புகைப்பட அரங்கில் அப்பா, அம்மா, சக்தி, சரவணன் ஆகிய நால்வரும் புகைப்படம் எடுக்கத் தயாராகின்றனர். அப்பா பட்டு வேட்டி சட்டையிலும், அம்மா பட்டுப் புடவையிலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். புகைப்படம் எடுப்பவர் தயாராகி பத்து நிமிடங்கள் சென்றுவிட்டது. கூடவே அவரது பொறுமையும். அதற்கு முந்தய இருபது நிமிடங்கள் இவர்கள் நால்வருக்கும் பவுடர், எண்ணெய், சிகினா, சீப்பு, கண்ணாடி இவற்றை எல்லாம் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார். அம்மா தயாரானவுடன் அப்பா கண்ணாடியைக் கேட்டு வாங்கி வழுக்கைத் தலையை சீவி அவரும் தயாரானவுடன் ஒருவழியாக எல்லோரும் இருக்கையில் அமர்ந்தனர். அப்பாவின் மடியில் சரவணனும், அம்மாவின் மடியில் சக்தியும் அமர்ந்து கொண்டனர். இன்று சக்திக்கும் சரவணனுக்கும் பிறந்த நாள். சக்திக்கு ஐந்து வயது. மற்றவனுக்கு நான்கு வயது. ஒரே மாதம் ஒரே தேதி, ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்தவர்கள். இருவரும் புத்தாடைக்குள் உள்ளனர்.

people 259படம் எடுப்பவர் கருப்பு துணியைத் தூக்கி தலையை உள்ளே நுழைக்கிறார். அந்நேரத்தில் அண்ணன் தம்பியின் முகத்தைப் பார்த்து தனது கைக்குட்டையை எடுத்து துடைத்துவிடுகிறான். பதிலுக்கு தம்பியும். படம் எடுப்பவர் முகத்தை சுழித்து கொண்டே வெளியே தலை நீட்டுகிறார். அம்மாவும் அப்பாவும் சிறிது நெளிந்து அவரின் முகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே மகன்களின் கையை இறுக்கி பிடித்துக்கொள்கின்றனர்.

அவர் மீண்டும் உள்ளே.

பெற்றோரின் கைகள் தளர்கிறது. சொல்லிவைத்தாற் போல தம்பி அண்ணனுக்கு கையாலே தலை முடியை சீவிவிடுகிறான். பதிலுக்கு அவனும் இவனுக்கு…

அவர் மீண்டும் வெளியே…

பெற்றோரின் கைகள் மகன்களின் மேல் இறுக்கம் கொள்கிறது.

அவர் மீண்டும் உள்ளே…

ஒருவழியாக புகைப்படக்காரர் ‘க்ளிக்கி’ விட்டார். கறுப்பு வெள்ளை புகைப்படத்திலும் அவர்கள் நால்வரின் மகிழ்ச்சியும் வண்ணமயமாக உள்ளது.

ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்த போது அவர்களின் வீட்டிலேயே டிஜிட்டல் புகைப்பட கருவி வாங்கிவிட்டனர். அவர்களின் அந்த சொந்த கருவியில்தான் சுவற்றில் பூமாலை, தலைக்கு மேலே மின்னும் கூம்புவடிவ விளக்குடன் தொங்கிக்கொண்டிருக்கும் அப்பாவின் புகைப்படம் எடுக்கப்பட்டது. தலையில் முக்காடுடனும் கண்ணில் கண்ணீருடனும், மனதில் புகைப்பட அரங்கில் நடந்த சம்பவத்துடனும் அம்மா அப்பாவை பார்த்துக்கொண்டிருக்கிறார். பக்கத்து அறையில் இவர்களின் குடும்ப வழக்கறிஞர் முன் அண்ணனும் தம்பியும் அமர்ந்துள்ளனர்.

வழக்கறிஞர் “அப்பா தவறி ஒரு மாசோ கூட ஆகல. அதுக்குள்ள ஏம்பா பங்கு பிரிக்க சொல்றீங்க?”

அவரின் பேச்சுக்குச் சிறிது கூட மதிப்பு கொடுக்காமல் தம்பி, “டாக்குமெண்ட்லாம் சொன்ன மாதிரி ரெடி பண்ணீங்களா சார்? இவே முகத்த இனிமே பாக்க கூடாதுனு நெனக்கிறேன்”.

அண்ணன் “சார் வேகமா முடிங்க. எனக்கு நெறய வேல இருக்கு. இவன்லாம் எனக்கு சரிசமமா பேசுறான்” என்று தலையில் அடித்துக் கொள்கிறான்.

வழக்கறிஞர் “அம்மாவுக்கு ஏதாச்சும் செய்யனுப்பா. அப்பா எல்லாமே சுயமா சம்பாதிச்சது. அம்மா நெனச்சா இத யாருக்கு வேணாலும் எழுதி குடுக்கலாம்”.

சக்தி “அதே ஆத்தோர தோப்பையும், இந்த குடும்ப வீட்டையும் அது பேர்ல சாகற வரைக்கும் இருக்கட்டும்னு சொன்னேன்ல”

இருவருக்கும் தெரியும் “அம்மா நம்மள விட்டுட்டு வேற யாருக்கும் சொத்த எழுதி கொடுக்க மாட்டாள்’ என்பது. அவர்களின் அம்மாவும் “தோப்புலாம் எனக்கு வேண்டாம்” என்றுதான் சொன்னாள். அப்பாவின் நெருங்கிய நண்பரான இந்த குடும்ப வழக்கறிஞர்தான் அவரை “உங்களுக்குனு ஒரு வருமானம் இருக்கட்டும்…” என்று அதிகம் வலியுருத்தி சம்மதிக்க வைத்தார்.

வழக்கறிஞர் “சரிப்பா இந்த பேப்பர்ல ரெண்டு பேரும் கையெழுத்து போடுங்க” என்று இருவரிடமும் ஒப்பந்த தாளை நீட்டுகிறார். இருவரும் அதில் கையெழுத்து போட்டுவிட்டு கிளம்புகின்றனர்.

சக்தியும் சரவணனும் வீட்டுக்கு வெளியில் வந்து அவரவர் நான்கு சக்கர வாகனங்களுக்கு முன்னால் நிற்கின்றனர். வழக்கறிஞர் கையில் கோப்புகளுடன் விடைபெறுகிறார். அம்மா மெதுவாக வந்து ஜன்னலின் ஓரத்தில் நின்று இருவரையும் பார்க்கிறாள். சக்தியும் சரவணனும் அவரவர் மகன்களைக் காணாமல் சத்தம் போட்டு அழைக்கின்றனர். அவர்களின் மகன்கள் இருவரும் தோட்டத்தில் கொட்டி கிடந்த மணலில் விளையாடி கொண்டிருக்கின்றனர். அப்பாக்களின் குரல் கேட்டு இருவரும் ஓடி வருகின்றனர். வாகனங்களின் அருகில் வந்து விடைபெறும் சமயத்தில் ஒருவரையொருவர் பார்த்து சற்று நிதானித்து நின்றனர். மெதுவாக அவரவர் கால்சட்டை பைக்குள் கையை விடுகின்றனர். கைக்குட்டை உதவியுடன் அண்ணன் தம்பிக்கும், தம்பி அண்ணனுக்கும் முகத்தில் ஒட்டியுள்ள தூசியையும், கையால் முடியை சீவிவிட்டும் தந்தைகளிடம் ஓடோடி வருகின்றனர்.

சக்தியும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர்.

Pin It