“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப..? எந்திரிச்சு போய் படும்மா..”

மகள் பர்வீனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமலேயே குத்துக்கல் போல அமர்ந்திருந்தாள் சாஜிதா. இரண்டு மணிநேரமாய் அதே திண்ணையில் தான் அமர்ந்திருக்கிறாள். வழக்கத்துக்கு மாறாக சாஜிதாவின் முகம் பேயறைந்தது போல இருந்தது. கன்னங்கள் கந்திப்போய் கருத்திருந்தது. உண்மையில் பேய் தான் அறைந்துவிட்டது. சாஜிதாவின் கணவன் பஷீருடன் நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்கியிருந்தான் பஷீர். வீட்டுக்கு வெளியே திண்ணையில் கலைந்த தலைமுடியுடன் கலங்கிய கண்களுடன் அலங்கோலமாய் அமர்ந்திருந்தாள் சாஜிதா. பஷீர் அடித்ததில் பல் குத்தியதில் மேல் உதட்டில் ஆழமாக காயமாகியிருந்தது. அதிலிருந்து உதிரம் கசிந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது சேலைத்தலைப்பால் அதைத் துடைத்துக்கொண்டு இருந்தாள்.

பர்வீனுக்குத்தான் மனசே இல்லை. ’ச்சே… எப்படித்தான் அம்மா இந்த மனுசனோட இவ்வளவு காலம் வாழ்ந்து தொலைச்சாளோ’ என்று நினைத்துக் கொண்டாள். என்னவோ எதிரிய அடிக்கிற மாதிரி அடிக்கிறாரு இந்த மனுசன். தல முடிய இறுக்கிப் பிடிச்சுட்டு நாக்கக் கடிச்சுட்டு மூஞ்சி மூஞ்சியா தொம்மு தொம்முனு குத்தறாரு. தடுக்கப்போன என்னையும் ஒதச்சு கீழ தள்ளிவிட்டுட்டாரு.. கோவம் வந்தா இந்த மனுசனும் மசநாயும் ஒன்னு… ஊருக்குள்ள நல்லவராட்டம் வேசம் போடறது. மொஹல்லாவுல முக்கியமான மனுசன். அஞ்சுவேள தொழுகையாளி, இபாதத்தான மனுசன்னு பேரு.. பொழுது விடிஞ்சா ஊருக்கெல்லாம் பயான் சொல்லப் போயர்றது.. ஆனா வீட்டுக்குள்ள இருக்கறவங்களுக்குதான தெரியும் இந்த மனுசனோட உண்மையான மொகம். வாயத்தொறந்தா அந்த மோளே இந்த மோளேன்னு வண்டி வண்டியா கெட்டவார்த்த வேற நாராசமா வந்து விழும். எதுத்து ஒரு வார்த்த பேசிட்டா நாய அடிக்கிற மாதிரி அடிப்பாரு. நெஜமா இந்தாளு மனுசனே இல்ல.. மிருகம்.

அம்மா பாவம்… சத்தம்போட்டு கத்துனா பக்கத்து வீட்டுக்காரங்களுக்கெல்லாம் தெரிஞ்சு மானம் போயிடும்னு சத்தமே இல்லாம அடிவாங்கியே சாகுது.. எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து அந்த மனுசனும் மாறவே இல்ல. அம்மாவும் அடிவாங்கி ஒதவாங்கி, அசிங்கசிங்கமா பேச்சு வாங்கியே காலந்தள்ளுது. இந்த முசீபத்து என்னிக்குதான் தீருமோ..? அல்லாதாங் காப்பாத்தனும்..’ என்னென்னவோ யோசனைகளுடன் திண்ணையில் அமர்ந்திருந்த சாஜிதாவின் அருகில் சென்று அமர்ந்தாள். அவளைத் திரும்பியே பார்க்காமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தாள் சாஜிதா.

நீளமான காம்பவுண்டு வீடு. இடப்பக்கம் ஐந்து வீடுகள் வலப்பக்கம் ஐந்து வீடுகள். நடுவே ஐந்தடி அகலத்திற்கு குறுகலான கான்கிரீட் போடப்பட்ட நடைபாதை. வெளியே இரண்டடி அகலத்திற்கு நீளமான திண்ணை. வலப்பக்கம் மூன்றாவது வீட்டில் சாஜிதா வாடகைக்கு குடியிருக்கிறாள். பத்துக்குப் பத்து அளவுள்ள ஒரு அறையும் அதைத் தொட்டதுபோல பத்துக்கு ஆறு அளவுள்ள சமையலறையும் கொண்ட சிறிய வீடுகள் கொண்ட காம்பவுண்டு அது. ஆனால் வாடகை இரண்டாயிரத்து நூறு ரூபாய். கரண்ட் பில், தண்ணீர் காசு என கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதம் பிறந்தால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வேன்டும். திருப்பூர் நகரப்பகுதியில் உழைக்கும் மக்களின் ஊதியத்தில் பாதியை வாடகையே களவாடி விடுகிறது. அதுபோக வாரவட்டிக்காரனுக்கு, மாசவட்டிக்காரனுக்கு, மளிகைக்கட கணக்கு, நல்லது கெட்டதுக்கு போக வர செலவு, பர்வீனோட காலேஜு செலவு எல்லாஞ் சேர்த்தா மாசம் ஏழெட்டாயிரம் இருந்தாத்தான் சமாளிக்க முடியும். பசீர் வாரம் ஆயிரம் ரூபாய் மட்டும் வீட்டுக்கு கொடுப்பான். பத்தாத குறைக்கு சாஜிதாதான் சமாளிக்கனும்.

