குயில்கள் கூவி இருக்கின்றன. காகங்கள் கரைந்திருக்கின்றன. வண்டுகள் ரீங்காரம் இசைத்திருக்கின்றன. குருவிகள் கீறிச்சிட்டிருக்கின்றன. பலவித பறவைகளும், பூச்சிகளும் பாட்டுக்கு பாட்டு, பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுவது புழக்கடை மரம், செடி, கொடிகளில் தினமும் நடக்கும் இன்று …..

பீப்… பீய்ப்ப்… பீய்ப்ப்பப…… பீப்… பீய்ய்ப்ப்… பீய்ய்ப்ப்பப……
பீப்… பீய்ப்ப்… பீய்ப்ப்பப…… பீப்… பீய்ய்ப்ப்… பீய்ய்ப்ப்பப……

students 381புழக்கடையில் வேறு புதியதொரு ராகம் கேட்க்கின்றது. குட்டிப்பையன் முனுசாமியின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. இதுவரை கேட்டிராத அந்த ஒசை எங்கிருந்து வருகிறது என்று தேடி ஒடிச் சென்றான்.

புழக்கடையில் இருந்து வருவதை குட்டிப்பையன் கேட்டான். ஆச்சரியம் மேலிட புழக்கடைக்கு ஒடுகிறான். அங்கே இரண்டு தென்னை மரங்களில் இருந்து பச்சை ஒலைகளை வெட்டி தடுக்கு ஓலைகளாக முனுசாமியின் அப்பாவும், முனியசாமி அப்பாவும் பின்னிக் கொண்டிருந்தனர். எருது மாடுகளுக்கு கொட்டகை அமைப்பதற்காக அந்த ஓலைகள் தயாராகி கொண்டிருந்தன.

பச்சை ஒலையால் பின்னப்பட்ட கைக்கடிகாரத்தை மணிக்கட்டில் கட்டி, பெல்ட்டை இடுப்பில் அணிந்து, கீரிடத்தை தலையில் சூட்டி, ஈர்க்குச்சியிலான அம்புகளை கைகளில் ஏந்தி, பீப்பியை ஊதிக்கொண்டு ஒரு குட்டிபையன் அங்கு விளையாடிக் கொண்டு இருந்தான்.

அந்தக் குட்டி பையன் முனியசாமி நீளமான பச்சை ஓலையின் தடித்த அடிப்பகுதியின் ஈர்க்குச்சியை மேலே விட்டு, அங்கிருந்து கீற்று ஓலையில் சிறிதாக பாதியைக் கீழ்ப்பக்கமாய் கிழித்து…… சர்ர்ரென அடிவரை கீற்று ஒலையை வேகமாக இழுக்கிறான். அந்த பச்சை ஈர்க்கு ஓலை ராக்கெட் போல மேலே சீறி பாய்ந்தது. தென்னை மரத்தின் உச்சி வரை அது சென்றது. அங்கிருந்து கீற்று ஒலை காற்றில் பறந்து மெல்ல வளைந்து வளைந்து ஆடி அசைந்து முனுசாமியின் காலில் விழுந்தது. கண்களில் ஆசையும், ஆச்சரியமுமாக முனுசாமி முனியசாமியை அதிசயமாகப் பார்த்தான்.

திரும்பவும் இன்னொரு கீற்று ஓலையை வானில் செலுத்தினான். பீப்ப்பீயை வாயில் வைத்து ஊதி மாற்றி மாற்றி ராகங்களை பாடினான். பின் நிறுத்தி விட்டு… “இங்கன வா …. பீப்ப்பீ வேணுமா.. வாச்ச்சு வேணும்ம்மா….” என்று குட்டிபையன் முனியசாமி கேட்டான்.

முனுசாமி தனது அப்பாவை பார்த்துக் கொண்டே மேலும் கீழும் தலையை ஆட்டினான்.

“அப்பா… இவனுக்கு ஒரு வாச்ச்சு செய்யுப்பா…” என்று தனது அப்பாவிடம் கேட்டான்.

பச்சை தென்னை ஒலையில் ஈர்க்குச்சியை நீக்கி விட்டு நளினமாக மடித்து கைக்கடிகாரம் ஒன்றை அவர் செய்து தந்தார். முனியசாமி முனுசாமியின் மணிக்கட்டில் அதைக் கட்டினான். முனியசாமியிடம் இருந்த பீப்பியை இருவரும் மாற்றி மாற்றி ஊதி ஊதி இசைத்தார்கள். பீப்பீ, கைக்கடிகாரம் எப்படி ஒலையில் பின்னுவது என்று அந்த குட்டிப் பையன்கள் அப்பாக்களிடம் இருந்து கற்றுக் கொண்டனர்.

