தர்கா மினாராவை ஒட்டி வளர்ந்திருந்த பன்னீர் மரங்களிலிருந்து இரவு முழுக்க உதிர்ந்த பூக்கள் தரை முழுவதும் பரவிக் கிடந்தது.

                மணல் படர்ந்த தரையில் சில புறாக்கள் பக்தர்கள் வீசிய பொரி கடலையைப் பொறுக்கிக் கொண்டிருந்தன. தர்காவைச் சுற்றியிருந்த ஒட்டுத் திண்ணைகளில் சிலர் தூங்கியபடி இருந்தார்கள்.

                மதுரையிலிருந்து வந்திருக்கும் ஒரு பெண் சேலையால் தனது உடலையும் முகத்தையும் மறைத்து மூடியபடி தர்கா சுவரைப் பிடித்துக் கொண்டு குதித்துக் குதித்து ஆடிக் கொண்டிருந்தாள். நடுத்தர வயதைத் தாண்டிய பெண் ஒருத்தி, ஆடி முடித்த களைப்பில் மல்லாந்து வாயைப் பிளந்தபடி அசையாமல் வானத்தை வெறித்தபடி படுத்திருந்தாள். இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒருவன் தன்னைப் பிணைத்திருந்த மரத்தில் தலையை முட்டியபடி எதையோ கத்திக் கொண்டிருந்தான்.

                எவ்வித சலனமுமற்று, அமைதியாகக் குத்துக் காலிட்டு உட்கார்ந்து, தர்காவின் பின்புறமிருந்த தனது மகனை நோக்கி வந்தாள் ராபியா.

                இப்போது அவள் மகனுக்குக் கொஞ்சம் தேவலாம். கேட்கிற கேள்விகளுக்குச் சொல்லுகிற பதிலில் அர்த்தமிருந்தது. திடீர் திடீரென உடலில் தோன்றும் வெடவெடப்பு ஏற்படவில்லை.

                கீழக்கரையில் முப்பது நாட்கள் கணக்கு கொடுத்து விட்டு, ஆத்தாங்கரை பள்ளி வாசலில் முப்பது நாட்கள் கணக்கை முடிவு செய்தால் மகனுக்குச் சுகம் கிடைக்குமென்று முழுமையாக நம்பினாள். மகன் சாப்பிடுவதற்காக கடையில் இட்லியும், வடையும் வாங்கிக் கொண்டு வந்தாள்.

                "ஏலே ... வாப்பா... இட்லி உண்றியா?"

                "ம்.ம்.." என்றான் அப்துல் காதர். ராபியா இட்லியைப் பிய்த்துத் தர‌ வாங்கிச் சாப்பிட்டான். சரியாகச் சாப்பிடாமலும், தூக்கமில்லாமலும், அழுது, அழுது உடலும் மனமும் வற்றிப் போயிருந்த நிலையில், மகனின் உடல் நிலையில் ஏற்பட்ட சிறிய முன்னேற்றம் அவளுக்குள் சந்தோக்ஷத்தை உருவாக்கியது. இதற்கு முன் அவன் நிலை வேறு. இட்லியைக் கொடுத்து முடிப்பதற்குள் ஏழெட்டு தடவை பயந்து நடுங்கி தரையில் படுத்துக் கொண்டு வேண்டாமென்று அடம் பிடிப்பான். இப்போது அது இல்லை.

                "எவ்ளோ... அழகான பையன்... இவன் தலையெழுத்தப் பாத்தீங்களா?" தர்காவிற்கு வந்திருந்த பக்தர்கள் பேசிக்கொண்டு சென்றது அவள் காதில் விழுந்தது. அவளது மனம் ஒரு கணம் பழைய நினைவுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

                அவளுக்கு காய்ச்சல் அடிப்பது போலிருந்தது. அப்துல்காதருக்கு இரண்டு வயதிருக்கும். பிள்ளையை ஒக்கலில் இடுக்கிக் கொண்டு செல்வன் ஆஸ்பத்திரிக்குப் போனாள். அவ்வளவு தான் மருத்துவமனையில் இருந்த அவ்வளவு செவிலியர்களும் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அவனது பெரிய கண்களும், தீட்டிய புருவங்களும், குண்டுக் கன்னங்களும் பார்க்கிற யாரையும் வசீகரித்து விடும். அவள் மருத்துவரைப் பார்த்து, மருந்து வாங்கி, வீட்டுக்குத் திரும்பும் வரை அவனை எல்லோரும் தூக்கி முத்தம் கொடுத்திருப்பார்கள்.