அதுவும் வீட்டுல சும்மா இருக்கிறதில்ல, தெரு முனைல இருக்கிற ஒரு கம்பெனில இருந்து பனியன் பீசுகள மூட்டை கட்டி கொண்டுவந்து கொடுப்பாங்க. அதுகள பிசிர் வெட்டி மடிச்சு கட்டி பாலிதீன் கவர்ல போட்டு பேக்கிங் பண்ணிக்கொடுத்தா டஜனுக்கு அம்பது பைசா கெடைக்கும். எப்படியும் தெனமும் நாப்பது அம்பது டஜன் பிசிர் வெட்டி இருபது முப்பது சம்பாதிச்சுடும். அதுபோக பூ கட்டறது, எம்பிராய்டரிங் போட்டுத் தர்றது. துணிகள்ல பாசிமணி கோர்க்கறதுன்னு எதாவது வேல செஞ்சு மாசம் ரெண்டாயிரம் ரூபா சம்பாதிச்சுடும். ஆனா என்ன அந்தக் காசுக்கு நைட்டும் பகலும் தூக்கமில்லாம, சோருதண்ணியில்லாம பாடுபடும். அப்படி அரக்கப் பறக்கப் பாடுபட்டும் அவங்களோட தலீந்தராகி தீந்தபாடு இல்ல, சாஜிதாவுக்கு முதுகெலும்பு தேஞ்சுபோய் நோயாளியானதுதான் மிச்சம்.முதுகுவலியோடவே போராடி காலத்த தள்ளிட்டு இருக்கு. போதாததுக்கு இந்த மனுசனோட அடி ஒத.. அப்படியே காலம் ஓடுது.

சாஜிதாவுக்கு பர்வீன நெனச்சுதான் எப்பவுமே கவலை. ‘வயசுவந்த கொமரு வீட்ல இருக்கு. அத நெனச்சா நைட்டு கண்ணமூடி தூங்க முடியல. இந்த வருசத்தோட காலேஜு முடிஞ்சிரும். அவளுக்கு ஒரு நல்லது கெட்டது பண்ணிப் பாக்கலாம்னா வீட்ல பொட்டுத் தங்கமும் இல்ல. அவளுக்கும் வயசு ஏறிட்டே போகுது. போனவருசமே பி.காம் முடிச்சுட்டா, கட்டிக்கொடுத்திடலாம்னு ஆசதான். பணம் வேனுமே.. என்ன பன்றதுன்னு கைய பெசஞ்சுட்டி நின்னப்ப, ’அம்மா நாம் பி.எட் பன்றம்மா..’ ன்னு சொன்னிச்சு. அப்படியாவது ரெண்டு வருசம் தள்ளிப் போகட்டுமே, அதுக்குள்ள அல்லா ஒரு வழி காட்டாமலா போயிருவான்னு சரின்னு அனுப்பி வெச்சாச்சு. கண்ணமூடி முழிக்கறதுக்குள்ள ஒரு வருசம் முடிஞ்சுபோச்சு. இதுவரைக்கும் ஒரு வழியுங் காணோம்.

இந்த மனுசனுக்கு வீட்ல கொமரு இருக்கிற நெனப்பே இல்ல. வாரம் ஆயிர ரூபா வீசியெறிஞ்சுட்டா கடம முடிஞ்சதுன்னு நெனச்சுட்டு இருக்குறார். அம்பது வயச முழுங்கியாச்சு, இன்னும் விதவிதமா அலங்காரம் பண்ணிட்டு திரியுது, மனசுக்குள்ள எளங்காளனு நெனப்பு. யாரு எப்படிப்போனா எனக்கென்னன்னு அதுபாட்டுக்கு சுத்திட்டு இருக்குது. மனுசனுக்கு குடும்பத்துமேல ஒரு புடிப்பே இல்ல.

