அந்தம்:

"பா.......ம்"

பஸ்சின் ஹாரன் சத்தம் கேட்டு அதிர்ந்து நின்றான். இதயத்தில் ரயில் ஓடிக்கொண்டிருந்தது, அவள் அவன் மீது இடித்து நின்று அவன் கையை பிடித்துக் கொண்டாள். அவள் கை நடுங்கி கொண்டிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இதுவரை சிரித்த சிரிப்பு இப்போது இல்லை. இனம் புரியாத பயத்தோடு கூடிய பார்வை அது.

சேலம் பேருந்து நிலையம் இருவரையும் தன் பிரம்மாண்டதுக்குள் விழுங்கி விட்டது போல் தோன்றியது. A.T.C என்ற எழுத்துக்களுடன் கூடிய பேருந்துகள் புகையை கக்கிக்கொண்டு இருவரையும் கடந்து போகும்போதெல்லாம் இதயம் முன்னைவிட பன்மடங்கு துடித்தது.

"டேய்..." அவள் கிசுகிசுத்தாள்.

"ம்..." என்றான். அதற்குமேல் பேசும் பலம் அவனிடம் இல்லை.

"எங்கயாவது உக்காரலாம்டா.... கால் ரொம்ப வலிக்குது..."

ஒரு மார்பிள் பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர். அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள். எதுவும் பேசாமல் வெறித்தபடி இருந்தான்.

"ஏண்டா ஒரு மாதிரி இருக்க.?" என்றாள்.

"அவங்க ரெண்டு பேரையும் காணோமே.. எங்க போனாங்க..?".

"வருவாங்கடா.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம்.."

அவன் எதும் சொல்லவில்லை. ஆனால் இந்நேரம் வந்திருக்க வேண்டும். நேரமாக ஆக பயம் அதிகரித்தது. அவர்களை கடந்து போகும் அனைவரும் பார்ப்பது போல் இருந்தது..

ஆதி:

"அம்மா, அப்பா நம்ம கூட வரலியா.?" ஏமாற்றத்தோடு கிருஷ்ணா கேட்டான்.

"ஆமாம் உங்கப்பா வறாரு, என் பிரெண்டாம் நான் தான் போகணுமாம். இதே அவரு பிரெண்டுன்னா நானும் போகணும். ம்ஹ்ம்.... உங்கப்பாவ கட்டிக்க ஒரு ஊரையே எதிர்த்து வந்தேன். அதோட போச்சு என் சொந்தமெல்லாம், நீ பொறந்ததுக்கு அப்பறம் உங்க அப்பாவும் என் கூட வரது இல்லை. ஆம்பளைங்க ஆசை அவ்வளவு நாள் தான். பொம்பளைங்க தான் புள்ளை பொறக்கற வரைக்கும் புருஷன் கைய பிடிச்சுட்டு போகணும். புள்ளை பொறந்துட்டா புள்ளை கைய புடிச்சுட்டு போகணும். எல்லாம் விதி. ம்ஹ்ம்... நீயாவது உங்க அம்மா பேச்சை கேட்டு அம்மா கூட வா. எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா. நீ தான் என்னை பத்தரமா கூட்டிட்டு போயிட்டு வரணும்" கன்னத்தை பிடித்து கொஞ்சினாள். கிருஷ்ணாவுக்கு வேறெதுவும் புரியாவிட்டாலும் 'நீ தான் என்னை பத்தரமா கூட்டிட்டு போயிட்டு வரணும்' என்றது பிடித்திருந்தது. அம்மாவை பத்திரமாய் பார்த்துக்கொள்ள போகிறோம் என்று பெருமையாக இருந்தது. முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

"முதல்ல ரவிபால் அங்கிள் வீட்டுக்கு போறோம். அங்க பிரியாவும், வினோத்தும் வருவாங்க அவங்கள கூட்டிட்டு போயிட்டு வரோம். சரியா.?" சாக்ஸ்சை மாட்டியபடி அம்மா கேட்டாள்.

"ம்... சரி" என்றான்.

"அம்மா அம்மா"

"என்னப்பா.?"

"நான் தான பெரிய பையன்"

"ஆமா கண்ணா. வினோத் மூணாவது படிக்கறான், நீ நாலாவது படிக்கற, பிரியா தான் அக்கா, அஞ்சாவது படிக்கறா."

"நான் ஒன்னும் அவள அக்கான்னு கூப்ட மாட்டேன். நான் தான் பெரிய பையன். நான் எல்.கே.ஜி. ஒரு வருஷம் யூ.கே.ஜி. ஒரு வருஷம் படிச்சுருக்கேன்."

