இன்று தமிழ்நாட்டில் அர்த்தம் கெட்டு, அசிங்கப் பட்டு, அவமானப்பட்டுப் புனிதம் கெட்டுப் போன சொற்கள் இரண்டு. ஒன்று, ‘புரட்சி’. மற்றொன்று, ‘அம்மா’ என்பவையாகும்.

காலில் விழுவதே புரட்சியென எண்ணிக்கொண்டி ருக்கின்ற வெட்கமற்ற மனிதர்கள் வாழும் நாட்டில் சோவியத் புரட்சி, சீனப்புரட்சி, கியூபாப் புரட்சி, வியட் நாம் புரட்சி, எகிப்துப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி ஆகிய புரட்சிகள் பற்றிய வரலாறுகளை அறிந்துகொள்ள வேண் டும் என்ற எண்ணம் எழ வாய்ப்பு இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், நம்மவர்கள்.

நம்மிடையே வாழ்ந்து புரையோடிப்போன சமூகத்தைப் புரட்டிப்போட்டு மறைந்துபோன ஒரு பெண்ணின் புரட்சிகரமான வாழ்க்கை வரலாறு கீழே தரப்பட்டுள்ளது.

அந்த நாளில் இந்து சமூகத்தில் ஒரு கேடுகெட்ட நிலை இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த பெண்களைத் தேவதாசி என்ற பெயரில் பொட்டுக் கட்டிக் கோவிலுக்கு விட்டுவிடுவார்கள். இவர்கள் கோவில்களில் நடனமாடியும், பாட்டுப் பாடியும் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

தேவரடியார், பதியிலார், வேசையர், தாசிகள், கணிகைகள், நர்த்தகி, நடனமங்கை எனப் பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்ட பரிதாபப் பெண்கள் கோயில் களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். இந்தப் பெண்களுக்கு உடலில், திரிசூலம், ரிஷபகாளை, சங்கு, சக்கரம் போன்ற ஏதாவது ஒரு முத்திரை பதிக்கப்படும். கடவுள் சிலை களுக்கு முன் உட்கார்ந்து தாலியைக் கட்டிக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். இம்முறை ‘பொட்டுக்கட்டு தல்’ எனப்பட்டது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்து இப்பழக்கம் இருந்து வந்தது. எட்டு, ஒன்பது வயதுப் பெண்கள் இவ்விதம் ஒடுக்கப்பட்டனர்.

கோயில்களில் இப்படி எல்லாம் நடந்தது என்பதை 1886ஆம் ஆண்டு முதலில் வெளியில் கொண்டு வந்தவர் ஜோசான் பட்லர். மதத்தில் தலையிடமாட்டோம் என்று விக்டோரியா மகாராணி வாக்குறுதி கொடுத்திருந்ததால், பிரிட்டிஷ் அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. மைனர் பெண்களை இப்படி ஈடுபடுத்தக்கூடாது என்றும், வயது வந்த பெண்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் பிரிட்டிஷ் அரசு கூறியதே தவிர, தேவதாசி முறையை ஒழிக்க முன்வரவில்லை.

மேலும் செல்வச் செருக்குமிக்க சீமான் வீட்டு மைனர்களுக்கும், உயர்சாதி மக்கள் வீட்டுப் பிள்ளை களுக்கும் கட்டிலறைப் பாவயைராகவும் கட்டாயப்படுத் தப்பட்டனர். இது இந்து சமூகம் விதித்த விதி என்று அவர்கள் மனம் நொந்து வாழ்க்கையை நடத்தி வந்த னர். இவ்வாறு 1901ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தேவதாசிகள் பற்றிக் குறிப் பிட்டுள்ளது.

இழிவான இத்தேவதாசி முறை பெண்களின் சுய மரியாதையையும், உரிமையையும், மனத்திண்மை யையும் பெரிதும் பாதித்து வந்தது.

இம்முறையை எதிர்த்துப் பெரியார் பொதுமேடை களில் பேசியும், பத்திரிகைகளில் எழுதியும் கருத்துப் புரட்சி செய்து வந்தார்.

பெரியாரின் கருத்துகளால் கவரப்பட்ட பெண்மணி இத்தேவதாசி முறையை ஒழித்துக்கட்ட உள்ளத்தில் உறுதி கொண்டார். அவர் தான் புரட்சிப் பெண்மணி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்.