பச்சை ஓலையை கூம்பாக சுருட்டி பருத்த முனையில் ஈர்க்கை குத்தி அதை இலாவகமாக பிரியாமல் செய்தனர். கூம்பு முனை முன்னும் பின்னும் லேசாக அசைத்து பீப்பீயை இசைக்க வைத்தனர்.

பின்பு ஒன்று, இரண்டு, மூன்று நான்கு என்று குட்டிப் பையன்கள் பல பீப்பீக்களைச் செய்தனர். ஒவ்வொரு கைகளிலும் பல கைக்கடிகாரங்களை செய்து கட்டிக் கொண்டார்கள் தென்னை ஓலை ராக்கெட்டுகளைச் சர்ர்….சார்ர்ர்ர்…ர்ர்..என்று போட்டி போட்டு வானில் குட்டிப்பையன்கள் தாறுமாறாய் பறக்க விட்டு அந்த புழக்கடையை அதிரடித்து கொண்டிருந்தாரகள். இப்படியாகத்தான் இவர்கள் நட்பின் தொடக்கம் இருந்தது.

பின்னொரு நாளில் அருகில் உள்ள பஞ்சாயத்து அரசுப் பள்ளியில் குட்டிப்பையன்கள் சேர்ந்தனர். முனுசாமி முனியசாமியை நோக்கினான். முனியசாமியும் முனுசாமியை நோக்கினான். கைக்கடிகாரம், பீப்பீ, அம்புகள் அவர்கள் கண்களில் பறந்து கொண்டிருந்தன. அன்பும் நட்பும் மெல்ல சுடர்விட்டன.

சிலேட்டில் அ..ஆ..இ..ஈ..எழுதிய பல்பத்தில் கிறுக்கிய சிறிது நேரம் தவிர மற்ற நேரங்களில் தென்னை மரம், ஒலை கைக்கடிகாரம், பீப்பீ..என்று எதையாவது வரைந்து ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டி மகிழ்ந்தார்கள்.

ஒரு நாள் பள்ளி விட்டதும் மாணவர்கள் விட்டு விடுதலையாகிச் சிட்டுக்களாக சிறகடித்த பறக்க தொடங்கிய நேரத்தில்.

சல் சல் சலல்… ஜில்….. ஜில் … ஜில்….
சல் சல் சலல்… ஜில்….. ஜில் … ஜில்….

என்ற சலங்கை ஒலியும், ஜால்ராவின் ராகசுதிகளும் சுண்டி இழுத்தன.

தடித்த மூங்கில் மீதுள்ள பொம்மை குட்டி பாப்பா கையில் உள்ள தாளங்களைத் தட்டித்தட்டி குழந்தைகளை அழைத்து கொண்டிருந்தது. மிட்டாய்காரன் கால் கட்டை விரலானது பொம்மை குட்டிப்பாப்பாவின் கற்பனை கால்சதங்கைகளுக்கு சலங்கை ஒலி குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தது. சிறார்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அருகில் போகத் துடித்தனர். பரவசத்தில் துள்ளி குதித்தனர்.

தடித்த மூங்கிலில் அப்பிக் கிடந்த வண்ணங்கள் குழைத்த மிட்டாய் மொத்தையிலிருந்து கைவிரல்களால் சிறியப் பட்டை கப்பிகளாக இழுத்து நெளித்து கைக்கடிகாரம், வளையல், கம்மல் தோடுகள், நெக்லஸ், தேள், பாம்பு, மாடு…. என்று விதவிதமான வடிவங்களில் மிட்டாய்களை செய்து சிறுவர், சிறுமிகளின் கைகளில் மாட்டிக் கொண்டிருந்தான்.

“கொசுரு…. கொச்சுறு..”

சத்தம் வெளியே தெரியாத வண்ணம் மெதுவாக கேட்டு நெளிந்தாள் ஒரு சிறுமி.

