ணுக்கு குளிர்க் கண்ணாடி மாட்டிக்கொண்டு, நவீன உடையில், வெட்டப்பட்ட கூந்தலுடன் வேறு யாரோ போல?! அனால் அவள் கண்ணாடியை கழற்றியதும், அந்த கண்களை பார்த்ததும் ஊர்ஜிதம் ஆகிவிட்டது. அந்த கண்கள் மாறவேயில்லை. அன்று நான் பார்த்தப்போது கலங்கியிருந்த அதே கண்கள். அவள் என் பக்கம் திரும்பினாள், நான் உடனே தலையை குனிந்துக்கொண்டு வேலையில் மும்முரமானேன். அவள் என்னை பார்த்திருப்பளா? நான் யாரென சுதாரித்திருப்பாளா? என் கைகள் தட்டச்சில் தட்டிக்கொண்டிருந்தாலும் என் மனம் பின்னோக்கி சென்றது.

... டோக்கன் எண் 42 கவுன்ட்டர் எண் 2...

          இருபது வருடங்களுக்கு முன்பு, நான் பத்தாம் வகுப்பு முடித்து, பதினோராம் வகுப்பு சேர்க்கைக்காக காத்திருந்தேன். நகரத்தின் நிழல் படியாமல் இருந்தது எங்கள் ஊர். மேல்நிலை படிப்பிற்கு நகரத்திற்கு தான் செல்ல வேண்டும். சுந்தரேசன் என ஒருவன் மட்டுமே நண்பனாக இருந்தான், மற்றபடி நண்பர்கள் யாரும் இல்லாததால் பெரும்பாலும் தனியாகவே சுற்றிக்கொண்டிருப்பேன். அதுவே எனக்கு பிடித்திருந்தது. என்னை எப்படியாவது வங்கியில் ஒரு வேளையில் சேர்த்து விடவேண்டும் என என் தாய் விரும்பினார். அதனால் வணிகப் பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்திருந்தேன். எப்படியும் பள்ளியில் இடம் கிடைத்துவிடும் என நம்பிக்கை இருந்தது, எனவே நிம்மதியாக சாப்பிட்டும், தூங்கியும், ஊரைச் சுற்றியும் பொழுதை கழித்து வந்தேன்.

          ஒரு நாள் காலையில், பக்கத்து வீட்டில் சத்தமாக இருந்து என் காலை தூக்கத்தைக் கெடுத்தது. எழுந்து பின்கட்டில் பல் விளக்க சென்றபோது பக்கத்து வீட்டில், சாமான்கள் இரக்கப்பட்டுக் கொண்டிருந்தன. காலைக்கடன்களை முடித்துக்கொண்டு காபிக்கு சமையலறை சென்றேன்.

          “என்ன நம்ம வேணு மாமா வீட்டுல சாமான்லாம் வந்து எறங்குது, மேல் மாடிய வாடகைக்கு விட்டுட்டாரா?”

          அம்மா, என் கையில் காபியை திணித்தப்படி,” அவர் சொந்தக்காரங்க யாரோ வெளிநாட்டுலேர்ந்து வராங்களாம், இனிமே இங்கே தான் தங்கப் போறாங்களாம். நேத்து அந்த மாமி, சொல்லிட்டிருந்தாங்க. நீ காப்பிக் குடிச்சிட்டு. ரேஷன் கடை வரைக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துடறியா?”

          வேலையிலிருந்து தப்பிக்கும் எண்ணத்தில்,” எனக்கு சுந்தரேசன்கூட கொஞ்சம் வேல இருக்கு அதெல்லாம் போமுடியாது.” எனக் கூறி அம்மாவிடம் சிறிது திட்டும் நிறைய உப்புமாவும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். பக்கத்து வீட்டில் இன்னும் பொருட்கள் இறங்கிக்கொண்டிருந்தன. வீட்டைத் தாண்டும்போது வேணு மாமாவும் இன்னொருவரும் ஒரு பெரிய மேசையை தூக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். நான் வேடிக்கைப் பார்ப்பதைப் பார்த்த மாமா.” ஏண்டாப்பா பார்த்துண்டே இருக்கியே? ஒரு கை பிடிக்கக் கூடாதோ?” என கேட்டார். மறுக்க முடியாமல் அம்மா பார்த்து விடக்கூடாதே என பயந்துக்கொண்டே வீட்டினுள் மேசையை தூக்கிக்கொண்டு போனோம்.

