எங்களின் ஒரே பெண் சுமித்ரா தலைப் பிரசவத்திற்காக நியூஜெர்ஸியிலிருந்து சென்னை வந்திருந்தாள். இது எட்டாவது மாதம். அவள் கணவருக்கு உலக வங்கி நியுயார்க்கில் வேலை.
நான் மூன்று வருடங்களுக்கு முன் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. மிக நேர்மையாக என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு கடமையாற்றியவன். சொந்த வீடு கட்டிக்கொண்டு மனைவி கமலாவுடன் நங்கநல்லூரில் தனி வீட்டில் குடியிருப்பவன். பேரனோ, பேத்தியோ நல்ல படியாக சுமித்ராவுக்கு பிரசவம் முடிந்து அவளை குழந்தையுடன் பத்திரமாக நியூஜெர்ஸிக்கு திருப்பியனுப்பி வைக்க வேண்டியது என்னுடைய தற்போதைய வேண்டுதல். அதற்காக தினமும் காலையில் குளித்தவுடன் நங்கநல்லூர் ஹனுமாரை தரிசித்து வருகிறேன். .
கடந்த தீபாவளி சந்தோஷமாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகுதான் சென்னை நகரில் மழை அதிகரித்தது. நவம்பர் 16 ம் தேதி இரவு இரண்டு மணி. வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததது. கட்டிலைத் தொட்டு என்னை எழுப்பிய மழை நீரைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். உடனே குரல் கொடுத்து கமலாவையும் சுமித்ராவையும் எழுப்பினேன். தலையணைக்கு அடியில் வைக்கப் பட்டிருந்த அவர்களின் மொபைலை கையில் எடுத்துக் கொள்ளச் சொன்னேன். மின்சாரம் வேறு துண்டிக்கப் பட்டிருந்தது. ஒரே இருட்டு மயம். தண்ணீர் சளக் சளக் என அதிகரிக்கும் சப்தம் மட்டுமே கேட்டது. நல்ல வேளையாக பிரிட்ஜின் மீது டார்ச் இருந்ததது. அதன் உதவியுடன் நாங்கள் தட்டு முட்டுச் சாமான்கள் நிறைந்த முதல் மாடிக்குச் சென்றோம். சன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் தெருவை அடைத்துக் கொண்டு தண்ணீர் வேகமாக ஓடியது தெரிந்தது. அந்த இருட்டில் அதைப் பார்த்தபோது பயமாக இருந்தது.
நான் டார்ச்சுடன் கீழே சென்று பார்க்க முயற்சித்தபோது, என்னால் பாதி படிகளுக்கு கீழே இறங்க முடியவில்லை. அதற்குள் பிரிட்ஜ், டி,வி., படுத்திருந்த கட்டில்கள் எல்லாமே தண்ணீரில் மூழ்கிவிட்டன. மறுபடியும் மாடிக்கு வந்து என் மனைவியையும், சுமித்ராவையும் தைரியமாக இருக்கச் சொன்னேன். நான்கு வருடங்களாக அமெரிக்காவில் சொகுசாக இருந்த சுமித்ரா கொசுக்கடியில் மிகவும் கஷ்டப் பட்டாள். உடனே அவள் கணவருடன் செல் போனில் தொடர்பு கொண்டு (அமெரிக்காவில் பகல்) நடப்பவைகளை விவரித்தாள். அவள் கணவர் பயப்படாமல் தைரியமாக இருக்கும்படி சொல்லிவிட்டு, எனக்கும் தைரியம் சொன்னார். மழை வேறு வலுத்தது. நாங்கள் பயத்தில் உறைந்து விட்டோம். விடிவதற்காக காத்திருந்தோம்.
