வேலை முடித்து அசதியோடு வீடு திரும்பிய சுந்தரத்திற்கு, மூலையில் முடங்கிக்கிடந்த மகள் வேணியை பார்த்ததும் சுருக்கென்றது மனதுக்கு.

lady sadகல்யாணம் செய்து வைத்த ஆறு மாதத்தில் மகள் இப்படி வந்து கிடப்பது இது ஐந்தாவது தடவை.

பெத்த மனம் வலிக்கத்தானே செய்யும். சுந்தரத்திற்கும் வலித்தது. அத்தோடு வேணியின் கணவன் மீது சொல்லில் அடங்காத கோவமும் எழுந்தது. கோவப்பட்டு என்ன செய்ய மகள் வாழ்க்கை வீணாப் போகுமே என்கிற எண்ணம் வந்ததும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டார்.

கைகால் முகம் கழுவி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், மனைவி லட்சுமியை அழைத்து விசாரிக்கத் தொடங்கினார்.

"இந்த வாட்டி என்ன பிரச்சனையாம்? ஏன் பிள்ள இப்படி கண்ண கசக்கிட்டு கெடக்கு" என்றார்.

முட்டிய கண்ணீரை துடைத்துக்கொண்டே லட்சுமி பதில் சொல்லத் தொடங்கினாள். "மாப்பிள்ளைக்கு கல்யாணத்தப்ப சொன்னபடி இன்னும் செயினும் மோதிரமும் எடுத்துக் கொடுக்கலயாம். அதான் போடி ஒங்கப்பன் வீட்டுக்குன்னு பிள்ளய அடிச்சி அனுப்பி இருக்கான் பாவிப்பய" என்று சுருக்கமாக சொல்லி முடித்தாள் லட்சுமி.

ஒவ்வொரு முறை வரும் போதும் மகள் ஒரு காரணத்தோடே வந்தாள். முதல் தடவை மாப்பிள்ளைக்கு வாங்கித் தருவதாகச் சொன்ன பைக்கிற்க்காகவும், இரண்டாம் முறை சீர்வரிசையில் விட்டுப்போன கட்டில் மெத்தைக்காகவும், இப்படி ஒவ்வொரு முறையும் அவள் வருவதற்கு காரணமிருந்தது.

மாப்பிள்ளை பார்க்கும் படலம் முடிந்து, வரதட்சணை பற்றிய பேச்சு கிளம்பும் போதே தெளிவாகச் சொல்லி இருந்தார் சுந்தரம். 'பொண்ணுக்கு பத்து பவுன் நகை போடுறேன். மாப்பிள்ளைக்கு ரெண்டு பவுன்ல செயினும் மோதிரமும் போடுறேன். மாப்பிள்ளைக்கான நகைகளை மட்டும் ஆறுமாசத்துக்குள்ள எடுத்து குடுத்துடுறேன்' என்றார்.

வேணி பார்ப்பதற்கு மூக்கும் முழியுமாக கண்ணுக்கு லட்சணமாக இருக்கவும் எல்லாத்துக்கும் அப்போது ஒத்துக்கொண்டான் மாப்பிள்ளை. புதுமாப்பிள்ளை மோகம் குறையவும் நகைகளைக் கேட்டும் பணம் கேட்டும் நச்சரிக்கத் தொடங்கிவிட்டான் மாப்பிள்ளை. சும்மாவெல்லாம் கேட்பதில்லை, அடி உதைதான்.

பார்த்து பார்த்து கட்டிவைத்த வாழ்க்கை இப்படியா போகனும் என தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் மனைவி லட்சுமி.

என்ன செய்வதென்றே தெரியவில்லை சுந்தரத்திற்கு. அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் பியூனாக இருக்கிறான். குறைவான சம்பளம் தான். லட்சுமியும் அவள் பங்கிற்கு அப்பள கம்பெனியில் வாரச் சம்பளத்திற்கு அப்பளம் போட்டாள்.

இருவரும் சேர்ந்து சம்பாதித்த பணம் மகளை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கவும், கொஞ்சம் நகை சேர்க்கவுமே சரியாப்போனது. கல்யாண செலவிற்குக் கூட லட்ச ரூபாய் அஞ்சுவட்டிக்கு கடன் பட்டுத்தான் வாங்கினார்கள். இந்த ஆறு மாசத்தில் வட்டி குட்டி போட்டதே தவிர அசலை அடைக்கும் வழியே இல்லாமல் போனது. இந்த நிலையில் எங்கிருந்து மருமகனுக்கு செயினும் மோதிரமும் போடுவது?

