(அண்மையில் மறைந்த என் அருமை மகள், நான் எழுதும் கதைகளின் முதல் வாசகி - ஜன்னாவிற்காக அவசர அவசரமாக எழுதி சென்னைக்கு காண வந்தேன். ஜன்னா என் வருகைக்காக காத்திருந்தது போல் மாயமாக மறைந்தாள். அவளின் நினைவாகவே இந்த சிறுவர் கதை!)

விண்மீன்கள் வானிலிருந்து பூமியைப் பார்த்தன. அழகிய மலைகளும் தண்ணீர் பிரதேசமும், மணல்மேடுகளும், வெட்டவெளிக் காடுகளும் அவைகளை கவர்ந்தது.

விடிவெள்ளி என்ற விண்மீன் தன் தோழி மச்சவெள்ளி எனும் நட்சத்திரத்திடம் எனக்கு பூமியை அடைந்து அதன் அழகில் புரண்டு எங்கும் ஓடி ஆடி கொஞ்ச நாளாவது வாழவேண்டும் என்றது.

vidivelliஅதைப் போலவே எரி நட்சத்திரமாக ஒரு மலை அடிவாரத்தில் விழுந்தது. பூமியில் விழுந்ததும் அது சிறு கல்லாக மாறிவிட்டது. அதனிடம் அதன் ஒளி இல்லை. விடிவெள்ளி அழுதது. அதன் அழுகை காடு முழுவதும் எதிரொலித்தது. இந்த ஒலியை காட்டில் தவமிருந்த வாராக முனிவர் கேட்டார். பூமியைப் பிளந்து கொண்டு விடிவெள்ளி கிடக்கும் இடத்திற்கு சென்று கல்லாகக் கிடக்கும் விடிவெள்ளியை அழகிய பெண்ணாக மாற்றினார். அவள் முனிவருக்கு நன்றி சொல்லி காட்டில் நடக்கலானாள்.

மரங்களும் மலர்களில் வாழும் வண்டுகளும் பறவைகளும் இசைபாடின. தான் நினைத்தது போலவே இந்த உலகம் அழகானதென்று மேலும் நடக்கலானாள். அவள் கால்களில் இரவின் பனித்துளிகள் சிக்கித் தவித்தது.

பொழுது விடிந்தது. இரவின் அழகை விட பகல்பொழுது இன்னும் அழகாகத் தோன்றியது. மிருகங்கள், பறவைகள், சிறுபூச்சிகள், காட்டின் அமைதி – இரைச்சல், அருவிகளின் சாரல் இவைகள் எல்லாம் அவளுக்கு புதுமையாக இருந்தது.

“தான் பிறந்தது முதல் அசையாது ஒளி வீசிக்கொண்டே இருந்தோம்” எதற்காக என்று யோசித்தாள். அப்பொழுது மின்மினிப் பூச்சி ஒன்று அவளை கடந்து பறந்து சென்றது. பகலில் அதன் ஒளி தெரியாது. அது சிறிய வகை வண்டினத்தைச் சேர்ந்தது. அதன் உடல் நீல நிறமாகவும் கழுத்தில் சிறு மஞ்சள் கோடும், அதன் சிறகுகள் வெள்ளையாகவும் சொரசொரப்பாகவும் இருந்தது.

மின்மினி பூச்சி விடிவெள்ளியைப் பார்த்ததும் அவளிடம் வந்தது. “பெண்ணே இந்தக் காட்டில் எங்கு செல்கிறாய்?” என்றது. நம்மிடம் பேசிய முதல் ஜீவன் இதுதான் என்று நினைத்த விடிவெள்ளி மின்மினியிடம் தெரியாது என்றாள். “நீ யார்?” என்றது மின்மினி. “நான் விடிவெள்ளி” என்றாள்.

அப்படியென்றால்?

அதிகாலைப் பொழுதை என்னைக் கண்டுதான் – விடியப்போகிறது என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்றது. அப்படியா என்று ஆச்சரியத்துடன் மின்மினி கேட்டது. இப்படி பெண்ணாகத்தான் விண்வெளியில் இருந்தாயா என்று மின்மினி கேட்க ‘இல்லை வெறும் ஒளி மட்டுமே நான். பூமியில் எரி நட்சத்திரமாக வந்தேன். கீழே வந்ததும் கல்லாக மாறிப்போனேன். ஆபத்தைக் கண்டு அழுதேன். வராக முனிவர் என்னை காப்பாற்றி இந்த உருவம் கொடுத்தார்”.

“எரி நட்சத்திரமாக மாறினேன் என்றாயே எப்படி?” என்றது மின்மினி. எங்கள் விண்மீன்கள் சில விழும் போது எரி நட்சத்திரம் என்றுதான் பெயர். அவைகள் கல்லாகப் போகும் என்பது எனக்குத் தெரியாது.

பூமியில் நீ விழுந்ததும் உனக்கு அழுகைதான் முதல் அனுபவம் என்றது மின்மினி. உண்மைதான் எல்லா உயிரினங்களும் பிறக்கும் பொழுது கண்ணீர் அல்லது அழுகையோடுதான் இந்த பூமியில் வரவேண்டும் என்றது விடிவெள்ளி. மின்மினி “ஆமாம் நீ கூறுவது உண்மைதான்” என்றது.