பஷீருக்கு தெரியாம வாயக்கட்டி வயித்தக்கட்டி ஒரு அம்பதாயிரம் ரூபாய் சீட்டு போட்டிருந்தா சாஜிதா. போனவாரம் சீட்டு விழுந்துச்சு. கமிசன் பணம் போக நப்பதாயிரத்தி சொச்ச ரூபாய் கைக்கு வந்துச்சு. அத வெச்சு பர்வீனுக்கு ஒன்ற பவுன்ல தோடு ஜிமிக்கி ஒரு செட் எடுத்தறனும்னு ஈமானோட இருந்தா சாஜிதா. இத எப்படியோ மோப்பம்பிடிச்சுட்ட பஷீரு, அந்த பணத்தக் கேக்கப்போய் வீட்ல பெரிய சண்டை. தரமாட்டேனு மொரண்டு புடுச்சு சாஜிதாவ அடிச்சு ஒதச்சு அந்தப் பணத்த பிடுங்கிட்டுப்போய் பழைய மொபெட்ட குடுத்துட்டு புதுசா ஒரு வண்டி வாங்கிட்டு வந்துட்டார். கைனடிக் ஹோண்டா. இப்ப ரொம்ப முக்கியம்.

இப்படியெல்லாம் பண்றதால பஷீருக்கு வருமானம் இல்லைனு நெனச்சராதீங்க. யேவாரத்துல அது சரியான மலமுழுங்கி. கருங்கல்லக்கூட தங்கம்னு சொல்லி வித்துப்புடுவாரு. பேங்களூரு போயி சேலைகள வாங்கிட்டு வந்து இங்க கடனுக்கு கொடுத்து வியாபாரம் பன்னுறாரு. நல்ல வருமானம் கெடைக்கற தொழில் தான். எப்படியும் வாரத்துக்கு நாலஞ்சாயிரத்துக்கு கொறையாம வசூலாகும். அதுபோக பக்ரீத்து, பெருநாள் இப்படி எதாவது சீசன் யேவாரம் வரும்போது லம்ப்பா ஒரு அமௌண்ட பாத்துடுவாரு. ஆனாலும் எவ்வளவுதான் சம்பாதிச்சாலும் வீட்டுக்கு வாரம் ஆயிரம் ரூபாய் தான். இத்தனைக்கும் பீடி சிகரெட், தண்ணிகிண்ணி எந்தப் பழக்கமும் இல்ல. குடும்பத்துக்கு சோத்துக்கு இருக்குதோ இல்லையொ விதவிதமா டிரஸ் பண்ணிக்குவாரு, கண்ணுக்கு சுருமா, தாடிக்கு மருதாணி, உடுப்புக்கு அத்தர் பூசிட்டு நவாபு சுல்த்தான் கணக்கா சும்மா கமகமான்னுதான் சுத்துவாரு. நல்லபடியா பேசியும் பாத்தாச்சு, சண்டைபோட்டும் பாத்தாச்சு, அழுது புலம்பியும் பாத்தாச்சு ஒன்னும் வேலைக்காகல அந்த மனுசங்கிட்ட. அடிவாங்கி அடிவாங்கி ஒடம்பும் மனசும் மரத்துப்போனதுதான் மிச்சம். “நான் என்ன நெனைக்கிறனோ அதத்தான் செய்வேனு” மல்லுக்கட்டிக்கிட்டு திரியிற மனுசங்கிட்ட இதுக்குமேல என்ன பண்றதுனு சடஞ்சுபோய் விட்டுருச்சு சாஜிதா. இதுக்கு மேல அல்லா விட்ட வழின்னு அதுபாட்டுக்கு அதோட வேலைகளப் பாக்க ஆரம்பிச்சுருச்சு.

அப்புறம் அந்தப் பணமெல்லாம் எங்கதான் போகுதுனு கேக்கறீங்களா..? ரொம்பநாளா அதே சந்தேகந்தான் சாஜிதாவுக்கும் மனசப்போட்டு கயிராட்டம் அறுத்துக்கிட்டு இருக்கு. இந்த மனுசன் சீட்டுகீட்டு ஆடுறாரா, இல்ல எதாவது தொடுப்புகிடுப்பு இருக்குதானு ரொம்பநாளா சந்தேகம்.. பேங்களூருக்கு சரக்கு வாங்க போற எடத்துல ஏதோ ஒரு பொம்பளயோட சகவாசம் இருக்குங்கிற விசயம் சாடமாடையா தெரியவந்துச்சு. வியாபாரத்துக்கு கூடப்போகிற மைதீன் பாய் ‘பாத்து சூதானமா இருந்துக்கம்மா, பஷீர்பாய் போக்கே சரியில்லனு நாலஞ்சு மாசம் முன்னமே எச்சரிக்கை கொடுத்திருந்தாரு. அது போனமாசந்தான் அப்பட்டமா தெரிஞ்சது.

