"ஜீவன்...... நேரமாச்சு...."

புத்தக அலமாரியில் குவிந்திருந்த தன் கண்களை மட்டும் திருப்பினான். கவனம் ஏனோ எங்கேயோ கிடந்தது. காது நடங்க... கனவுக்குள் இருந்து வெளி வந்த கற்பனையைப் போல... சிமிட்டிய கண்களைக் கொண்டே பதிலும் கூறினான். மெல்ல அழுந்த மூடியவன் திறக்கையில்..... நீர் ஒழுக.... சிவந்த தீர்க்கத்தின் சுவடென......"வர்றேன்.....போ...." என்பது போல... இருந்தது ஜீவனின் பதில்.. அது பதிலா...இல்லை......மிக நீண்ட கேள்வியின் தொடுக்கு...

ஜீவன்.... அவனின் அறை முழுக்க ஒரு நிழலைப் போல நடந்தான்.... அவனால்... சுமக்க முடியாத சுமையை.. அவனின் யோசனை அவனுக்குள் நிரப்பிக் கொண்டே இருந்தது.  அவனின் புத்தகங்களை..... ஆழமாக பார்க்கத் தோன்றியது....பார்த்தான்.... பிடித்த பக்கம் ஒன்றை புரட்டினான்.... 

"நீலச் சுமையென வானம்... விரிந்து கிடந்தது.... நீளும் சுமையென... அதுவும்... திறந்து கிடந்தது..."

மூடிய புத்தகத்தை தாண்டி.. அவனின் கண்கள்.. பெரும் காடென விரிந்தன...ஜன்னல் திறந்து பின் புற காட்டின் வாசத்தை உள்ளிழுத்து அந்த அறையெங்கும் அலைய விட்டான்.. அது அத்து மீறும் இரண்டாம் சாமக் கற்பனையை ஒத்திருந்தது...

மீண்டும்... அடுத்த அறை  புகுந்தான்...பெரும் மௌனம் அவனை சுற்றி இறைந்து புது வித சப்தங்களை எழுப்பிக் கொண்டே இருப்பதை மிரட்சியோடு.... உணர்ந்தபடியே நடந்து கொண்டிருந்தான்.....

"ஜீவன் நேரமாச்சு"- என்று இம்முறை கூறியது அவனின் அக்கா.. 

"வரேன் போ.."- என்று கை ஜாடையில் கூறி விட்டு.... அந்த வீடு முழுக்க ஒரு முறை நடந்தான்.... அவனுக்கு பிடித்த பாடல் ஒன்றை கேட்டுக் கொண்டே... பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து ஆடினான். அது இயலாமைக் கலவையின்... நிதர்சனத்தை பறை சாற்றுவதாகவே பட்டது.. நிலை இல்லா தேவைகளின் நிழல் மேல் வடியும் பூக்களின் பால்.. கள்ளென புது விதம் சூழ அவன்.. அவனாக தன்னை திரும்ப திரும்ப ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான்......அவனுள் நிரம்பி வழிந்த கேள்விக்கு பதில் தேடும்... முகத்தை ஒரு முறை கண்ணாடியில் ஆசை தீரப் பார்த்துக் கொண்டான்...ஆசை தீருமா என்ன...?

வீடு முழுக்க பேரமைதி... ஆங்காங்கே உறவினர்கள் நண்பர்களா என்று அமைதியின் சுவடுகளென... ஆணி அறையப்பட்ட கடவுள்களென வீற்றிருந்தார்கள்.  பாடுபொருள்.. தந்திரம் செய்கையில்... பேசுபொருள்... மந்திரம் செய்கிறது... யாவும் பொருளே என்றொரு மந்திர தனத்தில் யாவுக்கும் பொருளே என்றொரு தந்திரம்... கை வீசி நடக்கும்.. காட்சிப் பொருளென... அங்கே அந்த வீடு நிரம்பி ததும்பி கிடக்க.. மீண்டும் குரல் எழுப்பியது இம்முறை... மாமா...

"ஜீவன் எல்லாரும் காத்திருட்டுருக்காங்க..... நீ வந்துதான் ஆகணும்... நேரம்.....ஆச்சு...." 

கண்களில் இருந்து சொட்டிய கண்ணீரை துடைக்க மறந்த ஜீவன்....மாமாவை உற்று நோக்கினான்... மாமா.. முகம் திருப்பிக் கொண்டு குலுங்கினார்....

"ஏக்கத்தில் பாதி... தூக்கத்தில் பாதி... போனது போக எது மீதம்... பேதை மனிதனே......"- பாடல்... மெல்ல கசியும்.. சிறுமியின் விசனமென  கசிந்திருக்க.. ஜீவன்.. மெல்ல, பூனையின் மிருதுவான படருதலின் நெளிவு கொண்டு..... வலி சுமந்த ஆட்டுக் குட்டியின்.. மறுதலிப்போடு... ஹாலுக்கு சென்றான்...... அங்கே குழுமிருந்த கூட்டத்தின் நடுவே... மெல்ல... அமர்ந்து படுத்துக் கொண்டான்......பிணமாக...

"நேரம் ஆச்சு.. பாடிய தூக்குங்க"- சத்தம்... மிகக் கோரமாக ஒலிக்கத் துவங்கியது...

- கவிஜி 

Pin It