                பிள்ளையை வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது ஒரு பெரிய மனுஷி சொன்னாள். "இப்படி புள்ளைய எல்லா எடத்துக்கும் கொணராதே. இன்னிக்கு நல்லா திருஷ்டி சுத்திப் போடு." என்றாள். உரித்து வைத்த உருளைக் கிழங்கு போலிருப்பான் அப்துல் காதர்.

                அவனது அழகும், துறுதுறுப்பும் அவளுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். அவளது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவனுக்கென்று ஒரு குழு எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது. பெரியாத்துல குளிக்கப் போவதற்கும், சினிமா போவதற்கும், அவனது நண்பர்கள் வீட்டின் முன் காத்துக் கிடந்து அழைத்துச் செல்வார்கள். அவனது கடந்த கால நிகழ்வுகள் அவளுக்குள் வரிசையாய் வந்து கொண்டேயிருந்தது.

                "நம்ம புள்ள நல்ல புள்ள, தப்புத் தண்டா கிடையாது. சேக்காளிகளோடே நல்லதுக்குத் தானே அலையுதான்னு நினைச்சது. அதுவே அவனுக்கு வினையாப் போயிரும்னு தெரியாமப் போச்சே".

                திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தவளாய் கண்களில் திரண்ட நீரை தனது அழுக்கான முந்தானையால் துடைத்தாள்.

                "ஏலே அத்துக்கா... நான் யார்னு தெரியுதாலே"

                "உம்ம்மா.. " என்று இழுத்து அவன் சொல்கையில் அவளுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

                ராபியாவிற்கு மூன்று பிள்ளைகள். மூத்தது ரெண்டும் பெண்கள். அதுகள நல்லபடியாக் கட்டிக் கொடுத்து, மருமவன் ரெண்டு பேரும் வெளிநாட்டுல இருக்காங்க. கடைக்குட்டிதான் இந்த அத்துக்கா என்ற அப்துல் காதர்.

                அப்துல் காதருக்கு வயதாக வயதாக நண்பர்கள் வட்டம் பெருகியபடியே இருந்தது. நகராட்சி மைதானத்தில் அவன் கிரிக்கெட் விளையாடும்போது அவனுக்கு எல்லாத் தெருக்களிலும் நண்பர்கள் ஏற்பட்டிருந்தார்கள். பிளஸ் டூ முடித்து விட்டு மச்சான்மார்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்தான். ஏ.சி. மெக்கானிக் படிப்பு படிக்கச் சொன்னதால் அதையும் படித்து விட்டு, ஜங்க்ஷன், கூல்பிரிட்ஜ் கடையில் ஆறு மாதம் வேலை பார்த்து அனுபவ சான்றிதழும் வாங்கி வைத்து விட்டான். விசா வந்தவுடன் வெளிநாட்டிற்குப் போக வேண்டியது தான் பாக்கி. அதற்குள் அவன் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை.

                பத்தாங்கிளாஸ் அவன் படித்துக் கொண்டிருந்தபோது, அவனது நண்பர்களில் சிலர் மதச் சீர்திருத்தம் பேசினார்கள். வரதட்சிணை வாங்க மாட்டோமென்று சங்கல்பம் செய்து கொண்டார்கள். கண்மூடித்தனமானது என்று சொல்லி ஏற்கனவே இருந்த மார்க்கச் செயல்பாடுகளை நிராகரித்தார்கள். புதிய தொழுகை முறை போதிக்கப்பட்டது. அவனது தலையிலிருந்து தொப்பி கழன்று போனது. அவன் முகத்தைச் சுற்றி கருந்தாடி முளைத்த போது, அவன் அந்த இயக்கத்தின் தலைவர்களுக்குப் பிடித்த செயல்வீரனாக மாறிப் போனான். ஒவ்வொரு வாரமும் மார்க்க கருத்துக்கள் குறித்து, புதுமையுடன் நடைபெறும் சொற்பொழிவுகளுக்கான வால்போஸ்டர்களை ஊர் முழுக்க ஒட்டும் குழுவில் தலைமைப் பதவி கிடைத்தது.

                கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு முழுக்க போஸ்டர் ஒட்டி விட்டு பகலில் கிடந்து தூங்குவான்.

                முந்தைய இரவிலும் அதேபோல் இரவு இரண்டு மணி வரை போஸ்டர் ஒட்டி விட்டு வந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.

                காலையிலேயே பக்கத்து தெருவிலிருந்து இளைக்க, இளைக்க ஓடி வந்த அவனது நண்பர்கள் ஹைதரும், அசனும் அவனைப் பதற்றத்துடன் எழுப்பினார்கள். தூக்கக் கலக்கத்துடன் எழுந்து கண்ணைக் கசக்கியபடியே அவர்களைப் பார்த்தான் அப்துல் காதர்.

                "டேய் அத்துக்கா.... உனக்குத் தெரியுமா... நேத்து ராத்திரி 2 மணிக்கு மேல ராவுத்தர் தெருவில ஹைதரையும், குளத்துல் மூhமீம்புரத்துல சேக்கையும் புடிச்சுட்டுப் போயிட்டாங்களாம்.... பத்து பதினைஞ்சு போலீஸ் வேன் வந்துச்சாம். தெருவடைக்க போலீஸ் நின்னுக்கிட்டு, வீட்ட விட்டு யாரும் வரவிடலயாம். வேலைக்குப் போனவங்களக் கூட அடிச்சி வீட்டுக்குள்ளே விரட்டிட்டாங்களாம். ஊரே கலகலத்துப் போய் கிடக்கு... தூங்கினது போதும். வா... போவோம்".

                அவன் பதறி எழுந்து, தண்ணீரை அடித்து முகம் கழுவினான். சட்டையைப் போட்டுக் கொண்டு அவர்களோடு இராவுத்தர் தெருவிற்குக் கிளம்பினான். எந்தத் தெருவிலும் மக்கள் நடமாட்டமில்லை. ராவுத்தர் தெருவில் முன் கதவுகள் மூடப்பட்டு மக்கள் வீட்டுக்குள் ஒளிந்து கிடந்தார்கள்.

                வேறு வழியின்றி தலைவர்கள் இருக்கும் தொழுகைப் பள்ளியை நோக்கி அவர்கள் விரைந்தார்கள். இயக்கத் தலைவர்கள் காரசாரமாய் விவாதித்தபடி இருந்தார்கள். கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம், தந்தி அனுப்புதல் என எல்லாவித போராட்டங்களும் விவாதிக்கப்பட்டு, இன்னும் இரண்டு நாட்களில் "மாபெரும் ஜனத்திரள் போராட்டம்" என முடிவு எடுத்து, அறிவித்து விட்டு கலைந்தார்கள்.

                மறுநாள் ஹைதரையும், ஷேக்கையும் பற்றிய எந்தத் தகவலும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ வரவில்லை. அடுத்த நாள் பஜாரையே நிறைத்தபடி மாபெரும் ஜனத்திரள் போராட்டம், தலைவர்களின் ஆக்ரோக்ஷ உரைகள் பரபரப்புடன் காவலர்கள் புடைசூழ நடந்து முடிந்திருந்தது. அதன் பின்பும் இரண்டு நாட்கள் அவர்களைப் பற்றி எவ்விதத் தகவலுமில்லை.

                ஏழாவது நாள், மேலப்பாளையத்தைச் சுற்றி முப்பது, நாப்பது போலீஸ் வேன்களும், கார்களும் முற்றுகையிட, இராவுத்தர் தெருவிற்குள் ஏழெட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன. பூட்சுக் கால்களோடும், துப்பாக்கிகளோடும் திமுதிமுவென போலீஸ் பட்டாளங்கள் ஹைதர் வீட்டுக்குள் நுழைந்தன. வீட்டிலிருந்த அனைவரும் முன் ஹாலில் அடித்து குவிக்கப்பட்டனர். தெருவில் யாரும் நிற்க அனுமதிக்கப்படவில்லை. லத்திக் கம்புகளோடு விரட்டப்பட்டார்கள்.