          நல்ல கனமான மேசை. எடுத்து உள்ளே வைப்பதற்குள் நா வறண்டு, நன்றாக வேர்த்து விட்டது. என் நிலையைப் பார்த்த மாமா,” செத்த இருடா, மோர் கொண்டுவர சொல்றேன் குடிச்சிட்டு போ” என்று நான் மறுப்பதற்கு இடம் தராமல் உள்ளே சென்றுவிட்டார். நிறைய புத்தகங்கள் இருந்தன, எல்லாம் ஆங்கிலம். ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். “ you like dickens?” எனப் பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது. நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்து, “ இல்ல சும்மா பார்த்துட்டு இருந்தேன்” என அதை கீழே வைத்தேன்.

          அப்போதுதான் அவளை சரியாக பார்த்தேன். என்னை விட உயரம். நல்ல வளர்த்தி, வாயில் சிரிப்பை மென்றுக் கொண்டிருந்தாள். கையில் பெரிய லோட்டாவில் மோர். அதை என்னிடம் நீட்டினாள். நான் தயக்கத்துடன் வாங்கினேன். அவள் என்னிடம் பல நாள் பழகியவள் போல்,” டிக்கன்ஸ் படிச்சிருக்கியா? பறக்குற மாதிரி இருக்கும் படிக்கும் போதே” என அந்த புத்தகத்தை கையில் எடுத்து பாசமாக தடவி அலமாரியில் வைத்தாள்.

          “ இல்லை, எனக்கு அவ்வளவா படிக்குற பழக்கம் இல்லை, அப்படியே படிச்சாலும் தமிழ் தான்.” என தடதடத்தேன். எனக்கு அவ்வளவு கிட்டத்தில் ஒரு பெண்ணிடம் பேசி பழக்கமில்லாததால், உடனே அங்கிருந்து ஓடி விடவேண்டும் என ஓர் அவசரம் இருந்தது.

          அவள் மிக இயல்பாக பேசினாள்,” வேற என்ன படிப்ப அப்பா? உன் பேரென்ன?”

          “ஆனந்த விகடன்ல கற்றதும் பெற்றதும், கல்கி படிப்பேன். பொன்னியின் செல்வன் படிச்சிருக்ககேன். பேரு கணேஷ்” லோட்டாவில் மோர் பாதிக் கூட காலியாக வில்லை.

          “ கிரேட்! நீ டிக்கன்ஸ், பெக்கட் படிச்சுப் பாரு....” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் பதே, நான் எனக்கு போதும் என மோரைத் திருப்பிக் கொடுத்து விடுவிடுவென நடந்தேன். அவள்,” இன்னும் இவ்வளோ இருக்கே?” என பேசுவது தூரத்தில் கேட்டது.

... டோக்கன் எண் 43 கவுன்ட்டர் எண் 1...

          எனக்கு அவளது வயதை கணிப்பது கஷ்டமாக இருந்தது. பார்க்க பெரியவள் போலிருந்தாலும் முகத்தில் குழந்தைத்தன்மை இருந்தது. என் வாழ்நாளில் அதுவரை ஒரு பெண்ணிடம் அவ்வளவு நேரம் பேசியதே இல்லை. அப்போதெல்லாம் எங்களுக்கு பெண்கள் என்றால் வேறு ஜந்து, பேசி பழகினால் தவறு என ஒரு அபிப்பிராயம் இருந்தது. அதன்பின் நான் அவளை பார்க்கவில்லை. இரவில் அவர்கள் வீட்டிலிருந்து இசை சத்தம் வரும் மேற்கத்திய இசை, அதை கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவேன்.

          பள்ளி தொடங்கி முதல் சுழற்த் தேர்வும் முடிந்தது. ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிகையில் வேணு மாமா அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், “ என்னடாப்பா, நன்னாப் படிக்கிறியா?” என விசாரித்தார். என்னை பதில் சொல்லவிடாமல் என் அம்மா, “ அதெல்லாம் நல்ல படிக்கிறான் மாமா. இந்த வாட்டிக் கூட பரிட்சைல முதல்ல வந்திருக்கான்.” என பெருமை பேசினாள்.

          மாமா,” என்கிறது மது கூட பதினொன்னாவது தான் படிக்குறா, இந்த கணக்கு மட்டும் வர மாட்டேங்குது அவளுக்கு.” என குறைப் பட்டுக்கொண்டார்.

