என் மகள் பெரியவள் ஆகிவிட்டாள் என்ற செய்தியை என் மனைவி எனக்கு அறிவித்தாள். அப்படியா என்றபடி நான் வீட்டில் நுழைந்து, பின்புற‌ம் சென்று முகம் கழுவிவிட்டு வந்து, தட்டைக் கழுவி சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.

என்னுடைய செயல்களை என் மனைவி கதவருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது என் கவனத்தில் இருந்தது. எனது சிந்தையோ முடிந்த வேலைகளில் மறுநாளைய சவால்களில் இருந்தது.

‘நீயெல்லாம் மனுஷனா?' என்று அவள் கேட்டாள்.

'என்ன?' என்பதுபோல நிமிர்ந்து பார்த்தேன்.

'நான் மனுஷனில்லை. அதாவது மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வழக்கமான மனுஷனில்லை. மாறாக, கம்யூனிஸ்ட். அதாவது உன்னத மனிதன் என்று பொருள்.'

'ஒம்பொண்ணு பெரியவ ஆயிட்டா.. இன்னிக்கு ஸ்கூல்ல..' என்றாள்.

'உம்'. என்றேன்.

'என்ன கதையா சொன்னேன்?' என்றாள் அவள்.

'சரி, இப்ப என்ன பிரச்சனை?' என்றேன்.

அவளால் நம்ப முடியவில்லை. என்னை பார்த்துக் கொண்டிருந்தாள்.

'பொம்பள பிள்ளை வயசுக்கு வருவது ஒரு உடலியல் நிகழ்வு....' என்று ஆரம்பித்தேன். விசுக்கென்று எழுந்தவள்.. 'இந்த கதையெல்லாம் கட்சி மீட்டிங்கல பேசுங்க.. இப்ப நாளைக்கு என்ன பண்றது?' என்றாள்.

'ம்… சுத்தமா குளிக்க வை… அவளுக்குப் பிரச்சனையில்லன்னா ஸ்கூல் போகட்டும்… அவளால முடியாட்டா வீட்ல இருக்கட்டும்'. என்றேன்.

'அப்ப தாய் மாமனுக்கு சொல்ல வேணாமா?' என்ற குரல் மட்டும் கதவுக்குப் பின்னாடி கேட்டது..

'எதுக்கு ?' என்றேன்.

'அவங்களுக்கு உரிமை இருக்கில்ல?' என்ற அவள் குரல் கேட்டது.

'உன் பொண்ணோட உரிமை உன் பொண்ணுகிட்டதான் இருக்கனும்' என்றேன்.

கதவு அறைந்து சாத்தப்பட்டது.

மறுநாள் காலையில் நான் எழுவதற்கு முன்பே உறவினர்கள் பட்டாளம் இருந்தது. தெற்கேயிருந்து பஸ் பிடித்து வந்திருக்கிறார்கள். தூக்கம் கெட்டு எழுந்த எனக்கு எரிச்சல் வந்தது. எரிச்சல் அப்போது மனதில் இல்லை.. கண்ணில். கண்ணைத் திறந்தபோது சூரிய வெளிச்சம் உறுத்தியது. கண் எரிந்தது. என்ன நடக்கிறது என்று யோசித்தபோது தெரிந்தது. என் மனைவி எனக்குத் தகவல் சொல்லாமலேயே தன் சொந்த பந்தங்களுக்குத் தெரிவித்திருக்கிறாள் என்று தெரிந்தது. மனது எரிந்தது.

நான் என் தரப்பு உறவினர்களிடம் இரத்த சொந்தம் உரிமை, கடமை பாராட்டுவதில்லை. அதெல்லாம் நடப்பு சமூக உறவுகளில் சிக்கவைக்கும் பொறி என்பது எனக்குத் தெரியும். பிரச்சனை ஏதாவது வந்தால் போய் தீர்த்துவைத்துவிட்டு வருவேன். கல்யாணம், சீர், செய்முறை என்று வந்தால் போகமாட்டேன். ஏன் என்று கேட்பார்கள். நான் கம்யூனிஸ்ட்..

