உலக அதிசயங்களும் உடன் வந்த கதைகளும் - 1

கி.மு. 6ஆம் நூற்றாண்டு. தற்போது இருக்கும் ஜோர்டானின் தென் மேற்குப் பகுதியில் இருந்தது புகழ் பெற்ற அராபிய நகரமான பெட்ரா. ஒரு காலத்தில் நாடோடிகளாகத் திரிந்த அராபிய இனத்தவர்களான நெப்பாட்டியன்ஸ் தங்களுக்கென்று நிரந்தர‌மான வாழ்விடத்திற்காக பெட்ராவைத்தான் தேர்ந்த்தெடுத்தார்கள். அவர்கள் அங்கு குடியேறுவதற்கு முன்பே எடோனாமட்ஸி என்ற பழங்குடி மக்கள் பெட்ராவைச் சுற்றி தங்களின் குடியுருப்புகளை நிறுவி இருந்தார்கள். மண்பாண்டக் கலையின் சூட்சுமத்தை இவர்களிடம் இருந்துதான் நெப்பாட்டியன்ஸ் கற்றுக் கொண்டார்கள் என்பது வரலாறு.

Petra_640

சுவையான சுனை நீர். எங்கு பார்த்தாலும் அழகிய செந்நிறப் பாறைகள். ஊரைச் சுற்றி பாதுகாப்பான மலைக் கணவாய்கள். எல்லாவற்றிற்கும் மேலாக வந்தோரை வாழ வைக்கும் எடோமைட்ஸ் இனத்தவர்கள். நெப்பாட்டியன்ஸ் பெட்ராவைத் தேர்ந்தெடுக்க இதற்கு மேல் வேறு காரணங்கள் அவர்களிடம் இருந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அவர்கள் குடியேறி சுமார் 400 வருடங்களுக்குப் பிறகுதான் பெட்ராவைத் தங்களின் தலை நகரமாக்கினார்கள். அதற்கடுத்த 200 வருடங்கள் நீடித்த நெப்பாட்டியன்ஸ் ஆட்சியின் கீழ்தான் வணிகம் வேகமாக வளர்ந்தது. கிழக்கில் சீனாவையும், மேற்கில் ரோமையும் இணைக்கும் வியாபார மையமாக இருந்த பெட்ராவை கடந்து தினமும் ஏராளமான வணிகர்கள் கூண்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றார்கள். வாசனைத் திரவியங்கள், மூலிகைகள், உலர்ந்த பழங்கள், சர்க்கரை என்று பல பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தவர்கள் தங்களின் ஓய்விற்காகவும், கால்நடைகளின் தாகத்தை தீர்ப்பதற்காகவும், பெட்ராவில்தான் ஒன்று கூடுவார்கள். ஆரம்பக் காலங்களில் வணிகர்களுக்கு இலவசமாகக் கிடைத்த சலுகைகள் பிற்காலத்தில் நுழைவு வரியாக தத்தம் பொருட்களுக்கு ஏற்ப விதிக்கப்பட்டது. பெட்ராவின் கஜானாவும் நிறைந்து வழிந்தது. இதைக் கவனித்த ரோமானியர்கள் கி.பி முதல் நூற்றாண்டு வாக்கில் தங்களின் வணிகத்தை பெட்ராவில் தொடங்கி நாளடைவில் அந்த நாட்டையும் தங்களின் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார்கள். பெட்ராவின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்ட அண்டை நாடான பல்மைரா அதற்கு எதிராக வேலை செய்தது. இதனால் பெட்ராவின் செல்வச் செழிப்பு நலிந்து போக, ஏராளமான மக்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக கூட்டம் கூட்டமாக வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்தார்கள். ரோமானியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, மொகலாயர்கள் வந்தார்கள். 300க்கும் மேற்பட்ட நில நடுக்கங்கள் பெட்ராவைச் சிதைத்தது. இவ்வாறாக செழிப்பான ஒரு நகரத்தின் வளர்ச்சியை பல இனத்தவர்கள் கூறு போட்டு ஆதாய அறுவடை செய்தாலும், இயற்கையின் சீற்றத்தால் அந்த நகரம் சிதைந்து போனாலும் அங்கு எஞ்சிய பதிவுகள் நமக்கு இன்றளவும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது பெட்ரா மக்களின் கலாச்சாரப் பதிவுகளையும், அவர்களின் அன்றாட வாழ்வியல் போராட்டங்களையும்.
 