அக்காலத்தில் 1920ஆம் ஆண்டு வரை பெண்கள் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட உரிமை கிடை யாது. பெண்களும் தேர்தலில் வேட்பாளராகப் போட்டி யிடலாம் என 1920ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்திற்கு நியமிக்கப் பட்டார்.

இந்தியாவில், முதன்முதலில், சட்டமன்றத்தில் ஒரு பெண் உறுப்பினர் இடம்பெற்றது தமிழ் நாட்டில்தான். 1926இல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்றத் துணைத் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்தார். இப் பொறுப்புகளை இந்தியாவில் முதன்முதலில் வகித்த பெண்மணியும் இவரே.

இவர் அங்கம் வகித்த அரசு நீதிக்கட்சி அரசாகும். அன்றைய முதல்வர் பனகல் அரசர் ஆவார். இவர் சூலை 11, 1921 முதல்-திசம்பர் 3, 1926 வரை முதல்வ ராக இருந்தார். அதன்பின் 1927 முதல் 1931 வரை டாக்டர் ப.சுப்பராயன் முதல்வராக இருந்தார்.

முத்துலட்சுமி ரெட்டி சென்னை மாகாணச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் சில புரட்சிச் சட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். அவற் றில், “தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்”, “இருதார மணத்தடைச் சட்டம்”, “பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம்”, “பால்யவிவாகத் தடைச் சட்டம்” போன்ற வை குறிப்பிடத்தக்கவை.

1927ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5ஆம் நாள் மாகாணச் சட்டமன்றம் கூடுகிறது.

இன்றுபோல், அன்று விதி 110-இன்கீழ் அறிவிப்பு கள் கிடையா! மேசைத் தட்டல்கள் கிடையா! எதிர்க் கட்சியினரைப் பேச அனுமதிக்காது வெளியேற்றுதல் கிடையா! எதிர்க்கட்சியினரின் வெளி நடப்பும் கிடையா!

அன்றைய சட்டமன்றத்தில், அவையின் கண்ணியம் காப்பாற்றப்பட்டது. அன்று, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறையை ஒழிக்கச் சட்ட முன்வரைவு ஒன்றினைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதனை எதிர்த்து அன்றைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் பேசியது: “தாசிக்குலம் தோன்றி யது நம்முடைய காலத்தில் அல்ல; நாமும் அந்தக் குலத்தைத் தோற்றுவிக்கவில்லை. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் இருந்து கொண்டிருக் கிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக்கள்ளன் என்றும் அழைக்கலாம். அதைப்பற்றி நான் கவலைப் படப் போவதில்லை. தாசிகள் இல்லையென்றால் சமூகத் தின் ஒழுக்கம் கெட்டுவிடும்.

எனவே இச்சமூகம் கெட்டுச் சீரழியாமல் இருக்க, தாசிகள் தேவை என்பதை மீண்டும், மீண்டும் சொல்ல விரும்புகின்றேன். தாசிகள் கோயில் பணிக்கென்று ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள்.

அது சாஸ்த்திர சம்பந்தமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலையும், சங்கீதமும் அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும். இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால், இராமசாமி நாயக்கர் அர்ச்சகர் தொழிலை நிறுத்தச் சட்டம் செய்ய வந்துவிடுவாரே” என்று பேசினார்.

சத்தியமூர்த்தி, அந்நாளில் நாடறிந்த புகழ்பெற்ற, பேச்சாற்றல் மிக்க காங்கிரஸ் இயக்கத் தலைவர். அவர் இவ்விதம் கேவலமாகப் பேசுவார் என்று எவரும் நினைத்திருக்கவில்லை.

இவர் பேச்சுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மிகத் தெளிவாகப் பதிலுரைத்தார். “கனம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தேவதாசி ஒழிப்புத் தீர்மானத்தைத் தீவிர மாக எதிர்த்துப் பேசியுள்ளார். உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்களையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா? இதுநாள்வரை, பிற்பட்ட சமூகப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து கடவுளுக்குப் பணியாற்றியது போதும். இனி கோயில் பணிக்காக ஆண்டவனுக்குச் சேவை செய்திட  மேல்சாதிப் பெண் கள் பொட்டுக் கட்டிக்கொள்ள முற்பட்டால், மகிழ்ச்சி” என்றார். அப்போது சட்டசபை அதிர்ந்து ஸ்தம்பித்து நின்றுவிட்டது.