போனமாசத்துல ஒருநாள் பர்வீனுக்கு காலேஜ் டெர்ம் பீஸ் கட்டலன்னு வெளிய நிக்க வெச்சுட்டாங்களாம். வீட்லவந்து சொல்லிட்டு ஓ….னு அழுதுச்சு. கம்பெனியில நாலாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டிருந்த பணம் இன்னும் கைக்குவந்து சேரல. காலேஜ்ல போய் நிர்வாகிககிட்ட விசயத்த சொல்லி கைலகால்ல விழுந்து அடுத்தவாரம் கண்டிசனா கட்டிர்றோம்னு கெஞ்சிக் கூத்தாடி டைம் வாங்கிட்டு பர்வீனும் சாஜிதாவும் வீட்டுக்கு வந்தாங்க. வீட்டுக்குள்ள இருந்த பஷீர் யார்கிட்டயோ போன்ல பேசிட்டிருக்கிற சத்தம் கேட்டுச்சு. பர்வீனு சாஜிதாவோட கையப்புடிச்சு அழுத்தி அங்கேயே நிக்கவெச்சா. உள்ள யார்கிட்ட என்னதான் பேசறார்னு வெளிய அமைதியா நின்னு கேட்டாங்க ரெண்டுபேரும்.

“ளா.. நீ ஒன்னுங் கவலப்படாத.. பெருநா வரைக்கும் பொருத்துக்க, கண்டிப்பா நான் ஒன்ன நிக்கா பண்ணி இங்கயே கூட்டிட்டு வந்தர்றேன்.”

“………………………”

“அவளப்பத்தி நீ ஒன்னுங் கொழப்பிக்காதளா.., நாஞ்சொன்னா அவ மறுத்துப் பேசமாட்டா.. அதையும் மீறி பேசுனா அவளுக ரெண்டுபேரையும் முடுக்கிவிட்டுட்டு நான் ஒன்ன சேத்திக்கறேன்..”

“………………”

“அல்லா சத்தியமா சொல்றேம்ளா.. எனக்கு ஒன்னவிட வேற யாரும் முக்கியமில்ல.. புரிஞ்சுதா..?”

வெளியில் நின்று இந்த வார்த்தைகளைக் கேட்ட பர்வீனும், சாஜிதாவும் நொறுங்கிப் போனார்கள். அன்று வீட்டில் பயங்கர சண்டை. வாக்குவாதம் பெருகி சாஜிதாவின் இடுப்பில் பஷீர் எட்டி மிதித்ததில் சுருண்டு விழுந்தவள் மயக்கமாகிப் போனாள். ஏற்கனவே நேரம்காலம் பார்க்காமல் உக்கார்ந்து வேலை செய்ததில் தேய்ந்துபோயிருந்த இடுப்பு எலும்பு லேசான விரிசல் விட்டுப்பானது. ஆஸ்பத்திரியில் சேர்த்து ரெண்டுவாரம் ஓய்வுக்குப் பின்னால்தான் சாஜிதாவால் நடக்கவே முடிந்தது. அதிலிருந்து சாஜிதா பஷீரிடம் பேசுவதில்லை. பர்வீனும்தான். அப்படியே காலம் கடந்தது. எல்லாருக்கும்தான் தெரிந்துவிட்டதே இனி என்ன பயம் என்று பஷீர் இப்போதெல்லாம் அடிக்கடி பேங்களூர் செல்லத் துவங்கினான். கேள்விகேட்க ஆளில்லாமல் அவிழ்த்துவிட்ட கழுதைபோல அவன் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருந்தது.

’அடிக்கடி சண்டைபோட்டு இந்த விசயம் அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சா, மானம் மரியாதையெல்லாம் போயிடும் அப்புறம் கொமர கட்டிக்க யாரு வருவா..?’ என்ற கவலை சாஜிதாவின் மனதைப் பிசைந்துகொண்டே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வரன்கள் வருவதும் போவதுமாக இருந்தது. பொண்ணப்பத்தி ஒரு கொற சொல்ல முடியாது. அப்சரஸ் மாதிரி இருக்கிற புள்ளைய யாருக்குதான் பிடிக்காது..? பிரச்சனை என்னன்னா, பதினைந்து பவுன், இருபது பவுன் என்ற பேரங்கள் படியாமல் ஒவ்வொன்றும் தவறிக்கொண்டு இருந்தது. ராவும் பகலுமா அழுதழுது கேட்ட சாஜிதாவின் துவா வீண் போகல. அல்லாவோட கிருபைல ஒரு நல்ல வரன் கைகூடி வந்துச்சு.

அதே தெருவுல இருக்கிற ஒரு பையன் பாஷித். சவுதியில வேலைபார்க்கிறான். நல்ல அழகான பையன். கைநிறைய சம்பளம். ரெண்டுமாச லீவுல போனவாரம்தான் ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு பர்வீன புடிச்சுப்போய் அவங்க வீட்ல சொல்லியிருக்கான். அந்தப் பையனோட பெத்தவங்க நேத்து சாயந்திரம் பர்வீனப் பொண்ணு பாக்க வந்தாங்க. அவங்களுக்கும் பர்வீனத் தெரியும் என்பதால ஒன்னும் அதிகமா பேசல.

