கதவை  உடைத்துக் கொண்டு உள் செல்கையில் எல்லாம் முடிந்திருந்தது....

வாசுவை  மெல்ல இறக்கி.. கழுத்தில் இருந்த கையிற்றை அவிழ்த்தார்கள்.... ஊர் கூடி நின்றது.... 

"அவனும் எத்தன நாள்தான்... போராடுவான்....? முடியல...! அதான்... கதையை முடிச்சுகிட்டான்....." என்றபடியே...அவனை நீட்டி படுக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள்... புலம்பினார்கள்... அவனின் பாட்டி ஒப்பாரி வைக்கத் துவங்கியது.....

suicide 320இது பெரும்பாலோர் எதிர்பார்த்த முடிவுதான்....இருந்தும்.... அவன் எப்படியாவது மீண்டு விடுவான் என்றே ஒரு நம்பிக்கை அந்த வீட்டை சுற்றி ஒரு ஆன்மாவைப் போல... சுற்றியது.... ம்ஹும்.... நடக்கவில்லை.... அப்படித்தான் அது முடிய வேண்டும்.. வினைகளின் எதிர்... என்றாவது வந்தே தீரும்.... பாவங்களின் மன்னிப்பை மரணங்களே சிலபோது தருகின்றன.... இப்போதும்.... அப்படியே......

இன்றிலிருந்து சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்....

ஒரு சனிக்கிழமை இரவு...

அது ஒரு திராட்சை தோட்டத்தின் முகப்பு வாசலைப் போலதான்... இருந்தது.  நரிகளின் கொண்டாட்டத்தைப் போல குழுமியிருந்த மனிதர்கள்..... துளிகளின் புளிப்புக்குள் காணாமல் போவதைக் காணவே கண் கோடி வேண்டும்... 

"என்னடா... இங்கையும் கவிதயா...?"-என்ற விவேக்.... "அண்ணே, என்ன சொல்ல ?".... என்றபடியே அருகே வந்த வேலையாள் சிறுவனிடம்,  ".... ......  ஹாப்...ரெண்டு டம்ளர்... அரை லிட்டர் சோடா... ரெண்டு முட்டை பொரியல்...." அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...எதிரே அமர்ந்திருந்த வாசு... "மச்சான்.. ஊறுகாய் ஒன்னு..." என்று சொல்லி நாக்கை சப்புக் கொட்டினான்... கவிதையை விட்டு விட்டு......

சற்று நேரத்தில், எல்லாம் வந்தது..வேக வேகமாய் முதல் ரவுண்ட் போனதில் கொஞ்சமாக போதையும் வந்தது..

"கொஞ்சம் உள்ள போனாதான்.... அது சனிக்கிழமை மாதிரியே இருக்கு.... இல்ல...? மச்சான்..." என்ற வாசு...கொஞ்சம் முட்டையை எடுத்து... உள்ளங்கையில் படாமல் வைத்து படக்கென்று வாய்க்குள் போட்டுக் கொண்டான்...

"ஸ்பூனு சுத்தமா இருக்காதுடா"என்ற முணங்கலை கண்டு கொள்ளாத விவேக்....."இல்லடா... கொஞ்சம் அதிகமாவே உள்ள போனாத்தான் சனிக்கிழமை மாதிரி இருக்கு....." என்று கூறியபடி அடித்தொண்டையில் எப்போதும் போல சிரித்தான்....

"ஹ ஹஹா.. ஹ்ஹா......" என்று கூட சேர்ந்து சிரித்த வாசு...."மதுவும் மாதுவும்.. எப்போதும் போதைதான்.... அதும் அப்பப்போ மனுஷனுக்கு வேணுந்தான்...."என்றான்... அந்த 'தான்' சொல்லும் போது கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கொண்டான் ..அது எதுகை மோனைக்கான சந்தமாம்...... 

கொஞ்சம் சத்தம் போட்டே பேச வேண்டி இருந்தது.. அலை கூட்டமாய் மோதினார்கள் மனிதர்கள்.. ஆங்கங்கே இரண்டு பேர்.... மூன்று பேர்..... தனி..... என்று மனிதர்கள்... மதுக் குவளையாக, கவலையாகவே இருந்தும் சிரித்தார்கள்.... வெற்றிடம் முறைத்தார்கள்...கண் கலங்கும் காட்சிகளும் உண்டு... அலைபேசும் பேச்சுகளும் உண்டு...

"வேற..." என்று கேட்டபடியே, சிறுவனிடம்...."இன்னும் ஒரு கோட்டர்..."என்று கூறிக் கொண்டே விவேக்கைப் பார்த்து, அதே நேரம் மேசையின் மீது இன்னும் சற்று நேரத்தில் காலியாக போகிற பாட்டிலையும் பார்த்து..."பத்....தா......து மத்சான்......' என்று புன்னகைத்த வாசு... திரும்பி சிறுவனிடமே கேட்டான் சட்டென முகம் மாற்றி சீரியஸாக ..." தம்பி நீ படிக்கலியா...?...

"இல்லண்ணே...... படிக்க....முடியல... வசதி இல்ல.. "என்றபடியே... "சாப்பிட....?" என்று கேட்டான் சிறுவன்.... மறு கேள்வியை ......அனிச்சை செயலாய்...

"அதெப்படி... எல்லாரும் படிக்கறக்கு......"என்றவன், சட்டென... வாக்கிய போக்கை தடுத்து நிறுத்திய வாசு.... கேள்வியை மனதில் கொண்டு வந்து"...ஒ. சாப்ட... ம்ம்ம்... ம்ம்ம்.... முட்டைப் பொரியல்...என்று ஆரம்பிக்க.."டேய்.... இப்போதான... சாப்டோம்.. தம்பி.. நீ...வேர்கடலை கொண்டு வா..."-என்று இடையினில் கூறிய விவேக்... அவனைப் பேச விடுவது போல அடுத்து அமைதியானான்,.... மறுபடியும்... பழைய பேச்சைத் தொடர்பவனாக, வாசு "..அதே... அதெப்படி... எல்லாரும் படிக்கறக்குதான நாம ஓட்டு போடறோம்.. இல்லையா மச்சான்...?"-என்றான்.... ஒரு மிடரை வாய்க்குள் கவிழ்த்தியபடியே 

"ஆமாண்டா... இவ்ளோ சின்ன வயசுல வேலைக்கு வந்துட்டா..பெரியவனாகும் போது, அவன் மனநிலை என்னாகும்....?... அதும் இல்லாம.. சின்ன பசங்கள வேலைக்கு வைக்க கூடாதுன்னு இந்த பார்காரனுக்கு தெர்ல பாரு...... ஒரு நாள் சரக்கு போடாம வந்து இவுனுங்கள சாவடிக்கனுண்டா....சின்ன பசங்கள வேலைக்கு வைக்கறானுங்க.. பழைய முட்டைல ஆம்லெட் போடறானுங்க.... எல்லா சரக்குக்கும் அஞ்சு ரூபா, பத்து ரூபா  ஜாஸ்தி வைச்சு விக்கறானுங்க... கேட்டா.. கூலிங்கு..... அது இதும்பானுங்க..."-என்ற விவேக், முட்டையை ஒரு வாய் எடுத்து வாய்க்குள் போட்டு வேக வேகமாய் மென்று கொண்டே...." அப்டி எல்லாம் எதும் இல்ல... என்ன ரேட் போட்ருக்கோ அதுதான் ரேட்டு.. மற்றபடி கொள்ளைதான்......"-என்று சொல்லி முடித்து ஒரு மிடறு எடுத்துக் குடித்துக் கொண்டான்...  

