ஒரு சிறந்த எழுத்தாளன் ஆகணும்னா எதையாவது எழுதிகிட்டே இருக்கணும் என்று எளிதாய் சொல்லிவிடுகிறார்கள்.  அது உண்மையா? என்பதை உறுதிப்படுத்த, நான்கு திசைகளும் ஒரே நாளில் கூடி வரும் ஒரு நல்லதொரு முகூர்த்த நாளில், நான்கு சுவர்களுக்கு நடுவே ஹாயாய் லுங்கி அணிந்துகொண்டு முக்கியமாய் கதவைச் சாத்திவிட்டு, நடுமண்டை நமநமத்து, நாடி நரம்பெல்லாம் நட்டுக்கொண்டு நிற்க, ’நச்’ என்று நான்கு வரியாவது எழுதியே தீர்வது எனத் தீர்மானித்து என் மானசீக மனோரமாவை நினைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டேன், (யார் அந்த மானசீக மனோரமா? என்றெல்லாம் ஆராயக் கூடாது. அது ஒரு ஃப்ளோவில் வந்தது)

மூன்று மாதங்களாய் எழுதாமல் கிடந்த என் லக்கி பேனா, (வீணாய்ப்போன ரீஃப்ல் பேனா) முன்னறிவிப்பின்றி கோமாவுக்கு சென்று விட்டது என்பது பிறகுதான் தெரிந்தது.  அதற்காக அதை அப்படியே விட்டு விட்டால் என் தன்னம்பிக்கை தகர டப்பா என்னாவது?

உட்கார்ந்த இடத்திலேயே அனஸ்தீஸியா கொடுக்காமல் ஆப்ரேசனைத் தொடங்கிவிட்டேன்.  பேனாவின் பாகங்களை அக்கு வேறு ஆணி வேறாய் கழட்டி, கை வலிக்கும் வரை உதறி, உஃப், உஃப் என்று கன்னம் வீங்கும் வரை ஊதி, (கல்யாண வீட்டில் நாதஸ்வரம் வாசிப்பது போல்) உயிர் இருக்கிறதா என்று அவ்வப்போது உறுதி செய்ய கிறுக்கிப் பார்த்தேன். 

ஆப்ரேசன் தியேட்டருக்குக் கொண்டு செல்லாமலே செய்த தொடர் போஸ்ட் மார்ட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், எங்கே அடுத்த ஆப்ரேசனை ஐ சி யு-க்குள் வைத்து செய்து விடுவேனோ என நினைத்து, விட்டு விட்டு எழுதி, முக்கி முனகி திப்பி திப்பியாய் துப்ப ஆரம்பித்தது என் பேனா.

விடுவேனா நான்.  மேலும் மேலும் ஆக்சிஜனைக் உள்ளுக்குக் கொடுக்க (அதான் உஃப்,உஃப்ன்னு ஊதறது) உச்சஸ்தாயில் உயிர் பெற்றுவிட்டது.  பேனாவிற்கு மட்டும் வாய் இருந்திருந்தால் கெட்டவார்த்தையில் திட்டியிருக்கும்.  ஆனால் அது என் லக்கி பேனாவாயிற்றே, தூக்கி எறிய முடியுமா? வார்த்தைக் கொருமுறை உதறி உதறி என் பெயரைக் கிறுக்கிப் பார்த்ததில், போதும் என்றளவுக்கு பகுதி பகுதியாய் எழுதியது. 

அப்பாடா, எப்படியோ உயிர் பெற்றுவிட்டது என் பேனா என்ற பேரானந்தத்தில் அதற்கு ஒரு உம்மா கொடுக்க, அதுவும் தன் பாணியில் பிசுக் என்று மையை என் உதட்டில் ஒட்டி உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டது.