“எங்க பையன் ஆசப்பட்டுட்டான், பர்வீன நாங்க கொழந்தைல இருந்து பாக்குறோம். நல்ல தங்கமான பொண்ணு. அல்லாவோட கிருபைல எங்களுக்கு காசுபணத்துக்கு ஒன்னுங் கொற இல்ல. நல்ல ஈமானுள்ள குடும்பத்துல சம்மந்தம் வெக்கனும்னுதான் நெனச்சிட்டிருந்தோம். உங்க குடும்பமும் நல்ல இபாதத்தான குடும்பம். அதுவும் பஷீர்பாய் இந்த மொஹல்லாக்கே முன்மாதிரியா இருக்காரு.. எங்களுக்கு முழு சம்மதம். எல்லா செலவுகளையும் நாங்க பாத்துக்கறோம். ஒங்க பொண்ணுக்கு நீங்க என்ன முடியுமோ அத பண்ணுங்க.. பையனுக்கு ரெண்டுமாசந்தான் லீவு. அதுக்குள்ள நிக்கா முடிக்கனும். வீட்ல மஷோரா பண்ணிட்டு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க.’ என்று சொல்லிவிட்டுப் போனதிலிருந்து சாஜிதாவுக்கு தலைகால் புரியவில்லை. ஒரு நல்ல இடத்தில் பொண்ணுக்கு வாழ்க்கை அமைந்திருக்கிறது என்ற சந்தோசம்.

ஊர்ல இருந்த அரை கிரவுண்டு இடத்தை வித்து, அங்க இங்க கடன ஒடன வாங்கி நிக்காவுக்கான வேலைகள ஜரூரா பாக்க ஆரம்பிச்சுட்டா சாஜிதா. அம்மா வீட்டு சொத்துனு அவளுக்குனு இருந்தது அந்த ஒரு எடந்தான். எவ்வளவோ கஸ்டநஸ்ட்டத்திலும் அத விட்டுடாம பாதுகாத்து வெச்சது இப்ப புள்ள காரியத்துக்கு உதவியிருக்கு. என்னதான் மப்பிள்ளை வீட்ல ஒன்னும் வேண்டாம்னு சொன்னாலும், வெறுங்கழுத்தோடவா கொமர அனுப்ப முடியும்? அப்படி இப்படினு நாலஞ்சு பவுன் வாங்கியாச்சு. நிக்காவுக்கு இன்னும் ஒரு மாசந்தான் இருக்கு. பத்திரிக்கை கொடுக்கறது, பண்டம் பாத்திரம் வாங்கறதுனு பரபரன்னு பம்பரமா சுத்திட்டு இருந்தா சாஜிதா.

ஆனா, மைனர் பஷீருக்கு எந்தக் கவலையும் இல்லை. போனில் மணிக்கணக்காக காதல்மொழி பொழிவதும், வாரத்துக்கு ஒருமுறை பேங்களூர் போவதுமாக அவனது காலம் சென்றுகொண்டு இருந்தது. பர்வீனுக்கு நிக்கா முடியறவரைக்காவது இந்த மனுசன் பேசாம இருந்தா பரவாயில்ல. யாராவது இந்த மனுசனோட போக்கப்பத்தி மாப்பிள்ள வீட்ல எதாவது சொல்லிட்டா எல்லாமே கெட்டுவிடுமே என்ற பயம் வேறு சாஜிதாவை அரித்துத் தின்றுகொண்டு இருந்தது. அவள் பயப்பட்டதுபோலவே நடந்தும் தொலைத்து விட்டது.

இன்று மாலை பாசித் வீட்டுக்கு வந்திருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பர்வீனும் வீட்டில்தான் இருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் கட்டிலில் அமர்ந்திருந்த பர்வீன் எழுந்து விறுக்கென்று எழுந்து சமையலறைக்குள் ஓடினாள். பாஷித் வந்திருப்பதை சாஜிதாவிடம் சொல்லிவிட்டு தொங்கிக்கொண்டிருந்த பர்தாவுக்குப் பின்னால் நின்றுகொண்டாள். காற்றாடியின் புண்ணியத்தால் அவ்வப்போது விலகிய பர்தாவின் இடைவெளியில் பாஷித்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். தலையில் முக்காடைப் போட்டுக்கொண்டபடி சாஜிதா வெளியே வந்தாள்.

”வாங்கத்தா… ஒக்காருங்க..”

என்றபடி ஒரு பிளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டாள். அவன் எதுவும் பேசாமல் அதில் அமர்ந்தான்.

“இரீங்கத்தா வரீன்..”