"எவன்டா.. ஒழுங்கா இருக்கான்.. அரசு பண்ண வேண்டியத தனியார் பண்ணுது.....தனியார் பண்ண வேண்டியத அரசு பண்ணுது.. ஆஸ்பத்திரியும்.. ஸ்கூலும் தனியார்ட்ட.... போனா.. உருப்படுமா நாடு..... கியூபா மாதிரி பண்ணனுண்டா.."-என்ற வாசு..மீண்டும் பாட்டிலில் இருந்து சரக்கை.. அளவாக இரண்டு பிளாஸ்டிக் டம்ளரிலும் ஊற்றிக் கொண்டே ஆதங்கத்தைக் கொட்டினான்...

வாசு பேசுவதைக் கேட்டுக் கொண்டே, அளவும் பார்த்துக் கொண்ட விவேக்... அவன் பாட்டிலை அந்தப் பக்கம் எடுத்ததுமே தன் டம்ளரை எடுத்து இரண்டு மிடறு கபக்கென்று குடித்து விட்டு "அதுக்கு நீயும் நானும்தான் துப்பாக்கி தூக்கணும்...ரோட்ல ஒருத்தன் அடிபட்டுக் கிடந்தாக் கூட இங்க போட்டோ எடுத்து பேஸ் புக்ல போடத்தான் முண்டி அடிக்கறானுங்க... இவுனுங்கள வெச்சு.. போராட்டம் பண்ணி......" என்றவன் வாயைத் துடைத்துக் கொண்டான்........

"தே தம்பி...."-என்று கூப்பிட்டபடியே இரண்டு பக்கமும் தேடிய வாசுவை பார்த்து... "அவன் போய்ட்தான்..."என்றான் விவேக்.... நன்றாக காலை மடக்கி அமர்ந்து கொண்டே...  

"அதா...ன......நல்லது பேஸ்.....னா எவன் கேக்றான்..?"-வாசுவின் கண்கள் சின்னதாகி விட்டன...முகம் பூத்தது போல உப்பிக் கொண்டு கன்னம் தள்ளியது....

"தம்பி........ கொஞ்சம் கத்தாம பேசுங்....... காது கொய்...ங்து"  என்று சத்தமாக சத்தம் வந்த பின் பக்கம் பார்த்து முகம் வீங்கிய சிரிப்பை இன்னும் இழுத்து.. "சாரி சார்.. சாரி,... அது முதலாளித்துவத்த பேச ஆரம்பிச்சாவே... கோபமா வந்த்ருது..... அதான் ஸ்சார்.. மனிசுகாங் சார்.. ப்ளீஸ்..."-என்று விவேக் பேச பேசவே....

"இப்டி விட்டுக் குடுத் போகணும் மச்சான்...."என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டிக் கொண்டே... பைக்ல போனா கூட பக்கத்துக்கு பைக்காரன விரோதியா பாத்து முறைசுகிடே முந்தறவன்தான் அதிகம்.. இது ஜனநாயக நாடா.. இல்ல வெறும் 100 ரூபாய்க்கு ஓட்ட விக்கிற..."-என்று கத்தி பேசும் வாசுவை கையமர்த்தி அடக்கிய விவேக்... "தேய்.. மெதுவா பேசு..." என்று கண்ணடிக்க.. சட்டென்று வார்த்தையின் வேகத்தை குறைத்துக் கொண்டே, ஒரு கட்சி காசு குடுக்குது... ஒரு கட்சி... டிவி குடுக்குது.....ஒரு கட்சி ரேட்ட ஏத்துங்குது ...ஒரு கட்சி.... சண்டை போட்டுகிட்டே திரியுது........ ஒன்னும் விளங்கல மச்சி...ஆனாலும் நான் களங்....கல மச்சி "என்ற வாசுவின் ... முதுகில் வியர்வை கோடு இழுத்துக் கொண்டு உருண்டது...

"அட.. முடிக்கும் போது கூட கவிதைடா..... மச்சான் நீ ட்ரை பண்ணுடா..... ஒரு பெரியா ஆள் சொல்றான்... முயற்சியும் அதுக்கான பயிற்சியும் இர்ந்தா எத வேணா பண்ணலாமாம்..."என்று ஆச்சரியத்தோடு கூறினான் விவேக்...

மேலே ஓடாத மின்விசிறியைப் பார்த்துக் கொண்டே பார்வையை கீழே, எதிரே இறக்கிய வாசு..."அதான் கொலைய கூட ஈசியா பண்றானுங்க.... எல்லாத்தையும் முறையா கத்துக் குடுத்த அமெரிக்காவுக்கே ஆப்பு வெச்சான் பாத்தியா...."என்ற வாசு ஒரு கையில் மேல் இன்னொரு கையைக் கொண்டு அடித்துக் கொண்டான்...வெற்றியின் களிப்பைக் காட்டுபவனாக... லேசாக மேசை ஆடியது...' பாத்த்.....த்து...." என்பது போல சம நிலைப் படுத்திய விவேக்... "அதான் அவனும் காலியாகிட்டான்ல..."என்றான்....வாயை கோணித்து ஸ்டைலாக சிரித்துக் கொண்டே...

"அதான்டா மத்சான்.. அதிகார வர்க்கம் சண்டை போட்டு சாவட்டுன்டா.... எவன் வேண்டான்னா..... அப்பாவி மக்கள் ஏன்டா சாகனும்....?..எப்பாது ரெண்டு நாட்டு ஜனாதிபதி.. ரெண்டு நாட்டு பிரதமர்... ரெண்டு நாட்டு முதல் அமைச்சருங்க சண்டை போட்ருக்கானுங்களா..... சண்டை போட்டு சாகறவனெல்லா மிலிட்டரிக்காரனும்... பொது மக்களும்தான்.... மேல் தட்டு கீழ் தட்டுனு எத்தன குளறுபடி.. ஊருக்கு நடுவுல செவுத்த கட்றான்...ஊர்க்கோடிய சேரிங்றான்....லவ் மேட்டர ஊர் பிரச்சனை ஆக்றான்... கொலைய தற்கொலைங்கறான்.......தற்கொலைய விபத்துங்கறான்.. இந்த செல்போனு வந்தாலும் வந்துச்சு.... அதுதான் இப்போ எல்லா தப்புக்கும் பேசே........."-என்று பேசிக் கொண்டே போன வாசுவை இடை மறித்த சிறுவன்...

"அண்ணே.. டைம் ஆச்சு.. மணி பத்தே முக்கால்... இப்ப போலிஸ் வரும்.. கிளம்புங்க......"-என்றான்.. பொதுவாக இருவரையும் பார்த்துக் கொண்டே...

"என்ன போலிஸ்..ஆங்..... வந்தா... வரட்டும்.. எங்ககிட்ட ஆளுக்கு 100 ரூபாய் இருக்கு.." என்று சீரியஸாக பேசி விட்டு சட்டென்று இருவரும் குலுங்கி ஒருவரோடு ஒருவர் சரிந்து சாய்ந்து கொண்டு வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டே வெளியேறினார்கள்...வாசுவும்....விவேக்கும்.

லாலி ரோடு வரை ஒன்றாக பைக்கை ஒட்டி  வந்தவர்கள்,  "சரி மச்சான் பார்த்து போ....". என்றபடியே வாசு தடாகம் சாலையில் பயணிக்க...கௌலி பிரவுன் சாலையில் பயணிக்கத் துவங்கினான், விவேக்......