இவ்வளவு நேரம் பேனா எழுதுகிறதா என்று சோதனை செய்ய ஏராளமாய் கிறுக்கிப் பார்த்ததில் தாளின் முழுப் பக்கமும் அடுத்த பக்கமும் பேனா முனையின் அழுத்தம் ( இம்ப்ரசன் )பதிந்து முழுசாய் வீணாகி இருந்தது.

நான் கிழிக்கிற கிழிப்புக்கு ஒரு பேப்பர் போதாதா என்ற எண்ணத்தில் எடுத்து வைத்த ஒரு பேப்பரும் இல்லாமல் போச்சே (வட போச்சே… என்ற பாணியில்) என்று கவலை கொள்ளாமல், நேற்று கடையிலிருந்து கால் கிலோ கடலைமாவு வாங்கி வந்தபோது காற்றில் பறந்து வந்த நோட்டீசின் மறுபகுதி எம்ப்டீயாக இருக்கிறதே, எதற்கு உதவும் என எடுத்து வந்தது இப்போது  எவ்வளவு பேருதவியாக இருக்கிறது என்று எனக்கு நானே பாராட்டிக்கொண்டேன்.

கட்டில் மேல் வைக்கும் காபி கொட்டி விடக்கூடாதே என மடித்து வைத்திருந்த அந்த காகிதத்தை (நோட்டீசை) எடுத்து சற்றே நீவி விட்டுக்கொண்டேன். பின் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வலது கையின் நடுவிரலையும் கட்டை விரலையும் கொண்டு ஒரு முறை சொடுக்கிக் கொண்டே  ‘இப்போ எழுதறேன் பாரு’ என எனக்கு நானே உற்சாகம் கொண்டேன்.

எதை எழுதலாம் என்று நினைத்தவுடன் கபாலத்தின் கார்னரில் இருந்த நியூரான் எல்லாம் ஏகத்துக்கும் எழுந்து நின்று குத்தாட்டம் போட்டது.  கவிதை எழுதலாமா? கதை எழுதலாமா? அல்லது கட்டுரை எழுதலாமா என கண்ட மேனிக்கு என் கை பரபரத்தது. ச்சே…. எனக்குள் இத்தனை உத்வேகமா? நினைக்கும் போதே உள்ளுக்குள் புல்லரிப்பதை போட்டிருந்த டி-சர்ட்டைத் தாண்டி உணர முடிந்தது.     

எழுதுவது என முடிவெடுத்து விட்டால் எது வந்தாலும் என்னைத் தடுக்க முடியாது என்பது எட்டாவது வீட்டுக்குக் குடிவந்திருக்கும் ஏகாம்பரத்துக்குக்கூட தெரியும்.  தலையை சற்றே சாய்த்துக் கொண்டு எழுதினால் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகள் காது வழியே ’உச்சா’ போய்விடும் பேராபத்து இருப்பதாய் பெரியோர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.  எனவே, முதுகெலும்பு வளையாமல், நெஞ்சை நிமிர்த்தி வைத்துக் கொண்டு, உடலை அசைக்காமல் (அரித்தால்கூட சொரியாமல்) மனதை ஒருமுகப் படுத்த முயன்றேன்.

காற்றிலேயே கை விரல்களால் பலமுறை கோலம் போட்டுப் பார்த்துக் கொண்டேன்.  ஏனென்றால் எதையும் எடுத்தவுடன் எடுத்தேன் கவுத்தேன் என்று இருந்து விடக்கூடாதல்லவா!  என் கைகளைக் குவித்து ஒரு முறை மேலே அண்ணாந்து சாமி கும்பிட, சாமி போட்டோவிற்குப் போட்டிருந்த பூ ஒன்று பொத்தென்று விழுந்தது. என் ஞானக் கண்முன்னே முப்பெரும் தேவர்களும் முந்தா நாள் கடையில் வாங்கிவந்த காய்ந்து போன பூக்களைக் கைகளில் வைத்துக் கொண்டு காத்திருந்ததை எப்படியோ  கண்களால் பார்க்காமல் விட்டுவிட்டேன்.