"ஹஹ்ஹஹ்ஹா... சரி டா... " கன்னத்தில் முத்தமிட்டாள்...

அந்தம்:

"நெஜமாவே கரெக்டான எடத்துல தான் உட்கார்ந்திருக்கோமா.?" அவன் மனதில் நீண்ட நேரமாக இருந்த கேள்வியை கேட்டாள். "இங்க தான் ஏற்காடு பஸ் வருமா.?"

"..."

"டேய்.. என்...னடா எதுமே பேச மாட்டேங்கற." சிணுங்கினாள்.

"ஒன்னும் இல்லடி அவங்க வராங்களானு பாத்துட்டு இருக்கேன்."

"அட்லீஸ்ட் எதாச்சும் பேசிட்டாவது இருடா."கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். பெண்களுக்கு எப்போதும் பேச வேண்டும். அது எவ்வளவு கடினமான சூழ்நிலையானாலும் சரி.

"போன் பண்ணி பார்ப்போமா.?" ஒரு பொது தொலைபேசியை கை காட்டினாள்.

"ம்... சரி வா." என்று எழுந்தான்.

ஒன்றைரை அடி நீள போனை எடுத்து டயலை சுழற்றினாள். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் முகம் பிரகாசமானது. பெண்கள் சிரிக்கும்போது, அழும்போது, சிந்திக்கும்போது, உறங்கும்போது, படிக்கும்போது என எப்போதும் அழகு தான். முக்கியமாக அவளோடு தனியாக இருக்கும் ஆடவன் கண்களுக்கு. அவள் கண்களில் சிரிப்பு தெறித்தது. காதுகளில் வழிந்த கூந்தலை இயல்பாக வருடி விட்டாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த இவனைப்பார்த்து ஒரு புருவத்தை மட்டும் தூக்கி 'என்ன.?' என்பது போல் பார்த்தாள். லேசாக சிரித்தபடி 'ஒன்றுமில்லை' என்று தலையசைத்தான். கன்னங்களில் சிவப்பு பொங்க தலையை குனிந்தபடி ரகசியப் புன்னகையுடன் அவனை ஓரக்கண்ணில் பார்த்தபடி தலையை 'எப்பயும் விளையாட்டு தான்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தலையசைத்தாள்.

அவனுக்கு 'மடே'ரென்று மண்டையில் யாரோ அடித்தது போல் உரைத்தது. அவர்களிருக்கும் நிலையை ஒருமுறை நினைத்துப்பார்த்தான். திடீரென்று அவள் முகம் சுருங்கியது. ‘என்ன ஆச்சு’ என்ற பார்வையை அவள் மீது வீசினான். அவள் இவனை ஏறிட்டு பார்க்கவில்லை. போனில் மறுபடி மறுபடி டயல் செய்தாள். டயல் செய்ததை விட வேகமாக இவன் இதயம் துடித்தது.

அவள் கருத்த முகத்தோடு வெளியே வந்தாள்.

"போன் எடுக்கல டா"..

ஆதி:

"டேய் பசங்களா... இங்கயே விளையாடனும்... வெளிய போய்ட கூடாது. நான் போய் ஆன்ட்டிய பாத்துட்டு வரேன்" என்றபடி அம்மா போனாள்.

"இங்க என்ன விளையாடறது நான் என் பொம்மையெல்லாம் எடுத்துட்டு வரல." சிணுங்கினான் வினோத்.

"டேய் உனக்காக உன் பொம்மையெல்லாம் எடுத்துட்டா வர முடியும்.? சும்மா இருடா" என்றாள் பிரியா.

"விடு பிரியா. சின்ன பையன் தான." என்ற கிருஷ்ணாவை புருவத்தை உயர்த்தி பார்த்தாள். புன்னகைத்தாள்.

"உனக்கு ப்ளாக் சர்ட் நல்லா இருக்கு." என்றாள்.

"தேங்க்ஸ்"

"என்கிட்டயும் ப்ளாக் சர்ட் இருக்கு. அது வீட்ல இருக்கு. ஒரு தடவ போட்டுட்டு போனேனா..............." வினோத் பேசியதை மற்ற இருவரும் கண்டுகொள்ளவில்லை.

"ஒரு புக் கூட கொண்டு வரல ஒரே போர்.. ம்ஹ்ம்" சிணுங்கினாள்.

"என் கிட்ட துளிர் இருக்கு படிக்கறியா.?" என்றான் கிருஷ்ணா.