"ராமென் ஆன்தாலும் ராவண ஆன்தாலும் எனக்கொரு கவலை இல்லே... நான்தாண்டா மனசுக்கு ராஜா.. வாங்குங்கடா தஞ்சாவூர் கூஜா ...." திரும்ப திரும்ப பாடிய விவேக், மங்கிய மூளைக்குள், வழியில் எங்கும் போலிஸ் இருந்து விடக் கூடாது என்று அழிக்க அழிக்க எழுதிக் கொண்டே இருந்தது, கோட்டுக்கு அந்தப் பக்கத்துக்கான பயம்....மணி 11க்கு மேல் ஊர்ந்து கொண்டிருப்பது போல அவனின் பைக்.. சாலையில் ஏறி இறங்கி, இறங்கி ஏறி என்று கவுண்டம் பாளையம் நோக்கி போய்க் கொண்டிருக்க... சற்று தூரத்தில் ஒரு போலிஸ் வண்டி வந்து கொண்டிருப்பதை.... அதன் தோற்றத்தை, இரவைக் கிழிக்கும் பளிச் பளிச் சிவப்பு விளக்கு வைத்தே கண்டு கொண்ட விவேக், சட்டென இடது பக்கம் பிரிந்து போகும் கொய்யா தோப்பு வழியாக வண்டியை விட்டான்...அந்த நேரத்தில் அப்படித்தான் தோன்றியது...

"நல்ல வேளை.... மாட்டிருந்தா மப்ப இறக்கி விட்ருப்பானுங்க...." என்று மனதுக்குள் தெளிவாக முணங்கிக் கொண்டே சென்று கொண்டிருந்தான்... பாதையில் ஆங்காங்கே கொஞ்சம் வெளிச்சம் இருக்க, தோப்புக்கான் சூழலில்.. இருட்டு இன்னும் சற்று அதிகமாகவே வியாபித்திருந்தது...... இன்னும் கொஞ்ச தூரம் இந்த வழியாக போனால் பிறகு இடையர் பாளையம் சாலையை பிடித்து.. டிவிஎஸ் நகர் வழியாக கவுண்டம் பாளையம் போய் விடலாம் என்பது அவனின் தொலை நோக்கு திட்டம்....திட்டத்தை கரகரவென அழித்தது போல.. சட்டென்று இடது பக்கம் இருந்து யாரோ வண்டியை உதைத்தது போல இருந்தது......

திக் என்று தடுமாறிய வண்டி, மண்ணில் சரித்து... முகம் திருப்பி... வலது கால்... இடது கால் என்று, அப்படி......இப்படி....... என்று சாய்ந்து.... நன்றாக சரிந்து இடது பக்கமாகவே கீழே போட்டான்...விழுந்த வேகத்தில் உதறி எழுந்த படியே...'என்ன நடந்தது' என்று மீண்டும் ஒரு முறை கண்கள் தேய்த்து முகத்தில் ஏதோ வழிவதைத் துடைத்துக் கொண்டே, மங்கிய வெளிச்சத்தில் அவனை சுற்றி மூன்று பேர் நிற்பதை இப்போது பார்க்க முடிந்தது..... மூன்றில் நடுவில் இருந்தவன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலில் இருந்து குபுக்கென்று ஒரு குண்டா பீரை வாய்க்குள் முழுங்கி அப்படியே விவேக் மீது முகத்தில் மீண்டும் கொப்புளித்தான்.... புளிப்பும் கசப்பும்.. அவனின் எச்சிலும் அருவருப்பை தந்த உடல் மொழியோடு..முகம் திருப்பிக் கொண்டும்...... "ஏய்... ஏய்.. கிறுக்கா..... லூசாடா நீ.. கேன...." என்று கத்திக் கொண்டே...கை கொண்டு முகத்தை வழித்துக் கொண்டே... தள்ளாடியபடி ஒரு வழியாக  நின்று மூவரையும் உற்றுப்பார்த்தான்....என்ன வேண்டும் என்பது போல...'பைக்கையும் உதைத்து விட்டு விழ விழவே பீரை முகத்தில் துப்பி இருக்கிறான்... 'என்று அந்த போதையிலும் அவனால்... ஒரு வழியாக யூகிக்க முடிந்தது ..மீண்டும் துப்பியதில்... சரியாகவும் இருந்தது யூகம்...கோபமும் தலைக்கு ஏறியது....

மாலை 7 மணிக்கு மேல்....விவேக்கும் வாசுவும் குடித்துக் கொண்டிருந்த அதே பாரில் இடது மூலையில் மூளைக் கறியோடு குடித்துக் கொண்டிருந்த அதே மூவர் தான்... இவர்கள்... 

"ஒன்னும் பிரச்சினை இல்லை.. சிம் காடு, மெமரி காடு எடுத்துட்டு செல்போன குடுத்துட்டு போயிட்டே இரு..." என்று ஒருவன் சொல்ல சொல்லவே...நிலைமையை புரிந்து கொண்ட விவேக், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே...உடலைத் திடப்படுத்தி.... ஆடிக் கொண்டிருக்கும் போதை மனதை ஒரு வழியாக சமன் படுத்தி...படும் நிலையில்.. சில மணித்துளிகள் நிறுத்தி...வலது காலை ஓங்கி நடுவில் நின்றவன் வயிற்றில் ஒரு உதை வைத்தான்...

"யாருகிட்த.... நான் ப்ளக் பெல்ட்ரா..........." என்று சொல்லிக் கொண்டே... வலது பக்கம் நின்றவனை,அவன் சுதாரிப்பதற்குள் கண நேரத்தில்...காதோடு இழுத்து ஒரு அறை வைக்க...அவன் ஒரு சுற்று சுற்றி காதைப் பிடித்துக் கொண்டு.. தடுமாறினான்....அப்போதுதான் அதைக் கவனிக்க முடிந்தது.. இடது பக்கம் இருந்தவன்.. .. நடுவில் இருந்தவனை... எழுப்பிக் கொண்டும்.. தூக்கிக் கொண்டும்...."டேய்.. மாப்பு......என்னாச்சு.....? எந்திரிடா..!... என்னடா வயித்துல இருந்து ரத்தமா வருது"- என்று புலம்பிக் கொண்டே...உதை வாங்கி சரிந்து கிடந்தவனின்  சட்டையை தூக்கி பார்க்க.. உள்ளே பாட்டில் உடைந்து வயிற்றில் குத்தி ரத்தமும். மதுவுமாக வழிந்து கொண்டிருந்தது......குத்துப்பட்டவன் மது பாட்டிலை வாங்கி வயிறுக்குள் சொருகி வைத்த காட்சியை மனக்கண்ணால் பார்த்த இடது பக்கக்காரன்... "எத்தன தடவ சொல்லிருக்கேன்.. இப்டி வயித்துக்குள்ள வைக்காத வைக்காதன்னு...... கேட்டானா....?" என்று கேட்டுக் கொண்டே அவனும் கீழே உட்கார்ந்து குத்துப் பட்டவனை தொட்டுப் பார்த்தான்...

வயிற்றில் எட்டி உதித்த காட்சியை விவேக் ஒருமுறை யோசித்துப் பார்த்தான்...

" ச்சே....... பாவி.... அயோ...." என்று கத்திக் கொண்டே நிலைமையை புரிந்து கொண்டவனாய், அவனும் கீழே விழுந்தவனை நெருங்கினான்....விவேக்.

"என் நண்பனைக் குத்திட்டியேடா.." என்று ஒருவன் திரும்பி...விவேக்கை  ஓங்கி ஒரு உதை வைக்க.... விவேக் சற்று தூரத்தில் மண்ணோடு புரண்டு... மூச்சு வாங்கி விழுந்தான்... 

கீழே வயிற்றை பிடித்துக் கொண்டு ரத்தத்தில் மிதந்து கொண்டிருந்தவன் கால்கள் மேலும் கீழும் தரையில் கோடு போட்டு அடங்கியது.... அவனை மடியில் வைத்திருந்தவன்...குத்துப்பட்டவனை நன்றாக உற்றுப் பார்த்து விட்டு....இருளைக் கிழிக்கும்... விழிகள் போல.. கீழே கிடந்த விவேக்கையும்... அவனுக்கு சற்று அருகே நின்று கொண்டிருந்த தன் நண்பனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே " டேய்.... செத்துடான்டா.... டேய்... கொன்னுட்டயேடா........ மாப்ள.. அவன கூறு போடாம விடக் கூடாதுடா...." என்றபடியே வேகமாய், வெறி பிடித்தவனாக கத்திக் கொண்டே எழுந்தான்...அதற்குள், இன்னொருவன்.... விவேக்கை சரமாரியாக தாக்கத் துவங்கினான்.... 