விடிந்ததும் எட்டு பேர் செல்லக் கூடிய ஒரு பெரிய போட் எங்கள் வீட்டருகே வந்து நின்றது. அதை ஓட்டி வந்தவர் வெள்ளைக் குல்லாய் அணிந்திருந்தார். நாங்கள் மூவரும் மார்பளவு தண்ணீரில் மெதுவாக இறங்கி வாசலுக்கு வந்து அதில் ஏறிக் கொண்டு, பக்கத்து வீட்டில் தவித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு அருகே உயரமான இடத்தில் அமைந்திருந்த ஒரு பள்ளி வாசலில் சென்று இறங்கிக் கொண்டோம். அங்கு எங்கள் அனைவருக்கும் சுடச்சுட தேநீர் வழங்கினார்கள். போட் ஓட்டி வந்தவர் பெயர் சலீம் என்றும் அவர் ஒரு முஸ்லீம் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர் என்பதும் எங்களுக்குப் புரிய சுமித்ரா கண்கள் கலங்க அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நன்றி சொன்னாள். சலீம் அடுத்தடுத்து வெள்ளத்தில் சென்று போட் மூலமாக பல குடும்பங்களை பள்ளி வாசலுக்கு மீட்டு வந்தார். சலீம் மட்டும் எங்களை அன்று மீட்காது போயிருந்தால்.... நினைக்கவே குலை நடுங்கியது.
தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த முகமதியர்கள் பலர், சென்னையின் பல இடங்களில் ஏராளமான குடும்பங்களை வெள்ளத்திலிருந்து மீட்டு அருகேயிருந்த பள்ளி வாசல்களில் தங்க வைத்து பாதுகாத்தனர் என்பதை நான் பிறகு அறிந்து நெகிழ்ந்து போனேன். அவர்கள் நன்றியையோ, பாராட்டையோ, எந்தவிதமான பிரதிபலனையோ எதிர்பாராது பொதுமக்களுக்குச் செய்த உதவிகள் காலத்தால் அழியாதவைகள்.
மதியத்திற்கு மேல் அங்கிருந்து குரோம்பேட்டையில் உள்ள என் சகோதரி வீட்டிற்குச் செல்ல சலீம் பெரிதும் உதவினார். பல் தேய்க்காமல், குளிக்காமல், மாற்றுடை ஒன்றும் இல்லாது, பட்டினியுடன்...ஓ காட், மூன்று மணிக்கு என் சகோதரி வீட்டிற்கு சென்றபோதுதான் எங்களுக்கு உயிரே வந்தது.
என் மனைவி பதட்டத்துடன் “வீடு திறந்திருக்கிறது... எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு” என்றாள்.
“அடப் போடி, இப்ப நம்ம வீட்ல எடுக்கறதுக்கு ஒண்ணுமில்ல... டி.வி., பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங் மெஷினெல்லாம் தண்ணீல முங்கிடுச்சு... எவனும் தொடக் கூட மாட்டான். காரை எவனும் கிளப்ப முடியாது. நகைகள், நம்ம மூன்று பேரின் பாஸ்போர்ட் எல்லாமே பாங்க் லாக்கர்ல இருக்கு... லாக்கர் கீ எங்கிட்ட இருக்கு. ஒண்ணும் கவலையே படாதே” என்றேன்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த நான், மனைவியையும், மகளையும் காபந்து செய்ய முடியாத இயலாமையை நினைத்து மனம் வெதும்பினேன். வேதனையும் கோபமும் ஏற்பட்டது. நல்ல வேளையாக அந்த முஸ்லீம் அன்பர் சலீம் வந்தாரோ எங்களுக்கு உதவி கிடைத்தது... உதவி கிடைக்காத அப்பாவி பொது ஜனங்களின் நிலை...?
ஆதம்பாக்கம் ஏரி நிரம்பியதால், அது உடைந்து விடாமல் இருக்க ஏரி நீர் திறந்து விடப்பட்டதென்றும் அதனால் ஏற்கனவே வீட்டினுள்ளே இருந்த மழை நீருடன் சேர்ந்து ஏரி நீரும் சேர்ந்து கொண்டதென்றும் பல இடங்களில் இதுதான் நிலைமை என்றும் பிறகு தெரிந்து கொண்டேன். . மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்து தீர்த்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இயற்கையின் சீற்றம் ஒரு பக்கம் இருந்ததது என்றாலும் தமிழ்நாடு முழுவதும் இருந்த ஆயிரக் கணக்கான ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டதுதான் இந்தப் பேரிடருக்கு பெரும் காரணம் என்று தோன்றியது.
தமிழகத்தில் எந்த ஒரு நகர விரிவாக்கமும் ஏரி, குளங்கள், கண்மாய்களை கபளீகரம் செய்துதான் நடக்கிறது. பதவியில் உள்ளவர்களை பணத்தால் அடித்துவிட்டு, ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்பவர்கள் இவைகளை கூறு போட்டு விற்று செமத்தியாக கல்லா கட்டுகிறார்கள். இது தற்போது மிகப் பெரிய வர்த்தகம்.