எதிர்ப்புகளிடையே தீர்மானம் நிறைவேறியது. ஆண்டாண்டுக் காலமாகப் பெண்களுக்கு எதிராக நிலைத்து நின்ற கொடுமை நீங்கியது, முத்துலட்சுமி யின் கடும் முயற்சியால் அன்றோ! இவரன்றோ உண்மையில் புரட்சிப் பெண்மணி! வேறெவர் புரட்சிப் பெண் ஆவார்?

1927இல் டாக்டர் முத்துலட்சுமி தொடங்கிய போராட்டம், 1947இல் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் முதல்வரான பின்னர்தான் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் அமல் ஆனது.

டாக்டர் முத்துலட்சுமி பிறந்து வளர்ந்து வாழ்ந்த நாள்களில் பெண்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர். பெண்கள் அடிமைகளாக, புழுபூச்சிகளாக வாழ்ந்து வந்தனர். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று பள்ளிப் படிப்பு மறுக்கப்பட்டது. மடமையுடனும், மூடத்தனத்துடனும் வாழ்ந்து வந்தனர். பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத காலத்தில், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, புரட்சிப் பெண்ணாக அவர் தோன்றினார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தில், திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 30-07-1886இல் நாராயணசாமி-சந்திரம்மாள் இணையருக்கு மூத்த மகளாகப் பிறந் தார். உடன் பிறந்தவர்கள் சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகளும், இராமையா என்றொரு தம்பியும் ஆவர்.

இவரின் தந்தையார் நாராயணசாமி ஐயர். புதுக் கோட்டையில் மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்.

தாயார் சந்திரம்மாள் பிரபலப் பாடகர்; இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

முத்துலட்சுமி தனது நான்காவது வயதில் திண் ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கினார். பின்னர் பள்ளியில் சேர்ந்து ஆறாம் வகுப்பை முடித்தார். அதன்பின் வீட்டிலேயே தனது தந்தையாரிடம் பாடங் கள் பயின்றார். தனியாக மெட்ரிக்குலேசன் தேர்வை எழுதி மாநிலத்திலேயே முதன்மை மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

அக்காலத்தில் பெண்கள் பருவம் எய்திவிட்டால் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. பின்னர் பள்ளி செல்வது எவ்விதம் இயலும்? ஆகவே அன்னை அவளுக்குத் திருமணம் செய்திட விரும்பினார்.

ஆனால், முத்துலட்சுமி கல்லூரியில் சேர்ந்து படித்திட விரும்பினார். கல்வி பயில்வதில் இவருக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட இவரது ஆசிரியர்கள், இவருக்குப் படிப்பதற்கு ஊக்கம் தந்தனர். இவரின் தந்தையிடம் தொடர்ந்து படிக்க வையுங்கள் என்று சிபாரிசு செய்தனர்.

புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்தார். அக்கல்லூரியில் ஆண்கள் மட்டுமே படித்து வந்ததால், முத்துலட்சுமிக்கு அனுமதி தந்தால், ஆண் மாணவர்களின் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று கல்லூரி முதல்வர் காரணம் காட்டி அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.

அதன்பின் முத்துலட்சுமியின் தந்தை, புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட வைரவத் தொண்டைமானிடம் முறையிட்டார். முற்போக்கு எண்ணம் கொண்ட அரசர் சில கட்டுப்பாடுகளை விதித்து முத்துலட்சுமியை அனு மதிக்க ஆணையிட்டார். இறுதியாகக் கல்லூரியில் ஒரு திரைமறைவில் உட்கார்ந்து உயர்கல்வியைக் கற்றார். பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்வு பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இவருடன் அக்கல்லூரியில் சக மாணவராகப் பயின்றவர், சத்தியமூர்த்தி ஐயர் ஆவார். இவர் பின் னாளில் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்தின் தலை வராகத் திகழ்ந்தவர் ஆவார்.

கல்லூரிப் படிப்பு முடிந்தது வெற்றிகரமாக!

“இனி என்ன செய்யப் போகிறாய்? படித்தது போதும். வயது ஏறிக்கொண்டே போகுது” - அன்னை.

“அதற்கு?” - மகள்.

“இனி இப்படியே விட முடியாது. காலாகாலத்தில் ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டும்” - அன்னை.

“அப்படி என்றால்?” - மகள்.

“நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றார் அன்னை.

முத்துலட்சுமி தனக்குத் திருமணத்தில் நாட்டமில்லை என்று சொல்லி மேலும் படிக்கவே ஆர்வங்கொண்டார்.