"அண்ணே சொன்னா கேளுங்க.... நீங்கதான் வம்பிலுத்தீங்க.... அவரு வயித்துக்குள்ள பாட்டில வெச்சிருப்பான்னு எனக்கு எப்டி தெர்யும்...." என்று கேட்டுக் கொண்டே பயந்து புலம்பி வாங்கிய அடியில் தடுமாறவும் செய்தான்...அவர்கள் சரமாரியா அடித்துக் கொண்டிருந்தார்கள்...திருப்பி அடிக்க முடியாதபடி அவன் மனம், அவன் கொலை செய்து விட்டதாக நம்பியது. அவன் பலம் முழுக்க ரத்தமாய் சற்று முன் சிதறி விட்டதாக நம்பினான்.... "அயோ கொலை பண்ணிட்டேனே... பிலீஸ்..... நான் வேணும்னு பண்ணல.... நீங்கதான வம்பிலுத்தீங்க...விட்ருங்க... விட்ருங்க... அண்ணே.... வலிக்குது... என்.....ன ...... புரிஞ்சுக்கோங்க..." என்று புலம்பிக் கொண்டும்.. கத்தக் கூட முடியாமல்... தவிப்பின் ரகசியமாய்.... மண்ணில் புழுவைப் போல.. நெளிந்து கொண்டே கெஞ்சினான்... 

பாக்கெட்டில் வைத்திருந்த பாட்டிலைத் திறந்து சற்று ஓய்ந்திருந்த இருவரும்... மாறி மாறி கப கபவெனக் குடித்தார்கள்...."மாப்ள... மச்சான் செத்துட்டான்டா... இவனைக் கொல்லாம விடக் கூடாதுடா...." என்று ஒருவன் அழுது கொண்டே மீண்டும் குடிக்க.. இன்னொருவன்..பற்களை நற நறவென கடித்துக் கொண்டே ..."ஆமா மச்சா...விடக் கூடாதுடா..." என்று அவனிடம் இருந்து பாட்டிலை வாங்கி மிச்சம் இருந்த சரக்கை வேக வேகமாக குடித்தான்.....இருவரும் போதையின் உச்சியில்... வெறி கொண்ட மிருகத்தைப் போல.. திரும்ப,....அங்கே.. விழுந்த இடத்தில் இல்லாமல் போயிருந்தான் விவேக்...

"எங்கடா போனா.... விடக் கூடாதுரா ... அவன கொல்லாம விடக் கூடாது....." என்று மிருகத்தின் பசி கொண்ட இரவைப் போல காடு தேடி அலையத் துவங்கினார்கள் அந்த வேட்டை மனிதர்கள் இருவரும்.... சந்து பொந்து என்று கொய்யா தோப்பு ஊர்... ஒரு வித இருண்மைக்குள், இடைஞ்சலுக்குள்... புதிரின் கோலம் போல திரும்ப திரும்ப, எல்லா வழியும் ஓர் இடத்தையே சுற்றிக் கொண்டிருப்பது போல இருக்க...... விவேக், தள்ளாடி தள்ளாடி ஓடிக் கொண்டிருந்தான்...... மனதுக்குள் வேர்த்து துளிர்ந்த துளிகளெல்லாம் ரத்தம் சொட்டுவதாகவே நினைத்தான்......எங்கிருந்தோ வந்த அழுகையை... விழி தாண்டும் வழி கொண்டு அடைத்தான்... ஆனாலும் வந்தது.... அழுகையாய்...... பாக்கெட்டில் கைவிட்டு செல்போனை எடுக்க முயற்சித்தான்..... நடந்த அடிதடியில் அது தெறித்து விழுந்தது, இப்போதுதான் நினைவுக்குள் எட்டியது, தடுமாறி வந்த அலைக்கற்றை பாதை போல.......

"கொலை கேசுக்கு ஆய்சுக்கும் ஜெயில்லதான்......! கடவுளே.. என்ன பண்ணுவன்.... பைக் வேற அங்க கிடக்கு.... மாட்னா கொன்றுவானுங்க... கொன்னு இங்கயே பொதைச்சா கூட யாருக்கும் தெரியாதே..... என்ன பண்ண.... யோசி... யோசி.. தப்பிக்கணும்..எப்டியாது இங்கிருந்து தப்பிக்கணும்..."-அவன் மனம் புலம்பலில்.... முன்னே, எங்கேயோ ஓடிக் கொண்டிருக்க... அவன் கால்கள் ஒரு காம்பவுண்டுக்குள் வந்து நுழைந்து விட்டிருந்தன.... இனி ஓட முடியாது... களைத்த கால்களின் வலிமை அந்த வீட்டோடு முடிந்தும் போயிருந்தது...நின்று மூச்சிறைக்க தன்னை மெல்ல தனக்குள்ளாகவே அடக்கிய விவேக்..வந்த வழியை ஒரு முறை குனிந்த தலை கொண்டு நிமிர்ந்து பார்த்துக் கொண்டே  மெல்ல முன் இருந்த கதவை தட்ட யத்தனித்தான்... அது தட்டுவதற்கு பட்ட கையின் தொடலிலேயே திறந்து கொண்டது.....  திறக்க திறக்க கதவோடு உள் சென்று தடுமாறி கீழே விழுந்து, விழுந்த வேகத்தில் எழுந்தும் கொண்ட விவேக்கின் கண்ணில்,உருவ பிம்பமென உணர்ந்த அறிவின் ஒரு மொழியில் தலை விரி கோலமாக ஒரு பெண் சுவரோரம் அமர்ந்திருந்தது தெரிந்தது...சட்டென ஒரு அடி பின்னால் நகர்ந்த விவேக்...கணம் ஒன்றில் விரிந்த கண்கள் கொண்டு அவளையே உற்று நோக்கினான்...அழுது சிவந்த கண்களுடன் முகம் எல்லாம் அடி வாங்கப் பட்ட தடிப்புகளுடன் அமர்ந்து அவளும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்...

அந்த வீடு நிசப்தத்தின் மொழியாக இருட்டும் வெளிச்சமும் கலந்த மஞ்சள் வண்ண முயக்கத்தில் தலை விரித்துக் கிடந்தது...பேச்சு எழாத பரிதவிப்பு ஒன்றில்.. தடுமாறிய விவேக்கை....முதலில் அந்த தோற்றம் மிரட்டுவதாக இருந்தாலும்.. வெளியில் நடக்க போகும் கொலைக்கு முன்னால், தான் செய்து விட்ட கொலைக்கு முன்னால் அது தன்னை கூட்டுக்குள் இழுத்துக் கொள்ளும் ஆமையைப் போல ஆகி விட... சட்டென, அத்து மீறி வீடு புகுந்து விட்ட காரணத்தை, பயம் கொண்டு விவரித்தான்....... நா குழறியது ...வார்த்தைகளை நிதானமாக்கி துடைத்துக் கோர்த்தான்....