என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவள் ஒரு தட்டில் கொஞ்சம் மிக்சரும், இன்னொரு தட்டில் நாலைந்து பிஸ்கட்டுகளும், ஒரு சொம்பு நிறைய தண்ணீரையும் கொண்டுவந்து அவனுக்குப் பக்கத்திலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு எதிரிலிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

“எடுத்து சாப்பிடுங்கத்தா.. பர்வீனு டீ போடுது..” என்றாள்

நிமிர்ந்தே பார்க்காமல் பிஸ்கட்டின் முனையை உடைத்து வாயில்போட்டு மென்றான். அவனது மௌனம் சாஜிதாவின் அடி வயிற்றைக் கலக்கிக்கொண்டு இருந்தது. அந்த இருக்கத்தைக் கலைக்க

“அம்மா, அத்தாவெல்லாம் நல்லா இருக்காங்களாத்தா..? என்று எதையோ சடங்காக கேட்டு வைத்தாள். அவன் அதற்கும் வாய் திறக்காமல் பிஸ்கட்டை மென்றபடி தலையசைத்தான். ஏதோ குழப்பத்தில் இருப்பதை அவனது முகம் காட்டியது. நேரம் போகப்போக சாஜிதாவுக்கு இரத்த அழுத்தம் எகிறிக்கொண்டே இருந்தது.

“ம்ம்மா..”

பர்வீனின் குரலைத் தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தவள் கையில் தேநீர் டம்ளருடன் வெளியே வந்தாள். அவனுக்கு எதிரே வைத்துவிட்டு மீண்டும் அதே சுவற்றில் சாய்ந்துகொண்டாள். நெஞ்செல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டது அவளுக்கு. ஒரு வழியாக அவனே வாய் திறந்தான். சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாகப் பேசினான்.

“பர்வீனோட அத்தாவப்பத்தி என்னன்னவோ செய்தியெல்லாம் கேள்விப்பட்டேன். எனக்குப் புரியுது.. இதுல உங்க தப்பு ஒன்னுமில்ல. எப்படியிருந்தாலும் நிக்கா முடிஞ்சு நாலஞ்சு மாசத்துல நான் பர்வீனுக்கு விசா ரெடிபண்ணிட்டு அவளக் கூப்பிட்டு சவூதி போயிடுவேன். ஆனா எங்க அம்மா அத்தா இங்கதான் இருந்தாகனும். இந்த விசயமெல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சா அவங்க தலைநிமுந்து வாழமுடியுமா..? எனக்கொரு தங்கச்சி இருக்கால்ல அவளுக்கு எதாவது நல்லது கெட்டது பண்ண முடியுமா? எது எப்படியோ பர்வீனோட அத்தாட்ட பேசி இன்னியோட இந்த முசீபத்தயெல்லாம் தல முழுகச் சொல்லுங்க. ஒருவேள அவரு ஒத்து வரலைனா.. பர்வீனுக்கு வேற இடம் பாத்துக்கங்க. எனக்கு வேற வழி இல்ல. இந்த நிக்கா நல்லபடியா நடக்கறதும், நடக்காததும் ஒங்க கைலதான் இருக்கு..”

சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட்டான். தேநீரில் ஆவி பறந்துகொண்டு இருந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள் சாஜிதா. உடைந்து அழுதுகொண்டிருந்த பர்வீனைத் தோளோடு சாய்த்துக்கொண்டு தேற்றினாள்.

“அழாதளா.. நல்லபடியா எல்லாம் நடக்கும்.. அல்லா இருக்கான்.”

“இல்லமா நான் எனக்காக அழலமா.. நீ இப்பதான் கொஞ்சநாளா சந்தோசமா இருந்த, மறுபடியும் அல்லா உன்ன இப்படி சோதிக்கிறானேம்மா..”

இருவரும் அழுதழுது ஓய்ந்து ஆளுக்கொரு மூலையில் தூங்கிப்போனார்கள். நேரம் போனதே தெரியவில்லை. பர்வீன் நன்றாகத் தூங்கிப்போனாள். திடீரென டமார் டிமீரென்று பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு விறுக்கென பயந்து எழுந்தாள். சமையலறையில் பாத்திரங்கள் மீது சாஜிதா விழுந்து கிடந்தாள். அவள் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு வெறிகொண்ட மிருகம் போல பஷீர் அவளை அடித்துக்கொண்டு இருந்தான். தடுக்கப்போன பர்வீனையும் உதைத்துத் தள்ளினான்.

“களிச்சல்ல போனவளே.. எவ்வளவு தெகிரியம் இருந்தா எனக்கு கண்டிசன் போடுவ.. மார்க்கத்துல நாலு நிக்கா பண்ணிக்க அனுமதி இருக்கு தெரியுமா ஒனக்கு. ஒரு பய என்னிய கேள்விகேக்க முடியாது. பெருநா முடிஞ்சு நான் அவள சேத்துக்கப்போறேன். மரியாதியா இருந்தீனா ஒன்னையுங் கூட வச்சுப்பேன். இல்லாட்டி ஒன்ன தலாக் பண்ணிட்டு அவள சேத்துப்பேன்.. அப்புறம் நீயும் ஒம்புள்ளையுஞ் சோத்துக்கு சிங்கியடிக்கனும் நெனப்பிருக்கட்டும்..” என்று கத்தியபடி வெளியே சென்றான்.

இந்தக் காட்சிகள் மனதில் நிழலாட எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தாள் சாஜிதா.