"நீ துளிர் படிப்பியா. ஹை.. எனக்கும் பிடிக்கும். அறிவியல் இயக்கத்துக்கு வந்திருக்கியா.?" ஆச்சரியமாக கேட்டாள்.

"ம்.. மீட்டிங் நடக்கும்போது இளங்கோ அங்கிள் கூட்டிட்டு போவாரு. ஜார்ஜும், ஹோசிமின்னும் என் பிரண்ட்ஸ்" என்றான்.

"அவங்க யாரு.?"

"இளங்கோ அங்கிள் பசங்க. இந்த தடவ துளிர் ஒரிகாமில கொக்கு செய்ய சொல்லி தந்துருக்காங்க. ரெண்டு பேரும் செய்வோமா.?", என்றான் கிருஷ்ணா.

"எனக்கு கொக்கு பண்ணி குடுங்க. எனக்கு கொக்கு பண்ணி குடுங்க", என்று கதற ஆரம்பித்தான் வினோத்.

சரி என்று ரகசியமாய் புன்னகைத்தபடி இருவரும் சேர்ந்து அதற்கு பேப்பர் எடுத்து வரும் கடமையை அவன் தலையில் கட்டினர்..

அந்தம்:

"இப்ப என்னடா பண்ணலாம்.? எனக்கு பயமா இருக்கு." என்றாள்.

"ஒன்னும் பயப்படாதடி வந்துடுவாங்க வா உட்காரலாம்" என்றான். உண்மையில் அவனும் பயந்திருந்தான். கிட்டத்தட்ட அந்த பேருந்து நிலையத்தில் எங்கள் வயதில் தனியாக இருந்த ஒரே ஜோடி இவர்கள்தான் என்று நன்றாக உணர்ந்திருந்தான். அவனுக்கென்னவோ கடந்து போகும் அனைவரும் இவர்களை வித்தியாசமாக பார்ப்பது போல் இருந்தது, அது ஓரளவு உண்மையும் கூட. ஒவ்வொருவரும் பார்க்கும்போது இவனது பயத்தைப்போலவே இதயத்துடிப்பும் கூடிக்கொண்டு போனது. இவர்கள் பார்வையிலிருந்து தப்பி ஓடி எங்காவது தனியான இடத்திற்கு அவளை அழைத்து போய் விட வேண்டும் என துடித்தான். ஆனால் இவர்கள் யாருக்காய் காத்திருக்கிறார்களோ அவர்கள் இங்கு தான் வருவார்கள். எங்கும் போகவும் முடியாது.

அவள் முகத்தைப் பார்த்தான். கவலை தோய்ந்து முழு வலிமையையும் இழந்து களைப்பாக இருந்தாள். இவனை நம்பி வந்த பெண்ணை இப்படி பார்க்கும்போது தன் இதயத்தை யாரோ பிடுங்கி எடுத்துக்கொண்டிருப்பது போல் உணர்ந்தான். ஒரு பக்கம் இன்னும் வராத அவர்கள் மீது இவனுக்கு கோபமாக வந்தது. மற்றொரு பக்கம் வராததை நினைத்து ஒவ்வொரு நொடியும் பயம் கூடிக்கொண்டே போனது.

"ஒருவேளை நாம தப்பான இடத்துக்கு வந்துருக்கமோ.?" என்றாள்.

"இங்க பாரு. இந்த சேலத்துல இருக்கறது ரெண்டு பஸ் ஸ்டாண்டு. ஒன்னு பழைய பஸ் ஸ்டாண்டு, இன்னொன்னு புது பஸ் ஸ்டாண்டு. நாம இருக்கறது புது பஸ் ஸ்டாண்டு, இங்க இந்த கார்னர்ல தான் ஏற்காடு பஸ் வந்து நிக்கும். சோ நாம கரெக்டான இடத்துல தான் நிக்கறோம் சரியா.?" எங்கோ இருந்த கோபத்தை இவளிடம் காட்டினான்.

"டேய்.. கோபப்படாதடா எனக்கு அவங்க இவ்ளோ நேரம் வராதது பயமா இருக்கு, அதான் கேட்டேன்" என்று முகத்தை சோகமாக வைத்தபடி சொன்னாள். பெண்களின் கண்களால் மட்டும் தான் ஆண்களை எந்த மிருக/ராட்சச நிலையிலிருந்தும் உடனடியாக மனிதனாய் மாற்ற முடியும். அவன் கோபம் பறந்து போயிருந்தது.