வருடத்திற்கு ஒரு முறை ரோமில் இருந்து உலர்ந்த திராட்சைகளை ஏற்றிக்கொண்டு ஒரு முதியவர் தன் பேரன் அமருடன் பெட்ராவில் தங்கிச் செல்வார். அதைப் போலவே பெட்ராவில் வசிக்கும் ஒரு முதியவரும் தன் பேத்தி சோபியாவுடன் மண்பாண்டங்களை விற்க அருகில் இருக்கும் சந்தைக்கு வருவார். அமரின் சுறுசுறுப்பைக் கண்ட அந்த முதியவர் அவனுக்காக இலவசமாக களிமண் பொம்மைகளைச் செய்து தருவார். திராட்சைக் கூடைகளை வண்டியில் இருந்து ஏற்ற இறக்க, கால் நடைகளுக்கு நீர் அருந்த வைப்பது போன்ற வேலைகளுக்கு அமருக்கு உதவுவார். முதியவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ஒத்த வயதினரான சோபியாவும், அமரும் எப்போதும் ஒன்றாக இணைந்தே காணப்பட்டார்கள். ஒவ்வொரு வருடமும் சோபியாவும் அமரை மீண்டும் சந்திக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பாள். பெட்ராவில் இருக்கும் முதியவர் தன் நண்பர் ரோமுக்கு திரும்பிப் போகும் போதெல்லாம், அவருக்காக களிமண்ணால் செய்த அலங்கார மதுக் கோப்பைகளை பரிசாகக் கொடுத்து மகிழ்வார். இப்படியாக இவர்களின் நட்பு பல வருடங்கள் நீடித்தது.
 
ரோமாபுரியை ஆண்ட கடைசி மன்னனான ரோமுலஸ் அகஸ்டுலஸ் ஆட்சியின் கீழ் ஏராளமான பதவிச் சண்டைகள், அண்டை நாட்டவர்களின் இட அபகரிப்பு, உள் நாட்டு சிப்பாய்களின் கலகம் என்று நாடு முழுக்க கொந்தளிப்புடன் இருந்தது. மறுபுறம் மக்களின் எழுச்சி. ஏராளமான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக ரோமிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் அறிந்து கொண்ட சோபியா அமரின் நினைவாகவே ஊண் உறக்கமின்றி நடை பிணமானாள்.
 
வழக்கமாக பெட்ராவிற்கு அமர் வந்ததைக் கேட்ட உடன் சோபியா தாத்தாவுடன் சென்று அமரை முதலில் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருவாள். ஊரினைச் சுற்றி இருக்கும் சிக் என்ற உயர்ந்த மலை இடுக்குகளில் இருவரும் ஒளிந்து விளையாடுவார்கள். 1200 மீட்டர் நீளமும், 3 இல் இருந்து 16 மீட்டர் அகலமும், 100 மீட்டர் உயரமும் கொண்ட பாறை இடுக்குகள் வழியாகத்தான் பெட்ராவிற்குள் ஒருவர் நுழைய முடியும். சிறிது நேர விளையாட்டிற்குப் பிறகு, எதிரில் இருக்கும் 40 மீட்டர் உயரத்திற்கு முகப்புத்தோற்றம் கொண்ட அரச வம்சத்தவர்களின் கல்லறையான பர்ரோவா கருவூலப் படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு இருவரும் இளைப்பாறுவார்கள். அந்தக் கல்லறையின் உச்சியில் இருக்கும் கலசத்தில் பொன்னும், மணிகளும் இருப்பதாக சோபியா அமரிடம் கூற, அவனும் விழிகளை உயர்த்தியபடி வியப்புடன் அவளிடம் மேலும் அதைப் பற்றிக் கேட்பான். கடவுள்கள், மிருகங்கள், அலங்கார ஜாடிகள் என பல வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும் இருக்கும் அந்தக் கல்லறைச் சுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நேரம் போவது கூட தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள். “உனக்கு ஒன்று தெரியுமா அமர்? இங்கு இருக்கும் உயர்ந்த கட்டிடங்களை எல்லாம் பாலைவனத்தில் இருக்கும் ஆவிகள்தான் கட்டியதென்று என் பாட்டி கூறி இருக்கிறாள்” என்று சோபியா கூறியவுடன் அவளருகில் நெருக்கமாக வந்தமர்ந்து கொள்வான் அமர்.
 
3000 பார்வையாளர்கள் ஒரு சேர அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வசதியுள்ள அரை வட்ட வடிவிலான கேளிக்கை அரங்கிற்கு அமரை கூட்டிக் கொண்டு செல்வாள். அங்கிருக்கும் படிகளில் ஓடி விளையாடி மூச்சிறைக்க களைத்து சோபியாவின் மடியிலேயே உறங்கியும் போவான் அமர். அவன் மீண்டும் கண் விழிக்கும் வரை அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்ததை நினைத்து இப்போதும் வெட்கப்பட்டு தனக்குள் சிரித்துக் கொள்வாள் சோபியா.
 
