அந்த அறையின் சுவர் முழுவதும் அடர் எண்ணையின் பிசுபிசுப்பு. கிழக்கு மூலையில் ஒரு குருட்டுச் சிலந்தியின் வலை முடியும் தருவாயில் இருந்தது. ஓரே சுற்றுடன் அதன் வீடு இன்றோடு பூர்த்தியாகிவிடும். மூடிய கதவில் தொங்கும் மணிகள் காற்றை எதிர்பார்த்து ஒலி எழுப்பக் காத்திருந்து. பாதி எரிந்து அணைந்த அகல் விளக்குகளின் கருகிய திரியில் இருந்து புகை அந்த அறை முழுவது பரவ என் தோளில் சாற்றிய பூக்களின் மணமும் உடன் சேர்ந்து கொண்டது.

old man 241இன்று ஏனோ காலையிலிருந்து வழக்கத்திற்கு மீறியபடி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக என் தரிசனத்திற்குக் காத்திருந்தார்கள். அனைவரது வேண்டுதல்களும் என் காதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. வேலை தேடும் ஒரு இளைஞன். பற்றாக் குறை பட்ஜெட்டில் குடும்பம் நடத்தப் போராடும் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த ஒருவர். பேத்திக்குத் திருமணம் வேண்டி ஒரு முதியவர். ஜாதிகளைக் கடந்து காதல் திருமணம் புரிந்துகொண்ட இளசுகள். உயிருக்குப் போராடும் தன் தந்தையைக் காப்பாற்ற வேண்டி வந்த ஒரு பெண். எதையும் என்னிடம் வேண்டாமல் கோயிலிற்கு எதிரில் வைத்திருக்கும் பூக்கடையில் வாடிக்கையாளர்களுக்காக காத்துக்கிடக்கும் ஒரு முதியவள்.

கோயில் நடை சார்த்தும் நேரம். ஒரு இளம் பெண் என்னிடம் தவழ்ந்து கொண்டே வந்தாள். வயது சுமார் இருபது இருக்கலாம். வாரத்திற்கு ஒரு தடவையாவது என்னைத் தரிசிக்க அவள் பதிவாக வந்து விடுவாள். கண்களில் நீருடன் என்னிடம் தினமும் மன்றாடுபவள் அன்றைக்கு என்னிடம் எதுவும் வேண்டாமல் சுவற்றைப் பிடித்து நிற்கப் போராடினாள். பல தடவை கீழே விழுந்தும், தொடர்ந்து முயற்சித்தாள். அவள் முகத்தில் இருந்த நம்பிக்கை கோபமாக மாறும் அந்தத் தருணத்தில் நானே சிறிது கலவரம் அடைந்தேன். இறுக்கமான முகத்துடன் மீண்டும் முயற்சித்தாள். இந்தத் தடவை அவளின் பிடிவாதம்தான் அவளைக் காப்பாற்றியது. தூணைப் பிடித்து நின்றவள் மெதுவாக நடந்து என்னிடம் வருவதைப் பார்த்த அர்ச்சகர் உணர்ச்சி வயப்பட்டவராய் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு என் அருகில் அழைத்து வந்தார். கோயிலிற்கு எதிரில் அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த இருந்த அந்தப் பூக்கடைக்கார முதியவள் வேகமாக என்னைக் கடந்து சென்று அந்தப் பெண்ணை கை கூப்பி வணங்கினாள்.

மக்களின் சோகங்களைக் கேட்டறிந்து அதற்கான தீர்வையும் கொடுக்க நான் அதே மக்களால் பணிக்கப்பட்டிருந்தேன். ஒரு புறம் எதிர்பார்ப்புடன் என்னைப் படைத்தவர்கள். மறுபுறம் என்னை நம்பி என் உதவி கோரி வந்தவர்கள். எனக்கு தலையே சுற்றுவது போல இருந்தது. உண்மை நிலையைக் கண்டறிய இன்று ஒரு நாள் இந்த இடத்தைவிட்டு வேளியேறத் தீர்மானித்தேன். எனக்கு அணிவித்த ஆபரணங்களை கழற்றி வைத்துவிட்டு, என் தலையில் கிரீடமாக அணிவித்த அந்தத் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டேன். எட்டு முழ வேட்டியுடன் தோளில் துண்டு. மிகவும் கம்பீரமாக இருந்தது. யாருமறியாதபடி அந்த இடத்தைவிட்டு முதன் முறையாக வெளியேறினேன்.