"ஏங்க .... என்ன காப்பாதுங்க...வெளிய..... ரெண்டு பேர்  என்னை தொரத்திட்டு வாராங்க.... நான் ஒண்ணுமே பண்லங்க.. செல்போன குடுன்னு அடிக்கரானுங்க... ...நடந் சண்டைல... நான் ஒருத்தன அட்ச்சு, தெரியமா அவன் வயுத்துல இருந்த பீர் பாட்டில் குத்தி அவன் செத்துப் போய்ட்டா.. அதுக்கு நான் என்னங்க பண்றது.. இப்ப என்ன கொல்ல வாரானுங்க.....காப்பாதுங்க...."- தடுமாறி.. இடையிடையே மூச்சு வாங்கிக் கொண்டும்... வியர் த்துக் கொண்டும்..அங்கும் இங்கும் நடுங்கும் உடல் மொழி கொண்டு விவேக் பேசிக் கொண்டிருக்க, அவள் சட்டென எழுந்து வந்து தன் வாய் கொண்டு அவன் வாயை மூடினாள்....... அவன் உடல் சட்டென்று தடுமாறி....தடுமாறி... தவித்து.... புரியாமல்... கண்கள் பிதுங்கி பார்த்து.... 'என்ன..... என்ன.... ஏ.. ஏங்க ..." என்று வாய்க்குள்ளாகவே எச்சிலின் வடிதலோடு ரத்தமும் கசிந்து திமிர..அவள் இறுக அணைத்துக் கொண்டே அவனை உடல் கொண்டே தள்ளிக் கொண்டு பக்கத்தில் இருந்த படுக்கையில் சரித்தாள்....வேக வேகமாய் ஒரு மோகினியைப் போல.. அவள் அவனைத் தழுவத் துவங்கினாள்... மூர்க்கத்தின் வலிமைக்குள் அவனால் திமிரக் கூட முடியவில்லை......ஒரு கொலையை செய்பவள் போல... அவள், அத்தனை தீர்க்கமாக அவனை எடுத்துக் கொண்டிருந்தாள்...

"அயோ..என்னங்க.... இது...... இப்டி பண்றீங்க.. நான் ஒன்னும் பண்ணலீங்க... கொலை நான் பண்ணல.. அயோ... இது.... து.. தப்புங்க....இடம் குடுத்தா போதும்.. நான் அப்டி பட்டவன் இல்ல.. அயோ......" கொலைக்கு அடங்கிய இருந்த, குடித்த மனம்... பிழைக்கு மெல்ல தன்னை தயார் செய்தபடியே அவளை அணைத்தது........

திடுக்கென எழுப்பி விட்டது செல்போன்...

கண்களைத் திறக்க முடியாமல்... திறந்த வாசு...கலைந்து விட்ட போதையை போல... போனை உற்றுப் பார்த்தான்........ 'விவேக் அம்மா' என்று எழுத்து மின்னியது....

"என்ன அம்மா செல்லருந்து கூப்டறான்...." என்று முணங்கியபடியே போனை ஆன் பண்ணி.." சொலு மத்சான்.." என்றான்...

"வாசு...எங்க இருக்கீங்கடா.... அவன எங்க.... இன்னும் வரல..கூப்டாலும் போன்னு சுவிட்ச் ஆப்னு வருது..." என்ற அம்மாவின் அதட்டல் குரல் ...சொருகிய கண்களை சட்டென திறக்க வைத்தது....அவன் பதில் சொல்ல யத்தனிக்கும் முன்பே,, "சனிக்கிழமையானா இதே வேலை.... அடங்கி இருக்கவே மாட்டிங்களாடா...." என்று கத்தினார் அம்மா..... 

"என்ன இன்னும் வரலியா...." என்று வாய்க்குள்ளேயே முணங்கிய வாசு... "அவன் அப்பவே கிளம்பிட்டாம்மா.... இன்னும் வரலியா..." என்று கூறிக்கொண்டே தலை மேட்டில் சுழன்று கொண்டிருந்த கடிகாரம் பார்த்தான்.....மணி 12...

மைக்ரோ நொடி யோசனையோடே,"வந்துருவான்ம்மா.. நீங்க வைங்க... நான் ட்ரை பண்ணிட்டு பேசறேன்" என்று சொல்லிக் கட் பண்ணினான்.....

"எங்க போயிருப்பான்....?.... இங்க இருந்து, அங்க போக இவ்ளோ நேரமா....!" யோசித்துக் கொண்டே...... மீண்டும் போன் பண்ணினான்.. அதே சுவிச் ஆப். 

"எங்க போயிருப்பான்....?.. ஒரு வேளை போலீஸ்ட்ட மாட்டிருப்பனோ...?ஓ காட்.... என்ன பண்றது....?"  என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே... மீண்டும்... விவேக்கின் அம்மா போனில் அலைத்தார்... .. இம்முறை அவனின் அப்பா பேசினார்.... 

"இருங்ப்பா நான் பேசறேன்...."- என்று சொல்லி சட்டென முடிவெடுத்தவனாய் வண்டியை எடுத்துக் கொண்டு கவுண்டம் பாளையம் நோக்கி சென்றான்...... வழி எங்கும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சென்றான்... மனதுக்குள்.. போதை வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தது..... சாலையில்.. மனித நடமாட்டம் ஆங்காங்கே ஒன்று இரண்டு என்று தென் பட... சாலைவாசிகள்.... சாலையோரத் தூக்கத்தில் வல்லரசு இந்தியாவை கேள்வி கேட்பது போல கேள்விக்குறியாய் வளைந்து கிடந்தார்கள்....... சாலை முழுக்க மஞ்சள் வெளிச்சம் சீறிக் கொண்டு தனிமையில் உதிர்ந்து கொண்டேயிருப்பது போல.. அவன் அதைக் கண்டும் காணாமல் கடந்து சென்றான்..... 

தேடிக் கொண்டே போனவன், கவுண்டம்பாளையமே போய் விட்டான்......ஆனால், விவேக் மட்டும் கண்ணில் படவேயில்லை....."என்னடா இது..?"- என்று யோசித்துக் கொண்டே மீண்டும்... போன அதே வழியிலியே பின்னோக்கி வந்தான்...வர வர.. கொய்யாத் தோப்பு வழியைத் தாண்டும் நொடியில்...சட்டென்று ஒரு யோசனை வந்தது....வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கணம் போதையை தெளிய வைப்பதாக தலையை சிலுப்பிக் கொண்டே ஆழமாக யோசித்ததை, திரும்ப நினைவு படுத்திப் பார்த்தான்...

"ஒரு வேளை, சார்ட் கட்ல போறேன்னு இந்த வழியா போயிருப்பானோ...?"-என்று கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்தவன்.. மூளைக்குள் பளீரென வெட்டியது.... அடுத்த யோசனை...

"அதான பார்த்தேன்... டிவிஎஸ் நகர்ல 'வெற்றி' இருக்கான்ல....அவன் வீட்டுக்கு போயிருக்கான்.....வெங்காயம்.... இதே வேலை... குடிச்சா வீட்டுக்கு போக பயந்துகிட்டு வெற்றி வீட்டுக்கு போய் படுத்துக்கறது...... இருடி....... இன்னைக்கு உனக்கு இருக்கு.. லூசுப்பய.. போறவன் சொல்லிட்டாவது போகணும்....மனுஷன் தூக்கத்தைக் கெடுத்துகிட்டு..."-என்று புலம்பிய மனதோடு...வண்டியைத் திரும்பி கொய்யாத் தோப்புக்குள் விட்டான்...

அதே இருட்டு... வெளிச்சம்... குளிர்... தோப்புக்குள் அடங்கிய ஏதோ ஒன்று அவனைத் துரத்துவதாகவே உணர்ந்தான்..... மனதுக்குள் படரும் பயம் ஒன்று, ஒரு மூடு பனியைப் போல...அவனை சூழ்வதாக அவதானித்தான்.... ஏதோ சரி இல்லை என்று ஒரு வகை உள் உணர்வு அவனை சூழ்ந்து ஒரு வகை பிடிக்குள் அவனைப் பிடித்துக் கொள்ள... அவன் மெல்ல இரு பக்கமும் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான்... அது நடுங்கிக் கொண்டே சென்றது...தலை வேறு.... கிண்ணென்று வலிக்கத் துவங்கியிருந்தது...