ஏரி குளம், கண்மாய்களை குடியிருப்பு காலனிகளாகவும், நகர்களாகவும் மாற்றிவிட்டனர். இவைகள் அரசின் சொத்து. இவைகள் எப்படி ரியல் எஸ்டேட்காரர்களின் கைக்குச் சென்றன? அவைகள் எப்படி வீடுகளாக மாற்றப் பட்டன என்பதற்கு அரசிடம் பதில் கிடையாது. இவற்றை ஆக்கிரமிக்க அனுமதித்த அரசு அலுவலர்கள் மீது இதுவரை எந்தப் புகாரும், விசாரணையும் கிடையாது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிலமை இதுதான்.
வறட்சி, புயல், பூகம்பம், சுனாமி, நில நடுக்கம், அதீத மழை என்று எந்த ஒரு இயற்கைப் பேரிடரிலும் அவதிப்படுவது விளிம்பு நிலை மனிதர்களும், அப்பாவி பொது மக்களும்தான். இந்த மழையினால் உயிர்களை இழந்த குடும்பங்கள், உடமைகளை இழந்த மனிதர்கள், பயிர்களையும், கால் நடைகளையும் இழந்த விவசாயிகளின் நிலைமை எவ்வளவு கொடுமையானது...!
ஒரு ரிடையர்ட் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் எனக்கு நம் ஜனநாயக பாதுகாப்பின் மீதும், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கங்கள் மீதும் மரியாதை குறைந்துகொண்டே வருகிறது.
நம் இந்திய மக்களும் தாவர இன வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எப்படியெனில் நம்மைப் போன்ற சாத்வீகமான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை ‘ஊடு பயிர்’ எனலாம். பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பதுக்கல் வியாபாரிகள், ஓட்டு வாங்கக் கூடிய சினிமா பிரபலங்கள், சாமியார்கள் போன்றவர்கள் அரசாங்கத்தால் போஷித்து பாதுகாக்கப்படும் உண்மையான பயிர்கள். அதாவது அவர்கள் தென்னை மரங்கள்.
பொது ஜனங்களாகிய நாம், பெரிய தோட்டப் பயிர்களுக்கிடையே பயிரிடப்படும் சிறிய பயிர், ஊடு பயிர். அவ்வளவுதான்.
தென்னை மரம் நடவு செய்யப்பட்ட வயல்களில், குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய ஊடுபயிர்களான வெங்காயம், மஞ்சள், தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிடுகின்றனர்.
ஊடு பயிர்கள் செய்ய அடிக்கடி நிலத்தை உழவு செய்வதால், மண் இறுகாமல் இளக்கமாக இருக்கும். அதுபோல் நம் பொதுமக்கள் இணக்கமாக இருக்க பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்படும்.
ஊடுபயிர் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தென்னைமரம் நடவு செய்யப்பட்ட வயல்களில் பல்வேறு ஊடு பயிர் பசுமையாக காட்சியளிக்கிறது. அதுபோல் அப்பாவி பொதுமக்கள் ‘இந்திய ஜனநாயகம்’ என்கிற போர்வையில் பசுமையாக காட்டப் படுகிறார்கள்.
வாழையில் பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி போன்றவைகள் இந்தியாவில் வியாபார ரீதியாகப் பயிரிடப்படும் சில முக்கியமான ஜாதிகள்.
ஜாதிகளைப் பொறுத்து சாகுபடி காலமும் மாறுபடும். அதேபோல் தேர்தல் நெருங்கி வருவதைப் பொறுத்து ஜாதி அரசியலும் தூண்டிவிடப்படும்.
வாழையின் ஜாதிகளைப் போல் - தலித்துகள், வன்னியர்கள், யாதவர்கள், தேவர்கள் என்று இன்னபிற ஜாதிகளையும் பிரித்து அரசியல்வாதிகள் ஓட்டு வியாபாரத்திற்கு, விளிம்பு நிலை மனிதர்களையும் அதற்கும் கீழே உள்ள அப்பாவிகளையும் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தி குளிர் காய்கிறார்கள்.
