சற்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு நான் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போலவும், கண்களைத் திறந்து தியான நிலையில் இருப்பது போலவும் தோன்றும்.

man 330எங்கேயோ பார்த்த காட்சிகளாய் இருக்கலாம் அல்லது எப்போதோ யாரிடமோ கேட்ட சொற்களாய் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டில் ஏதோ ஒன்று தான் மாறி மாறி மனதுக்குள் சினிமா போல ஓடிக்கொண்டிருக்கும். என் கண்கள் எந்தவித அசைவுமின்றி ஏதோ ஒரு பொருளின் மீது குவிந்திருக்கும்.

அன்றும் அப்படித்தான் தியானித்து இருந்தேன். காட்சிகளும், சொற்களும் எனக்கு நினைவில் நிற்கும் அளவுக்கு காட்சிகளை கண்ட இடங்களும், சொற்களை சொன்ன முகங்களும் நினைவில் நிற்பதில்லை. "புடிக்காத வேலய ஒரு நாளும் செய்யக்கூடாது, அது புடிக்காத பொண்டாட்டிய கட்டிக்கிட்டு நாள தள்ற மாறி" இதை யார் என்னிடம் சொன்னார்கள் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அன்று காலையிலிருந்து இதுவே மனதுக்குள் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தது.

என் கண்கள் மின்விசிறியையே பார்த்துக்கொண்டிருந்தன. பேசும் ரகசியங்கள், உடை மாற்றும் காட்சிகள், காதல், காமம் என மனிதர்களின் அத்தனை அந்தரங்கங்களையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருப்பது மின்விசிறியே எனத் தோன்றியது. என்னிடம் சொல்வதற்கு அதனிடம் ஏதோ ஒன்று இருப்பது போலவும், காற்றுமொழியில் அதை சொல்ல தவித்து தன்னை தானே சுற்றிக்கொள்வதை போலவும் உணர்ந்தேன்.

பெரும்பாலும் வேலையில்லாத பகற்பொழுதுகள் எனக்கு இவ்வாறாகவே கழிகின்றன.

நானும் நிறைய இடங்களில் வேலை செய்திருக்கிறேன். எங்கேயும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் என்னால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ஒவ்வொரு வேலையை உதறும் பொழுதும் காரணம் சொல்வதற்கு நிறையவே யோசிப்பதுண்டு. ஆனால் "வேல புடிக்கல" என்பதைத் தாண்டி வேறெதுவும் எனக்கு காரணமாய் இருந்ததில்லை.

பதின்பருவத்தைக் காட்டிலும் மிகக் கொடுமையாக இருக்கிறது இந்த 25 வயது. எனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டிய வயது, பெரும்பாலும் நான் செய்யும் வேலையே எனக்கான அடையாளத்தை உருவாக்குகிறது. வேலை இல்லாத காரணத்தால் எனக்கான அடையாளத்தை இன்னும் என்னால் உருவாக்க முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதில் என்னைத் தவிர என்னைத் தெரிந்தவர்களே அதிகம் ஆர்வம் கொள்கின்றனர்.

நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடமும் பெரிதாய் எந்தத் திட்டமும் இருந்ததில்லை.

--------------------------------------

காலை நேரமென்பதால் பரபரப்பாக தன்னை மிதித்துச் செல்பவர்களை எந்த வித அசைவுமின்றி மன்னித்து மேலே ஏற்றிக் கொண்டிருந்தது அந்த கட்டிடத்துப் படிகள். முதல் மாடியைச் சென்றடைய பத்து படிகள், அங்கிருந்து இரண்டாவது மாடிக்கு பத்து படிகள் என மொத்தம் இருபது படிகளைக் கொண்டிருந்தது அந்த கட்டிடம்.

உருவம் கொண்டதிலிருந்து மிதிகளை மட்டுமே பெற்று உருமாறாமல் இருப்பது படிகள் மட்டுமே என்று எண்ணிக் கொண்டு முதல் மாடிக்கு ஏறத் தொடங்கினேன்.