உங்கள் மகிழ்ச்சியை வாழ்த்துவேன். அது உங்களுடையது. உங்களுடைய பிரச்சனையில் உதவுவேன் அது என்னுடையது என்பேன். நான் சொல்லும்போது அவர்களுக்குப் புரியவில்லை. செய்தபோது புரிந்துவிட்டது.

உடல் அசதியால், ‘ஏதாவது நடக்கட்டும்… கழுதைகள்’, என்று எண்ணியபடி தூங்க முயற்சி செய்தேன்.. ஆனால், முடியவில்லை.

பெண்ணாகி விட்ட என் மகள் வயிற்றுப் பேரனை நான் பார்க்கப்போவது பற்றி என் மகளின் முறைப்பையனின் தாய் என்னருகே வந்து கிண்டல் செய்த போது எனக்கு வெறி பிடித்தது. என்ன கத்தினேன் என்று தெரியாது. எனக்குக் கோபம் வந்து கத்தினால் அது இரண்டு தெருவுக்குக் கேட்கும். வீட்டில் கூச்சல் அடங்கியது. மயான அமைதி. பெண்ணின் கணவன் என்ற ஆணுக்கு என்ன மரியாதை என்று அப்போதுதான் புரிந்தது. எழுந்து அப்படியே கழிப்பறை சென்று குளியல் வரை முடித்துவிட்டு..

அந்த வீட்டில் என் அறைக்குச் சென்று, பேண்ட் சர்ட் மாட்டிக்கொண்டு சாப்பிடாமல் புறப்பட்டேன். என்னைத் தடுத்துப் பேசும் துணிச்சல் யாருக்கும் இல்லை. நான் வெளியேறி கீழே இறங்கிய பின்னர் பேச்சு சத்தம் துவங்கியது. எனது ஓட்டை டிவிஎஸ் 50யை உதைத்து கட்சி அலுவலத்தை நோக்கிப் புறப்பட்டேன்.

வழக்கம்போல என் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது ஒரே நிசப்தம். வழக்கமாக நான் வீடு திரும்ப இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடும். அன்றோ கமிட்டி கூட்டம். வந்தபோது நள்ளிரவு 2 மணி இருக்கும்.

என் மனைவி தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்துவிட்டு படுத்துவிட்டாள்.

சமையலறையில் இருந்தவற்றைப் பார்க்கும்போது என் பெண்ணுக்கு பூப்புனித நீராட்டு நடந்திருப்பது தெரிய வந்தது.

எரிச்சலாக வந்தது. பெண்ணை இழிவுபடுத்தும் இதுபோன்றவை என் வீட்டிலும் நிகழ்வது அருவறுப்பாக இருந்தது. இருந்தாலும் என்ன செய்வது.

சாப்பிடாமல் படுத்துவிட்டேன்.

மறுநாள் காலையில் என் மனைவி என்னிடம் பேசவில்லை. என் பெண்ணும்தான். இப்படியே ஒரு வாரம் ஓடியிருக்கும்.

அப்புறம், ஒரு நாள், என் பெண் என்னிடம் கேட்டாள்.. ‘அன்னக்கி நீ ஏன் இல்லை?’

என்றைக்கி என்று எனக்குப் புரியவில்லை. அவள் கையில் இருந்த ஆல்பத்தைப் பார்த்தவுடன் புரிந்தது.

முதலில் எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. நேரம் உறைந்து கிடந்தது. பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன் என்று அவள் நினைப்பாளோ என்று தோன்றியது.

என்னிடம் பதில் இருந்தது. ஆனால், இந்த பச்சிளம் பெண்ணிடம் எப்படி சொல்வது என்று புரியவில்லை. ஆனால் நான் முரடன். பளிச்சென்று கேட்டேன்..

‘சரி.. ஆம்பள வயசுக்கு வாரான் அத ஏன் கொண்டாடறது இல்ல.. அவனுக்கு ஏன் பூப்புனித நீராட்டு இல்ல..?’

இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது. அதிர்ந்து போய் நின்றிருந்தாள். ஆண் வயதுக்கு வருவது எப்படி என்று பெண்ணுக்கு தந்தை விளக்க முடியுமா? என்னால் விளக்க முடியும். நான் ஆணில்லை என்ற திமிர் எனக்குண்டு.