பறவைகள் முட்டையைவிட்டு வெளிவந்ததும் கீச் கீச் என்று பயத்தில் அழுகும். மிருகங்கள் தாயின் வயிற்றில் இருந்து வெளியேறியதும் கத்தும் – அழும். தாவரங்கள் பூமியை பிளந்து கொண்டு வரும் பொழுது சிறு முனகலோடு வெளிவந்து முளைக்கும். அவைகளின் சத்தங்கள் வெளியே கேட்காது. நான் கூட இப்படித்தான் சில சப்தத்தோடு முட்டையிலிருந்து வந்திருப்பேன் என்றது மின்மினி.

விடிவெள்ளி கேட்டது, “இத்தனை பேசும் வண்டே நீ யார்?” என்றது.

“நான் மின்மினிப் பூச்சி” என்றது. “இரவில் சிறுசிறு தீப்பொறி வெளிச்சமாக காடெல்லாம் மின்னும்” என்றது.

“இந்த காட்டின் வெளிச்சம் நாங்கள்தான். நீல இரவின் நிழலை நாங்கள்தான் களைத்து இங்குள்ள உயிரினங்களுக்கு வெளிச்சம் தருகிறோம்“ என்றது.

“இப்போது உன் வெளிச்சம் எங்கே” என்றது விடிவெள்ளி. “பகலில் என்னிடம் வெளிச்சம் வராது. இரவில்தான் என் உடலில் வெளிச்சம் தெரியும். உங்கள் விண்மீன்கள் கூட்டம் பகலில் தெரியாது அதைப்போலத்தான்”.

“ஆமாம் நீ சொல்வது உண்மைதான். விண்ணில் எந்த நட்சத்திரமும் இல்லை.” இருவரும் காட்டில் பேசிக்கொண்டே சென்றார்கள்.

“உன்னை தொட்டு பிடித்துக் கொள்ளவா?” என்றது விடிவெள்ளி.

“வேண்டாம்... என் உடலின் வெப்பம் உன் கையை சுட்டுவிடும்” என்றது மின்மினி. “அப்படித்தான் என்னைப் பிடித்து அழகுப்பார்க்க முயன்றவர்கள் கைகள் காயமானதைப் பார்த்திருக்கிறேன்” என்றது.

விடிவெள்ளி ஆச்சர்யமாக மின்மினியைத் தொடர்ந்து நடந்தாள்.

மின்மினி கேட்டது, “விடியலை நீ இல்லாத பொழுது யார் உணர்த்துவார்கள்?” என்று.

சரிதான் யார் இதைச் செய்வார்கள்?

“எங்கள் விண்மீன்கள் யாராவது அங்கு வரமாட்டார்களா? எனக்கு அந்த நினைவில்லையே...” என்றது.

“அவரவர் அவர்களின் கடமையை செய்ய வேண்டும். இந்த பூமியின் வாயில் நீதான் பிறகுதான் சூரியன். இப்படி நீ வரலாமா?” என்றது மின்மினி.

திடுக்கிட்டு விடிவெள்ளி நின்றுவிட்டது. இந்த விசயம் எனக்கு ஏன் தெரியாமல் போனது? எனக்கு இப்படி மோசமான அலட்சியம் எப்படி வந்தது?

மீண்டும் மின்மினி “உங்கள் விண்மீன்களில் செட்டிகுடி கெடுத்தான் என்ற விண்மீன் இருக்கிறது தெரியுமா?” என்றது.

விடிவெள்ளி மின்மினி பேசுவதைக் கேட்டாலும் எதிரே படர்ந்திருந்த கொடிகள் எழுந்து அவர்களை நோக்கி வேகமாகப் படர்ந்து வருவதைக் கண்டு திடுக்கிட்டு நின்றது. மின்மினியும் அந்த கொடிகளை பார்த்து விட்டது. ‘விடிவெள்ளி ஓடிவிடு இந்த இடத்தை விட்டு’ என்று கீச்சிட்டது.

ஆனால் கொடிகள் அதற்குள் விடிவெள்ளியைச் சுற்றி படர்ந்து அதை மறைத்து இழுத்தன. மின்மினி தப்பித்து பயத்தோடு அங்குமிங்கும் கீச்சிட்டுக்கொண்டே ஓடியது.

அப்பொழுது ஓர் அதியசம் நடந்தது. விடிவெள்ளியை வளைத்த கொடிகள் சுக்கு நூறாக அறுந்து விழுந்தது. விடிவெள்ளி அதிலிருந்து அதே அழகிய பெண்ணாக வெளிவந்தது. மின்மினி மகிழ்ச்சியில் ஓடி விடிவெள்ளி கன்னத்தில் கொஞ்சியது.

“எப்படி அந்த கொடிகளிலிருந்து தப்பித்தாய்? அவைகள் ஆள் முழுங்கிக் கொடிகள். அந்த கொடிகளில் சிக்கிய எந்த உயிரும் தப்பிப்பதேயில்லை” என்று உற்சாகமாக கீச்சிட்டது மின்மினி.