இதன்பின் தந்தை, முத்துலட்சுமியை ஆசிரியப் பணிக்குப் பயிற்சி எடுத்துக் கொள்ளப் பணித்தார். அதில் முத்துலட்சுமிக்கு ஈடுபாடு இல்லை. அவரது இலட்சியம் அதைவிடப் பெரியது.

இதனை அறிந்த அவரது தந்தையின் நண்பர், முத்துலட்சுமியை மருத்துவம் படிக்க அறிவுறுத்தினார்.

அதன்பின், 1907இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முற்பட்டார். புதுக்கோட்டை மன்னர் அவர் படிப்பதற்குப் பொருளுதவி செய்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரி ஆண்களால் நிரம்பி இருந்தது. இருந்த பெண்களும் வெள்ளையராக இருந்தனர். திரை போட்டு மூடிய வாகனத்திலேயே முத்துலட்சுமி கல்லூரி வந்து செல்வார்.

கல்லூரிப் போசிரியர் கர்னல் ஜிப் போர்டு, தனது வகுப்பில் மாணவிகளை உட்கார அனுமதிக்கமாட்டார்.

அறுவை சிகிச்சைப் பாடத்தில் முழு மதிப்பெண்ணை முத்துலட்சுமி பெற்ற பின்னர்தான், பெண்களும் தன் வகுப்புக்குள் வரலாம் என மனம் மாறியுள்ளார்.

1912இல் முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்ற போது, ‘சென்னை மருத்துவக் கல்லூரியின் வரலாற் றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார், கர்னல் ஜிப் போர்டு.

இந்திய வரலாற்றிலேயே மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி முத்துலட்சுமியே ஆவார்.

மருத்துவக் கல்லூரியில் பயிலுங்கால் டாக்டர் நஞ்சுண்டராவ் என்கின்ற தேசிய இயக்கத் தலை வரின் இல்லத்தில் மகாகவி பாரதியாரைச் சந்திக்கும் பெரும் பேறு பெற்றார். பாரதியார் முத்துலட்சுமியிடம் ‘பெண்ணுரிமை’ பற்றிச் சிந்திக்கவும் கட்டுரைகள் ஆக்கவும் பணித்தார்.

இதே காலக்கட்டத்தில் கவிக்குயில் சரோஜினி நாயுடு வைக் காணவும் அவருடன் பேசவும் வாய்ப்பினைப் பெற்றார். அவருடன் இணைந்து பெண்ணியக்கங் களைத் தோற்றுவிக்கவும், அவருடன் சேர்ந்து பணி யாற்றவும் வாய்ப்புப் பெற்றார்.

கல்லூரிக் காலத்தில், ‘காதல் கனவுகள்’ காணும் பருவத்தில் தேசியச் சிந்தனையும், பெண் விடுதலை குறித்தும் எண்ணியும் எழுதியும் வந்தார். மகளிர் மாநாடுகளில் பங்கேற்றுத் தன் கருத்துகளை, பெண்ணியச் சிந்தனைகளை சிறப்பாக எவரும் போற்றும் வகை யில் எடுத்தியம்பும் ஆற்றல் பெற்றிருந்தார்.

அந்நாளில் அவரைக் கவர்ந்த தலைவர்கள் காந்தி அடிகள், அன்னிபெசன்ட் அம்மையார், தந்தை பெரியார் ஆகியோர் ஆவர்.

மருத்துவப் பட்டம் பெற்றதும், பயிற்சி மருத்துவராக எழும்பூர் தாய்-சேய் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராகச் சேர்ந்து பணியாற்றினார்.

அதன்பின், பிறந்த மண் - புதுக்கோட்டை அவரை வரவேற்றது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியைத் தொடர்ந்தார். புதுக்கோட்டையிலுள்ள எழை, எளிய மக்களுக்கான சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுக்கோட்டையைச் சுற்றி யுள்ள பட்டி தொட்டிகளிலுள்ள மக்கள் எல்லாம் இவர் கைகள் பட்டு நலம் பெற்றனர்.

அவரது வளர்ச்சியில், சேவையில் உள்ளம் மகிழ்ந்த பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினர்.

ஆனால்...

டாக்டர் முத்துலட்சுமிக்கோ, படிப்பிலும், மக்கள் சேவையிலும் இருந்த ஆர்வம், திருமணத்தில் இல்லை.

திருமணம் தனது சுதந்தரத்தையும் மக்கள் சேவை யையும் முடக்கிப் போட்டுவிடும் என்று அஞ்சினார்.