                வீட்டிற்குள் நின்றிருந்த காவல்துறை உயர் அதிகாரி, சில அதிகாரிகளுக்கு வீட்டை சோதனையிட உத்தரவிட்டார். மற்ற காவலர்கள் வீட்டுக்காரர்களை சுற்றி வளைத்த படி நின்றார்கள். ஏற்கனவே எழுதி வைத்திருந்த பேப்பர்களில் கையெழுத்து போடச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். மறுத்தபோது குமரிப் பிள்ளைகள் உட்பட எல்லோரையும் இழுத்துச் சென்று விடுவோம் என்று பயமுறுத்தினார்கள். உயர் காவல் அதிகாரியும் மற்றவர்களும் முரட்டு வார்த்தைகளால் அவர்களது குடும்பத்தையும், சமுதாயத்தையும் சின்னாபின்னப்படுத்திப் பேசினார்கள். மிரண்டு போய் உட்காரப் போன ஹைதரின் அம்மாவை, ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லத்தியால் அடித்து நிறுத்தி வைத்தாள்.

                வீடே அழுதது. கேட்ட இடங்களிளெல்லாம் கையெழுத்துப் போட்டார்கள். வெற்றிகரமாக சோதனையை முடித்து விட்டதாகச் சொல்லிச் சிரித்தபடி கிளம்பிப் போனது காவலர் பட்டாளங்கள். அதிர்ந்தபடி சென்ற காவல்துறை வாகனங்கள் அடுத்த இலக்காய் மூhமீம்புரம் 7வது தெரு ஷேக் வீட்டிலும் தங்களது செயல்பாடுகளை நிறைவேற்றி விட்டு பயணித்தன.

                அன்றைய நாள் முழுவதும் புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்து ஊர். எது குறித்தும் யாருக்கும் பேசத் தைரியமில்லாமல் கிடந்தார்கள்.

                மறுநாள் ஊரின் நெடிய மௌனத்தைக் கலைத்த படி எட்டு காலச் செய்தியில் உலகைக் கலக்கினார்கள் ஹைதரும், ஷேக்கும்.

                வெளிநாட்டில் பயிற்சி பெற்ற, பயங்கர தீவிரவாதிகள் "கடா" ஹைதரும், "போண்டா" ஷேக்கும் கைது. பயங்கர               ஆயுதங்கள் பறி முதல். நாட்டின் பெரும் அரசியல் புள்ளிகளைக் கொல்லத் திட்டம்.

என்று பத்திரிகைகள் தலைப்பிடப்பட்டிருந்தன. அப்துல்காதரும், அவனது நண்பர்களும் பயத்துடனும் ஆச்சரியத்துடனும் செய்திகளைப் படித்தார்கள்.  மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்காமல், கசாப்பு கடையில் வேலை பார்த்த ஹைதர் எப்போது வெளிநாட்டிற்குப் போய் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றான்? அவர்களுக்கு விளங்கவில்லை.

                அதைவிட அவர்களுக்கு "கடா" ஹைதர் என்றும், "போண்டா" ஷேக் என்றும் பட்டப் பெயர்கள் எப்போது, எப்படி ஏற்பட்டது என்பது புதிராய்த் தெரிந்தது. சீவப்படாத தலைமுடி, தாடியுடன் அவர்களது பெரிய, குளோசப் கலர் படம் பயங்கரமாய் அவர்களைக் காட்டியது. ஹைதருக்கும், ஷேக்குக்கும் தனிக் கட்டம் கட்டி அவர்களைப் பற்றி சிறப்புச் செய்திகள் வெளியாகியிருந்தன.

                கடா ஹைதர் பைப் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணனாம். ஏற்கனவே நடந்துள்ள பல குண்டுவெடிப்புகளுக்கு வெடிகுண்டுகள் தயாரித்துக் கொடுத்துள்ளானாம். எந்தக் கூட்டத்திற்குள்ளும் புகுந்து லாவகமாய் குண்டு வைத்து விட்டு தப்பித்து விடுவானாம். நேபாளம் வழியாக பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டில் போய் பயிற்சி பெற்றுள்ளானாம்.