"பயப்படாதடி. நானும் கூட தான இருக்கேன்" அவள் கையை பிடித்துக்கொண்டான். அவள், அவனது தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

"யாருப்பா நீங்க இங்க ஏன் ரொம்ப நேரமா உட்காந்துருக்கீங்க.?" என்றொரு குரல் இருவரின் இதயங்களிலும் இடி விழுந்தது போன்ற அதிர்வை ஏற்படுத்தியது. அவள் சட்டென்று விலகி எழுந்தாள்.

ப்ளூ கலர் தொப்பி, காக்கி சட்டை, பேண்டில் கையில் லத்தியோடு ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார்..

ஆதி:

"அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வேணும்மா" நடந்து வரும்போது கிருஷ்ணா சிணுங்கினான்.

"இருடா பஸ் ஸ்டாண்ட் போய் வாங்கி தரேன்" என்றாள் அம்மா.

"ம்ஹ்ம் எனக்கு இப்பவே வேணும்." கிருஷ்ணா அடம் பிடித்தான்.

"அதெல்லாம் இல்லை. பஸ் ஸ்டாண்ட் வாங்க மூணு பேருக்கும் வாங்கி தரேன். இல்லன்னா போற வழியில நல்ல கடை பார்த்தா வாங்கி தரேன்" கண்டிப்பாக சொன்னாள் அம்மா.

இரண்டு மூன்று கடைகளை அம்மாவிடம் காட்டினான். ஆனால் அவள் வாங்கி தர தயாராக இல்லை. பஸ் ஸ்டாண்ட் தான் போக வேண்டும் என்ற முடிவோடு இருந்தாள் போலும். பிரியாவின் முன்னால் தனக்கு நடக்கும் இந்த அவமானத்தை கிருஷ்ணா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எப்படியும் பஸ் ஸ்டாண்ட்போவதற்குள் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தவனாய் அதே இடத்தில நின்றான் "எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தால் தான் வருவேன்" என்றான்.

சிறிது நேரம் பொறுமையாக கூப்பிட்டு பார்த்த அம்மா பொறுமையிழந்து சொன்னாள் "இந்தா காசு வெச்சுக்கோ உனக்கு எங்க வேணுமோ போய் சாப்பிடு" என்றாள். காசை வாங்கிக்கொண்டு வேகமாக என்றான். அம்மா இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. "டேய் நில்லுடா" என்று சொல்ல வாயெடுக்கும்போதே, "ஆன்ட்டி நானும் அவன் கூட போறேன்" என்றபடி பிரியா வந்தாள். இதை கிருஷ்ணா எதிர்பார்க்கவில்லை.

மூச்சிரைக்க ஓடி வந்து அவனிடம் "உனக்கு.... என்ன... ஐஸ்கிரீம் பிடிக்கும்.?", கிருஷ்ணாவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. அவனுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் அவ்வளவு தான். அவன் கிராமத்திலேயே வளர்ந்த பிள்ளையாதலால் ஐஸ்கிரீமுக்குள் பிரிவினையை கொண்டு வரும் அளவு அவனுக்கு விவரங்கள் தெரியவில்லை. எனவே பேசாமலே இருந்தான்.

அவளே சொன்னாள் "எனக்கு வெண்ணிலா பிடிக்கும்". இவனுக்கும் வெண்ணிலா பிடிக்கும். ஆனால் இவனுக்கு பிடித்த வெண்ணிலா இரவில் வானத்தில் வருவது 'வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே' என்ற டூயட் பட பாடல் நினைவுக்கு வந்தது. சமீபத்தில் தான் அந்த படத்திற்கு கிருஷ்ணாவை அப்பா சப்னா தியேட்டர் கூட்டி போய் ஐஸ்கிரீம் வாங்கி தந்திருந்தார்.

அவளே கடையில் வெண்ணிலா இருக்கிறதா என்றாள். கடைக்காரன் அதற்கு எதோ விளக்கம் கொடுத்தான். கிருஷ்ணாவுக்கு ஒரு இழவும் விளங்கவில்லை. 'சரி வா' என்று பக்கத்து கடைக்கு கூட்டி போனாள். அங்கும் இதே கதைதான். இப்படியே ஒரு மூன்று கடை தாண்டிய பின் சொன்னாள். "இங்க ஒண்ணுமே இல்ல. நாம பஸ் ஸ்டாண்டுக்கே போய்டலாம்"

சரி என்று திரும்பிப்பார்த்தால் அம்மா இருந்த இடத்தில் அம்மாவை காணவில்லை. உண்மையில் அம்மா இருந்த இடத்தையே காணவில்லை. அவர்கள் இருவரும் பாதையை தவற விட்டுவிட்டதை உணர்ந்து அதிர்ந்து போனார்கள்.

"ஆன்ட்டியும் வினோத்தும் எங்க போனாங்க.?" என்றாள்.