வேர்த்து புழுங்கி.. வெறி பிடித்த மிருகம் போல.... அங்கே.. ஒரு திண்ணையில் அமர்ந்திருந்த ஒருவனையும்...... அவன் அருகே ஒரு பைக் கீழே கிடந்ததையும் கண்ட வாசு..நெற்றி சுருக்கி, கண்கள் விரித்து நன்றாக கூர்ந்து பார்த்துக் கொண்டே வண்டியை நிறுத்தினான்... அதே சமயம்.. ஒரு பைக் வந்து நிற்பதையும்..அதிலிருந்து ஒருவன் இறங்கி வருவதையும்..திண்ணையில் அமர்ந்திருந்தவன்... தலையை தூக்கி அர்த்தத்தோடு பார்த்தான்..."இது விவேக் பைக்கேதான்..."என்று மனதுக்குள் முழுமையாக ஒப்புக்கொண்ட சந்தேகத்தோடு...வேகமாக அந்த ஆளின் அருகே கிடந்த வண்டியியை நோக்கி வாசு ஓடுவதற்கும்... பக்கத்து வீதிக்குள் இருந்து இன்னொருவன் "மச்....சா.....ன்..... ஆள் எஸ்சுடா.. எங்கையும் காணல.." என்றபடியே தள்ளாடிக் கொண்டு வந்தான்...

"என்ன....டா நடக்.......குது..." என்று யோசித்த வினாடியில்.. சட்டென்று ஓட்டத்தை நிறுத்தி.. மெல்ல ஒரு வித தயக்கத்தோடு.....நடந்தபடியே அவர்களின் அருகே சென்றான்.. வாசு... அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அமர்ந்திருந்தவனும்.... பேசிக்கொண்டு வந்து... ஒரு ஆள் தங்களை நோக்கி வருவதைக் கண்டு கவனம் திரும்பிய வந்தவனும்... ஒரு சேர ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும்.. இப்போது வாசுவை இன்னும் அழுத்தமாக பார்த்தார்கள்...

சட்டென்று வாசுவை நோக்கி இருவரும்.."யார்ரா நீ.. இங்க எதுக்கு வர்ர.. கிளம்பு கிளம்பு..." என்று மிரட்டிக் கொண்டே வாசுவை நோக்கி முன்னேறினார்கள்.. 

"அண்ணே.. என் ப்ரெண்ட்டோட பைக் இது.. அவன் இங்கதான் எங்கயோ இருக்கான் போல.. என்னாச்சு.... இன்னும் அவன் வீட்டுக்கு வரல... இங்க எதுக்கு வந்தான்னும் தெரில..... நீங்க அவனையா தேடறீங்க......ஏதும் பிரச்சினையா....என்ன பண்ணினான்......." என்று சுற்றும் முற்றும் பார்த்தபடியும்,அவர்களை நோக்கி தயக்கத்தோடு பேசிக் கொண்டே நெருங்கியும் விட்டான் வாசு...அவன் உடல் தடுமாறியது..... உள்ளுக்குள் எதோ விபரீதம் என்று மெல்லிய பயம் கூட சூடாக புகையத் துவங்கியது.....

மூவரும் ஒரு புள்ளியில் அக்கு போல நின்றார்கள்...இரவும்.. காற்றும்....இணைந்து கொண்ட புள்ளியில... கண் சிமிட்டிக் கொண்டிருந்த மஞ்சள் வெளிச்சம், கண்கள் மூடும்.. இருண்மையை சுமந்து கொண்டே விரவிக் கிடந்தது...

"ஓ அந்த  நாயி...உன் பிரெண்டுதானா....வா.... வா.... உன்னையும் சேர்த்து,போட்டாதாண்டா.... மனசு ஆறும்.. எங்க கண்ணு முன்னாலயே உன் ப்ரெண்ட் எங்க நண்பனைக் கொன்னுட்டான்டா...விடியறதுக்குள்ள அவன போடாம விட மாட்டோம்.."-என்றபடியே ஒருவன் பாக்கெட்டில் வைத்திருந்த சரக்கு பாட்டிலை எடுத்து திறந்து கப கபவென குடித்தான்....

எதிர்பாராத கணத்தில் பளார் என வாசுவை அறைந்த இன்னொருவன் அடுத்த நொடியில் ஓங்கி வயிற்றோடு மிதிக்கவும் செய்தான்... சற்றும் எதிர் பார்க்காத வாசு.. நிலை கொள்ளாமல் பின்னால் சறுக்கி  கொண்டு போய் விழுந்தான்...அவன் கை அன்னிச்சை செயல் போல..வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டது... குடித்தவன், பாட்டிலை இப்போது அடுத்தவனிடம் கொடுக்க.. அவன் அதை வாங்கி குடித்துக் கொண்டே "மாப்ள அவன சாவடிடா.... அந்த நாய் வெளிய வரட்டும்..." என்று அடித் தொண்டையில் ஒரு நரியைப் போல... உள் நோக்கி கத்தினான்...அவன் சொல்ல சொல்லவே.... பாட்டிலைக் கொடுத்தவன்...முது பக்கமிருந்து ஓங்கி ஒரு உதை வைத்தான்...ஏற்கனவே போதையில் இருந்த வாசு.. சுருண்டு கிடந்த நிலையை மாற்றி நிமிர்ந்து சுருண்டான்.... வில்லின் இருபக்கமும் வளைவதைப் போல..... அடிபட்ட பாம்பு வளைவதைப் போல... சர சரவென நெளிந்தான்.. கத்தவும் முடியாமல்... வாய்க்குள் காற்று புகுந்த அடைக்காத நிலை ஒன்றில் ஒரு தவம் செய்து நின்றது வலியின் கொடுமை...

"அவன் வரணும்.. அழுகனும்...உன்ன பார்த்து கதறனும்...டேய் பாடு... வெளிய வாடா.. பயந்தாகொள்ளி........" என்று திட்டிக் கொண்டே சராமாரியாக அடித்து உதைத்த இருவரின் தலையும் ஒரு இடத்தில் நிற்காமல் போர்களின் வாளைப் போல அங்கும் இங்கும் ஆடின....இனம் புரியாத வன்மம்.... நுரை தள்ளிய கோபமாய் சுற்றிக் கத்தியது... 

தட்டுத் தடுமாறிய வாசு.. கண நேர கைகலப்பில்..எப்படியோ எழுந்து, முட்டித் தள்ளி...மீண்டும் ... விழுந்து..... உருண்டு... எழுந்து..... ஓடத் துவங்கினான்...அவர்களும் தட்டுத் தடுமாறி.. வெறி கொண்டு  விரட்டத் துவங்கினார்கள்.. 

அடுத்த வீதியில் இருளுக்குள் வெளிச்சம் கிழித்தவன் போல.. ஒருவன் மது பாட்டிலின் கழுத்தை பெரு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே திருகுபவன் போல பிடித்துக் கொண்டே..... காற்றில்..... ஊஞ்சல் ஆட்டிக் கொண்டு.. ஒரு ராஜா நடையில்.. திராட்சை தோட்டம் கடக்கையில் மிதிப்பவன் போல நடந்து கொண்டே வாசு ஒளிந்து கொண்ட வீட்டை நோக்கி சென்றான்....

அவன்... வாசுவும் விவேக்கும் குடித்துக் கொண்டிருந்த பாரில் ஒரு மூலையில் போனில் யாரிடமோ ஏதோ கோபமாக பேசிக் கொண்டும்.. டேபிளை கையால் குத்திக் கொண்டும்...கத்திக் கொண்டும் குடித்துக் கொண்டிருந்தவன்தான்......