                அதே போல் போண்டா ஷேக் பற்றியும் பல செய்திகள். அவன் கிரானைட் குண்டுகளை வாயில் கடித்து எறிவதில் கெட்டிக்காரனாம். (கிரானைட் குண்டுகள் குறித்த தனிவிளக்கம் வேறு அடியில் குறிப்பிடப்பட்டிருந்தது). மேற்குத் தொடர்ச்சி மலையில் திரியும் நக்சல்பாரிகளுடன் தொடர்பு கொண்டவனாம். மேலும் அவனது வாக்குமூலத்தில் இவனைப் போன்ற பல தீவிரவாதிகள் இன்னும் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும், காவல்துறை உயர் அதிகாரி பேட்டியில் சொல்லியிருந்தார்.

                அப்துல்காதருக்கும், கமாலுக்கும், மற்றைய நண்பர்களுக்கும் அதைப் படிக்கும் போதே சிரிப்பு வந்தது. ஆனால் யாருக்கும் சிரிக்க முடியவில்லை. பல பக்கங்களில் செய்தி வெளியாகி இருந்தது. டெல்லியிலிருந்து சிறப்பு உளவுப்படை தெற்கு நோக்கி விரைவதாகவும் செய்திகள் குறிப்பிட்டிருந்தன.

                மறுநாள் தெற்குத் தெருவிலும், பங்களா அப்பா நகரிலும் நான்கு பேர் பிடிக்கப்பட்டார்கள். கடா ஹைதருக்கும் போண்டா ஷேக்குக்கும் பல வழிகளிலும் உதவி செய்தவர்களாம். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அவர்களைப் பற்றிய விரிவான செய்திகள் அரைப் பக்கத்தில் வெளிவந்தன. சிறிய வயதில் பெரிய தாடிகளுடன் கூடிய போட்டோக்கள் பத்திரிகைகளை நிறைத்தன.

                கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு நீதிமன்றத்தின் முன் வராண்டாக்களில் காவலர்கள் புடைசூழ, பிளாஸ்களின் வெளிச்சத்தில் மீண்டும் மீண்டும் டி.வி. சேனல்களில் தோன்றினார்கள்.

                எத்தனை பெரிய வாகனங்கள் வந்தாலும் தெருவினை அடைத்தபடி நடந்து செல்லும் மேலப்பாளையத்து ஜனங்கள் கிலி பிடித்து வீட்டுக்குள் அடைந்தபடி கிடந்தார்கள். இன்னும் இருபது தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்களை கூண்டோடு பிடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் செய்திகள் வெளியாகியிருந்தன.

                அதிலிருந்து மூன்றாம் நாள்... காலை 5 மணி..

                அப்துல்காதர் வீட்டின் முன் போலீஸ் வாகனங்களும், வேன்களும் ஆக்ரமித்தன. பரபரப்புடன் வீட்டிற்குள் நுழைந்தனர் பல்வேறு காவல்துறை அதிகாரிகள். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி எழும் முன்பே, காவல் துறையினர் வீடு முழுக்க பரவினர் "எங்கே அப்துல் காதர்?" என்று கேட்டபடியே தேடினார்கள். வீட்டின் பின்பகுதி வளைவில் படுத்திருந்த அப்துல் காதரை மூன்று காவலர்கள் சேர்ந்து அமுக்கினார்கள். வீட்டிலிருந்த நடு ஹாலில் எல்லோரையும் நிறுத்தினார்கள்.

                ஒரு காவல்துறை அதிகாரி பேச ஆரம்பித்தார்.

                "இந்தா பாருங்க. உங்க பையனுக்கும் பிடிபட்ட தீவிரவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்னு விசாரிக்கத்தான் அழைச்சிட்டுப் போறோம். நீங்க குடும்பத்தோடே விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்கணும். அதுக்கு மாறா கட்சி, போராட்டம், போஸ்டர் அது இதுன்னு ஏதாவது செஞ்சீங்கண்ணா கேஸ்ல சேர்க்கிறதத் தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது. பாத்துக்கிடுங்க.." என்று பணிவுடன் சொன்னார்.