இருப்பினும், அன்றைய சென்னை மாகாண முதல்வர் மாண்புமிகு சுப்பராயலு ரெட்டியாரின்  மகன் சுந்தர ரெட்டி, முத்துலட்சுமியின் தந்தையை அணுகி, ‘முத்துலட்சுமியின் மனம் அறிந்தவன் நான். அவரைத் திருமணம் செய்து கொள்ள மனங்கொண்டேன்’ என்று கூறிப் பெண் கேட்டார்.

அவரது விருப்பத்தை அறிந்த போது, முத்துலட்சுமி மூன்று நிபந்தனைகளை விதித்தார். அவை: 1. என்னைச் சரிசமமாக நடத்த வேண்டும். 2. என் விருப்பங்களுக் குத் தடையாக இருக்கக்கூடாது. 3. நான் சுதந்தர உணர் வோடு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

சுந்தர ரெட்டி அந்நிபந்தனைகளை ஏற்றார்.

பிறகு, 1914 ஏப்ரலில் மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்துத் திருமணங்களை நடத்தி வந்த அடையாறு பிரம்ம சமாஜ சபையில், டாக்டர் முத்துலட்சுமி-டாக்டர் சுந்தர ரெட்டி திருமணம் நிறைவேறியது. இருவரும் சென்னையிலேயே பணி புரிந்தனர்.

இவ்விணையருக்கு இராம் மோகன், கிருஷ்ணமூர்த்தி என இரு மகன்கள். இராம் மோகன் திட்டக்குழுவில் பணியாற்றினார். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிருவகித்து வந்தார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அன்பான, தந்நல மற்ற மருத்துவச் சேவை, மக்கள் அனைவரையும் கவர்ந்தது. அவரது அறிவு, ஆற்றல், திறமை, ஓயா உழைப்பு ஆகியவற்றை அறிந்த சென்னை மாகாண முதல்வர் (பிரதமர்) பனகல் அரசர், (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்-நீதிக்கட்சியின் புகழ்பெற்ற தலைவர் களுள் ஒருவர்), உயர் கல்வி பயில இலண்டன் செல் வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.

டாக்டர் முத்துலட்சுமி 1925இல் இலண்டன் சென்று அங்குள்ள செல்சியா மருத்துவமனையில் தாய்-சேய் மருத்துவ ஆராய்ச்சியும், இராயல் புற்றுநோய் மருத்துவ மனையில் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்து வந்தார்.

இங்கிலாந்தில் இருக்கும்போது 1926ஆம் ஆண்டு பிரான்சு தலைநகர் பாரிசில் உலகப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக டாக்டர் முத்துலட்சுமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவரின் உரையில், “ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்ணடி மைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத் தினார்.

தாயகம் திரும்பியதும், 1927இல் சட்டமன்ற உறுப் பினராக நியமிக்கப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய பணிகள் குறித்து முன்பே விளக்கப்பட் டுள்ளன.

இந்தியாவில் 1929ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போராட்டத்திற்கு ஆதரவாக டாக்டர் முத்துலட்சுமி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

பெண்களிடம் சுயமரியாதை உணர்வு எழ ‘ஸ்திரி தர்மா’ என்ற இதழை நடத்தினார். பெண்களுக்காகப் பாடுபட, “அனைத்து இந்தியப் பெண்கள் சங்கத் தை”த் தோற்றுவித்துப் பாடுபட்டார்.

1930ஆம் ஆண்டு மே திங்கள் 10, 11ஆம் நாள் களில் ஈரோட்டில் இரண்டாவது மாகாண சுயமரி யாதை மாநாடு நடைபெற்றது. அதில் பெண்கள் மாநாட்டில் டாக்டர் முத்துலட்சுமி தலைமையேற்று ஆற்றிய உரை பெரியாரின் பாராட்டைப் பெற்றது.

1933ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற நிர்மாண ஊழியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அம்மையார் ஆற்றிய உரை, மகாத்மா காந்தி அவர் களைப் பெரிதும் கவர்ந்தது. அதே ஆண்டில் அமெரிக் காவில், சிகாகோவில் நடைபெற்ற பெண்கள் மாநாட் டில் கலந்துகொண்டு பெண்கள் உரிமை குறித்து அரியதோர் உரை நிகழ்த்தினார்.

