"மச்சான்.... விட்றக் கூடாது.. ஒருத்தன் கூட உயிரோட போக கூடாது....கூடவே.... கூடாது.... தோட்டாக்கள் பலம்ங்கற நினைப்பு இன்னைக்கு அழியணும்...இன்னையோட அழியணும்..."-ஆதி கத்தினான்....

அடுத்த மூவரும் ரத்தம் தோய்ந்த உடலோடு.... கையில் பிஸ்டல் பிடித்தபடி... வெறித்து நின்று "ம்ம்ம்ம்ம்ம்....." என்றார்கள்... புத்தி வந்த கடவுள்களைப் போல...

"திரும்பி நிற்கும் தருணத்தில்.. சாத்தான்கள்.. மண்டியிடுவார்கள்.. நம்பக் கூடாது.. கொன்று விடுங்கள் என்பது தத்துவத்தின் தத்துவம்.... பசித்தவனுக்கும் தத்துவம் வரும்.. ருசித்தவனுக்கும் தத்துவம் வரும்.. ஆயுதம் கொண்டவனின் தத்துவம்.. அத்து மீறக் கூடியது..... அடிடா.. அவன..."-ஆதி கத்த கத்த..... 

"இரண்டாமவன் ஓடிக் கொண்டே ஒரு போலிசை எகிறிக் குதித்து இடுப்பில் ஓங்கி மிதித்தான்.. சரக்கென்று முறிந்த சப்தம்.. இன்னிசையாய் இளகியது.... இன்முகம் பூத்தவன் கூறினான்......"லஞ்சமா வாங்கித் தின்னாலும் ஓங்கி மிதிச்சா குறுக்கெலும்பு உடைஞ்சுதான்டா போகும்...... சேர்த்துக்கோ.. இது பசிச்சவனின் தத்துவம்...."- என்று இன்னும் பலமாக கீழே கிடந்த போலிசை நிமிர்த்தி போட்டு எகிறி காற்றில் கொஞ்சம் மேலேறி பின் வேகமாய் பூமி வந்து அடிவயிற்றில் புதைந்து நின்றான்.....பொதக்கென்று உள் சென்று திரும்பிய சதைக்கு வாய் இருந்தாலும் கிழிந்துதான் போயிருக்கும்...உயிர் மட்டும் முனகலோடு பிரிந்துதான் போனது..

"மச்சான் அவனைப் புடிடா..."- என்று சுற்றி நின்று கொண்டு, தடுமாறி பூனை போல பதுங்கி தவழ்ந்து கொண்டிருந்த இன்னொரு போலிசை பிடித்தான்.. ஆதியின் இன்னொரு நண்பன்....

"டேய் போலிஸ்.... நீயெல்லாம் போலீசா.... உன்ன வயிறப் பாரு... என் வயிறையும் பார்டா.. யார் போலிசாக லாயக்குன்னு....நீயே சொல்லு... இது உழைச்சு உழைச்சு இறுகிப் போன வயிறுடா.... அடுத்தவன் சோத்துக்குள்ள வளர்த்த வயிறு இல்ல......சரி இப்போ என்ன பண்ற.. நான் ஓடறேன்... நீ என்னை துரத்தி பிடிக்கணும்... ஓட முடியாம நின்னா... இல்ல நீ நிக்க மாட்ட..."- என்று பின்னால் பிஸ்டலை அழுந்த பிடித்துக் கொண்டிருக்கும் ஆதியைப் பார்த்து புன்னகைத்து விட்டு ஓடத் துவங்கினான்.... அந்த தொப்பை போலிஸ்..... மூச்சிரைக்க... நுரை தள்ளி.. ஓடி ஓடி களைத்து.. முடியாமல்.. ஒரு நாயைப் போல... மூச்சிரைத்துக் கொண்டிருக்க... திடும்மென ஒரு சூறாவளியைப் போல வந்து வயிறோடு ஓங்கி ஓங்கி குத்தினான் ஓடியவன் ....காற்றடைத்த பைக்குள் ஓட்டை விழும் அளவுக்கு...விழுந்த குத்தில்.....மூச்சடைத்து செத்துப் போனான் தொப்பை போலிஸ்..... 