          அம்மா,” எங்கயாவது டியூஷன் வெச்சுக்கலாம்ல மாமா?” “இங்க யாரு டியூஷன்லாம் சொல்லித்தரா? டவுனுக்குத் தான் போகணும்.” என்று அலுத்துக்கொண்டார் மாமா. அப்போது தான் மாமாவிற்கு அந்த யோசனை தோன்றியது, “அம்பி, நீ தான் சொல்லிக்கொடேன் அவளுக்கு, நம்மாத்துக்கு தினம் வந்து?” எனக்கு என்ன சொல்வதென தெரியாமல் விழிக்கையில் என் அம்மா, “போயேன்டா, இங்க உக்காந்து மோட்டுவளையைப் பாத்துட்டு, ஊர சுத்துறதுக்கு அங்க போயி தினம் படியேன். அவன் வருவான் மாமா, நீங்க கவலைப் படாதீங்க.” என என்னை பலிக்கடா ஆக்கினாள்.

          மறுநாள் மாலை, அவர்கள் வீட்டிற்கு என் அம்மா கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைத்தாள். நான் தயங்கி தயங்கி வேணு மாமா வீட்டிற்குள் நுழைந்தேன். அவர் என்னை மேலே அனுப்பி வைத்தார். அங்கு அவள் புத்தகம் சூழ்ந்திருக்க நடுவில் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். நான் கதவுப் பக்கம் நின்றிருக்க அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். உள்ளே வருமாறு கண் காண்பித்து தன வேளையில் மூழ்கினாள். அவள் எதிரில் நான் அமர்ந்துக் கொண்டேன். சிறிது நேரம் என்ன செய்வதென தெரியாமல் சுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

          அவள் தலையை நிமிர்த்தாமல், “நீயும் சயின்ஸ் கருப்பா?”

          “இல்ல நான் காமர்ஸ், நீ சயின்ஸா?” என நான் விசாரித்துக் கொண்டிருக்கையில் மாமா மேலே வந்தார்,” என்னடா எல்லாம் சரியா இருக்கோனோ?”

          “ மாமா இவங்க சயின்ஸ் க்ரூப், நான் காமர்ஸ்ல எப்படி சொல்லித்தறது?” என அவரிடம் சொன்னேன். அவர்,” அதெல்லாம் எனக்கு தெரியாதப்பா, நீதான் எங்க மதுவ எப்படியாவது பரிட்சைல தேதுற.” எனக் கூறி எப்போது போல் பதில் சொல்ல வாய்பளிக்காமல் சென்றுவிட்டார். நான் முழித்துக் கொண்டிருக்க அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

          அன்று முதல் தினம் மாலை, அவர்கள் வீடே கதி என ஆனது. ஆரம்பத்தில் கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தாலும். அவளது இயல்பு என்னை கவர்ந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே தோளில் கைப் போட்டுகொள்வாள். திடிரென பின்பக்கம் வந்து கண்களை பொத்துவாள். நான் கவனிப்பதைப் பற்றி கவலைப் படாமல் பேசிக்கொண்டே இருப்பாள். எனக்கு அவள் மேல் எந்த விதமான உடல்ரீதியான ஈர்ப்பும் இருந்ததில்லை. இப்போது நினைக்கையில் வியப்பாக இருக்கிறது. அவளுக்கும் அது போலவே. பரீட்சை நேரம் மற்ற நேரம் முழுதும் அரட்டையடித்துக் கொண்டிருப்போம். இவளைப் போல வேறொரு பெண்ணை நான் இன்று வரை பார்த்ததில்லை. நாளில் நாங்கள் சேர்ந்திருக்கும் நேரம் அதிகமாகின, ஒன்றாக பள்ளி சென்றோம் ஒன்றாக திரும்பினோம், மாலை வேளையில் படித்தோம். பள்ளியில் அவளுக்கு மாலதி என்றொரு தோழி இருந்தாள். அவளுடன் நெருக்கம் அதிகம். எனக்கோ அவளை பிடிக்காது. இதை அவளிடம் ஒரு நாள் சொன்னபோது சிரித்தாள். ஒரு நாள் அவள் தந்தை, “ are you guys in love?” என சிரித்துக் கொண்டே கேட்டார். எனக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. ஆனால் அவளோ மிக சாதரணமாக, “we are twins with different parents.” என்றாள்.

... டோக்கன் எண் 44 கவுன்ட்டர் எண் 3...