வளையல் மிட்டாய் வாங்கிய அந்த சிறுமிக்கு மட்டுமல்ல வேடிக்கை பார்த்த சிறுமிகளுக்கு மூக்கில், காதில் பசக்.. பசக் என்று சிறு மிட்டாய் துணுக்குகளை மிட்டாய்காரன் மூக்குத்திகளாக, கம்மல்களாக ஒட்ட வைத்தான். சிறுவர்களிலும் கன்னங்களில் மிட்டாய் மருக்கள் பளிச்சிட்டன. அந்த கொசுறுகள் அந்த மிட்டாய்காரனின் அன்பின் அடையாளங்கள்! சிறுவர்,சிறுமிகள் அந்த அன்பின் அடையாளங்களைச் சுமந்து கொண்டு வெட்கப்பட்டு ஓடினார்கள்.

முனுசாமியும், முனியசாமியும் ஏக்க பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்தனர். வீட்டிற்கு அவர்கள் ஓடினார்கள்… இல்லை..இல்லை பறந்தார்கள். அம்மாக்கள் முந்தானைகளில் இருந்த காசுகள் அவிழும்வரை அவர்கள் கால்கள் தை..தை என்று குதித்து நடனமாடிக் கொண்டிருந்தன.

காசுகளுடன் வந்த அவர்கள் மிட்டாய்காரனை தேடினார்கள். ஆனால் மிட்டாய்காரனை அங்கு காணவில்லை. ஏமாற்றம் கண்களில் தெரிந்தது.சுற்றும் முற்றும் ஓடி தேடினர்

சல்… சல்….சல்… ஜல்…ஜல்….ஜல்…
சல் சல் சலல்… ஜில்….. ஜில் … ஜில்….

பொம்மை பாப்பா எங்கிருந்தோ….. சிறுவர்களை அழைத்தாள். தேடி ஒடினார்கள். மிட்டாய்காரன் முன்பு மூச்சிரைக்க குட்டிப் பையன்கள் போய் நின்றனர். இருவரும் உள்ளங்கைகளில் காசுகளை வைத்து விரித்தகைகளை ஒரு சேர நீட்டினார்கள்.

சிவப்பு, மஞ்சள், வெள்ளை வண்ணக் கலவை கோடுகளாலான மொத்தை மிட்டாயை சவ்வாய் நீள நீளமாய் இழுஇழுவென இழுத்தார். ஆளுக்கொரு மிட்டாய் கைக்கடிகாரத்தை கட்டினார். சின்னமுள் , பெரியமுள் கூட அந்த கைக்கடிகாரங்களில் இருந்தன. பரவசத்துடன் சிறுவர்கள் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தனர்… சிரித்தனர். பொம்மை பாப்பா கை கொட்டி சிரித்து வாழ்த்தினாள். மிட்டாய்காரனின் வாழ்த்து அதில் உறைந்து கிடந்தது.

திரும்பி போகாமல் தயங்கி முயங்கி அந்த குட்டி பையன்களும் நின்றனர்.

பசக்… பசக்… என்று மிட்டாய்காரன் மிட்டாயை இழுத்து மிட்டாய் துணுக்குகளை முனுசாமி கன்னத்திலும் முனியசாமி கன்னத்திலும் குறும்புடன் ஒட்டினார். வெட்கப்பட்ட சிறுவர்கள் தலைதெறிக்க ஓடிக்கொண்டே அவைகளை வாயில் போட்டுக் கொண்டு மண்புழுதி சாலையில் வளைந்து வளைந்து ஒடினர். தொண்டையை தாண்டி சென்ற அந்த துண்டு மிட்டாய்களில் ஒட்டி இருந்த ஏதோ ஒன்று இனித்துக் கொண்டிருந்தது.

முனுசாமி குடும்பத்திற்கும் , முனியசாமி குடும்பத்திற்கும் சொத்துபத்து என்று பெரியதாக சொல்லிக் கொள்வது மாதிரி கிடையாது. தலா அரைகாணி நிலம் மட்டும் அக்குடும்பங்களுக்கு அதிகபட்ச சொந்தமாய் இருந்தன. கூடுதலாக முனுசாமி அப்பாவிற்கு நேஞ்சான் காளை மாடுகளும் வண்டியும் இருந்தன.

