அன்பிற்கினிய நண்பருக்கு வணக்கம் என்று சொல்வதற்கு எனக்கும் மனம் வரவில்லைதான். இருந்தாலும் தங்களின் அன்பிற்கு இணை எதுவும் இல்லை என்பதால்தான் இப்படி எழுதுகிறேன். நாம் இருவரும் இறுதியாக சந்தித்த நாள் சட்டென்று நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது. அப்படியென்றால் தங்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன என்றுதானே அர்த்தம். ஆமாம் சந்தித்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட அலைபேசியிலாவது தொடர்புகொண்டோமா. அதுவும் இல்லை. முகநூல், மின்னஞ்சல் என்று நம் நட்பை உயிர்ப்பித்துக்கொள்ள எத்தனையோ உபகரணங்கள் இருந்தும் நானோ நீங்களோ பயன்படுத்திக்கொள்ள மறுக்கின்றோம்.

sad man 351நீங்களும் நானும் சென்னையில்தான் வசிக்கின்றோம். நீங்கள் இருக்கும் இடம் எனக்குத் தெரியும், நான் இருக்கும் இடம் உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சந்திக்க சங்கடமாய் இருக்கிறது. நேரில் சந்திக்கவேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் கண்கள் பனிக்கிறது.. கால்கள் கவலைப்படுகிறது.. ஆமாம் நம் நட்பில் விரிசல் விழுந்து மீண்டும் தைக்கமுடியாத துணியைப்போல் ஆனதற்கு என்ன காரணம். பணம்தான். ஆமாம் பாழாய்ப்போன பணம்தான் காரணம். அன்றைக்கு உதவி என்று கேட்டவுடன் ஓடிவந்து கொடுத்தீர்கள். வாங்கியவன் வாக்கு கொடுத்தபடி நடந்தேனா. இல்லையே! என் கடனைத் தீர்க்க உங்களிடம் கைநீட்டினேன். ஆனால் உங்களுக்கு.. இன்றுவரை திருப்பிக் கொடுக்கமுடியாமல் போய்விட்டதே..

நீங்களும் பத்து தடவைக்குமேல் அலைபேசியில் தொடர்பு கொண்டீர்கள்.. நானும் தவணைகள் கேட்டுப் பதிலளித்துக் கொண்டுதான் இருந்தேன். நீங்கள் திரும்பத் திரும்பத் தொடர்புகொண்ட போதுதான் என் அலைபேசி அமைதியானது. எவ்வளவு அநாகரிகமாக நடந்துகொண்டிருக்கிறேன் நான். வெட்கமாய் இருக்கிறது. பணத்தின் தேவை யாருக்குத்தான் இல்லை. எல்லோருக்கும் தான் பணத்தின் தேவை இருக்கிறது அதில் வாங்கியவனுக்கு ஒரு விதி. கொடுத்தவருக்கு தலைவிதியா என்ன. என் வரம்பிற்கேற்றபடிதானே நான் செலவுகளை செய்திருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் நான் கோட்டை விட்டிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது என்மேல் எனக்கே வெறுப்பு வருகிறது. சிக்கனமாய் வாழப் பழகியிருந்தால் எனக்கு ஏன் இந்த சிக்கல்?

பேருந்தில், தொடர்வண்டியில் பயணம் செய்யும் நேரங்களில் என் அருகில் அமரும் சிலரின் செல்பேசி அலறும்.. அலைபேசியை எடுத்து பெயரைப் பார்க்கும் அவர்கள் முகத்தை சுளித்துக்கொண்டு அதனை அமைதியாக்குவார்கள். அப்போது நினைத்துக்கொள்வேன் என் நண்பனைப்போல் யாரோ ஒருவர் இவருக்குக் கடன் கொடுத்திருக்கிறார் என்று. ஒருநாள் எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருக்கும் பெண்மணியிடம் கடன் கொடுத்த ஒருத்தி வந்து கத்தினாள். அவள் பேசியதை வார்த்தைகளால் வடிக்கமுடியாது என்பதால்தான் கத்தினாள் என்கிறேன். கடன் வாங்கியவள் பதில் சொல்ல முடியாமல் கூனிக்குறுகி நின்றாள். எனக்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தான்.

ஒரு அந்திப்பொழுதில் ஒரு கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் இன்னொருவரும் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். அங்கு மூன்றாவதாக ஒரு நபர் வந்தார். அவர் என் அருகில் இருந்தவருக்கு நண்பர் போல.. வந்தவர் சட்டென்று அமர்ந்திருந்தவரின் சட்டையைப் பிடித்துக்கொண்டார். ‘இப்ப என் காச வெச்சிட்டுத்தான் நீ போற’ என்று உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டார் அவரை. பாவம் அந்த மனிதர் இவருக்கு நண்பராம். எவ்வளவு பணமோ இவர் வாங்கியது. இன்று நட்பு கழுத்துவரை வந்து நிற்கிறது. நான் அப்படியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த இடத்தில் உன்னை வைத்து யோசித்துப் பார்க்கத்தான் என்னால் முடிந்தது. இன்றுவரை என்னை அவமானப்படுத்தவோ, அசிங்கப்படுத்தவோ நீ முயற்சி செய்யவில்லையே. இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது. பெருந்தன்மை என்பதா…. பெரிய மனசு என்பதா…

கடன் எந்த அளவு கொடியது என்று இப்போதுதான் விளங்கிக்கொள்ள முடிகிறது என்னால்… கடன்பட்டான் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்னும் கம்பனின் இலக்கிய வரி இப்போதெல்லாம் என் காதில் அடிக்கடி வந்து ஒலித்துவிட்டுப் போகிறது… சில நேரங்களில் இப்படி நினைத்துக்கொள்வேன்… ஏதாவது பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில், பொது இடங்களில் நண்பனைப் பார்த்தால் எப்படி முகம் கொடுத்துப்பேசுவது என்று. ஆமாம் உன்னை நேருக்கு நேராகப் பார்த்து என்னால் எப்படி பேச முடியும்.. அப்படி நான் பேச எத்தனித்தாலும் நீ என்னோடு பேச தயாராக இருப்பாயா… கேள்விகளை மட்டும் எழுப்பிக்கொள்கிறேன்.. பதில் தெரியவில்லை… இன்றும் கூட கடன் கொடுக்கமுடியாமல்தான் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன்..

என்மீது எவ்வளவோ மதிப்பு வைத்திருந்தாய் நீ! வாழ்க்கை ஓட்டத்தில் கொள்கைகளை எல்லாம் நான் குப்பையில் போட்டு எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன என்று எப்படி உனக்குத் தெரியும்… நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்த மடல்… இப்போதுகூட குறுஞ்செய்தி அனுப்பியிருக்கலாம் நான் உனக்கு. அந்த அளவிற்கு என் மனதில் துணிச்சல் வரவில்லை… மின்னஞ்சலாவது அனுப்பினேனா… அதுவும் இல்லை.. இதில்தான் மனம் விட்டுப் பேசமுடியும். அதனால்தான் இந்த காலவதியாகிப்போன கடிதத்தைக் கையில் எடுத்து இருக்கிறேன். என்று தன் கடிதத்தை முடித்த அருள் தபால் நிலையத்திற்குக் கொண்டு போனான். வழியில் ஒரு கடையில் எழுதியிருந்தார்கள், ‘கடன் அன்பை முறிக்கும்/சில நேரங்களில் எலும்பையும் முறிக்கும்’

- சி.இராமச்சந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It