          எங்கள் உறவை வகைப் படுத்துவது கடினம். எந்த உள்நோக்கமும் இல்லாமல் இருந்தது எங்கள் அன்பு. தொடுகைகளும் சீண்டல்களும் கிண்டல்களும் சண்டைகளும் எங்கள் அன்பை வளர்த்ததே தவிர தவறான வழிக்கு இட்டு செல்லவில்லை. வருடம் ஓடின, பன்னிரண்டாம் வகுப்பில் இருந்தோம்.

          ஒரு நாள், நான் பள்ளியில் மதுவை தேடி நூலகத்தில் நுழைந்தேன். ஒரு ஒரு ரேக்காக தாண்டி வருகையில், கடைசி அலமாரி அருகில் சிணுங்கல் சப்தம் கேட்டது. நான் பார்த்தபோது மது மாலதியை அணைத்துக் கொண்டு உதட்டில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். கைகள் மாலதியை இறுக்கி தழுவி இருந்தன. மாலதியின் கை மதுவின் மார்பில் இருந்தது. அந்த காட்சியின் தாக்கத்தில் நான் ஸ்தம்பித்து விட்டேன். ஏனோ பார்க்க கூடாதைப் பார்த்தது போலவும் அருவேருப்பகவும் அசிங்கமாகவும் இருந்தது. நான் திரும்பிகையில் அலமாரியை இடித்து விட்டேன். சத்தம் கேட்டு இருவரும் விலகி என்னை அச்சத்தோடு பார்த்தனர். நான் அங்கிருந்து விரைவாக விலகி நடந்தேன்.

          அன்று முதல் நான் மதுவை தவிர்த்தேன். மாலையில் தினமும் சுந்தரேசனின் வீட்டிற்கு சென்றேன், பள்ளி முடிந்து தாமதமாக சுற்றிக் கொண்டு வேணு மாமா வீட்டைத் தவிர்த்து வந்தேன். காலை சீக்கிரமே கிளம்பினேன். பள்ளியில் வகுப்பை விட்டு வெளியே வருவதை தவிர்த்தேன். எனக்கு அவள் செய்தது சரியா? தவறா? என சொல்லத் தெரியவில்லை. எனக்கு அப்போது அந்த அளவு பக்குவமும் பாலியல் அறிவும் இல்லை. இருந்தும் ஏனோ அவளோடு என்னில் சகஜமாக இருக்க முடியும் என என்னில் நம்பமுடியவில்லை.

          ஒரு வாரம் கழித்தும் பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் தெரு முனையில் மது நின்றிருந்தாள். எனக்காக தான் காத்திருக்கிறாள் எனப் புரிந்தது. நான் அருகில் சென்றதும், என்னைப் பார்த்து சிரித்தாள். நான் தலையை குனிந்து கொண்டேன்.

          அவள்,” ஏன்டா என்கூட பேச மாட்டேன்குற? என்ன னு சொன்னா தான தெரியம்?” என அதட்டலுடன் கேட்டாள். நான் பதிலேதும் பேசாமல் அவளை நிமிர்ந்துப் பார்த்தேன். என் கண்களைப் பார்த்து,” அன்னைக்கு லைப்ரரில பாத்தத நெனச்சு என்ன அவாய்ட் பண்றியா? அது தப்புன்னு நெனைக்குரியா? நீ மத்தவங்க மாறி இல்ல புரிஞ்சுப்பனு நெனச்சேண்டா” சற்று இடைவெளி விட்டு,” எனக்கு அவள புடிச்சிருக்கு அவளுக்கு என்ன புடிச்சிருக்கு. தப்பெதுவும் இல்லடா இதுல.”

          அவள் கூறியது சரியா என அப்போது என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் அந்த கண்களில் இருந்த உண்மையும் உறுதியும் என்னை நம்ப வைத்தது. இருவரும் அமைதியாக வீடு திரும்பினோம். என் கைகளை அவளுடன் கோர்த்துக் கொண்டாள்.

          மறுநாள் பள்ளி மைதானத்தில் இருக்கும்போது, சுந்தரேசன் அருகில், “இந்த மாலதி லைப்ரரில பண்ண வேல தெரியுமாடா உனக்கு?” எனக் கேட்டான். நான் பதற்றத்தில் எல்லாவற்றையும் உளறிவிட்டேன். அதை கேட்டதும் அவன்,” என்னடா சொல்ற? நான் அவ லைப்ரரி புக்க கிழிக்கிறத சொல்ல வந்தேண்டா?” என்றான். எனக்கு அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. அவனை யாரிடமும் சொல்லவேண்டாம் என சத்தியம் வாங்கிக் கொண்டு வகுப்புக்கு சென்றோம்.