                "அப்துல்காதர், வா போலீஸ் ஸ்டேக்ஷனுக்கு" என்று மெதுவாக அவனது தோளைப் பற்றியபடியே அழைத்துச் சென்றார்கள். போலீஸ் வாகனத்தில் அப்துல்காதரை ஏற்றியவுடன் காவலர்கள் ஓடி அவரவர் வேன்களில், வாகனங்களில் தொற்றிக் கொள்ள மறைந்து போயின.

                போலீஸ் வாகனங்கள் கடந்து சென்றதை அறிந்த பின்பு, அவன் வீட்டு முன்பு பக்கத்து வீட்டுக்காரர்கள் குழுமினார்கள். "இனிமே உன் புள்ளய பாக்கமுடியாது" என்றார்கள் சிலர். சிலர் விசாரணைக்குப் பிறகு அனுப்பி விடுவார்கள் என்று ஆறுதல் ஆருடம் சொன்னார்கள். அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை.

                ஓட்ட ஓட்டமாக காவல் நிலையத்திற்குப் போனாள் ராபியா. அங்கு அத்துக்காவோ, காவல் அதிகாரிகளோ இல்லை. தலையில் அடித்துக் கொண்டு கூப்பாடு போட்டாள். ஒரு பெண் காவலர் வந்து, "ஒண்ணும் பயப்படாதம்மா.. சாதாரண விசாரணைக்குத்தான் அழைச்சிட்டு போயிருக்காங்க திருப்பி அனுப்பிடுவாங்க... வீட்டுக்குப் போ" என்று அனுப்பினாள்.

                அன்றிரவு முழுவதும் அப்துல் காதர் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தகவலில்லை. மறுநாள் பத்திரிகைகளில், சிலபேர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதாக வந்திருந்தது. மகனை நினைத்து சாப்பிடாமல் தலைவிரி கோலமாய்க் கிடந்தாள் ராபியா. மகள்கள் வந்து ஆறுதல் சொல்லி, சாப்பிட வைக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

                மூன்று நாட்கள் எவ்விதத் தகவலுமின்றி கழிந்திருந்தன. நாலாவது நாள் காலையில் அப்துல் காதரின் வீட்டை காவலர்கள் முற்றுகையிட்டனர். வீட்டில் இருப்பவர்களை ஒதுங்கச் சொல்லிவிட்டு சல்லடைப் போட்டுத் தேடினார்கள். அப்துல்காதரின் பாஸ்போர்ட்டும், அனுபவச் சான்றிதழும் சிக்கின.

                "உம் மொவனுக்கும் கடா ஹைதருக்கும் என்ன தொடர்பும்மா?" என்று அதட்டினார் பெரிய அதிகாரி.

                "அய்யா... என்புள்ளக்கும் அவனுக்கும் எவ்வித சம்பந்ததும் கிடையாதைய்யா. ஒழுங்கா படிச்சிட்டு வெளிநாடு போவனும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான். மற்றபடி வேற எந்தத் தொடர்பும் கிடையாதுய்யா." தலையில் அடித்து அரற்றினாள் ராபியா.

                "இந்தா பாரு. உன் புள்ள இப்ப வெளிநாட்டுக்கெல்லாம் போக வேண்டாம்..." என்று சொல்லியபடியே அனுபவச் சான்றிதழை பலதடவை கிழித்து, அந்தக் கிழிசல்களுடன் பாஸ்போர்ட்டையும் சேர்த்து தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

                "எம்புள்ள அப்பாவிய்யா.. அவன விட்டுருங்கையா"

                "பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள் காவல்துறை அதிகாரிகள். ராபியா அழுது அரற்றி கிறங்கி விழுந்தாள்.

                பின்னாட்களில் அப்துல்காதருடன் பிடித்துச் செல்லப்பட்ட பையன்களைக் குறித்து செய்திகள் வந்தன. சிலர் வெடிகுண்டு நிபுணர்களாகவும், சிலர் கணிணித்துறையில் தேர்ந்தவர்கள் என்றும், ஜெலட்டின் குச்சுகள், வெடி பொருட்கள் கிலோ கணக்கில் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

                அப்துல்காதர் குறித்து எவ்வித செய்திகளும் வரவில்லை. அவனை ஊடகங்கள் மறந்திருந்தன.