எழுதத் தொடங்குமுன் ஏதேனும் ஒரு கடவுளின் துணை என்று எழுதி வைப்பது வழக்கம் என்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று என் குலசாமி பெயருடன் சேர்த்து கூகுள் சாமி துணை என்று எழுதி வைத்தேன்.  அது போதாதென்று மத நல்லிணக்கத்தைக் கொண்டாடும் விதத்தில் ஓம் என்று எழுதி நடுவில் சிலுவையும் பக்கத்தில் பிறை நிலாவும் ஒரு நட்சத்திரமும் வரைந்து வைத்தேன்.

இத்தனை சம்பரதாய சடங்குகளும் செய்தபோது எந்த வித இடையூறும் இல்லாமல் இருந்ததால் என் நம்பிக்கை நாலாபுறமும் நங்கூரமிட்டு திருப்திப்பட்டுக் கொண்டது.

”இப்போ எழுதறேன் பாரு ஒரு கவிதையை” என்று சற்று சத்தமாகவே சொல்லிவிட்டு கவிதைக்கு ஒரு தலைப்பை யோசித்தேன்.  யோசித்தேன் என்பதைவிட கவிதையால் சுவாசித்தேன்.  கற்பனைக் குதிரை கண்ணாபிண்ணாவென்று கட்டுத்தறியைத் தாண்டி ஓடியது.  வார்த்தைகள் வகைவகையாய் மனதிற்குள் வந்த வண்ணமே இருந்தது.  ஆனால் ஒரு வார்த்தைகூட கோர்வையாய் வரவில்லை.  பிச்சுப் போட்ட பரோட்டாவைப் போலவே வளவளவென்று வந்தது. 

கல்லூரியில் படிக்கும் காலத்தில் கனக்கச்சிதமாய் ஒரு நோட்டில் ’கவிதைநோட்டு’ என்று தலைப்பிட்டு அனைவருக்கும் தெரியும்படி கக்கத்திலேயே வைத்துகொண்டு திரிந்தது நினைவுக்கு வந்தது.  எங்கெங்கோ படித்ததை, யார் யாரோ எழுதியதை அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுதி அடித்துத் திருத்தி அடியில் என் பெயரை எழுதிகொண்டு, எதிரில் எவனாவது சினேகமாய் சிரித்துவிட்டால் சிதறி ஓடும்வரை விடாமல் வாசிக்க வைத்து புலகாங்கிதம் அடைந்திருக்கிறேன்.  ஆனால் அதிலிருந்து ஒரு வரிகூட இப்போது நினைவுக்கு வருவேனா என்று அடம்பிடிக்கிறது.

கற்பனைச் சிறகின் கடைசி முடி வரை கசக்கிப் பிழிந்தும் கவிதை வந்தபாடில்லை.  சரி கவிதை எழுதுவதை சற்று நேரத்திற்கு ஒத்திவைப்போம் என்று முடிவெடுத்து அடுத்தது கதை எழுதலாம் என முடிவெடுத்தேன்

ஏனென்றால் கதை எழுத ஒரு வடும்போ வாப்பாடோ தேவையில்லை என்று யாரோ சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  கவிதை எழுதத்தான் வரிகளுக்கு பெராலிசிஸ் வந்து வார்த்தைகள் முழுசாய் வரவில்லை, கதை எழுதுவது ஈசி தானே. ஈசி என்ன ஈசி… கதை எழுதறேன்.  எத்தனை பக்கம் வேணும்? சிறுகதை என்றால் சில பக்கங்கள்.  நாவல் என்றால் நாற்பது பக்கத்துக்கு மேலே.  அவ்வளவுதானே ஃபார்முலா?  பார்த்துவிடுகிறேன் ஒரு கை.

