சித்தேரிக் குளத்தின் மேலண்டையும், வடவண்டையும் வயக்காட்டு கோட்டவம் தான். கீழண்டையிலிருந்து கிளம்பும் கப்பி சாலை குளத்தை ஒட்டி வளைந்து தெற்காக செல்லும். அங்கிருந்துதான் குளத்தில் சாகசம் புரியும் சிறுவர்கள் பெரியவர்களின் அதட்டலையும், எச்சரிக்கையையும் காதில் போடாமல் தொபுக்கடீர் என்று பாய்வதும், பிறகு நீந்தி வந்து மறுபடியும் குளத்துக்குள் குதிப்பதுமாக இருப்பார்கள். வளைவில் ஒரு ஆத்துப் பூவரசு அதுதான் பாதாசாரிகள், மற்றும் தொலைவிலிருந்து வரும் மாட்டுவண்டிகள் இளைப்பாறி செல்லுமிடம். அப்படி ஓய்வெடுப்பவர்கள், குளத்துள் இறங்கி முகம் கழுவி, இரண்டொரு கைகள் நீரை அள்ளி குடித்து, நீரில் சிறிது நின்று, கால் நனைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலேறுவார்கள்.

lake 506

கீழண்டையில் இருந்து எங்கள் டவுசர் பட்டாளம் கிளம்பி வந்தென்றால், குளியலில் இருக்கும் பெருசுகளும், சற்று தள்ளி வடவண்டை பெண்கள் பக்கமிருந்தும் ஏசல்கள் குளத்து சிறுமீன் கூட்டம் போல பிலு பிலுக்கும். நாங்கள் அதற்குள் நீரில் விழுந்து நடு குளத்திற்கு சென்றிருப்போம். நாங்கள் என்றால் நான், சின்னையன், தங்கராசு, மொக்கையன் என்று பலரும். இதுவரையிலான கதை என்பது ஊரில் வளர்ந்த நம் எல்லோருக்கும் பொதுவான பால்ய கால நிகழ்வுகளாகத்தான் இருக்க முடியும், இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா?. இருக்கிறது. குளத்தின் வடமேற்கில் பொன்னையா ஆசாரியின் வீடும் அதை ஒட்டி ஒரு சிறு பட்டறையும் இருக்கிறது பாருங்கள், இதுதான் உங்கள் கதையில் இல்லாதது. கேள்விப்படாதது. அதைத்தான் இப்போது சொல்லப் போகிறேன். நடு குளத்திலிருந்து மேற்கில் கரையேறினால், பட்டறை வாசலில் தண்ணீர் சொட்ட எழுந்து நிற்கலாம். அந்தி சாயும் நேரம் என்றால் அவரது ஒரே மகள் தனது சிறு தோட்டத்து செடிகளுக்கு குளத்திலிருந்து நீர் மொண்டு விடுவதையும், சிறு பூக்கள் பறிப்பதையும் தொலைவு நீச்சலிலேயே கண்டுவிடலாம்.

பள்ளி விடுமுறை நாளில் கரைநீந்தி ஆசாரிப்பட்டறையில் ஆஜராகி விடுவோம். பொன்னையா நல்ல கை வேலைக்காரர். அவரது கை, கழுத்து நரம்புகள் புடைக்க இழைப்புளி வைத்து இழுப்பதும், உளிவைத்து செதுக்குவதுமாக ஓய்வற்று இயங்கும். அருகில் மரச்சுருள்கள் மலைபோல குவிந்திருக்கும். அவரது ஒல்லி பிச்சான் உடம்பிலிருந்து எப்படி இத்தனை அசுர பலம் வருகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். எங்களுக்கும் அவருக்குமான பழக்கம் எப்படியோ ஏற்பட்டிருந்தது. முக்கியமாக அவரது பட்டறைகளுக்கு வரும் மரங்கள் கோட்டவத்தை சுற்றி வர வேண்டியிருக்கும், பார வண்டி வரவேண்டுமானால் நாத்து நடவு இல்லாத காலத்திலேதான் வரப்பு தாண்டி வரமுடியும். வரப்பும் கரைந்து சின்னதாக இருக்கும். சில வண்டிகள் எரு அடிக்கும் காலத்தில் அதற்குள்ளாக வருவதுண்டு. மாடுகள் மரமேற்றி நுரைதள்ளும் என்பதால் வண்டிக்காரர்கள் அதில் வரத் தயங்குவார்கள். அப்படியே ஏற்றி வந்தாலும் மரத்தின் விலையில் பாதி கேட்பார்கள். இதனால் பட்டறைக்கு வரும் மரங்கள் அலுத்துக் கொண்டு நேரே முத்துப்பேட்டை ரோட்டில் ஏறி வேறு, வேறு பட்டறைகளுக்குப் போய்விடும்.