“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப..? எந்திரிச்சு போய் படும்மா..”

என்றபடி அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள் பர்வீன். இருவரும் வெகுநேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. முந்தானையால் உதட்டில் வழியும் உதிரத்தைத் துடைப்பதும், கண்களைத் துடைப்பதும் விசும்புவதுமாக இருந்தாள் சாஜிதா. இந்த மனுசனைப்பற்றி ஜமாத்தார்களிடம் சொல்லி நியாயம் கேட்கலாம்தான், இந்தாளு அதுக்கெல்லாம் பயப்படற ஆள் இல்லியே.. ஒரேயடியா கெளம்பி பேங்களூருக்கே போய்ட்டார்னா..? ஒருவேள இந்த மனுசன் ஜமாத்துக்கு பயப்பட்டாலும் ஊரே கேள் நாடே கேள்னு எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சிடும். அப்புறம் பர்வீனின் நிக்கா..?.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஆகிப்போனது அவளுக்கு. குழப்பத்தில் அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடும்போல இருந்தது. ஊரே அடங்கிவிட்டது. மணி எப்படியும் பதினொன்றைத் தாண்டியிருக்கும்.

“மா.. விடுமா, சும்மா கவலப்பட்டுட்டு இருக்காத. இனியும் இந்த மனுசங்கோட வாழ்ந்து என்னத்த பண்ணப்போற.. நாம வேற எங்காவது போயிடலாம்மா. இந்த ஊரே வேண்டாம்மா.. சென்னைல என் காலேஜ்மேட்டோட அப்பா பெரிய ஆடிட்டர்மா. அவர்கிட்ட பத்துப்பதினஞ்சுபேர் அசிஸ்ட்டெண்ட்டா வேலை பாக்கிறாங்க. அங்க எனக்கும் வேலை கிடைக்கும்மா. நான் வேலைக்கி போய் உன்ன நல்லா பாத்துக்குவம்மா. எனக்கு இப்போதைக்கு நிக்கா எல்லாம் வேண்டாம்மா.. அது அல்லா விட்ட வழி. நடக்கும்போது நடக்கட்டும்”

“நீ பெரிய மனிசியாட்டம் பேசிட்டு இருக்காத.. எல்லாம் நான் பாத்துக்கறேன். ஒனக்கு பாசித்தோட நல்லபடியா நிக்கா நடக்கும்.. நீ போய் படு..” எரிந்து விழுந்தாள்.

“எப்படிம்மா.. இந்த மனுசன் திருந்திட்டார்னு அவங்ககிட்ட பொய் சொல்லப்போறியா..? நாளைக்கு உண்ம தெரிஞ்சா என்னோட வாழ்க்கையே நரகம் ஆயிடும்மா.. அதோட அந்தக் குடும்பத்தோட நிம்மதியக் கெடுத்துட்டு நான் எப்படிமா நிம்மதியா வாழ முடியும்? நான் சொல்றத கேளு.. எனக்கு இப்ப நிக்கா வேண்டாம்மா.. நாம சென்னை போயிடலாம்..”

“நான் பாத்துக்கறேன்னு சொல்றேன்ல.. நீ போ ளா.. போய்ப்படு..”

தழுதழுத்த குரலோடு வெடித்த சாஜிதாவுக்கு பதில்சொல்ல முடியாமல், அமைதியாக இருந்துவிட்டாள். சிறிதுநேரத்தில் பஷீரும் வந்துவிட்டான். அவன் முகத்தைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது பர்வீனுக்கு. சாஜிதா அவனை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. அவர்களைக் கடந்து சென்று ஜலதாரியில் கைகால் முகம் கழுவிக்கொண்டு உள்ளே சென்றான்.

“என்னங்களா நடுசாமத்துல ஒக்காந்து மீட்டிங் போட்டுட்டு இருக்கீங்க.. ஏய் சாஜிதா வந்து சாப்பாடு எடுத்து வையிளா..”

குரலைக் கேட்டதும் சாஜிதா எழுந்து உள்ளே சென்றாள். பர்வீனுக்கு எரிச்சலாக இருந்தது. இவ்வளவு நடந்த பிறகும் இந்த மனுசனுக்கு சேவகம் செய்ய எந்திருச்சு ஓடுது பார்.. இந்த அம்மாவ என்னன்னு சொல்றது..? கொஞ்சங்கூட சொரணையில்லாம இவ்வளவு அடிமையாவா இருப்பாங்க..? பொண்டாட்டி புள்ளைங்களவிட கண்டவளுக கொடுக்குற சுகம்தான் முக்கியம்னு நினைக்கிற ஆளுகளோட எப்படித்தான் சமரசம் பண்ணிட்டு வாழ்றாங்களோ.. கருகுமணிய அத்து மூஞ்சில வீசிட்டு போறத விட்டுட்டு போய் சேவகம் பண்ணிட்டு இருக்கு.. புருசன் என்ன பண்ணுனாலும் சகிச்சுட்டு போகனும்னு எதாவது இருக்கா..? புருசன்னா என்ன பெரிய மயிரா..? மனதுக்குள் கடிந்துகொண்டபடி எழுந்து உள்ளே சென்றாள்.