ஊடு பயிர்களுக்கு முன்னுரிமை கிடையாது. அதுபோலத்தான் இந்திய ஜனநாயகத்தை நம்பிக் கொண்டிருக்கும் நமக்கும்.
நாம் அனைவரும் ஊடு பயிர்தான் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் என் மனதில் தோன்றின...
நம் நினைவில் நிற்கும், ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் சமீபத்திய ஒரு நிகழ்வை நாம் மறக்க முடியுமா...? .
சில வருடங்களுக்கு முன், பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் முதல் மந்திரியாக இருந்தபோது அவர்மீது மாட்டுச் சாண ஊழல் சுமத்தப்பட்டு அவர் பதவியிலிருந்து இறக்கிவிடப் பட்டார். . உடனே அவர் சாமர்த்தியமாக ஒன்றும் தெரியாத தன் அப்பாவி மனைவியை முதலமைச்சராக்கிவிட்டார். ஆறு மாதத்திற்குள் தன் மனைவியை எம்,எல்,ஏ வாக்கி பதவியில் ரெகுலரைஸ் செய்துவிட்டார்.
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட் அவர் இனி தேர்தலில் சில வருடங்களுக்கு நிற்கத் தடை விதித்தது. தான் மட்டும்தானே தேர்தலில் நிற்கக்கூடாது..? மிகச் சமீபத்தில் தன் மகன்களையும், நெருங்கிய உறவினர்களையும் தேர்தலில் நிற்கச் செய்து அவர்களை வெற்றிபெறச் செய்து விட்டார். அவருடைய இளைய மகன் 26 வயதில் தற்போது பீகாரின் உதவி முதலமைச்சர். மூத்த மகன் 28 வயதில் தற்போது சீனியர் அமைச்சர். அவரின் பல நெருங்கிய உறவினர்கள் மற்ற அமைச்சர்கள். பீகாரின் ஆட்சி தற்போது லாலு பிரசாத் கையில். இது எப்படி இருக்கு?
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை லாலு பிரசாத் நகைப்புக்குரியதாக்கி விட்டார்.
ஏனென்றால் அவர் கடைந்தெடுத்த அரசியல்வாதி. தென்னைமரம்.
விஜய் என்கிற ஒருத்தன் வங்கியை ஆயிரக் கணக்கில் ஏமாற்றினால் அவனுக்கு உடனே சிறை வாசம். இவன் ஊடு பயிர். அதே வங்கியை விஜய் மால்யா கோடிக் கணக்கில் ஏமாற்றினாலும் விசாரணை என்கிற பெயரில் பல வருடங்களாக சுதந்திரக் காற்றை சுவாசித்து கடைசியாக தண்டனையிலிருந்து தப்பியும் விடலாம்... ஏனென்றால் அவர் தொழிலதிபர். தென்னை மரம்.
இவைகளெல்லாம் என் மனதில் பட்ட சில உதாரணங்கள் மட்டுமே...
மழையினால் நாங்கள் பட்ட அவதிகளைத் தெரிந்துகொண்ட என் அமேரிக்கா மாப்பிள்ளை மிகவும் கொதித்துப் போனார். சுமித்ராவின் பிரசவம் நியூஜெர்ஸியில்தான் நடக்க வேண்டுமெனவும், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டதாகவும் சொல்லி உடனே கிளம்பி வரச்சொல்லி எங்கள் மூவருக்கும் டிக்கெட் அனுப்பி வைத்தார்.
என்னிடம் பேசியபோது, எனக்கும் என் மனைவிக்கும் க்ரீன் கார்டு ஏற்பாடு செயவதாகச் சொன்னார். நானும் அதற்கு உடனே ஒப்புக் கொண்டேன்.
மாப்பிள்ளை ஏற்கனவே அமெரிக்கன் சிட்டிஸன். சுமித்ரா க்ரீன் கார்டு ஹோல்டர்.
எனக்கும், கமலாவுக்கும் பத்து வருடங்களுக்கான மல்டிபிள் என்ட்ரி விசா ஏற்கனேவே இருந்ததால் நாங்கள் மூவரும் உடனே நியூஜெர்ஸி கிளம்பிச் சென்றோம்.