‘பெண்ணுக்கு நிகழும் முதல் இரத்தப்போக்கைக் கொண்டாடுவதன் காரணம் அவள் யாருக்கு உரிமை என்று அறிவிப்பது, முறைப்பையன்/ தாய் மாமன் உரிமையை அங்கீகரிப்பதற்காக.. என் பெண்ணின் உரிமை என் பெண்ணிடமே இருக்க வேண்டும் என்று கருதும் தந்தை நான்.’. என்றேன்.

அவளுக்குப் புரியவில்லை என்பதை விட அவளுக்கு ஏற்பில்லை என்பதை அவள் சொன்னது புரியவைத்தது.. ‘அது என்னவோ.. எனக்கு அப்படி செய்ய பிடிச்சிருந்துப்பா.. அப்ப என் அப்பா கூட இல்லன்னு வருத்தமா இருக்குப்பா’, என்றபடி விலகினாள்.

எனக்கு வலித்தது. அவள் கண்ணீரை மறைக்கிறாள் என்று தெரிந்தது. அவளின் விருப்பத்தை மீற நான் யார் என்று எனக்குத் தோன்றியது. என் சமூகக் கருத்துக்களைத் திணிக்கும் நானும் ஆண் தானோ என்று கேள்வியெழுந்தது. என் மகளின் சந்தோஷக் கணம் ஒன்றை சிதைத்துவிட்டேன் என்று நெஞ்சம் கனத்தது.

மெதுவாக, சிகெரெட் ஒன்றைப் பற்றவைத்து இழுத்தேன். சுமை போல, புகை நெஞ்சில் நிறைந்தது. யோசித்தேன். நான் செய்தது சரியா தப்பா?

தப்பில்லை என்றுதான் பட்டது. தவறான ஒரு மகிழ்ச்சியை என் பெண்ணுக்கு நான் எப்படி அளிக்க முடியும்? அந்த மகிழ்ச்சியை அவள் அடைந்தபோது நான் அங்கில்லை என்பதைத் தவிர நான் வேறு என்ன செய்தேன்? ஒரு தப்புக்கு நான் எப்படித் துணை போக முடியும் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.

அப்பறம் ஒரு வருடம் கழித்து என் பெண் என்னிடம் சொன்னாள். ‘நா அவனை லவ் பன்றேன்பா..’

எனக்கு முதலில் தோன்றியது ‘கால்ப் லவ்’ என்ற வார்த்தைதான். இருந்தபோதும்.. அது அவளின் லவ் என்று நினைத்துக்கொண்டு ‘யார் அவன்’. என்றேன்.

‘நம்ம சக்தி’, என்றாள்.

‘நம்ம சக்தின்னா?’

‘ஒனக்கு சொந்தக்காரங்க பேர் கூடத் தெரியாது, ஒறவு மொறையும் தெரியாது’, என்று அலுத்துக்கொண்டு சொன்னாள் ‘ஒம் பொண்டாட்டியோட அண்ணனோட பையன்’.

எனக்கு மனசு விலுக்கென்றது.

இது சரிப்படாது என்று தோன்றியது.

நெருங்கிய உறவில் திருமணம் மோசமான குழந்தைகளைக் கொண்டுவரும் அபாயம் இருப்பது எனக்குத் தெரியும். என் அக்கா தன் தாய் மாமனைக் கட்டிக்கொண்டு பெற்று எடுத்த அனைத்து பிள்ளைகளும் ஊனம்.. ஒன்று உடல் ஊனம் இல்லையென்றால் மூளை ஊனம்.
இரண்டாவது காரணம், பூப்புனித நீராட்டு உள்ளிட்ட சமூக நடவடிக்கை, உறவுகளின் தூண்டுதலால் கட்டமைக்கப்பட்ட காதல்.. கால்ப் லவ்வாக இருந்தாலும் கால்ப் லவ்வில்லை.
அவளிடம் ‘எனக்குச் சரின்னு படல’, என்றேன். காரணங்களை விளக்கினேன். அவள் என்னையோ பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த ஆள் என்றைக்குத் திருந்துவான் என்று பார்க்கிறாள் என்று தோன்றியது.

'அப்புறம், அவன் கிராமத்துப் பையன். இன்னும் +2 தாண்டல... 3 வருஷம் பெயில். நீ அப்புடியில்ல.. நீ மெட்ராஸ்காரி.. மனசு, மதிப்பீடு ஒத்துப்போகும்னு தோனலை’, என்றேன்.

எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அவள் பெரிய கண்கணை உருட்டி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘இது எங்கருத்து.. நீதான் முடிவெடுக்கனும். ஆனா… நீ கஷ்டப்படுறன்னா என்னால தாங்க முடியாது.. இருந்தாலும் அது ஒன்னோட வாழ்க்கை’, என்று எழுந்து மொட்டை மாடிக்குச் சென்று சிகெரெட் பற்ற வைத்துக்கொண்டேன்.

சென்னையின் அந்த மதிய வெயிலில் எங்கிருந்தோ ஒரு குயிலின் குரல் கேட்டது. அதனைத் தொடர்ந்து எதிர் திசையில் இருந்து மற்ற குயிலின் குரல்.

காதல்.. காலம் இல்லை.. நேரம் இல்லை அதுதான் காதல்.. அதுதான் உயிர்களின் இயக்குவிசை என்று யோசித்துக்கொண்டு நின்றிருந்தேன்.

‘த ஏன் வெயில்ல நிக்கிற உள்ள போப்பா’, என்றபடி என் பெண் என்னைக் கடந்தாள்..

‘ம்ம்’ என்று யோசித்தேன். இத்தனை முட்டல்களையும் தாண்டி என் பெண் தன் தந்தையை நேசிக்கிறாள் என்று பட்டது. மனது அமைதியானது.

இவளை நினைக்கும்போதெல்லாம் அந்த ஒரு நாள் என் மனதில் படம் போல ஒடும். கட்சியில் என்னை முழுநேர ஊழியர் ஆக்கியிருந்தார்கள். அதற்காக நான் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். குடும்பத்தை அழைத்துச் செல்ல வசதி வாய்ப்பு இல்லை. எனவே தனியாளாக சென்றிருந்தேன். அந்தக் கதை தனி. இப்போது சொன்னால் ஒத்து வராது. பசி, பட்டினி, கொசுக்கடி ஆனாலும் கட்சி முன்னேறுவதில் மகிழ்ச்சி என்று மட்டும் இப்போது சொல்லலாம்.வெகு நாட்கள் கழித்து, இல்லை மாதங்கள் கழித்து இரண்டு நாள் விடுமுறையில் ஊர் திரும்பினேன்.

என் மகள் அப்போது தவழும் வயது. ஊர்ந்து வந்து என் கால்களைத் தொட்டாள்.. ஊர்ந்து என்று சொல்வது தவறு. அந்த கைகளின்.. அந்த கால்களின் விரைவை ஊர்ந்து என்று சொல்ல முடியாது. ஏக்கம் என்று சொல்ல வேண்டும். அள்ளி அணைத்துக்கொண்டேன். அப்புறம் அவள் இறங்கவேயில்லை. என் மகள் மிகவும் மெலிந்திருந்தாள். உடலில் எலும்புகள் தெரிந்தன.

சென்னைக்குப் புறப்பட வேண்டிய நாளும் நேரமும் வந்தது. பையைத் தூக்கித் தோளில் போட்டுவிட்டு என் செல்லத்திற்கு டாட்டா சொன்னேன். என் மகள் தவழ்ந்தபடியே வந்து என் கால்களைக் கட்டிக்கொண்டாள். நான் புறப்படுகிறேன் என்று அவளுக்குத் தெரிந்திருக்கிறது. அவள் என்னை விடத் தயாராக இல்லை. சதையிலிருந்து தோலைப் பிரிப்பது போல அவளைப் பிய்த்து எடுத்து அவள் அம்மாவின் கையில் கொடுத்தேன். புறப்பட்டேன்.

அந்த இரவின் அமைதியில் அவள் அழுகுரல் என்னை விரட்டியது. அவளின் குரல் என்னைத் திரும்பச் செய்துவிடும் என்று பயந்து நடந்தேன். கண்களில் நீர் கசிய நடந்தேன். இன்னும் ஒரு வாரத்தில் என் கட்சிப் பொறுப்பில் ஒரு முக்கிய கடமையை நிறைவேற்ற வேண்டும். நெஞ்சம் வலிக்க நடந்தேன். பேருந்து பயணத்தில் நான் தூங்கவேயில்லை.