இதுக்கு ஒரு மாற்றாகத்தான் பொன்னையா ஒரு கட்டுமரப் பரிசல் ஒன்றை செய்து வைத்திருந்தார். அதை அப்படியும் சொல்லிவிட முடியாது. நல்ல தில்லை மரங்களை கயிற்றில் பிணைத்து குளத்தில் கிழக்குப் பக்கம் ஆத்து பூவரசில் கட்டியிருப்பார். மரங்கள் கொண்டுவருவோர் அந்த மரப்பாயில் தமது மரங்களை அடுக்கி நீரில் தள்ளிக் கொண்டு போனால் மரப் பட்டறைக்கு எளிதாக கொண்டுபோய் சேர்க்கலாம், பொருளாக செய்து எடுத்து வருவதற்கும் அதுதான் குறுக்கு வழி.

விடுமுறை நாட்களில் எங்கள் குளியல், சாப்பாடு மறந்து மணிக்கணக்காக நீளும். அப்போது பூவரசு மரத்தடியில் வண்டி நிறுத்தி வந்து இறங்கும் மரங்களைப் பார்த்ததுமே எங்களுக்கு துள்ளாட்டம் கிளம்பிவிடும். மரங்கள் ஒவ்வொன்றாக ஆட்கள் இறக்கி பரிசலில் வைத்ததுமே, நாங்கள் ‘அய்லேசா ஏலேலா அய்லேசா’ போட்டு ஆசாரி பட்டறையில் கொண்டுபோய் சேர்த்துவிடுவோம். குளத்தின் நடுவில் வைத்து மரப்பாயை ஒரு சுற்று சுற்றுவதும், மேலேறி நின்று நீருக்குள் குட்டிக்கரணம் போடுவதுமாய் கும்மாளமிட்டு ஒரு வழியாய் கரை சேர்ப்போம். எங்கள் குதியாளத்தைப் பார்த்துவிட்டு ஒரோர் நேரத்தில் கரை நின்று பொன்னையா சத்தம் போடுவார்;  கல்லெடுத்து வீசுவார். ஆனால் நாங்கள் மரங்களை கரையில் கொண்டு வந்து சேர்த்ததுமே அந்த கோபம் வடிந்துபோயிருக்கும்.

சொட்ட சொட்ட நனைந்த எங்களுக்கு அவர் ஆசையாய் வளர்க்கும் விளா மரத்திலிருந்து பழங்கள் கொடுப்பார். அப்போதெல்லாம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவரும் அவரது மகளின் கண்கள் எங்களை நன்றியுடன் நோக்கும். நாங்கள் விளாம்பளத்தோடும், பொன்னையா மகளின் நன்றி மிகுந்த விழிகளோடும் கரை திரும்புவோம்.

இதற்கிடையே எங்கள் பரிவாரத்தில் மாதவனும் இணைந்திருந்தான். மாதவன் நல்ல சிவப்பாக நெடுநெடுவென்று எங்களிலும் பார்க்க உயரமாக இருப்பான். எங்களுக்கு நான்கைந்து வயது மூத்தவனும் கூட. அவன் எங்கள் ஊர் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டரின் மகன். ஊருக்குப் புதிது; எங்கள் பள்ளித் தோழனும் கூட. அப்போதெல்லாம் வசதியான வீட்டுப் பிள்ளைகள் கூட அரசுப் பள்ளியில்தான் படித்தார்கள். நாங்கள் எல்லோரும் அரைக்கால் டவுசர் போட்டிருக்க, அவன் முழுக்கால் டவுசர் போட்டிருந்தான். அவன் டவுனில் படித்தவன். வேலை மாறுதல் காரணமாக அவனது அப்பாவுடனும், குடும்பத்தினருடனும் இங்கு வந்துவிட்டான். அவர்களது ரெயில்வே குடியிருப்பும் எங்கள் தெருவிற்கு பக்கத்தில்தான் இருந்தது. முதன்முதலில் குளத்தில் இறங்கவே பயப்பட்டவனுக்கு நாங்கள்தான் நீச்சல் கற்றுக் கொடுத்து, பொன்னையா ஆசாரியையும் அறிமுகப்படுத்தி வைத்தோம். இழைப்புளி, செதுக்குபுளி என்பதையெல்லாம் அவன் அப்போதுதான் முதன்முதலாக பார்ப்பதாகத் தோன்றியது. மரப்பலகைக்கு தூரடிக்கும் ஆணியை, கைசுற்றி நாங்கள் இழுப்பதை வேடிக்கையாகப் பார்த்து அதுபோல செய்ய முயல்வான். அப்போதெல்லாம் அவனை செய்ய வேண்டாம் என்று கறாராக பொன்னையா தடுத்துவிடுவார். ‘சீமைக்கார புள்ளை… படாத எடத்துல பட்டுவிடும்’ என்பார்.