மாப்பிள்ளை எங்களிடம் மிகவும் கோபத்துடன் ‘இந்தியாவின் டெக்னாலஜி மாற்றங்கள் மிகவும் சோம்பேறித் தனமாக இருப்பதாகவும், பருவ நிலை மாற்றத்தின் தாக்கங்களை நாம் புரிந்துகொள்ள மறுப்பதாகவும், நம் தொழில்நுட்பம் எவ்வளவு புராதனமானது என்பதை அமெரிக்காவின் தொழில் நுட்பத்தை ஆராய்ந்து தெரிந்து கொண்டாலே போதும் என்றும்; நம் ஊரில், ‘தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடர்ந்தோ அல்லது விட்டு விட்டோ கனமழை பெய்யலாம்’ ’ என்கிற பொத்தாம் பொதுவான நகைச்சுவை வானிலை அறிக்கைகள்தான் அதிகம் எனவும், ஆனால் அமெரிக்காவில், ‘கலிபோர்னியா நகரத்தில் மாலை 5.20 முதல் 6.12 மணி வரை எத்தனை மி,மீ மழை பெய்யும், காற்று எவ்வளவு வேகத்தில் அடிக்கும் என்பதை துல்லியமாக சொல்கிறார்களே...! அதெப்படி?’ என்று வெடித்து விட்டார். நான் அமைதியாக அவர் சொன்னதை கேட்டுக் கொண்டேன்.
சுமித்ராவுக்கு பத்தாவது மாதத்தில் புஷ்டியான ஆண் குழந்தை பிறந்தது. நார்மல் டெலிவரி. நங்கநல்லூர் ஹனுமார் அருளால் எனக்கு பேரன் பிறந்து விட்டான்.
அடுத்த பத்து தினங்களில் அமெரிக்காவிலேயே குழந்தைக்கு பெயர் வைத்து புண்ணியாஜனம் செய்தோம்.
சென்னையில் நாங்கள் அனுபவித்த மழைத் துயரங்களை மறந்து, அனைவரும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருந்தோம்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. கமலாவும் நானும் பேரனைக் கொஞ்சிக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை எங்களிடம் வந்து, “மாமா, உங்க ரெண்டு பேருக்கும் க்ரீன் கார்டு அப்ளை பண்ணனும்... இதுல சிக்னச்சர் போட்டுக் கொடுங்க” என்று இரண்டு அரசாங்க படிவங்களை நீட்டினார்.
எனக்கு மனம் ஒப்பவில்லை. வெய்யிலோ, மழையோ, புயலோ என் தமிழகம்தான் எனக்கு சொர்க்கம். நங்கநல்லூர் ஹனுமார்தான் என் ஏகாந்தம்....
“வேண்டாம் மாப்ள...நீங்க அடுத்தவாரம் எங்களுக்கு டிக்கெட் வாங்கிடுங்க,
ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க”
“என்ன சொல்றீங்க மாமா, நீங்கதான க்ரீன் கார்டுக்கு சரின்னு சொன்னீங்க..”
“ஆமா அப்ப கோபத்துல சொன்னேன், மழை நீர் வடிந்த மாதிரி, என் கோபமும் போயிடுச்சு, எங்களுக்கு சென்னைதான் சொர்க்கம் மாப்ள.”
சென்னை வந்தோம்.
அன்று சனிக்கிழமை...நங்கநல்லூர் ஹனுமார் கோவிலுக்குச் சென்றேன்.
அர்ச்சகர் என்னிடம் “உங்க பெண்ணிற்கு என்ன குழந்தை பிறந்தது?” என்றார்.
“பேரக் குழந்தை... அவன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ.”
அர்ச்சனைத் தட்டை என்னிடம் நீட்டி, “பேர், கோத்ரம் சொல்லுங்கோ” என்றார்.
“பேர் சலீம்...கோத்ரம் பரத்வாஜ்.”
“...........”
“என்ன முழிக்கிறேள்... வெள்ளத்திலிருந்து என் குடும்பத்தையே உயிரோட மீட்டுக் கொடுத்தவர்தான் சலீம்.....அந்தப் புண்ணியவான் பேரைத்தான் குழந்தைக்கு வச்சிருக்கோம்.” .
கோவிலுக்கு வெளியே வெய்யில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது.
- எஸ்.கண்ணன்