அப்புறம் சில மாதங்கள் கழித்து குடும்பத்தை சென்னைக்குக் கொண்டுவந்தேன். ரொம்ப கஷ்ட ஜீவனம். கட்சி அளித்த ஊதியம் போதாது. என் நண்பர்கள் சிலரும் கூட உதவி செய்தனர். ஆனாலும் சென்னை ஒரு மலை விழுங்கி. நீங்கள் சம்பாதிப்பதை அது சாப்பிட்டுக்கொண்டிருக்கும், மௌனமாக..

அந்த ஒரு சம்பவத்தை மட்டும் சொல்ல வேண்டும். உங்களுக்குப் புரிந்துவிடும்.. நாங்கள் குடியிருந்தது சென்னையின் தாழ்வான, நாகரீகமான சேரிப் பகுதி. மூன்று நாள் மழையில் எல்லா இடத்திலும் வெள்ள நீர். சமைக்கக் கூட வழியில்லை. குடையை எடுத்துக்கொண்டு முழங்கால் நீரில் நடந்துபோய், தொலைவில் இருந்த கடையில் இருந்து பிரட் பாக்கெட் ஒன்று வாங்கிக்கொண்டு திரும்பி நடந்தேன். ஒரு கையில் குடை.. அத்தோடு சேர்ந்து ரொட்டி பாக்கெட். மறு கையில் லுங்கியைத் தூக்கிப் பிடித்திருந்தேன்.

அந்த வெள்ளக் காட்டில் கால் தடுமாற ரொட்டிப் பாக்கெட் வெள்ள நீரில் விழுந்துவிட்டது. சட்டென்று பாய்ந்து எடுத்துக்கொண்டேன். அது அந்தக் காலத்து மாடர்ன் பிரட். பிளாஸ்டிக் பை ஒட்டப்பட்டிருந்த இடத்தில் வெள்ள நீர் புகுந்திருந்தது தெரிந்தது. சென்னையின் வெள்ள நீர் பற்றி உங்களுக்குத் தெரியுமோ என்னவோ.. ? எனக்குத் தெரியும்…. கக்கூஸ் தண்ணி..
ரொட்டிப் பாக்கெட்டைத் தூக்கிப் போட நினைத்தேன். மனமில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று யோசித்தபடி எத்தனை பணம் இருக்கிறது என்று சோதித்தேன். இன்னோரு ரொட்டி பாக்கெட் வாங்க வழியில்லை என்று தெரிந்தது.

ரொட்டி பாக்கெட்டைத் தலைகீழாப் பிடித்தபடி வீட்டுக்கு நடந்தேன். நீர் படாத கடைசி சில துண்டுகளை என் மகளுக்குக் கொடுத்தேன். அதில் அவள் எனக்கும் ஊட்டினாள் என்பதையும் சொல்ல வேண்டும்.

இப்படி வளர்த்த பெண்தான் இன்று என் மதிப்பீடுகளையே கேள்வி கேட்கிறாள் என்பது வலித்தது.

இந்தக் கதையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது என் மகளிடமிருந்து போன் வந்தது. அவள் கணவனின் லேப்டாப்பில் விண்டோஸ் எக்ஸ்பியிருந்து 7க்கு மாறிய பின்னர் டாட்டாவின் போட்டான் வேலை செய்யவில்லையாம். நிறைய கேள்விகள் கேட்டு பதிலளித்து ஒன்றும் நடக்கவில்லை. பின்னர், என்ன நடந்திருக்கும் என்று யோசித்து பின்னர் ஒரு பதில் சொல்லிவிட்டு ‘இதாங் கடைசி ..இதுவும் ஒர்க் அவுட் ஆகலைன்னா சர்வீஸ் செண்டர்தான் வழி’, என்று முடித்தேன்.

பத்து நிமிடத்தில் அழைத்தாள்.. ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம். போட்டான் நிறுவப்பட்டு ஆண்டி வைரஸ் அப்டேட் ஆகிறதாம்..

மகிழ்ச்சி.. ஆனால், இந்த லாஜிக் உனக்குத் தெரிய வேண்டும் என்று விளக்கத் துவங்கினேன்.

கேட்டுக்கொண்டாள்… ‘தேங்ஸ் ப்பா’, என்றாள்.