பொன்னையா ஆசாரிக்கு ஒரு உதவியாளன் இருந்தான் அவன் ஆசாரிக்கு தூரத்து உறவுக்காரனும் கூட. சதா எந்நேரமும் பட்டை சாராயத்திலேயே மிதப்பான். அதை குடிக்காவிட்டால் அவன் இழைப்புளியை, பொன்னையாவின் தொடையில் இழுத்துவிடுவான். அத்தனை கைநடுங்கும். தொழில் சுத்தம் பார்க்கும் பொன்யைா நெத்தி நிறைய விபூதி பட்டை போட்டு பட்டறைக்கு வருவார். அவனோ சாராயப்பட்டை போட்டிருப்பான். அவனோடு மல்லுக்கு நிற்க முடியாதாகையால், அவனை கைநடுக்கம்போக அவராகவே பட்டைபோடச் சொல்லி அனுப்பிவிடுவார். அவன் ஆசாரியின் மகளுக்கு முறையும் ஆவான். அவனை, அவளுக்கு மணம்முடிக்கும் யோசனையும் கூட இருந்ததாகச் சொல்லலாம். அதனால்தான் அவர் அவனை எங்கும் துரத்திவிட முடியாமல் இருந்தார். பொன்னையா மகள் வாய்பேச இயலாதவள் என்பது மாதவனுக்கே நீண்ட நாளுக்குப் பிறகுதான் தெரியும். மாதவன் அவளுக்கு பெங்களுர் பூச்செடி விதைகள் சில கொடுத்தான். அன்றைக்கெலாம் அவள் விழிகள் விரிய அதை வாங்கிக் கொண்டாள்.

ஒரு நாள் எங்கள் பட்டாளத்தை முன்னால் அனுப்பிவிட்டு மாதவனைத் தேடி அவன் வீட்டிற்குப் போனேன். அவன் வீட்டில் இல்லை என்று அவனது தங்கை இராஜகுமாரி சொன்னாள். நாங்கள் போனபோது அவன் குளித்துவிட்டு கரையேறியிருந்தான். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. வேலை இருக்கு பிறகு பார்க்கிறேன் என்று அவன் எங்கள் பதிலுக்கு காத்திராமல் விறுவிறு என்று போய்விட்டான். அதன் பிறகு அவனை நாங்கள் குளக்கரையில் ஒருபோதும் பார்க்கவில்லை. அவனுக்கு என்ன ஆயிற்று என்று குழம்பிப் போயிருந்த எங்களுக்கு அந்த அதிர்ச்சியான செய்தி வந்து சேர்ந்தது. மாதவன் குளத்தில் பிணமாக மிதப்பதாக யாரோ வந்து சொன்னதுதான் தாமதம் நண்பர்களுடன் சித்தேரி கரைக்கு ஓடினேன்.

கேள்விப்பட்டது உண்மைதானா என்று குளிரில் விறைத்த என் உடம்பு மேலும் நடுங்கியது. வெளிச்சம் பரவாத அந்த விடிபொழுதிலேயே பலரும் கூடியிருந்தார்கள். நண்பன் ஒருவனின் கையை பதட்டமாகப் பிடித்துக் கொண்டே கூட்டத்தை விலக்கி ஒருவரின் இடுப்பின் இடைவெளியூடாக பார்த்த காட்சி... ஒரு குவளை நீரிலும் தோன்றி நினைவுப் படுத்துவதாகிவிட்டது. நான் முதலில் பார்த்தது மாதவனை அல்ல. பொன்னையா ஆசாரியின் வாய்பேசாத மகளை. அவள் உடுத்தயிருந்த வெள்ளை நிற தாவணி ஈரம் வடிய லேசாக வெளிறிய உப்பின உடம்பை ஆத்துப் பூவரசின் அடியில் கிடத்தியிருந்தார்கள் மாதவன் கரையினில் இல்லை. நீருக்குள் தனது வழக்கமான முழுக்கால் சட்டையில் பொன்னையா ஆசாரியின் பாய்மரத்தை பிடித்தவாறு இறந்திருந்தான். அவனது கைகளை மரத்திலிருந்து பிய்த்தெடுப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