என்னை முதன் முதலாய் அவர்கள் இங்கு அழைத்து வந்தபோது இங்கிருந்த பசுமை போர்த்திய வயல்கள் மாயமாய் மறைந்து போயிருந்தது. குளம் இருந்த இடத்தில் கண்ணாடி போர்த்திய வடுக்களென தொழில் வளாகங்கள். சாராயக் கடைகள். அடுக்குமனை குடியிருப்புகள். விரைந்து ஓடும் வாகனங்கள். ஒருவாரு நடந்துகொண்டே ஊரின் எல்லையை அடைந்துவிட்டேன். நாங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்ற பாவனையில் சில மரங்கள். அதற்கடுத்து ஒரு பெரிய ஆலமரம். அதன் கீழ் ஒரு சிறுவன் தனியாக ஆடுபுலியாட்டம் விளையாடிக் கொண்டிருந்தான். நான் ஆலமரத் திண்டில் அமர்ந்து அந்த சிறுவனையே கவனித்துக் கொண்டிருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனே ஆடாகவும் புலியாகவும் மாறி மாறி இடத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். என்னக் கண்டவுடன் “என்ன தாத்தா எங்கூட விளையாட வரியா?” என்று உரிமையாக அழைத்தவன் என்னை உடனே புலியாக்கினான். ஆட்ட விதிகளை நான் கேட்க கைகொட்டிச் சிரித்து விளக்கினான். நான் ஒவ்வொரு முறையும் புலியை இழக்கும் போது “என்ன தாத்தா, இப்படி விளையாடுறீங்க” என்று என்னை மறுபடியும் விளையாடச் சொல்லுவான். மூன்று முறையும் சிறுவனை வெற்றிபெறச் செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

விளையாடிக் களைத்த சிறுவன் தன் கால்சிராய்ப் பையில் மடித்து வைத்திருந்த ரொட்டியை எடுத்து எனக்கு பாதியைக் கொடுத்தான். அதையும் அவனுக்கே ஊட்டி விட்டேன். உரிமையுடன் என் மடியில் அமர்ந்துகொண்ட சிறுவன் “யாரு வீட்டுக்கு தாத்தா வந்திருக்கீங்க?” என்று கேட்க பதில் எதுவும் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தேன். தூரத்தே இருக்கும் அந்தச் சேரிப்பகுதியில் அவன் வீட்டைக் காண்பித்தான். “இன்னேரம் அம்மா வேலையிலிருந்து வந்திருக்கும். வீட்டுக்குப் போகனும். உனக்குத்தான் யாருமில்லையே, என்னோட வந்திடேன்” என்று என் இரண்டு கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். அவனை மீறியபடிக்கு என்னால் என் கைகளை உதறிவிட்டு வர முடியவில்லை. அங்கு வந்த அவன் வயதை ஒத்த சில நண்பர்களிடம் என்னை அவனின் தாத்தா என்றே அறிமுகப்படுத்தினான். சிறுவனை சமாதானப்படுத்தி நாளை நிச்சயம் நான் வருவதாக வாக்களித்து விட்டுக் கிளம்பினேன்.

‘இதோ பாருங்க. ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்தாச்சு. இந்த இடம் அரசாங்கத்திற்குச் சொந்தமான இடம். உடனே நீங்க காலி பன்னியே ஆகனும். இது கேர்ட் ஆர்டர்” என்று அந்த பேப்பரை கோயில் நிர்வாகத்தினரிடம் காண்பித்தார் அந்த அரசாங்க உயர் அதிகாரி. கோயில் நிர்வாகத்தினர் மூலவரைக் காணாமல் பதறியபடி கைகளைப் பிசைந்து நிற்க, அங்கு வந்த முதியவர் மூலவரை அரசாங்க அதிகாரிகள்தான் யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூற நிலைமை இன்னும் மோசமானது. ஒரு ராட்சசனைப் போல இருந்த அந்த பொக்லைன் எந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிறு கோயிலை அசுரப் பசியுடன் மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் நான் எவ்வளவுதான் விளக்கினாலும் மக்களோ கோயில் நிர்வாக்த்தினர்களோ துளியும் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான்தான் அவர்களால் படைக்கப்பட்ட கடவுள் என்பதை சாட்சிகளுடன் நிரூபிக்க நானும் தயாராக இல்லை. வேறொரு இடத்தில் மறுபடியும் ஒரு கோயில் நிச்சயம் தோன்றும், மீண்டும் ஒரு கடவுள் படைக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் என் கால்கள் சிறுவனின் வீட்டை நோக்கிப் பயணித்தது.

- பிரேம பிரபா

Pin It