கடந்த வருட சந்திப்பில் கூட மலைக் கோயிலிற்கு படியேறும் போது வாத்தியக் குழலால் அமர் இசைத்துக் கொண்டு வர, சோபியாவும் அவனுக்கு மிகவும் பிடித்த பாடல்களை உரக்க பாடிக்கொண்டே வந்தாள். கோயிலை அடைந்தவுடன் ஊதுபத்தியை பற்ற வைத்து துஷார் கடவுளிற்காக கையில் கொண்டு வந்திருந்த ஆலிவ் பழங்களை பலி மேடையில் காணிக்கையாக வைத்தாள். அங்கிருக்கும் நான்கு மீட்டர் உயரமான நினைவுத் தூண்களின் அருகில் மாறி மாறி நின்று கொண்டு, தான் வளர்ந்து விட்டேனா என்று சோபியாவிடம் பல தடவை கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான் அமர். அவர்கள் இருவரும் படியிறங்கும் போது கோயிலை நோக்கி படியேறும் பக்தர்களுடன் விறகினைச் சுமந்து கொண்டு வரும் ஒரு பலி ஆடு வருவதைக் கண்ட அமர், அதைச் செல்லமாக தடவிக் கொடுத்து, பையில் எஞ்சி இருக்கும் ஆலீவ் பழங்களை அதற்கு ஊட்டியதை இன்றும் நினைத்து மகிழ்வாள் சோபியா.
 
ஆரவாரமற்ற முதல் மழைத் துளிகள் இளஞ்சிகப்புப் பாறைகளில் பட்டுத் தெரித்தது. மழைக்காலத்திற்கு மேலும் சில சலுகை நாட்கள் மிச்சம் இருந்தாலும் மழையைக் கண்டவுடன் பெட்ரா மக்களின் மனநிலை பரிசுப் பொருட்களுடன் திடீரென்று வீட்டிற்கு வந்த விருந்தாளிகளைக் கண்ட மகிழ்ச்சியில் இருந்தது. பாறைகளிலிருந்து வழிந்த மழை நீர், அருகில் இருக்கும் வடி கால்வாய் வழியாக ஒருங்கிணந்த பாதாள சேமிப்பறையில் சேகரம் ஆகும் சப்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இனிமேல் அமரைக் காண முடியாமற் போகுமென்ற கவலையில் சோபியா அழுது கொண்டிருந்தாள். அவளின் தாத்தாவும் பல காரணங்களைக் கூறி அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் தோற்றுப் போனார். இன்று ஏனோ அமரைக் குறித்த ஞாபகத்துடன் தனக்குத் தானே பிதற்றிக் கொண்டிருந்தாள். கண்களை மூடினால் அமரின் உருவம்தான் அவளுக்குத் தெரிந்தது.
 
மழையின் கடைசித் தூரல்களின் தாள ஒலி தணிந்து கொண்டே வந்தது. தாழ்வாரத்தில் தேங்கிய மழை நீர் வேகமாக சுழன்று மூலையில் இருக்கும் களிமண் குழாய்களின் வழியாக சப்தத்துடன் வெளியேறியது. திரையை விலக்கி ஜன்னல் வழியாகப் பார்த்தவளுக்கு பாறை மேட்டில் அமருடன் விளையாடிய நான்கிற்கு பதினான்கு குழிகள் உள்ள பல்லாங்குழிகளில் மழை நீர் நிரம்பித் தளுப்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. அமரின் நினைவு மட்டும்தான் அவளை இப்போது சூழ்ந்திருந்தது. எத்தனை தடவைகள் அவனுடன் அங்கு பல்லாங்குழி ஆடி இருப்பாள். ஒவ்வொரு முறையும் பதிவாக அமர் விளையாட்டில் தோற்கும் போதெல்லாம் மீண்டுமோர் முறை விளையாட வற்புருத்துவான். சோபியா காய்களை வேகு சாமர்த்தியமான வேகத்தில் குழிகளில் இட்டு நிரப்புவதை பார்த்துக் கொண்டே அவளையும் அறியாமல் அவளின் நீண்ட விரல்களைன் அழகை ரசிப்பான் அமர்.
 
மழை முற்றிலும் நின்றவுடன் பாறை மேட்டிற்குச் சென்று எல்லா குழிகளிலும் தேங்கி இருக்கும் மழை நீரினை கால் கட்டை விரலால் வெளியேற்றி அதனருகில் வந்தமர்ந்தாள். அமர் தன் முன் விளையாடுவதாக நினைத்துக் கொண்டு குழிகளில் காய்களை போடுவதாக அபிந‌யித்தாள். அவளையும் அறியாமல் கண்களிலிருந்து வழிந்த நீர் பல்லாங்குழிகளில் பட்டுச் சிதறிய பிறகுதான் சுய நினைவிற்கு வந்தாள்.
 
திடீரென்று தன் முன் அசைந்த நிழலைக் கண்டு துணுக்குற்று தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். வாசனைத் திரவியங்களிட்டு பராமரித்த கருத்த கேசமும், கதுப்புக் கன்னக் குழிகளும், இணைந்த கவர்ச்சியான புருவங்களும், அரும்பத் துடிக்கும் வாலிப மீசையும் காட்டிக் கொடுத்து விட்டது, அவளை நோக்கி இருகைகளையும் நீட்டி அழைப்பது சோபியாவின் அன்பிற்கு பாத்திரமான அமர்தானென்று.

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It