கேள்விப்பட்டு ஓடிவந்த அவனது தாய் அவனுக்கு வலிப்பு வரும் என்று சொல்லி அழுதாள். இதற்குள் பொன்னையாவும், அவனது கையாளும் வந்திருந்தனர். என்ன நடந்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சாயபு கடைக்கு தாமரை இலை போடும் சோமுதான் பிறகொருநாள் சொன்னான். பின்னிரவு நேரம் டயர் டியூப்பை இடுப்பில் மாட்டிக் கொண்டு அவன் இலை பறித்துக் கொண்டு இருக்கும்போது நீருக்குள் பெரிய சலுப்பு கேட்டதாம். “பெரிய வாளை துள்ளுதுன்னு நெனைச்சேன் பெரிய புள்ள.. பனிவேறயா கண்ணுக்கு ஒரே பொக மூட்டம்.. எதுத்த கரையில யாரோ நின்னு கையை ஆட்டுறது போல தெரிஞ்சது.. பெறகு அதும் சல்லுன்னு குளத்தாள பாஞ்சுது.. காத்து கருப்பு ஏதும் இருக்குமோன்னு திரும்பி பாக்காம நானும் பயத்தால விடுவிடுன்னு ஏறி கரைக்கு வந்துட்டேன்!. கடைசில பார்த்த பொன்னையாண்னே பொண்ணுன்னு தெரியாமபோச்சே!” என்றான்.

சின்னையன் யூகித்தவாறு வேறொன்றை சொன்னான். “டேய் மாப்ள! மாதவன் கரைக்கு திரும்பறப்ப சரியான மூடுபனி. நல்ல மூடுல திரும்புன நம்ம மாதவன் அத கவனிக்கல. அமுக்குவான்ல அல்லது நீர் சுழில மாட்டி வலிப்பு வந்திருக்கனும், பொன்னையா ஆசாரி மக கரையில நின்று இத கவனிச்சிருக்கனும், அவ வாய்பேச வராததால கைகால எழுப்பி சத்தம்போட்டிருப்பா. யதேச்சையா பரிசல் மரம் இருந்தததைப் பார்த்து அதை இழுத்து அவன்கிட்ட சேக்கறதுக்காக இவளும் தண்ணிக்குள்ளாக குதிச்சிருக்கனும்!”

“எல்லாம் சரிடா மாதவனுக்கு மரப்பட்டறையில அந்த நேரத்தில என்ன வேலடா இருக்க முடியும்?!” இது மொக்கையன்.

நான் அன்றொருநாள் மாதவனைத் தேடி அவன் வீட்டிற்குப் போனபோது அவனது தங்கை இராஜகுமாரிதான் வந்து பதில் சொன்னாள், அவளது ஜடையில் வெள்ளை செண்டுப் பூ இருந்தது. அபூர்வமான அந்த வெள்ளை நிறத்தை நான் வேறெங்கோ பார்த்தாக நினைவுக்கு வந்தது. அது பொன்னையா ஆசாரி மகள் தோட்டத்தில்தான் பூத்திருந்ததாக நினைவு. அது மட்டுமல்ல அன்றைக்கு, பொன்னையா மகளை கரையில் கிடத்தியபோது சித்தேரிக் குளத்தின் நடுவே ஒரே மாதிரியாகத் தொடுக்கப்பட்ட வெள்ளை செண்டுப் பூ மிதந்து கொண்டிருந்தது. பிறகும் கூட காய்ந்து கரை ஒதுங்கியிருந்தது. அது ஆசாரி மகள் கடைசியாக தனது கூந்தலில் பெருவிருப்போடு வைத்திருந்தாக இருக்கலாம்.

- இரா. மோகன்ராஜன்

Pin It