1937-1939 வரை சென்னை மாநகராட்சியின் நியமன உறுப்பினராக அம்மையார் பதவி வகித்து சென்னை நகரின் மேம்பாட்டிற்காக உழைத்தார். இவரது சிறப்பு மிக்க பணியினைக் கண்டு மாநகரத் தலைமை இவருக்கு ‘ஆல்டர் வுமன்’ (Alder-Woman) என்ற பட்டத்தைத் தந்து சிறப்பித்தது.

அவ்வை இல்லம்

தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட மசோதா சட்ட மன்றத்தில் 1929இல் நிறைவேறிய பின், அப்பெண் களைக் காப்பகத்தில் சேர்த்துக் கொள்ள விடுதிக் காப் பாளர்கள் மறுத்துவிட்டனர். அதனால் அப்பெண் களைத் தன் வீட்டிலேயே தங்க வைத்தார்.

இதன் விளைவாக, வாழ்வில் வழுக்கி விழுந்த வனிதையருக்கு வாழ்வளிக்கும் இல்லமாக அவ்வை இல்லத்தைத் தோற்றுவித்தார்.

நடத்தை தவறிய பெண்களுக்குப் பிறந்த குழந் தைகளைக் குப்பைத் தொட்டியில் வீசிவிடுவது வாடிக் கையாக இருந்து வந்தது. அத்தகைய அநாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து அவர்களுக்கு ஒளி மயமான எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம்.

இன்று பெருமையாகப் பேசப்படுகின்ற ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’, ஜெயலலிதாவின் மூளையில் உதித்த அற்புதத் திட்டம் என்று எண்ணுகின்ற தமிழ் மக்கள், இத்திட்டம் டாக்டர் முத்துலட்சுமி அவர்களால் அன்றே அவ்வை இல்லம் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்ற ஒப்பற்ற திட்டம் என்ற உண் மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதியாகவும், குழந்தைகள் காப்பகமாகவும், ஆதரவற்று வாடிடும் முதியோர் பராமரிப்பு இல்லாமாகவும் அவ்வை இல்லம் செயல்பட்டு வருகின்றது.

அவ்வை இல்லத்தில், ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், கல்வி பெற்றுத் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் சிறந்திட, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகிய பள்ளிகள் செயல்படுகின்றன.

புற்றுநோய் மருத்துவமனை

1935ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரி யின் நூறாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அவ்வமயம் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்கச் சிறப்பு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார், டாக்டர் முத்துலட்சுமி. ஆனால், அத்தீர்மானத்திற்கு அரசின் ஒப்புதல் கிட்டவில்லை.

இருப்பினும் அவருடைய கனவு, இலட்சியம், அவரது பெருமுயற்சியால் 1952ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் அடையாறில், புற்றுநோய் மருத்துவ மனைக்கு அந்நாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார்.

1954ஆம் ஆண்டு சூன் 18ஆம் நாள் 12 படுக்கை களுடன் அம்மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. தற்போது ஏறத்தாழ 500 படுக்கைகள் கொண்ட பெரிய சிறப்பு மருத்துவமனையாகச் செயல்படுகிறது. அதில் சுமார் 300 படுக்கைகள் ஏழைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆண்டு முழுவதும் 1,25,000 நோயாளிகள் தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இவர் இந்தி மொழி எதிர்ப்புப் போர், தமிழிசை இயக்கம், தனித் தமிழியக்கம், தமிழாசிரியர் ஊதிய உயர்வு எனப் பல்வேறு களங்களில் பணியாற்றி யுள்ளார்.

1936ஆம் ஆண்டு சென்னை அடையாறில் குடியேறிய பின், முழு நேர மருத்துவப் பணியோடு, மீனவக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபட்டார். படிக்கும் மாணவர் பயனுற நூலகங்கள் தோற்றுவித் தார். மருத்துவர் சௌந்திரம் இராமச்சந்திரன் துணை யோடு காந்தி கிராமப் பணிகளைத் தொடங்கினார்.

20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய பெண் சமூகப் போராளி, பெண்களின் சிறுமையைப் போக்கவும் அவர்கள் மேன்மையடையவும் தன் வாழ் நாளை அர்ப்பணித்துக் கொண்ட பெண் புரட்சியாளர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், அகவை 82இல் 1968, சூலை 22ஆம் நாள் இயற்கை எய்தினார்.

அவர் மறைந்தாலும் அவரது தொண்டின் மேன் மையை அவ்வை இல்லமும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும் உலகினர்க்கு உணர்த்திய வண்ண முள்ளன!

வாழ்க டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் தெண்டும் புகழும்!

Pin It