"தெரியலையே.” என்றான்

“இப்ப என்ன பண்றது”

“சரி வா பஸ் ஸ்டாண்ட் போய் அவங்களுக்கு வெயிட் பண்ணுவோம்" என்றான்.

"பஸ் ஸ்டாண்ட் எங்க இருக்குன்னு தெரியுமா.?"

"அதோ எல்லா பஸ்சும் உள்ள போகுதே" நூறு மீட்டர் தொலைவில் தெரிந்த பஸ் ஸ்டாண்டை காட்டினான்.

வேறு வழியும் தோணவில்லை என்பதால் கிருஷ்ணாவும்,பிரியாவும் தூரத்தில் தெரிந்த பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க தொடங்கினர்..

அந்தாதி

"சார் நாங்க ஏற்காடு போகணும் பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்" அவள் தான் முதலில் சொன்னாள்.

"ஏற்காடா அந்த பஸ் இங்க வராதே" சந்தேகமாக கேட்டார் அந்த போலீஸ்காரர்.

"வேற எங்க சார் வரும்.?" தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் கேட்டான்.

"இதே பிளாட்பார்ம் மாதிரி அங்க இருக்குல்ல. அந்த ரெண்டாவது பிளாட்பார்ம்ல தான் வரும்" என்று கை காட்டினார்.

"தேங்க்ஸ் சார்" என்றபடி இருவரும் ஓடாத குறையாக நடந்தோம்.

"பார்த்து பார்த்து பஸ்லாம் நெறையா வரும்" அவரின் குரல் ஒலித்தது.

"டேய் வினோத்" பெஞ்சில் உட்கார்ந்திருந்த வினோத்தை பார்த்து உற்சாகமாக கத்தியபடி இவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினாள். ” ஏ பிரியா ரெண்டு பேரும் எங்க போனீங்க” என்றான் வினோத்.

"அதெல்லாம் அப்பறம் சொல்றேன், ஆன்ட்டி எங்கடா?" சுற்றிலும் பார்த்துக்கொண்டே பிரியா கேட்டாள் .

"என்ன இந்த சீட்லயே உட்கார சொல்லிட்டு இப்ப தான் உங்கள தேடி போயிருக்காங்க" என்றான் வினோத்.

அவனுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

“நானும் கிருஷ்ணாவும் ஐஸ்கிரீம் வாங்க போனோமா. அந்த கடையெல்லாம் வேஸ்டுடா. சரின்னு திரும்பி பார்த்தா உங்கள காணோம். வீட்டுக்கு போன் பண்ணி பார்த்தேன் போனே எடுக்கல. அப்பறம் ஒரு போலீஸ்காரர் வந்து...........” அவள் கதையை சொல்லிக்கொண்டே போனாள்.

ஐந்து நிமிடத்தில் அம்மா வந்தாள். அவள் கண்கள் லேசாக கலங்கி இருந்தது. அம்மாவின் முகம் ஒரு மாதிரி இருந்தது. அதற்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு முகத்தினை அவன் பார்த்ததில்லை.

பின் குறிப்பு:

"ஆதி" முதலில் படித்து விட்டு பின்பு "அந்தம்" படிக்கவும்.

 

இன்று கிருஷ்ணா படித்து முடித்து வெளியூரில் வேலை பார்க்கிறான். அம்மா மட்டும் தனியாக வீட்டில் இருக்கிறாள். சில சமயங்களில் கிருஷ்ணா போன் செய்யும்போது எடுக்க மாட்டாள். போனை எங்காவது மறந்து வைத்து விடுவாள். இன்றும் அப்படிதான். ஒரு ஐந்து முறை அழைத்த பின் தான் எடுத்தாள். "ஏம்மா போனை வெச்சுட்டு எங்கம்மா போவீங்க எத்தன தடவ சொல்லிருக்கேன். போனை வெச்சுட்டு எங்கேயும் போகாதீங்கன்னு. சொன்னா கேக்கவே மாட்டீங்களா? நாலு தடவ போனை எடுக்கலன்னா நான் என்ன நினைக்கட்டும்.?" என்று கோபமாக பேசியபடி டாய்லெட்டில் இருந்த நிலைக்கண்ணாடியைப் பார்த்தான்.

அவன் முகத்தில்,

கிருஷ்ணா ஒரே ஒருமுறை மட்டும் பார்த்த தன் அம்மாவின் முகம் தெரிந்தது.

தவிப்பு, கோபம், சந்தோசம், வலி அனைத்தும் அடங்கிய அம்மாவின் முகம்.

Pin It