எதிர் சுவரோரத்தில் படுத்துக் கிடந்த நாய் ஒன்று அவனை உற்றுப் பார்த்தது... ஓங்கி கழுத்தோரம் மிதித்து விட்டு கண்களாலே காற்றில் எதையோ எழுதிப் போனான்...நாய் சத்தமிடாமல் முணங்கிக் கொண்டு...இன்னும் சுவரோரம் தன்னை இறுக்கிக் கொண்டது... குறுக்கிய உடலோடு...... 

கடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த மணித்துளிகளை பெரும் கோபம் கொண்டு அள்ளி வீசிக் கொண்டே சென்றவன் ஓங்கி உதைத்ததில்... ஏற்கனவே அவசரத்துக்கு திறந்திருந்த கதவு... மீண்டும்.. அவசரமாகவே திறந்து கொண்டது... திறந்த கதவுக்கு நேராக இடப்பக்கம் நீட்டிக் கிடந்த கட்டிலில் இருந்து .. திக்கென எழுந்தமர்ந்தார்கள்... விவேக்கும்.. அந்த பெண்ணும்... ...

இருவரும் என்ன செய்வதென்று புரியாமல் பார்க்க... பார்க்க...இருவரையும் மாறி மாறி பார்த்த... அவன்... நொடிக்கும் குறைவான யோசனை கொண்டு..... கையில் வைத்திருந்த பாட்டிலால்... அவளின் மண்டையில் ஓங்கி சலாரென அடித்தான்... அடித்து எடுத்த நொடியில்..உடைந்த பாட்டிலை  விவேக்கின் கழுத்தில் குபுக்கென்று ஏத்தினான்....விவேக்கும் அந்தப்பெண்ணும்.. ஒன்றும் புரிய முற்படாமலே.. ரத்த வெள்ளத்தில் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து சரிந்தார்கள்.... பீறிட்ட  ரத்தம் கண்டு.. பின் வாங்கிய அடித்தவன்... தலையை பிடித்துக் கொண்டு அந்த அறையே சுற்றுவதாக சுற்றினான்.... சுயம் திரும்பிய ஏங்கல் போல... குபுக்கென்று வாந்தி எடுத்தான்....அவன் கோபங்களைப் போலவே சற்று முன் வரை குடித்த மது.. நிறம் மாறி தெறித்தது.... அழுகையை முட்டிக் கொண்டு அடக்கினான்.... பயத்தை முடிந்த மட்டும்... பிதற்றினான்...அறை முழுக்க கத்தும் நிர்வாணங்களை மது கொண்டு தெளித்திருந்த அவன் நடை கடக்கவே முடியாமல் ... சுழன்றது....அவன் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது.. தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டேயிருந்தான்... உற்றுப்பார்க்க முயற்சிக்கும் கண்களில் இரு பிணங்கள் ரத்தம் சொட்டிக் கொண்டேயிருக்க.. டேபிளில் கிடந்த அவளின் புடவையை சட்டென்று எடுத்து கழுத்துக்கு சுருக்கு போட்டு மின்விசிறியில் கட்டி தொங்கி விட்டான்.......கால்கள் உரசும் வலி கொண்ட வழியில்... பல்லைக் கடித்து பல் உடைந்து தெறித்து கீழே சரிந்து கிடக்கும்...அவன் மனைவியின் காலுக்கடியில்... ஒரு முத்தைப் போல.. உருண்டது...பின் அடங்கியது...அந்த அறை.. பிணங்களில்.. நிறைந்தது.......

அப்படி இப்படி என்று கொய்யாப் தோப்பு விட்டு வெளியே ஓடி வந்த வாசு.. சரியாக, எதிரே வந்து கொண்டிருந்த போலிஸ் பைக்கில் மோதி சரிந்து சாய்ந்தான்...

விழுந்தவன் சற்று தன்னை சரி செய்து கொண்டே பின்னோக்கி எழுந்து.. நிற்க முயற்சிக்க..அதற்குள் வண்டியை விட்டு இறங்கிய, பின்னால் அமர்ந்திருத்த போலிஸ்...அவனை உற்றுப் பார்த்தபடியே "டேய் இங்க வா.... குடிச்சிருக்கியா.. குடிச்சிட்டு... இந்த நேரத்துல இங்க என்ன பண்ற..?".என்ற படியே வாசுவின் அருகே போனார்..

நிழலைப் போல விழுந்த கண்கள் திறக்க.... மனதுக்குள் பயம் கொண்டு...படபடப்பும். பரிதவிப்பும்...கலந்து...." சார்.. என் பிரெண்டு...... அங்க..... உள்ள... மாட்டிகிட்டான்... அடிக்கறாங்க சார்.. கொலை பண்ணப் போறேன்னு மிரட்டறாங்க. சார்.. காப்பாத்துங்க.. சார்....'-என்று வாசு தள்ளாடிக் கொண்டு... மிரண்டபடி சொல்ல சொல்லவே...."நான் என்ன கேக்கறேன்.... நீ என்ன உளர்ற..." என்றபடியே பளார் என ஓர்  அறை விட்டார்....அருகே போன போலிஸ்... 

வண்டியியை ஓட்டிக் கொண்டு வந்த சக போலீசிடம்...."சார்... நல்லா குடிச்சிருக்கான் சார்... உளர்றான்...... ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போய்...விடியற வரை ஜட்டியோடு உக்கார வெச்சாதான் சரியாகும் சார்..."என்றபடியே வாசுவின் கழுத்தைப் பிடித்து ஒரு தள்ளு முன்னோக்கி தள்ளினார்... காவல் தெய்வம்....

"அயோ இல்ல ... சார்... உங்களுக்கு புரியல...என் பிரெண்டு... உள்ள மாட்டி....."அவனை அதற்கு மேல் பேச விடாமல்..."அடிங்...... புரியலையா...?யாருக்கு...?" என்றபடியே பைக்கில் உட்கார்ந்திருந்த போலிஸ், உட்கார்ந்தபடியே எட்டி, கையை நீட்டி 'பளார்' என ஒரு அறை விட..தலை சுற்றி கன்னம் ஜிவ்வென்று வீங்குவதை தடவிக் கொண்டே உணர்ந்த வாசு...சொல்லாததையும் மறந்தவன் போல... அழுகை அடக்கினான்...மனதுக்குள் ஒரு வகை இருள் மிதந்தது....இருள் அப்பிய குதர்க்கத்துள்... நிர்வாணம் சுமந்த மனதோடு.. அவனையே நொந்து கொண்டு ஒரு திருட்டுப் பூனையைப் போல குறுகி நின்றான்...வாசு...

போலிஸ் ஸ்டேசனுக்குள்... ஜட்டியோடு உட்கார்ந்திருக்கும் காட்சியை முடிந்தளவுக்கு நினைவுக்குள் கொண்டு வர கூடாது என்று தடுத்த பின்னும் அது அங்கேயே போய் நிற்க... மனதுக்குள் இருந்த திராட்சை தோட்டத்தை இல்லாத நரிகள் கடித்து குதறின.... 

"சார்..  இல்ல சார்.. நிஜமாவே என் பிரெண்டு..."

மீண்டும் விழுந்தது.. அடி.... ஒருவர்.. போனில் பேசிக் கொண்டிருக்க.. ஒருவர். தண்ணீர் குடித்துக் கொண்டே.. அறையை பிசகாமல் கொடுத்தார்....

"நைட் ஒரு மணிக்கு குடிச்சிட்டு நடு ரோட்ல ஓடிகிட்டு திரியற..நாயி, பிரெண்டு.. ஆட்டுக்குட்டின்னு கதை விட்டுகிட்டு இருக்க.. அடிச்சே கொன்னுடுவேன்... மரியாதையா இருக்கறத குடுத்துட்டு ஓடிப் போய்டு....... இல்ல...பின்னால ஜீப் வருது... அள்ளிட்டு போய்டுவாங்க....கிறுக்குப்........."-என்று முடித்தும் முடியாமலும்... பாட்டில் நீர் கொண்டு முகம் கழுவினார்...காவல் தெய்வம்....