கலங்கிப் போனான் சுந்தரம். மகளின் முகத்தில் எப்படி முழிப்பது என்றே தெரியவில்லை அவனுக்கு. அவளும் இவன் முகத்தில் முழிப்பதேயில்லை.

மகளின் வாழ்க்கையை கெடுத்துட்டமே என்ற கவலை சுந்தரத்திற்கும், தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை கெடுத்தது மட்டுமல்லாமல் இப்படி பணவெறி பிடித்த மோசமானவனுக்கு கட்டிக் கொடுத்துவிட்டாரே என்கிற கவலையும் கோபமும் வேணி மனதிற்குள்ளும் இருந்தது.

வேணி கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போதே சீனியர் மாணவன் வேலுமீது காதல் கொண்டாள். வேலுவும் இவள் மீது மிகுந்த காதலோடே இருந்தான். அவளுக்காகவே படிப்பு முடிந்த மூன்றாம் நாளே வேலை தேடிக்கொண்டான். வேலையில் இருந்துகொண்டே போட்டித் தேர்வுகளுக்கு படித்து அதில் தேர்ச்சியும் பெற்று அரசு அலுவலராகவும் ஆகிவிட்டான். அதற்குள் வாணியும் இறுதி ஆண்டு படிப்பை முடித்திருந்தாள்

வாணியின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கவே வேலுவிடம் விசயத்தைச் சொன்னாள். தன் அப்பாவிடம் வந்து பேசும்படியும் அரசு வேலையில் வேலு இருப்பதால் ஒத்துக் கொள்ளக்கூடும் என்றும் கூறினாள்.

ஆனாலும் வேலுவுக்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அவன் வேணியிடம் சொன்னான். "இங்கே பாரு வேணி என்னதான் நான் கவர்மெண்ட் ஸ்டாப்பா இருந்தாலும், கை நிறைய சம்பாதிச்சாலும் நான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன். நீ மேல் சாதி. கண்டிப்பாக உங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்க. அவங்க ஒத்துக்க நினச்சாலும் கூட உங்க சொந்தக்காரனுக விடமாட்டானுக. போயும் போயும் எஸ்சி பையனா மாப்பிள்ளை என கேலி பேசியே கெடுத்துடுவானுக. அதனால நான் சொல்றதக் கேளு, வா போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். ஆறு மாசமோ ஒரு வருசமோ கழிச்சு ஏத்துக்கிடாமலா போய்டுவாங்க உங்க வீட்ல. ஒனக்கு சரின்னா சொல்லு நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்" என மன்றாடிப் பார்த்தான் வேலு.

வேணி தான் கேட்கவில்லை. "எங்கப்பா ஒன்னும் சாதிவெறியன் கிடையாது. உங்க சாதி ஆட்கள் எங்கப்பாக்கு நிறைய பேர் ப்ரண்ட்ஸா இருக்காங்க. எனக்காக எதையும் செய்வார். நானும் பேசுறேன். நீயும் அவங்க ஆபீஸ்ல போய் பேசிப்பாரு ஒத்துக்கிடுவார்" என நம்பிக்கையோடு சொன்னாள்.

யோசித்துப் பார்த்த வேலு சொன்னான் "சரி வேணி உனக்காக பேசுறேன். ஒருவேளை அவர் ஒத்துக்காட்டி நான் சொன்னபடி ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்" என்றான். அவளும் சிரித்துக்கொண்டே சரி என்றாள்.

வேணி ஒரு வெள்ளிக்கிழமை நாளில் தன் அப்பாவிடம் மெல்லச் சொன்னாள் "அப்பா உங்களைப் பாக்க வேலுன்னு ஒருத்தர் உங்க ஆபிஸ்க்கு வருவார். அவர்ட்ட கொஞ்சம் டைம் ஒதுக்கி பேசுங்கப்பா" என்றாள்.

என்ன ஏதுவென்று புரியாத சுந்தரம் குழப்பத்தோடே சரியென்று தலையாட்டிவிட்டுச் சென்றார். வேலுவுக்கு போன் செய்து பேசினாள் வேணி.