"டேய் பொணம்... பலம் துப்பாக்கில இல்லடா... தோட்டாவ வாங்கற நெஞ்சுல இருக்கு..."

கண் முன்னால் சக போலிஸ்கள் இருவர் செத்து வீழ்ந்த பின் மீதி இருந்த இருவருக்கு நடுக்கம் தானாக வந்திருந்தது...

"மரண பயம் எல்லாருக்கும் பொதுடா....அது தனியுடமை அதிகாரம் இல்லை... அது... ஆண்ட பரம்பரைக்கும் ஒன்னுதான்.. நீங்க அடிச்சு வெச்ச அடிமை பரம்பரைக்கும் ஒன்னுதான்..."

"டேய் போலிஸ்னா எப்டி இருக்கணும் தெரியுமா... மீசை மட்டும் பெருசா வெச்சா போதாது...அதுக்கு தகுந்த மாதிரி ஆண்மை தவறாம நடந்துக்கணும்..... நீ அப்டியாடா......நீ அப்டியா பண்ணின.......போடறது எல்லாம்... தப்பு தப்பான திட்டம்.. அதுல..... பொய்..... பித்தலாட்டம்.. சுயநலம்.. அதிராகத் திமிரு, இருபது ரூபாய்க்கு தலைய சொரியறது...ரோட்டரமா எத வித்தாலும் சும்மா வாங்கித் திங்கறது...தூ.... கேவலன்டா..இந்த லட்சணத்துல உன்ன அய்யா நொய்யானு கூப்டனுமா.... மயிராண்டி....... நீ பொதுமக்களுக்கு வேலைக்காரன்டா...... மிஸ்டர் போலிஸ்னே கூப்டலாம்...வரிப்பணத்துல வாழ்ற உனக்கே இவ்ளோ திமிரு இருந்தா... நாட்டக் காப்பாத்ற காட்டுக்குள் வாழ்ற எனக்கு எவ்ளோ இருக்கும்.....உன் முன்னால நாங்க எதுக்குடா கை கட்டி நிக்கணும்... இபோ நீ நில்லு... ஒரு குற்றவாளி மாதிரி........! என்ன......, மாதிரி...... நீ குற்றவாளிதான்.. மண்டி போட்டு கைய கட்டி நில்லுடா... பொருக்கி.... மீசைய பாரு.. சோளக்காட்டு பொம்மை மாதிரி...."- என்று ஓடிச் சென்று கொத்தோடு மீசையை புடுங்கி எறிந்தான்...ஆதியின் இன்னொரு நண்பன்..

மடக்கிய கால் முட்டியின் தொடர் தாக்குதலை அந்த போலிசின் முதுகு தாங்கவில்லை... நிமிடத்தில் சரிந்தான்..

"உங்க தத்துவமே தப்பா இருக்குடா... அது கரடுமுரடா இருக்கு...பசிச்சவன் தத்துவம்... பழசுதான்.... ஆனா...உணர்வு இருக்கு... அதுல உயிர் இருக்கு...... பாக்கறியா....."- என்றபடியே கடைசி போலிசின் கையை பின்னோக்கி அழுத்தி உடைத்துப் போட்டான்... ஆதி...

'உடைஞ்சது கைன்னு நினைச்சியா... அதிகார வர்க்கத்தின் ஆணவம்.... துப்பாக்கி புடிச்சா... ஆண்டவன்னு நினைக்கற மண்ணாங்கட்டி நினைப்பு...'