இன்றைக்கும்… அவளுக்கு விவரம் தெரிந்து, ஏறக்குறைய 25 வருடம் கழித்தும் எனக்கும் என் பெண்ணுக்குமான உறவு இப்படித்தான் இருக்கிறது. அறிவால் தொடர்புகொள்ளும் நேசம் என்பதாக இருக்கிறது.

இடையில் நிறைய நடந்துவிட்டது. என் மனைவியை நான் பிரிந்துவிட்டிருந்தேன். ம்ம்..

இது ஒரு வேளை நான் ஆண் என்பதால் சொல்லப்பட்ட கூற்றாக இருக்கும்… என் வாழ்க்கைக்கும் என் மனைவியின் விருப்பங்களுக்கும் ஒத்துவரவில்லை என்பதால்… விலகிவிட்டேன். ஒருவேளை நான் மனைவியாக இருந்தால் இது நடந்திருக்குமா என்று என்றும் யோசிக்கிறேன்..

என் மகளின் தாய் மாமன் பையனை என் மகள் வெறுத்தொதுக்கிவிட்டிருந்தாள். அதெல்லாம் நடந்தது பத்து வருடங்களுக்கு முன்பு.

அப்போது என்னோடு இருந்தால் என் பெண் கெட்டுப்போய் விடுவாள் என்று மதிப்பிட்டு, மகளின் பாதுகாப்பான வாழ்க்கைக்காக அவளின் தாய் மாமன் வீட்டிற்கு தன் மகளை அனுப்பி +1 படிக்க வைத்திருந்தாள். +2 பரிட்சை எழுதிவிட்டு சென்னை வந்த என் பெண்.. ‘பேசணும்பா’, என்றாள்.

உடனே என் கணினி சேரில் உட்கார்ந்து சொல் என்றேன்.

‘எனக்கு அவனப் பிடிக்கலப்பா’, என்றாள்..

எவனை என்று யோசித்தேன். புரிந்தது.

‘ஏன்?’, என்றேன்

‘அவஞ் சந்தேகப்படறான்பா..’, என்று அழுதாள்.

‘நாஞ் சொல்றத கேளுடின்னு சொல்றாப்பா’, என்றாள்.

மெதுவாக.. நேரம் எடுத்து அவள் சொன்ன கதைகளைக் கேட்டேன்.

‘சரி… வுடு… மேலப்படி.. ஒனக்கு வயசு என்ன? படி… சம்பாதிக்கப்பாரு.. உன் கால்ல நீ நிக்கனும்… அப்புறம் எந்த நாயக் கட்டிகிட்டாலும் பிரச்சனை இல்லை…’, என்றேன். இதே வசனத்தை என் வாழ்க்கையில் பல ‘மகள்’களிடம் சொல்லியிருக்கிறேன் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.

அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. தரையில் அமர்ந்திருந்த அவள், அந்த நாள் சம்பவம் போல, அவள் தவழும் குழந்தையாய் இருந்த நாள் போல, தவழ்ந்து நகர்ந்து வந்து என் மடியில் தலை வைத்துக்கொண்டு அழுதாள். என் தாய் என் தலையைக் கோதிவிட்டதுபோல அவள் தலையைக் கோதிவிட்டேன்.

என் மகள் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிக்கும்போது மறுபடியும் பிரச்சனை வந்தது.

‘என்னோட பிரண்ட நீ பார்க்கனும்’, என்றாள்.

‘எதுக்கு?’, என்றேன் நான்.

‘என்னோட பிரண்டு.. அது பாய் பிரண்டு’, என்றாள் அவள்.

நான் மிக மகிழ்ந்த கணங்களில் அது ஒன்று.

பாய் பிரண்டைப் பார்த்துப்பேசு என்று எந்தப் பெண் தன் தந்தையிடம் சொல்லியிருப்பாள்..?..! அவனை அழைத்து வந்தாள். அவளின் அம்மாவுக்குத் தெரியாமல் எங்கள் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் அந்த நிகழ்வு நடந்தேறியது.

அவன் என் கண்களைப் பார்த்து பேசினான். +2 முடித்துவிட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தபாலில் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் நான் பிறந்த சாதிக்காரன் இல்லை. என் மனைவியின் சாதியும் இல்லை.