அன்று புதிதாய் கிடைத்த வேலையின் முதல் நாள், "தம்பி! அந்தப் படிகிட்ட போய் நில்லுப்பா, ஒரு மேடம் வருவாங்க, பேரு தங்கம்! அவங்க சொல்றத முடிச்சிக் கொடுங்க" என்று சொன்னதை ஏற்று மீண்டும் நான் ஏறிவந்த படியருகே சென்று நின்று கொண்டிருந்தேன்.. யாரும் வருவதாய்த் தெரியவில்லை, பெயர் மறந்து விடக் கூடாது என்பதற்காக மனதுக்குள் "தங்கம் , தங்கம் , தங்கம்” என்று சொல்லிக் கொண்டேன். படிகளையே உற்று நோக்கினேன். படிகளிடம் பேச வேண்டும் போலிருந்தது.

இரவு நேரங்களில் தூங்குவீர்களா ?

யாராவது உங்களை மிதித்தற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்களா?

கால்களைத் தவிர வேறெந்த மனித பாகம் உங்களைத் தொட்டிருக்கிறது?

உருண்டு விழும் எல்லா குழந்தைகளும் வளர்ந்து மிதிக்கத்தான் போகின்றனர் என்று தெரிந்ததால் தான் அந்தக் குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுவதில்லையா?

உங்களை மிதித்து ஏறும் பொழுது கொள்ளும் சிரமம் ஏன் இறங்கும் பொழுது இருப்பதில்லை ?

என்று படிகளோடு நான் கொண்டிருந்த ரகசிய உரையாடலை கலைக்க யாரோ ஒருவர் படிகளில் ஏறுவதாய்த் தோன்றியது.

நிச்சயம் அது ஒரு பெண் உருவம் தான். கருப்பு நிற புடவையைக் கட்டியிருந்தாள். கை நிறைய ஏதேதோ கோப்புகள். லாவகமாக தன் இடது கையை மடக்கி கோப்புகளைக் கொண்டு மார்புகளை மறைத்திருந்தாள். புருவங்கள் இரண்டும் சேர்ந்திருந்தது. அன்று தான் புடவை கட்டி பழகியவள் போல ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தாள். கைகளில் ரோமங்கள் நிறைய இருந்தன.

அவள் தங்கமாகத்தான் இருக்க வேண்டும். நான் இங்கே நிற்பதை ஏற்கனவே அறிந்தவள் போலவும், என்னைப் பார்த்து விடக்கூடாது என்பதைப் போலவும் மிகக் கவனமாக என்னைத் தவிர்த்து இரண்டாவது மாடிக்கு ஏறத் தொடங்கினாள்.

சிறு வயது முதலே பல்வேறு பருவங்களில் நான் ரசித்த, பிடித்தமான பெண்கள் அனைவரும் ஒன்று போலவே தோற்றம் கொண்டிருக்கின்றனர். சராசரிக்கும் அதிகமான உயரம், உயரத்திற்கு ஏற்ற பூசிய உடல், பெரிய நெற்றி, பேசும் பெரிய கண்கள், இரண்டு வரைந்த கோடுகளைப் போன்ற சிறிய உதடுகள், நேராகவும் இல்லாமல் சுருளாகவும் இல்லாமல் இருக்கும் தலைமுடி என.

ஒரு வேளை ஒரே பெண்தான் என் பருவத்திற்கு ஏற்ப மாறி மாறி வந்து என் முன்னால் வருகிறாளோ என்று கூடத் தோன்றியது.

"புடிக்காத வேலயக் கூட செஞ்சர்லாம், ஆனா புடிச்ச புள்ளையா கட்டிக்கணும்", நிச்சயம் இதை யாரும் என்னிடம் சொல்லியிருக்கவில்லை, அவளைப் பின்தொடர்ந்து போகும்பொழுது இந்த சொற்களே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

நிச்சயம் இந்த வேலையில் குறைந்தது இரண்டு வருடங்களாவது இருக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்...

- த.நி.ரிஷிகேஷ் ராகவேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It