முருகேசனுக்கு மனசே சரியில்லை. புரண்டு புரண்டு, படுத்துப் பார்த்தும் தூக்கம் வரவில்லை. “என்ன இருந்தாலும் மருமகன் இப்படி கேட்டு இருக்கக்கூடாது. அவரை எப்படியெல்லாம் நினைத்திருந்தேன். இப்படி செய்துவிட்டாரே. ஆமாம் இந்தக்காலத்துல யாரை நம்ப முடியுது, எம்மனசு சுத்தமுன்னு சொல்லுவாங்க, ஆனா உள்ள ஒன்னும் வெளிய ஒன்னும் வெச்சிகிட்டுதான பேசுறாங்க, ஏமாந்துபோறது என்ன மாதிரி ஆளுங்கதான்” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டார் முருகேசன்.

father son 230“பொழுது விடியட்டும், எப்பாடு பட்டாவது அவரு கேட்ட பணத்த குடுத்துட்டு சந்திரி தெரியாம வந்துடுறன்” என்றவர், “ரெண்டு பொம்பள புள்ளைங்கள பெத்துப் போட்ட புண்ணியவதி எனக்கென்னன்னு போயி சேந்துட்டா… அவ இருந்து இருந்தாக்கூட இப்படி வளத்து இருப்பாளான்றது சந்தேகந்தான்… இந்த ஊருல அதுங்கள வளத்து ஆளாக்கறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே… கடவுளுக்குத்தான் வெளிச்சம்” என்றவாறு தன் கண்களின் கடைக்கோடியில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

அருகில் சொம்பில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து ஒரு முடக்கு குடித்துவிட்டு, தலையணிக்கு அடியில் வைத்திருந்த துண்டு பீடியை எடுத்து பற்ற வைத்துக்கொண்டு, வீட்டின் சுவரில் சாய்ந்து கொண்டார் முருகேசன்.

தன் கணவர் பணம் கேட்கிறார், தன்னை துன்புறுத்துகிறார் என்று முருகேசனின் மூத்த மகள் செல்பேசியில் அவருக்குத் தகவல் தெரிவித்ததிலிருந்து அவர் இப்படித்தான் பிதற்றிக் கொண்டிருக்கிறார். தனது மருமகன் மீது அப்படி ஒரு நம்பிக்கை அவருக்கு. இப்படி நடந்துகொள்வார் என்று அவர் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அதனால்தான் மனம் உடைந்து போய்விட்டார்.

முருகேசனின் மூத்த மகளின் கணவர் ரகு நல்ல குணமுள்ளவர். அவர் என் பெண்ணை கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்றக்கூடியவர். நான் இருக்கும் இடத்தில் நின்று கூட பேசமாட்டார். அவ்வளவு மரியாதை என்மேல் அவருக்கு. இந்த வரதட்சணை கிரதட்சணைன்னு சொல்றாங்களே அதுகூட அவர் கேக்கலை தெரியுமா. நானாதான் என் பொண்ணுக்கு போட்டு அனுப்பி வச்சேன். அதகூட அவரு ஏத்துக்காம, “எதுக்கு மாமா இதெல்லாம், நான் கைநெறைய சம்பாதிக்கறேன், உங்க பொண்ண வச்சி என்னால கௌரவமா காப்பாத்தமுடியும், இதெல்லாம் எனக்கு வேணாம்னு கண்ணியமா சொன்னவரு என் மருமகப்புள்ள" என்று தன் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று எல்லாரிடமும் சொல்லிவைத்திருந்தார் முருகேசன். இப்போது அந்த பேச்செல்லாம் வீணாகிப்போனதே என்ற வருத்தம் அவரின் மனதை உலுக்கியது.

மகளின் அழுகையுடன் கூடிய கோரிக்கையைக் கேட்டவுடன் எப்பாடுபட்டோ பணத்தைப் புரட்டிவிட்ட முருகேசன் பொழுதுவிடிந்ததும் புறப்பட்டுவிட்டார் சென்னை நோக்கி. இளைய மகளின் திருமணத்திற்காக ஒரு ஏக்கர் நிலத்தை விட்டுவைத்திருந்தார். அதன் பேரில்தான் மகளுக்காகக் கைநீட்டிக் கடன் வாங்க வேண்டியதாகிவிட்டது. எப்படியோ தன் மூத்த மகள் பிரச்சினை இப்போதைக்குத் தீர்ந்தால் போதும் என்றது அவரின் உள்மனது.

“தாயில்லாத புள்ளைங்கள தாயும் தகப்பனுமா இருந்து காப்பத்தனன், அதுங்க கண்கலங்கனா எம்மனசு தாங்கலியே, மருமவன் முந்தா நேத்துகூட போன்ல நல்லாத்தான பேசுனாரு. அதுக்குள்ள என்ன வந்ததுன்னு தெரியலையே, உடனே பணம் வேணுன்ற அளவுக்கு அவருக்கு என்னா நெருக்கடியா இருக்கும், அதுக்காக எம் பொண்ண அடிக்கனுமா, இது என்ன நாயம், தாயில்லாத பொண்ணு மனசு எப்பிடி தவிச்சிக் கெடக்குதோ” என்றெல்லாம் எண்ணிக்கொண்டே பஸ்ஸில் உட்கார்ந்திருந்த முருகேசன் “கோயம்பேடு எறங்கு எறங்கு” என்ற கண்டக்டரின் சத்தத்தைக் கேட்டுத் தூக்கத்திலிருந்து துடித்துப் பிடித்து எழுவது போல எழுந்து முகத்தைத் துடைத்துக்கொண்டு கைப்பையை ஒருகையிலும் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டும் மாநகரப் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்ற முருகேசன், அரும்பாக்கம் செல்லும் பேருந்தைப் பிடித்து ஏறி அமர்ந்துகொண்டார் முருகேசன்.