“என் உடல் கற்களைப் போல இருப்பதால் இருக்கலாம் அல்லது ஏதாவது சக்தியாவது கூட இருக்கலாம்” என்று தோளை ஒய்யாரமாக குலுக்கிக் கொண்டே சொன்னது விடிவெள்ளி.

மின்மினி விடிவெள்ளியின் சக்தியாக இருக்கலாம் என நினைத்தது.

காட்டின் அமைதி தீடீரென்று கலைந்தது. காற்றுச் சுழல் வட்டமாக சுற்றிக்கொண்டே, காய்ந்த இலை தழைகளை அவர்கள் மேல்வீசிச் சென்றது.

தூரத்தில் பருத்த உயர்ந்த மரங்களை சுற்றி மரங்கொத்தி பறவைகள் கூட்டமாக பறந்து வந்தது. அதன் அழகைக் கண்டு விடிவெள்ளி மயங்கி பார்த்துக் கொண்டே நடந்தாள். அவைகள் தன் அலகால் மரத்தை கொத்தி சிறு பூச்சிகளை தின்றுக்கொண்டிருந்தது.

மின்மினி பூச்சி மீண்டும் செட்டிகுடிகெடுத்தான் நட்சத்திரத்தைப் பற்றி ஆரம்பித்தது.

ஒரு காலத்தில் வணிகர்கள் கப்பலில் பலநாடுகள் சென்று வியாபாரம் செய்தார்கள். அவர்களுக்கு வழிகாட்டிகள் நட்சத்திரங்களும் சூரியனும்தான்.

விண்ணிலிருந்து ஒரு நட்சத்திரம் நடு இரவில் விடியற்காலை பொழுதை காண்பிப்பதுபோல் கிழக்கில் வந்து அமர்ந்துக் கொண்டது. அதை அறியாத வியாபாரி பொழுது விடியப்போகிறது என நினைத்து கப்பலில் பயணமாயினான். இரவில் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும். அதனால் கப்பல் கடலில் மூழ்கியது.

அந்த காலத்தில் அதிகமாக கடல் வாணிபம் நடந்ததால் வாணிபர்களை செட்டியார் என்றே அழைப்பார்கள். அந்த நட்சத்திரம் திடீரென்று நடுஇரவில் முளைத்து உன்னைப்போலவே ஒளி வீசும். அதற்கு செட்டிகுடி கெடுத்த நட்சத்திரம் என்று அழைப்பார்கள் என்றது.

விடிவெள்ளிக்கு இந்த செய்தியும் அதிசயமாக இருந்தது. நட்சத்திரமாகிய நாங்கள் கூட்ட கூட்டமாகவும் இருப்போம். தனியாகவும் இருப்போம். ‘விடிவது போல் தோன்றுவது எல்லாம் விடிவது அல்ல. விடியல் தோன்றும் அதுவரை காத்திருப்பதுதானே நல்லது’ என்றது விடிவெள்ளி.

மின்மினி ஓத்துக் கொண்டது. எங்கோ மிருகங்களின் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருந்தது.

இரவு வந்தது. மின்மினி பூச்சியிலிருந்து அழகான வெளிச்சம் மின்னி மின்னி மறைந்தது. காடெங்கும் ஆயிரக்கணக்கான மின்மினிபூச்சிகள் பறந்து இருளை கிழித்து ஒளி வீசிப் பறந்து கொண்டேயிருந்தது. விடிவெள்ளி தன் பயணத்தை முடித்துக் கொள்ள நினைத்து கண்மூடி வராக முனிவரை தியானித்தது. முனிவர் அதன் முன் தோன்றினார்.

“ஐயா நான் மீண்டும் வானத்திற்கு செல்ல அருள் புரிய வேண்டும். என் சுய ஆசையால் இப்படி வந்து விட்டேன். என் கடமையைச் செய்ய அருள் புரிய வேண்டும்” என்றது. முனிவர் ஆசிர்வதித்தார்.

விடிவெள்ளி வானத்தைப் பார்த்தது. ஆயிரக்கணக்கான விண்மீன்கள் சிரித்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

விடிவெள்ளி இடம் வானில் வெற்றிடமாயிருப்பதைப் பார்த்தது.

மின்மினி விடிவெள்ளியின் முகத்தருகே ரீங்காரம் செய்தபடி வந்தது.

விடிவெள்ளி “மின்மினியே... என் அருமை சிநேகிதியே... உன்னிடமிருந்து அறிவு ஒளி பெற்று விடை பெறுகிறேன். இனி நான் விண்வெளியிலிருந்து ஒளி வீசிக் கொண்டிருப்பேன். நீ பூமியிலிருந்து ஒளிவீசுவாய். நாம் இருவரும் இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருவரும் கைகுலுக்கிக் கொள்வோம்” என்றது.

மின்மினி கண்களால் விடை கொடுத்தது. விடி வெள்ளி வானத்தை நோக்கிச் சென்றது.

- தோழர் ம.இலட்சுமி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர், “லட்சுமி என்ற பயணி” நூலின் ஆசிரியர்).

Pin It