                ஏழெட்டு நாட்கள் கழிந்த நிலைமையில், ஒரு நாள் இரண்டு காவல்துறை வாகனங்களும், ஒரு வேனும் அப்துல்காதர் வீட்டின் முன் வந்து நின்றன. வாகனங்களிலிருந்து காவல்துறை அதிகாரிகள் இறங்கினர். குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்தார்கள்.

                "ஏம்மா.. உங்க புள்ளய விசாரிச்சோம். அவனுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லேனு தெரியுது. அதனால உங்களிட்ட ஒப்படைச்சிட்டுப் போக வந்திருக்கோம். அப்துல்காதர் வேன்ல இருக்கான். அவன் நல்லமுறையில் ஒப்படைச்சதுக்கு அத்தாட்சியில கையெழுத்துப் போட்டுக் கொடுங்க"

                அதற்குள் அப்துல்காதரை வேனிலிருந்து இறக்கி அழைத்து வந்தார்கள். கையெழுத்துக்களைப் பெற்றுக் கொண்டு அவனை ஒப்படைத்து விட்டு பறந்து போனார்கள். போகும் போது ஒரு காவல் அதிகாரி ராபியாவைப் பார்த்துச் சொன்னார்.

                "பையன நல்லபடியா ஒப்படச்சிட்டோம். காதரு கொஞ்சம் தூக்க கலக்கத்துல இருக்கான். நல்லா தூங்கச் சொல்லுங்க. சரியாகிடும். ஆனா... ஒண்ணு... காதர எங்க கூட்டிட்டுப் போனாலும் போலீஸ் ஸ்டேக்ஷனல்ல சொல்லிட்டுத்தான் கூட்டிட்டுப் போவனும்... தெரியுதா?" என்று உத்தரவு போட்டுவிட்டுச் சென்றார்.

                அப்துல்காதர் கன்னங்கள் வீங்க, உடலில் ஆங்காங்கே கன்றியிருக்கும் காயங்களுடன், கைகளிலும் கால்களிலும் லாடம் கட்டப்பட்ட வரைகளுடனும் நார் நாராகக் கிழிக்கப்பட்டிருந்தான். அவசரமாக பால் வாங்கி வந்து கொடுத்தபோது பயந்து குடிக்க மறுத்தான். ஏதோ சொல்லியபடி அரற்றினான். தெருவில் கார் செல்லும் சத்தம் கேட்டவுடன் அவன் உடல் அதிர நடுங்கி மூர்ச்சையானவன் போலக் கிடந்தான்.

                அவனைப் பார்க்க வந்த இயக்கவாதிகள், அவனைக் குறித்து, மனித உரிமை, அது இதுவென்று பேசிவிட்டுச் சென்றார்கள்.

                திக் பிரமையில் இருந்தான். திடீரென்று ஏதாவது சத்தம் கேட்டால் அவனை அறியாமல் மூத்திரம் பிரிந்தது. முடிவில் அவனது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என பல ஆய்வுகளுக்குப் பின் முடிவு செய்தார்கள். மேற்கொண்டு செலவு செய்ய முடியாமல் திணறிய போது வீட்டிலிருந்து மருத்துவம் செய்து கொள்ளும்படி அனுப்பி வைத்தார்கள்.

                அப்போது அவன் வீட்டிற்கு வந்த ஒரு பெரியம்மா, "சும்மா உம்மவன வீட்டுக்குள்ளேயே வச்சிக்கிட்டு இருக்காத. கீழக்கரைக்கு அழைச்சிட்டுப் போயி ஒரு மண்டலம் வய்யீ.. எல்லாம் சரியாய்ப் போயிடும்" என்றாள்.

                அவளுக்கு சரியென்று பட்டது. எல்லாவற்றையும் இறைவன் கைகளிலேயே விட்டு விடுவது என முடிவு செய்து, கீழக்கரைக்கு அழைத்துச் சென்று அங்கு தங்கினாள்.

                கீழக்கரையில் கணக்கு முடிந்து விட்டதாகச் சொன்னதின் பேரில் ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

                மகனுக்கு இட்லியை தீத்தி விட்ட பின்பு, அவனிடம் வாயைத் துடைக்கச் சொன்னாள். அவன் கைகளால் துடைத்தான். மேற்கொண்டு அவள் தனது முந்தானையில் அவனது வாயைத் துடைத்து விட்டு, தட்டை கழுவச் சென்றாள்.