உட்கார்ந்து யோசிக்கிறேன் யோசிக்கிறேன் கொஞ்சம் விட்டால் முன் ஜென்மமே நினைவுக்கு வந்துவிடும் போலிருந்தது.  எனக்கே சற்று பயமாய் போய் விட்டது.  இந்தளவுக்கு யோசிக்கிற நான் இந்நேரம் பெரிய எழுத்தாளராகி சாகித்திய அகாடமி அவார்டு வாங்கி வாங்கிக் குவித்து, அடுத்த ’புலிட்சர்’ அவார்டை வீட்டுக்கே வந்து கொடுத்துவிடுவார்களோ என்றுகூட எண்ணத்தோன்றியது.

கல்யாணத்தில் சாம்பார் எப்படி முக்கியமோ அப்படி கதைக்கு கதாப்பாத்திரம்  முக்கியம்  என்று என் எழாம் அறிவுக்கு ஏற்கெனவே தெரியும்.  ஆனால் கதைக் களம்?  அது ஒரு பெரிய விசியமா? விட்டுத்தள்ளு அது எழுத எழுத தானா வந்துட்டுப்போகுது.  அதைப் பற்றி இப்பென்ன கவலை. 

அதெல்லாம் சரி கதையின் கரு?  ஆமால்ல… அதை மறந்தே போயிட்டேன். ம்…இப்போ பிடிச்சிட்டேன். வெரி சிம்பிள். நேற்று கேள்விப்பட்டேனே, யாரோ யாருடனோ ஓடிப்போனதை, அதை புனிதமான காதல் என்ற தலைப்பில் எழுதிவிட வேண்டியதுதான்.  கதைக்கு வேண்டி பெயரை மாற்றி அதையும் இதையும் உல்டாவாக்கி, சிறுகதையாக எழுதலாமா? அல்லது நெடுங்கதையா? என்று யோசிக்க உள்மனம் வெளியே கேட்குமளவுக்கு ஊளையிட்டு எல்லாவற்றையும் கெடுத்தது.  சரி கதை எழுதறதை அப்புறம் பார்க்கலாம் என் உத்தேசமாய் ஒத்தி வைத்தேன்.

சரி, கட்டுரை எழுதலாம் என்று எதையும் யோசிக்காமல் முடிவெடுத்தேன்.  ஏனென்றால், பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்த போது ”ஆறு தன் வரலாறு கூறுதல்” என்ற கட்டுரையை தப்புத்தப்பாய் எழுதி என் வகுபாசிரியையிடம் காட்ட,  என் திறமையைப் பார்த்து  மிரண்டு வேலையை மாற்றிக் கொண்டு போனதெல்லாம் வேறு கதை.

இது போன்ற ஆயிரம் செய்திகள் என் எண்ணத்தில் ஏகத்துக்கு மின்னி சட்டென்று ப்யூஸ் போனது.  நெக்ஸ்டு, நெக்ஸ்டு…. என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ’டக்…டக்….டக்…என்ற என் மொபைல் போனின் மெசேஜ் டோன் சத்தம் என் கவனத்தைத் திருப்பியது.

யாராய் இருக்கும்… ஆர்வத்தில் வாட்ஸ் அப்பை ஓபன் செய்ய, அட நம்ம சந்தோசு…..

உடனே ‘ஹாய்’ என்று மெசேஜ் அனுப்பினேன்.

”என்ன செய்யிறே?” உடனே ரிப்ளை வந்தது.

“ம்….. கவிதை, கதை, கட்டுரை எழுதிகிட்டு இருக்கேன்”என்று நான் அனுப்ப,

“சூப்பர்”என்று தகவல் வர.. வாட்ஸ் அப்பில் மூழ்கிப் போனேன்

நான் எழுத நினைத்த காகிதத்தில் ஒரு கோடும், இரண்டு புள்ளிகளும் கேவலமாய் என்னைப்பார்த்து சிரித்ததை நான் கவனிக்கவில்லை.

- வே.சங்கர்

Pin It