சின்ன அய்யா வகையறாவில் ஒருத்தர் செங்கல் சேம்பர் அந்த ஊரில் வைத்து டவுனில் செங்கல்களை விற்று கைநிறைய பணம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சேம்பரில் பச்சை சூளைக்கற்களை ஏற்றி இறங்க இந்த மாட்டு வண்டி பயன்பட்டது. அவரவர் நிலங்களில் உழைத்த காலை நேரங்களைத்தவிர, பகலில் முனுசாமி அப்பாவும், முனியசாமி அப்பாவும் சேர்ந்து அந்த வண்டியுடன் உழைத்தனர். பச்சைக் கற்கள் அதிகமான சில நேரங்களில் அம்மாக்களும் குழந்தைகளும் கூட பச்சைக் கற்களை சுமந்தனர்; அதில் வரும் வருமானத்தைப் பிரித்துக் கொண்டர்.. வறுமை இல்லாமல் நல்ல சோற்றை இந்த இரண்டு குடும்பங்கள் தின்றன. வாழ்வும் உழைப்பும் சாவும் அவர்களுக்கு ஒன்று போலத்தான் இருந்தன. சாதிப்படி நிலை ஏற்றத்தாழ்வும், சேரி-ஊர் பிரிவினையும் அவர்களுக்குள் கிடந்தாலும், அவர்களின் உழைப்பும், தொழில் சார்ந்த நிலைகளும் அவைகள் உறைநிலைக்குள் வைத்திருந்தன. அந்த உறைநிலை மாற்ற சூட்டை சிலர் பரப்பி வந்தனர்.

பள்ளி இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்னை அந்தச் சிறுவர்கள் பெற்றனர். தன் மகன் முனுசாமிக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். முனுசாமி எல்லாரிடமும் கட்டி மகிழ்ந்தான்.

தனக்கும் ஒரு கடிகாரம் வேண்டும் என்று ஏக்கத்துடன் தனது மகன் பார்ப்பதை அப்பாக்கள் உணர்ந்து கொள்வது இயல்புதானே.. அதிலும் முனியசாமி தன் நண்பனை விட ஒரு மதிப்பெண் அதிகமாக பெற்று இருந்தான்.. உடனடியாக கைக்கடிகாரம் வாங்க அவரிடம் பணம் இல்லை.. சிறுக சிறுக உண்டியில் பணம் சேர்ந்தார்.

ஆறு மாதங்களுக்கு பின்புதான் முனியசாமி கையில் கைக்கடிகாரம் வந்தது. எல்லாரிடமும் ஆசையுடன் காட்டினான். பெருமையும், மகிழ்ச்சியையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

அந்த சிறிய கைக்கடிகாரம்கூட மிகச்சிலரிடம் மனவிகாரத்தை உண்டு பண்ணின.. சாதிப்படி நிலை ஏற்றத்தாழ்வும், சேரி-ஊர் பிரிவினையும் தாண்டிய சிறுவர்கள் நட்பும், அவர்கள் இருவர் கைகளில் மின்னிய கடிகாரங்களும் அந்த விசமிகள் கண்களை உறுத்தின. மறுநாள் முனியசாமி பள்ளிக்கு வரவில்லை. அடுத்த நாள் வந்த முனியசாமியின் மணிக்கட்டில் கைக்கடிகாரம் இல்லை.. கத்தியால் கிழிக்கப்பட்ட காயத்துடன் மணிக்கட்டில் கட்டு போட்டு முனியசாமி வந்தான்.

அசாதரணமான அமைதி பள்ளியில் நிலவின..அந்த சிறிய பள்ளியைச் சுற்றி போலிஸ் வாகன‌ங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. இறுகிய முகத்துடன் போலிஸ்காரர்கள் பள்ளி சிறுவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். பள்ளி சிறுவர்கள் இரண்டு, மூன்று கும்பல்களாக பிரிந்து அங்காங்கே நின்று கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் அவர்களை வகுப்புக்கு போகச்சொன்னார்கள்.. சிறுவர்கள் ஆசிரியர்களை முறைத்தனர். முனுசாமி தன் கையில் இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தான். சின்னமுள், பெரிய முள், நொடி முள் என்று எல்லாமும் சேர்ந்துதான் நேரத்தைக் காட்டின.

தன்னை நோக்கிய முனியசாமி பார்வை முனுசாமிக்கு பழைய நினைவுகளைக் கிளறியது. அவன் மணிக்கட்டில் இருந்த கைக்கடிகாரம் நெருப்பு வளையமாய் மாறி அவனைச் சுட்டது. தனது மணிக்கட்டில் இருந்த கைக்கடிகாரத்தை கழட்டி பைக்குள் போட்டுக் கொண்டான் .

நண்பர்கள் ஒருவரை ஒருவர் ஊடுருவி பார்த்தனர்.. அவர்கள் இருவரையும் அந்த மாணவர்கள் கும்பல்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்.

வீசும் காற்றில் வெறுப்பின் விசம் மெல்ல பரவிக் கொண்டு இருந்த‌து.

- கி.நடராசன்

Pin It