அடுப்பங்கரையில் பாய்விரித்து படுத்தாள். பக்கத்தில் சாஜிதாவுக்கான இடம் வெறுமையாக இருந்தது. ஏதேதோ நினைவுகள் மனதுக்குள் ஓடி அவளை இம்சித்தன. அவளது நிக்கா கனவுகள் உடைந்து நொறுங்குவது போன்ற பிம்பங்கள் அவளது மணக்கண்ணில் ஓடியது. லட்சக்கணக்கான புழுக்கள் மண்டைக்குள் நெளிவதுபோல இருந்தது. பாஷித்தின் முகம் கண்களுக்குள் வந்துவந்து மறைந்தது. கோபம் ஆற்றாமை அழுகை என மாறிமாறி வந்தது. படுக்கையில் வெகுநேரமாக புரண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருந்தவள் எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.

அடுத்தநாள் காலை யாரோ அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். பர்தாவை விலக்கிவிட்டு வெளியே வந்து பார்த்தாள். வீடே களேபரமாக இருந்தது. கட்டிலில் பஷீர் பிணமாகக் கிடந்தான். அருகில் அம்மா அழுதுகொண்டு இருந்தாள். ஏனோ அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வரவில்லை. சுற்றிலும் ஏழெட்டு பெண்கள் நின்று அழுதுகொண்டிருந்தனர்.

“நைட்டு சாப்பிட்டு படுத்தாராம், விடியக்காலைல மூணுமனிக்கு நெஞ்சக்கரிக்குதுனு சொல்லி காப்பி வெச்சுக்கேட்டிருக்காரு. காப்பியக்குடிக்கும்போதே நெஞ்சப்புடிச்சுட்டு சாஞ்சுட்டாராம்..”

”பாவம் நல்ல மனுசன்.. பொண்ணோட நிக்காவக்கூட பாக்காம போய்ட்டாரே..”

“நம்ம கைல என்ன இருக்கு..அல்லா நாடிட்டான்..”

ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். பர்வீனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தலை சுற்றுவதுபோல இருந்தது. முந்தையநாள் கோபமெல்லாம் ஒருநொடியில் காணாமல் போனது. ஓடிவந்து பஷீரின் உடலைக் கட்டிக்கொண்டு அழுதாள். அத்தா.. அத்தா.. என்று அவள் கதறிய கதறல் வெகுதூரம் எதிரொலித்துக் கொண்டு இருந்தது. அவள் அழுவதைப் பார்த்து அதுவரை அழாதவர்கள் கூட அழ ஆரம்பித்தனர். ’ஜனாசா மேல கண்ணீர்த்துளி படக்கூடாது’ என்று யாரோ ஒருவர் சொல்ல அவளை பஷீரின் உடலிலிருந்து பிரித்தனர்.

“ளா.. அழாதளா.. ஆனது ஆகிப்போச்சு அல்லா நாடிட்டான்.. இனி அழுது என்னாகப்போகுது..?”

ஆளாளுக்கு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தனர். எதுவுமே அவள் காதுகளில் விழவில்லை. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. அழுது அழுது களைத்துப்போன பர்வீன் திடீரென மயங்கி விழுந்தாள். பக்கத்தில் இருந்த பெண்ணொருத்தி அவளைத் தாங்கிப்பிடித்தாள். சாஜிதா பதறியபடி எழுந்து பர்வீனின் அருகே ஒடி வந்தாள்.

“யாராவது தண்ணி கொண்டாங்க..”

கூட்டத்தில் யாரோ கத்த சமையலறைக்குள் நுழைந்தாள் சாஜிதா. சில்வர் குடத்திலிருந்த தண்ணீரை ஒரு சொம்பில் மெத்திக்கொண்டு ஓடிவந்தாள். சட்டென ஏதோ நினைவு வர ஒரு வினாடி நின்று திரும்பிப் பார்த்தாள். மண்ணெண்ணை ஸ்டவ்வின் அருகில் ஒரு டம்ளர் கவிழ்ந்து கிடந்தது. அதிலிருந்து வழிந்த காப்பி தரையில் சொட்டியிருந்தது. அதை நக்கிய பல்லியொன்று கவிழ்த்துப்போட்டதுபோல மடிந்து கிடந்தது. தூரத்தில் அதன் வால் துடித்துக்கொண்டு இருந்தது.

ஜன்னலின் வழியே வெளியே தெரிந்த குப்பைத்தொட்டியில் மூடியில்லாமல் ஒரு கண்ணாடி பாட்டில் அநாதையாகக் கிடந்தது. அதில் மண்டையோடு படம் போடப்பட்டிருந்தது.

Pin It