கோயம்பேட்டிலிருந்து மூன்றாவது நிறுத்தத்தில் இறங்கி கிடு கிடுவென தன் மகள் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார் முருகேசன். வீட்டை நெருங்கிவிடும் தூரத்தில் சென்றபோது தன் மகளின் குரலும் மருமகனின் குரலும் வீட்டிற்கு வெளிப்பகுதிவரைக் கேட்டது. ஏதோ சண்டைதான் அவர்கள் இருவருக்குள்ளும் நடக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட முருகேசன், சண்டை முடிந்த பிறகு வீட்டிற்குள் போகலாமே என்று வெளியில் நின்றுவிட்டார்.

“நீ எதுக்கு உங்கப்பாவ பணம் கேட்ட, நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல சுமதி” என்று ரகு கத்த,

“ஆமா நீங்க பாட்டுக்கு அவருகிட்ட ஒன்னுமே வேணான்னு என்ன கல்யாணம் கட்டிக்கிட்டு வந்துட்டீங்க, இருக்குற சொத்துலயும் பங்கு வேணாம்னு சொல்லிட்டீங்க, நாளைக்கி என் தங்கச்சிய கட்டிக்கப் போறவனும், அவளுந்தான் எங்க அப்பா உழைப்பயெல்லாம் அனுபவிக்கப்போறாங்க, அதுக்குள்ள இருக்குற மிச்ச சொச்சத்தையாவது நான் வாங்கிக்கறனே” என்று பொரிந்தாள் சுமதி.

“அவரு எவ்வளவு கஸ்டப்படறாருன்னு நல்லாவே தெரிஞ்சும் நீ எப்படி பணம் கேப்ப, தயவுசெய்து அவருகிட்ட வேணான்னு போன் பன்னிடு சுமதி” – என்ற ரகுவை மறித்த சுமதி,

“நாளைக்கி என் தங்கச்சிக்கும் கல்யாணம் ஆயிட்டா, அப்பா வயசான காலத்துல ரெண்டு வீட்லயுந்தான் மாத்தி மாத்தி இருக்கனும், அப்ப அவருக்கு ஒடம்புக்கு முடியலன்னாலும், எதுன்னாலும் நீங்க சம்பாரிக்கிற காசுல இருந்து எடுத்துபோட்டு செலவு பண்ற மாதிரியா இருக்குது நம்ம குடும்பம், அதனாலதான் நீங்க திட்டுனதா சொல்லி எங்கப்பாகிட்ட பணம் கேட்டேன்” என்று குடும்ப சூழலை எடுத்துரைப்பவளைப்போல் கூறும் சுமதியைப் பார்த்து,

“இருந்தாலும் உங்கப்பாகிட்ட பணம் கேக்க என் பேர பயன்படுத்தினது தப்பு சுமதி, அவரு என்னை என்ன நினைப்பார்” என்று கேட்ட ரகுவிடம்,

“ஒன்னும் நெனைக்கமாட்டார் நீங்கபாட்டுக்க உங்க வேலையப் பாருங்க இநேரம் அப்பா கெளம்பி வந்துட்டு இருப்பார்” என்ற சுமதி மேலும், "நீங்க நல்லவரா இருந்துட்டுப் போங்க, அதனால என்ன, உங்களுக்காக நானும் வருங்காலத்துல கடன்காரி ஆகமுடியுமா என்ன?" என்றாள். எதற்கெடுத்தாலும் அதற்கு ஒரு விளக்கம் சொல்லும் சுமதியிடம் இனியும் விவாதத்தைத் தொடர்வது வீண் என்று நினைத்தானோ என்னவோ, அலுவலகத்திற்குச் செல்ல தயாரானான் ரகு.

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முருகேசன் சுற்றும் முற்றும் பார்த்தார். தன் பெண்ணிற்குத் தெரிந்தவர்களோ, அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களோ தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு, வந்த வழியே திரும்பி கோயம்பேட்டிற்குப் புறப்படலானார். பேருந்தில் ஏறி உட்கார்ந்தவருக்கு கண்களிலிருந்து வெளிவரும் கண்ணீருக்குத் தடைபோட முடியவில்லை. மகள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டார்.

மறுநாள் காலை ஏழுமணியிருக்கும் கிராமத்திலிருந்து போன்போட்ட முருகேசன், “எம்மா சுமதி எப்படிம்மா இருக்க, பேரபுள்ள எப்படி இருக்கான், அவன பத்தரமா பாத்துக்கமா” என்றுகூற, அதற்கு சுமதியும் பதிலளித்தாள். பேச்சைத் தொடர்ந்த முருகேசன் “எனக்கு ஒடம்பு ஒரு மாதிரியா இருக்குதும்மா, அவ்வுளோ தூரம் பஸ்ஸூல வரமுடியாது போல, அதனால நம்ம பக்கத்து வீட்டு ரமேசுகிட்ட பணத்த குடுத்து அனுப்பி உடுறன், மாப்ள கிட்ட குடுத்துடுமா” என்று கூற,

“சரிப்பா! நீங்க ஒடம்ப கவனிச்சிக்கோங்க, நான் அவருகிட்ட சொல்லிடறன்”

என்ற சுமதியின் மறுமுனை பேச்சோடு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார் முருகேசன்.

- சி.இராமச்சந்திரன்

Pin It