                அவள் திரும்பி வந்த போது, தாடி வைத்த மூன்று இளைஞ‌ர்கள் அவனைச் சுற்றி நின்றிருந்தார்கள். யாரென்று விசாரித்தபோது அவனது இயக்கம் சார்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் ராபியாவிடம் பேச ஆரம்பித்தார்கள்.

                "ஏம்மா... நாங்களும் அப்துல்காதர் நண்பர்கள் தாம். அவனுக்கு நல்ல முறையில மருத்தவம் செய்ய பணம் பிரிக்கப் போறோம். நீங்க அவன கபருக்குழியில கைலேந்த வைக்காதீங்க. அவன் ஏகத்துவவாதி. நல்ல நிலைமையில் அவன் இருந்தா, இங்க வரவே சம்மதிக்க மாட்டான். நீங்க அவன ஊருக்கு கூட்டிட்டு வந்திடுங்க... நாங்க நல்லபடியா பாத்துக்குறோம்"

                "வேண்டாங்கோ.. எம்புள்ளக்கி கொஞ்சம் குணமாயிருக்குது. நீங்க ஊருக்கு போங்கோ.. நாங்க கொஞ்ச நாளில்ல ஊருக்கு வந்திடுவோம்"

                "இல்லம்மா... இங்க இருக்கக்கூடாதும்மா... நாங்க உதவி செய்றோம்மா" அவளுக்கு அவர்களுடன் பேச பிரியமில்லை. கோபம் தலைக்கேறியது. "போதும்பா, எம்புள்ளக்கி நீங்க செஞ்ச‌ உதவி.. இங்கிருந்து போயிடுங்கோ" அவளது தோளிலிருந்து துண்டு சீலை நழுவி விழ ஓங்கிக் கத்தினாள். ராபியா.

                "ஏய் கிழவி... உனக்கு உதவி செய்யனும்னு வந்தா... எங்களையா எதுத்துப் பேசுறே. நீ உனக்கு மட்டுமில்லே. உம்மொவனுக்கும் சேர்த்து கணக்குக் கொடுக்கனும் பார்த்துக்கோ" கோபமாகப் பேசியபடி செருப்புக்கள் மணலில் அழுந்த மணலை விசிறியபடி வேகமாக நடந்து போனார்கள்.

                அவர்கள் நடந்து செல்வதைப் பிரமையுடன் பார்த்தவனுக்கு நெஞ்சுக்குள் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

                "பாவியளா.... உங்களோட திரிஞ்சதுக்குத்தான் எம்புள்ளக்கி இந்தக்கதி வந்திருக்கு . இன்னுமா எங்களோட வாங்கோன்னு கூப்பிடுறீங்கோ... எம் புள்ளையப் பாக்கும் போதெல்லாம் என் உடலும் மனசும் வேகாம வேகுது. இதுல வேற எண்ணையக் கோரி ஊத்தவா வாரிங்க... என்று வந்தவர்களைத் திட்டித் தீர்த்தபடியே மகனைப் பார்த்தாள். கோபமும் அழுகையும் பொத்துக் கொண்டு வந்தது.

                "ஏன் ராசா.... உனக்கா இந்தக் கதி வரணும். சீதேவியே... நீயா இப்படி இங்க வந்து கிடக்கணும்.." என்று அவன் முகத்தைத் தடவியபடியே அழுது அரற்றினாள்.

                "ஏங்ங்கண்ணே ... நீ என்ன காப்பாத்தி தெருவ திருப்பி விடுவேன்னு நினைச்சிட்டிருந்தேனே. எப்பத்தான் நீ என்னைப் பாத்து நல்லபடியாய் பேசிச் சிரிக்கப் போறியோ தெரியலையே ராசா" என்றபடியே அவள் உடைந்து கூக்குரலிட்டு அழுதாள்.

                அப்துல்காதர் மட்டும் குத்துக்கால்களுக்குள் தலையைப் புதைத்தபடி எவ்வித சலனமுமின்றி இருந்தான்.

- எம்.எம்.தீன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It