"என்னடா பிராட்.... வலிக்குதா.... வலிச்சாதான்டா வலிக்கறவன் வலி புரியும்...உயிர் பயத்துல நடுங்குதா....... என்ன...... உன் புள்ளைகிட்ட பேசத் தோணுமே... தோணனும்.. அப்போ ஒரு வலி வரும் பாரு.. அனுபவி ராஜா அனுபவி.. ஆண்டவனே ஆண்டுக்கிட்டு இருந்தா எப்டிடா..... இப்போ ஆயுதம் எங்க கைல.... நீங்க காட்டின வழிதான்...என்ன பண்ண... என்ன ஆயுதம் எடுக்க வேண்டும்...என்று போலிசும் தீர்மானிக்குதே....  அட கருமங்களே... மக்களுக்காகத்தான்டா சட்டம்... உங்க மந்திரிகளுக்காகவா... மடப் பயலே.. மண்டியிடு... மாக்களின் பிள்ளையைப் போல மண்டியிடு.....இப்போது நாங்கள் ராஜாக்கள்... இந்தக்காட்டு ராஜாக்கள்.. காட்டை அழிக்கறவன் எப்டிடா.. காட்டுக்குள இருந்து வர முடியும்.... நாங்க ஆதி மனுசங்கடா... உங்க பாஷைல சொன்னா காட்டு வாசிகள்.. நாங்க இல்லனா.. மழையும் வராது.. மயிரும் வராது....."

இது 30வது அறை.. போலிசின் கன்னம் வீங்கி பிய்ந்து தொங்கத் துவங்கியிருந்தது...... 

"உங்களையெல்லாம் சுட்டுக் கொன்னா.....அது தோட்டாக்களுக்கு வீரர்கள் செய்யும் அவமானம்... அதான் அடிச்சே கொல்றோம்.....கோழைகளா......" 

நான்கு போலிசும் பிணமாகி வீழ...இவர்களின் பிணங்கள் கூட பாவக் கறைகள் என்று பூமி படாமல் கட்டித் தொங்க விட்டு மரத்தைத் தொட்டுக் கும்பிட்டார்கள்... ஆதி உள்பட தோழர்கள் நால்வர்...

மரம் யோசித்துக் கொண்டே சிரித்தது... அது ஆதி சிரிப்பு... ஆழமான சிரிப்பு...அது இக் கதையின் முதல் காட்சியை நினைவூட்டியது...

"டேய்.. காட்டுவாசிங்களா... உண்மைய ஒத்துக்கோங்க்டா... நீங்கதான செம்மரத்தைக் கடத்தினது..."

"அய்யா இல்லிங்க ஐயா.. நாங்க.. சுள்ளி பொறுக்க வந்தவங்கயா... பச்ச மரம் எங்க ஆத்தா மாதிரிங்கையா......அதை எப்டிங்கையா வெட்டுவோம்.."

"அட அது எங்களுக்கும் தெரியும்யா... என்ன பண்ண..... ஆட்சி....... அரசியல் அப்டி....... வேற வழி இல்ல......ஒத்துக்கோங்க..... உங்க பொண்டாடிகள பத்ரமா நாங்க பாத்துக்கறோம்...... அட வீட்டையும்தாம்பா....."

நான்கு போலிசுகளும் பிஸ்டலை நீட்டியபடி கர்ஜித்து சிரித்தார்கள்....

"இல்லனா வேற வழி இல்ல.. என்கௌண்டர் பண்ணி கேசை முடிச்சிருவோம்.....பத்து நிமிஷம் டைம் எடுத்துகோங்க.. யோசிங்க.. நல்ல பதிலா சொல்லுங்க......ஏற்கனவே நிறைய அடி வாங்கிட்டிங்க...... சொன்னா புரிஞ்சுக்கோங்கடா....."

பத்து நிமிடங்கள் போதும்.. இந்த உலகம் திசை மாற...... உண்மை பசி ஆற....... உவமை நிறம் மாற....... வலி பலமாக...... நித்திரை மரணம் ஆக...... ஜனனம் சிருஷ்டிக்க...

பின் நடந்ததை யாம் அறிவோம்...

- கவிஜி 

Pin It