          அன்று மாலை பள்ளி முடியும் தருவாயில் மதுவின் வகுப்பு தோழன் ஒருவன் என்னிடம்,” என்னடா ஆச்சு ஏன் மதுவோட அப்பாலாம் வந்துருக்காங்க. பிரின்சிபால் ரூம்ல இருக்காங்க எல்லாரும். மாலதி பேரேன்ட்சும் வந்துருக்காங்க?” அவனுக்கு பதில் சொல்லாமல் நான் முதல்வர் அலுவலகம் நோக்கி ஓடினேன். அங்கு சென்ற போது உள்ளே போக முடியவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தப்போது முதல்வர் எதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார். மது ஜன்னல் வழியே வெளியே கண்ணிருடன் வெறித்துக் கொண்டிருந்தாள். சட்டென என்னைப் பார்த்தாள். நான் உடனே சுவற்றில் மறைந்துக் கொண்டேன், உடனே வீட்டை நோக்கி ஓடினேன். அன்று பார்த்து பாட்டி இறந்துவிட்டதாக சேதி வர நாங்கள் ஊருக்கு கிளம்பினோம்.

          பயணம் முழுவதும் எனக்கு மதுவின் ஞாபகமே இருந்தது. கண் மூடினால் அவள் பார்ப்பது போலவே இருந்தது. நம்பிக்கை துரோகம் செய்ததில் மனம் குருகியிருந்தது. ஊருக்கு திரும்பியதும் அவளை எப்படிப் பார்ப்பது? அவள் எவ்வளவு ஏமாற்றம் அடைந்திருப்பாள். அவள் என்னை வெறுத்திருப்பாளா? அவளிடம் எவ்வாறு விளக்குவது என தவித்துக் கொண்டிருந்தேன். அழுகை குமுறிக்க்கொண்டு வர பாட்டியின் முன் ஓவென கதறினேன். எல்லாரும் பாட்டியின் மேல் எவ்வளவு பிரியம் என நினைத்தனர்.

          பத்து நாட்கள் கழித்து வீடு திரும்பினேன். பக்கத்து வீடு அமைதியாக இருந்தது. பள்ளி சென்றபோது மாலதியும் மதுவும் மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விட்டதாக சொன்னார்கள். எனக்கு தொண்டையை அடைத்தது. சுந்தரேசன் பேச வந்தபோது கன்னத்தில் ஓங்கி அறிந்தேன், அன்றிலிருந்து என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். ஆனால் எனக்குள் குற்றவுணர்வு போகவே இல்லை.

          அதன்பின் இதோ என் வங்கியில் வாடிக்கையாளராக மதுவை இப்போதுதான் பார்க்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவளது டோக்கன் எண் எனது கவுண்ட்டரில் வந்துவிட கூடாது என கடவுளிடம் வேண்டினேன். என் முன்னல் இருந்தவரிடம் ரசீதைக் கொடுத்துவிட்டு அடுத்த டோக்கனை அழைத்தேன்.

... டோக்கன் எண் 45 கவுன்ட்டர் எண் 2...

          கடவுள் சதி செய்துவிட்டார். அவள் எழுந்து என் மேஜை முன்னல் வந்தாள். வழக்கம்போல் புன்னகைத்தாள். ரசீதை நீட்டினாள். நான் நடுங்கும் கரங்கொண்டு வாங்கினேன். உடனே தலையை கவிழ்த்துக்கொண்டு தட்டச்ச தொடங்கினேன். கைகள் ஒத்துழைக்க மறுத்தன. அவள் கண்கள் என்னை ஊடுருவுவதை உணர்ந்தேன்.

          “ஹன்ட்ரட்ஸா கொடுத்துருங்க.”

          நான் கைகள் ஆட பணத்தை எண்ணினேன். கொடுக்க கை நீட்டும் பொழுது எங்கள் கண்கள் சந்தித்தன. அவள் என்னை ஆழமாக நோக்கினாள். கைகளில் இருந்து பணம் நழுவி கீழே விழுந்தது. அவள் உடனே அதை பிடித்தாள். என் வாயிலிருந்து வார்த்தைகள் தன்னால் வந்தது, “மன்னிச்சுருங்க, தெரியாம நடந்திருச்சு.”         

அவள்,” பரவாயில்ல, உங்கமேல தப்பில்ல.”

- ச.வி

Pin It