‘இவள ஏன் பிடிக்குது?’, என்று கேட்டேன்.

என் பெண் என்னைப் போல கருப்பு… என்னைவிட மிக ஒல்லி.. என் தாயைப்போல இருப்பாள். நகரத்தின் பெண்கள் கூட்டத்தில் இவளை ஏன் பிடித்தது என்று புரியவில்லை… கேட்டேன்.

அவன் பதில் சொல்லவில்லை, யோசித்தான். பிறகு என் கண்களை நேராகப் பார்த்து சொன்னான்.
..
‘பிடிச்சிருக்கு… ஆனா.. ஏன்னு தெரியல’.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவனை அனுப்பி வைத்தேன்.

என் பெண் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்..

’என்னப்பா..?’

அவளது கண்களைப் பார்த்தேன். பயம் எதிர்பார்ப்பு என் மேல் உள்ள நம்பிக்கை என்று நிறைய தெரிந்தது.

‘ஓகே’ என்றேன். ‘மற்றது பற்றி தெரியாது.. ஆனால், அவன் நேர்மையானவன் என்று தோணுது’, என்றேன்.

ஒரு ஆணிடம் கழுத்தை நீட்டுவது, ஒரு பெண்ணைப் பொருத்தவரை .. சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுப்பது.. இவன் பரவாயில்லை என்று தோன்றுகிறது என்றேன். படித்து வேலைக்குப் போ.. இவனையே கூட கல்யாணம் செய்துகொள்.. என்றேன். என்னைக் கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள்.

அதற்கப்புறம் நிறைய நடந்தது. நானும் என் மனைவியும் பிரிந்தது அதன் பின்தான் நடந்தது.  கட்சியில் கடும் பிரச்சனை. சென்னையே வேண்டாம் என்று நான் தெற்கே நகர்ந்துவிட்டேன். சில நாட்களில், தனது சொந்த காரணங்களுக்காக என் மனைவியும் தன் தாய் வீட்டுக்குப் போய்விட்டாள்.

என் மகளின் படிப்பை நான் கவனித்துக்கொள்ள அவள் மகளிர் விடுதியில் தங்கினாள். அவன்தான், அவளின் காதலன்தான், என்னைப்போல, தந்தையைப் போல என் மகளைக் கவனித்துக் கொண்டான்.

அப்புறம் அவள் படிப்பை முடித்து, அவள் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தாள். அவளின் காதலனுடன் திருமணமும் நடந்தது. நானும் அவளின் அம்மாவும் சேர்ந்த நின்று அவள் திருமணத்தை நடத்தினோம். அவள் அம்மாவை நான் சந்தித்தது அதுதான் கடைசி முறை.

இப்போது என் மகளுக்கு ஒரு பையன் இருக்கிறான். என் பெயரைச் சொல்லி அத்தோடு தாத்தா என்பதையும் சொல்லி அழைக்கிறான். 1வது படிக்கும் அவன், அம்மாவோடு சண்டை வந்தால் என்னை அழைத்துப் புகார் சொல்கிறான்.

என் மகள் இப்போது எம்எஸ்சி படிக்கிறாள், தொலை தொடர்பு முறையில். பாடங்களில் சந்தேகம் வந்தாள் என்னை அழைப்பாள். அவள் படிக்கும் வேதியியல்தான் நான் படித்தது. அவளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக நான் மேலும் படிக்கிறேன்.

சென்னைக்கு வந்து வீட்லேயே இருப்பா என்கிறாள் அவள்.

செய்யலாம்தான். ஆனால், ஒரு கம்யூஸ்டுக்கு அது சாத்தியமாகுமா?

வழக்கம் போல அரசியல் என்னை விரட்ட நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நின்று யோசிக்கும்போது ஒன்று படுகிறது.

நான் தந்தை என்ற முறையிலும் கூட என் கடமையைத் தவறவிடவில்லை. எளிதான வழிகளில், வழக்கமான சமூகப் பாதையில் நான் சிக்கிக்கொள்ளவில்லை.

அதுதான் கம்யூனிஸ்டின் அழகு என்று என்னையே நான் பாராட்டிக்கொள்ளும் சமயங்களில் இதுவும் ஒன்று.

 

Pin It