"வேலு அப்பாட்ட மேலோட்டமா சொல்லி இருக்கேன். இன்னைக்குப் போய் பாத்து பேசுங்க" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

வேலுவும் அவள் பேச்சைத் தட்டாமல் மதிய உணவுவேளையில் சுந்தரத்தை அவர் அலுவலகத்தில் போய் சந்தித்தான்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். வேணியை விரும்பும் விசயத்தையும் தன் சாதியையும் மெல்லச் சொன்னான். சாதியைக் கேட்டதும் அதிர்ந்து போன சுந்தரம் ஆபிஸ் என்பதால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார்.

கடைசியாக இப்படி சொல்லி முடித்தான், "சார் எனக்கு பணம் நகை எதுவும் வேண்டாம். என்னோட சம்பாத்தியமே போதும். நல்லபடியாக வச்சி உங்க பொண்ண காப்பாத்துவேன். வீட்டுக்கு ஒரே பையன் நானு. எம் பேச்ச எங்க அம்மா அப்பா தட்டமாட்டாங்க சார். கல்யாண செலவையும் நானே பாத்துக்கிறேன் சார். நல்ல முடிவாச் சொல்லுங்க சார்" என்று முடித்தான்.

கோபத்தை அடக்கிக் கொண்டிருந்த சுந்தரத்தின் வார்த்தைகள் நெருப்பாய் வந்து விழுந்தது.

"தம்பி நீங்க இப்ப கை நிறைய சம்பாதிக்கலாம், வசதியோட இருக்கலாம் ஆனா சாதின்னு ஒன்னு இருக்குள்ள, அத மாத்திட முடியுமா?. ஆயிரம் வசதியோட இருந்தாலும் நீங்க கீழ்சாதிதான், எதுவும் இல்லாட்டினாலும் நாங்க மேல் சாதி தம்பி. அது மாறாது தம்பி. ஒரு காலத்துல எங்கள் வீட்டுல கஞ்சி வாங்கி குடிச்ச சாதிதான் உங்க சாதி. இன்னைக்கி வசதி வந்திடுச்சின்னு பொண்ணு கேட்டு வரும் அளவுக்கு வளந்துட்டீங்க. எம் பொண்ணும் விரும்பிட்டாலேன்னு தான் சும்மா விடுறேன். இனிமேல் இப்படி பேசிட்டு வந்தீங்கன்ன மரியாதை இல்ல.. போய்டுங்க" என்று பேசி அடிக்காத குறையாக விரட்டியடித்தார் வேலுவை.

வேதனையோடு வெளியேறிய வேலு போனில் எல்லா விசயத்தையும் வேணியிடம் சொன்னான். "கிளம்பி வா பாத்துக்கலாம்" என்றும் சொன்னான்.

"அப்பாவிடம் நான் பேசி புரிய வைக்கிறேன்" என்றாள் வேணி. கோபத்தோடு "இனி உன் இஷ்டம்" என்று சொல்லி போனை அணைத்தான் வேலு.

வேலை முடித்து வீட்டிற்கு வந்து சுந்தரம் மகளை கூப்பிட்டுப் பேசினார்.

"என்னம்மா இப்படி பண்ணிட்ட? போயும் போயும் ஒரு ஈனசாதிப் பயதான் கிடச்சானா உனக்கு? இது ஊருக்குள்ள தெரிஞ்சா நான் தலை நிமிந்து நடக்க முடியுமாம்மா?" என சொல்லி தேம்பி அழுதார் சுந்தரம். அத்தோடு தற்கொலை செய்துகொள்வதாக நாடகம் ஆடி பாசக்கயிற்றில் கட்டிபோட்டார் வேணியை.

அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்து, கல்யாணமும் செய்து வைத்தார். அப்படி அவசரமாக செய்த கல்யாணம் தான் இன்றைக்கு கழுத்தை அறுக்கும் கயிறானது சுந்தரத்திற்கும் வேணிக்கும்.

சாதி பாத்து மகள் ஆசைப்பட்ட வாழ்க்கையும் கெடுத்து, பெத்தமகள பாழும் கெணத்துல தள்ளிட்டமே என்று சுந்தரமும், 'அப்பவே வான்னு கூப்பிட்டானே அப்பாவுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய வாழ்க்கையை தொலச்சிட்டோமே' என்று வேணியும் தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தனர்.

இது ஏதும் புரியாமல் 'ஜாதகம் கணிச்சது தான் சரியில்லாமல் போச்சோ' என்று எண்ணித் தவித்து, நல்ல ஜோசியக்காரனாக பாத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே மகளின் தலையை கோதிக்கொண்டே அழுதபடி படுத்திருந்தாள் லட்சுமி.

Pin It