அப்போதுதான் புரிந்தது வாசுவுக்கு.... பாரில்... விவேக்கும் தானும்... ஆளுக்கொரு நூறு ரூபாயை போலிசுக்கென்று பின் பாக்கெட்டில் எடுத்து வைத்தது ஞாபகம் வந்தது...வேக வேகமாய் எடுத்து... எட்டாய் மடித்து வைத்திருந்த நூறு ரூபாய் தாளை... பிரித்தும் பிரிக்காமலும் நீட்ட..... சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே....' மரமண்டை...' என்று முணங்கிக் கொண்டு.. "ஓடு... ஓடி போய்டு.....காலைல வந்து கம்ப்ளைன்ட் குடு"-என்று வாங்கிய பணத்தை கசக்கி பேன்ட் பாக்கெட்டில் வைத்தபடியே, வாய்க்குள்ளேயே பேசினார்.. காவல் தெய்வம்... 

காவல் தெய்வத்தை  உற்று பார்த்த வாசு...விழுந்த கண்ணீரைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து... தப்பித்தோம்.. பிழைத்தோம் என்று வேகமாக ஓடினான்...... சற்று முன் நடந்த தள்ளு முல்லுவில், தன்னுடைய செல்போனும்.. எங்கோ விழுந்து விட்டதை மீண்டும் நினைவு படுத்திக் கொண்ட வாசு.."இப்போ..டிவிஎஸ் நகர்க்கு போய்...பிரெண்ட்கிட்ட சொல்லி பசங்கள கூட்டிட்டு வரணும்.. விவேக்குக்கு என்ன ஆச்சுனு தெரியல...அவன காப்பாத்தனும்.... விடியறதுக்குள்ள இந்த பிரச்சனையை சால்வ் பண்ணனும்...... ஓ கடவுளே.. இந்த சனிக்கிழமை இப்படியா இருக்கனும்..."மனதுக்குள் வார்த்தைகள்... பயத்தை நினைவுகளாக விதைத்துக் கொண்டே...இருக்க...,நடந்து கொண்டும்... ஓடிக் கொண்டும்... சுற்றும் முற்றும் பார்த்தான்.... கண்ணில் ஒரு வண்டி..கூட தென்படவில்லை... ஒரு மனித தலை கூட தெரியவில்லை.... அந்த இரவு ஒரு காடு போல.. விரவிக் கிடந்தது....திறந்திருந்தும் கட்டியது போல இருண்டது கண்கள்.... அவமானம்... அசிங்கம்.. பயம்... கொலை மிரட்டல்... இந்த பூமியே அவனை உதறியது போல.. நம்பிக்கை இல்லாத புள்ளியில்... அவன் மட்டும் சுழல்வது போல நுரைத்துக் கொண்டே இருந்த மூளையோடு நடத்து கொண்டே இருந்தான்... 

"டிவிஸ் நகர்...க்கு மீண்டும் கொய்யா தோப்பு வழியாக போக முடியாது.... கவுண்டம் பாளையம் போய்தான் போக முடியும்.. இன்னும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து போவது சத்தியம் இல்லை இப்போது.... பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டைத் தட்டி விட வேண்டியதுதான்.... திருடன் என்று அடிக்க வந்தால்  வந்து விட்டால் என்ன செய்ய"- என்று யோசிக்க யோசிக்க... கடவுள்... வழியைக் காட்டி விட்டார்... சாலையோரம் ஓர் ஆட்டோ ...நின்றிருந்தது....ஆட்டோவைக் கண்ட கண்களில் சிறு பிரகாசம்... வேகமாய் மூச்சிரைக்க அருகில் சென்று உள்ளே பார்த்தான்...வாசு... 

ஆட்டோகாரர்... தலை கவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்....

எழுப்பினான்.. எழுப்பினான்.. எழுப்பினான்.. எழுப்பினான்... 

அதே பாரில் ஓர் ஓரமாய் நின்றபடியே குடித்துக் கொண்டிருந்த ஆட்டோக்காரர்தான்.... அவர்....

எத்தனை எழுப்பியும்... ஆட்டோக்காரரால் எழ முடியவே இல்லை... கெஞ்சிப் பார்த்தான்.. கேட்டுப் பார்த்தான்... சொல்லிப் பார்த்தான்...

அவருக்கு கேட்கவே இல்லை... பிணம் போல தூங்கிக் கொண்டிருந்தார்.....

சட்டென வந்த யோசனைக்கு பின் அந்த ஆட்டோக்காரரை, ஆட்டோவிலிருந்து மெல்ல இழுத்து வெளியே படுக்க வைத்து விட்டு...அவனே ஆட்டோவில் அமர்ந்து ஓட்டத் துவங்கினான்........

ஓட்டி அனுபவமில்லாத வண்டி... அப்படி இப்படி என்று உறுமி.. கத்தி ஒரு வழியாக அலைபாய்ந்து, போக போக..... சற்று குழி போல இருந்த இடது பக்கம் அவனையும் மீறி நுழைந்து விட்டது.. போக, போக இடது பக்கம் முழுக்க கட்டுப்பாடின்றி போய் விட்ட ஆட்டோ எதிலோ ஏறி ஏறி ஏறி..... ஏறி...... ஏறி........இறங்கிக் கொண்டு பின் ஒரு  வழியாக  வலது பக்கம் தடுமாறி கீழிறங்க..அதற்குள்.... உயிர் போகும் ஓலங்கள்... அங்கே, அந்த இடத்தில் காற்றில் கரைய... வண்டியை ஒரு கம்பத்தில் முட்டி நிறுத்தி விட்டு..கவிழ்ந்த  தலையை கஷ்டப்பட்டு மேல் தூக்கி கண்களைத் திறந்து கொண்டு.. கீழே இறங்கி தடுமாறிக் கொண்டே அதே ஆட்டோவில் சரிந்து நின்றபடியே, என்ன நடக்கிறது என்று கவனத்தை குவித்துப் பார்த்தான்... இடது பக்கம்.. சாலையோரத் திண்டில்.. படுத்திருந்த ஒரு குடும்பம்.. கத்திக்கொண்டும்.. செத்துக்கொண்டும் இருந்தது.... அப்போதுதான் உணர்ந்தான்... அந்த, ஏறி..... ஏறி.... ஏறி.....இறங்கியது, தூங்கிக் கொண்டிருந்த உடல்கள் மேல்... ஆட்டோ ஏறி இறங்கியது என்று.....

நெஞ்சில் கை வைத்து கத்திக் கொண்டே சரிந்தான் வாசு... ஒரு குடும்பத்தின் மரண ஓலம்... நிறமற்ற இரவை இருட்டாக்கியது போல...ஓர் அசரீரியாய்.... தெறித்தது.......

அதன் பிறகு, கேஸ்... போலிஸ் ஸ்டேசன்... நண்பன் மரணம்... செய்தி...... விவாதம்... வீட்டில் நிம்மதி இல்லாமை.. மன உளைச்சல்... என்று இந்த இரண்டு வருடங்களில் வாசு...செத்தே போயிருந்தான்..... இன்று உறுதி செய்து கொண்டான்.. அவன் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கும்... அறையில்... ஒரே ஒரு பாட்டிலில்... பாதி மது இன்னமும்... ரத்தமாய்... உறைந்து இருந்தது...ஒரு ரத்தப் பசியைப் போல...

திராட்சை தோட்டம்.. இன்னும் இரவுக்காட்டில் ஒளிந்து கொண்டுதான் இருப்பதாக மஞ்சள் வெளிச்சம்... சொல்லிக் கொண்டே இருக்கிறது.......பசியின் நீட்சியைப் போல...

- கவிஜி 

Pin It