திரும்ப திரும்ப நிகழும் ஆழ்ந்த உறக்கச் சுற்றுகளில் அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தின் சுற்றில் வரலட்சுமி இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள். மலரினும் மெல்லிய தீண்டலும், குழலின் இசையிலும் மெல்லிய சிணுகங்க‌ல்களும் அவளின் ஆழ்மனதினைச் சலசலத்துப் புத்துயிர்ப்பை துளிர்க்கச் செய்தது. அவளின் ஒரு வயது குழந்தை அவளின் மங்கல நாணை மெல்ல வருடிக் கொண்டிருந்தது. மெல்ல கண் விழித்தாள். செல்லமகள் பூவாய் அரும்பி புன்முறுவல் செய்ததை குளிர்ந்த பசும் ஒளி மேலும் அழகாக அலங்கரித்தது.

சரியாய் தினமும் 4.30க்கு விழித்துக் கொள்ளும் அம்மு குட்டியை அணைத்து பால் புகட்டினாள். வயிறு நிரம்பியதும் கண், காது, மூக்கு, கன்னம்…. என்று எங்கும் செல்ல மகள் தளிர்க் கரங்களை தவழ விட்டாள். அந்த சில நிமிடங்கள் வரலட்சுமியை தாய்மைப் பரவசம் நாடி நரம்பெங்கும் பரவி சிலர்க்கச் செய்தது. குழந்தை மீண்டும் உறங்கி விட்டது. இது வாடிக்கையாக நடப்பதுதான்.

அவள் சிரித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள். இப்பொழுது வேலையை ஆரம்பித்தால் தான் பதட்டம் இல்லாமல் எல்லா வேலைகளையும் இயல்பாய் செய்ய இயலும். வரலட்சுமிக்கு உடம்பு கச கசவென்று அசதியாய் இருந்தது. அவள் கணவனைப் பார்த்தாள். இன்ப கிளுகிளுப்பு முகத்தில் அரும்பியிருக்க மெய்மறந்து தூங்கிக் கொண்டு இருந்தான். வழக்கத்தை விட அரை மணி நேரமோ, ஒருமணிநேரமோ கழித்துதான் இன்று எழுந்திப்பான் என்பது அவளுக்குத் தெரியும்!

குளியல் அறைக்குச் சென்று குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி ஆசைத் தீர குளித்தாள். அசதி நீரோடு வழிந்து சென்றது. புத்துணர்வும், சுறுசுறுப்பும் உடம்பில் தொற்றிக் கொண்டது. பணிகளை குறுக்கீடு இல்லாமல் செய்வதற்கு வசதியான ஆடையைத் தரித்தாள்.

வீட்டின் முற்றம், சமையலறை மற்றும் முன்வாசலை சுத்தமாய் துடைப்பத்தால் பெருக்கினாள். முன்வாசலில் நீரைத் தெளித்து சிறிய கோலமிட்டாள். மாமியார் எழுந்தவுடன் கோலம் போட்டு இருக்கிறதா என்றுதான் முதலில் கவனிப்பாள். அப்படி கோலம் போடாமல் இருந்தால் அன்று முழுவதும் முகத்தை தூக்கி வைத்து கொண்டுப் பார்க்கும் பொழுதெல்லாம் எரிந்து விழுவாள்.

மாமியார் ஒரு ஆஸ்த்மா நோயாளி. அவளுக்கும் மாமனாருக்கும் எழுந்தவுடன் பில்டர் காப்பி போட்டுத் தரவேண்டும். இரவி கழுவாமல் ஒழித்த பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தி அடுக்கி வைத்தாள். கணவனுக்கு ஸ்டாராங்கான தேநீர் வேண்டும். ஸ்டாராங் சிறிது குறைந்தாலும் சிடுசிடுவென்று முகம் சுளிப்பான். அதற்குப் பிறகு அவளுக்கு சரியாக வேலை ஓடாது. மைத்துனருக்கும், மைத்துனிக்கும் கீரின் டீ தர வேண்டும். குட்டி பையனுக்கும், செல்ல மகளுக்கும் ஆர்லிக்ஸ் கலக்கி பருக வைக்க வேண்டும். இப்படி ஆரம்பமே ஒவ்வொருவருக்கும் ஒன்றாக இருக்கும். இரவுவரை இதே நிலைமையைத்தான் அவள் சமாளிக்க வேண்டும்.

அவள் குடும்பம் எட்டு நபர்கள் கொண்டது. மாமனாருக்கு மாரடைப்பு வந்ததால் மகனுக்கு கல்யாணம் பண்ணி விடவேண்டும் என்று தேடிப் பிடித்து வரலட்சுமியை மருமகளாக்கிக் கொண்டனர். ஆங்கில இலக்கியம் படித்த இவள் சில ஆண்டுகள் டைப்பிஸ்டாக வேலை செய்தாள். திருமணத்திற்கான மாப்பிள்ளை வீட்டார் நிபந்தனைகளில் கல்யாணமானால் வேலைக்கு செல்ல கூடாது என்பதும் ஒன்றாகும்.

காலை சிற்றுண்டியும், மதிய சாப்பாடும் செய்ய வேண்டும். கணவனுக்கு, வேலைக்குப் போகும் அவரது தம்பிக்கு, கல்லூரியில் படிக்கும் தங்கைக்கு தனித் தனியாக டிபன் பாத்திரங்களில் உணவை அடைத்துத் தர வேண்டும். மாமியார், மாமனார் சர்க்கரை நோயாளிகளானதால் தனியாக அவர்களுக்கு ஒட்ஸ் கஞ்சி தயாரித்துத் தர வேண்டும்.

எல்.கே.ஜி. படிக்கும் குட்டிப் பையனுக்கு தோசைதான் பிடிக்கும். காய்கறி கூட்டு, பொறியல் எதைச் செய்தாலும் இவனுக்கு இரண்டு நாளைக்கு ஒரு வேளையாவது உருளை கிழங்கு பொறியல் வேண்டும். ஏழுமணிக்கு கண் விழிக்கும் அவனை எட்டு மணிக்குள் அவன் போகின்ற போக்கில் சென்று, ஆடுகின்ற ஆட்டத்திற்க்கெல்லாம் ஆடி, தாஜா பண்ணி, குளிப்பாட்டி, சாப்பிட வைத்து சீருடை அணிய வைப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். மெட்ரிக் பள்ளிக்கு தெரு முனையில் எட்டு மணிக்கு வரும் பள்ளி பேருந்தில் மைத்துனர் அழைத்துச் சென்று ஏற்றி விடுவார். சில நாட்களில் அம்மா வந்தால் தான் போவேன் என்று பையன் அடம்பிடிப்பான். அடுப்பில் சமையலை கவனிப்பதா, குட்டிப் பையனை பள்ளி வாகனத்தில் ஏற்றுவதா என்பதில் வரலட்சுமி திக்கு திணறி திண்டாடிப் போய் விடுவாள்.

ஏழு முதல் ஒன்பது மணி வரை பரபரப்பாக பம்பரமாய் அவள் சுற்ற வேண்டும். அப்பொழுதுதான் வேலை தடங்கல் அற்று செல்லும். வீட்டிற்கு வந்த மருமகள் மாடாய் உழைக்கிறாள் என்று குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் அவளிடம் பரிவு காட்டுவார்கள். வெளி ஆட்களிடம் பெருமையாக சொல்வார்கள். ஆனால் ஒத்தாசை, உதவி என்றால் விலாங்குமீனாய் நழுவி விடுவார்கள். ஒரு தடவை உதவி செய்தால் எங்கே அந்த வேலையை அவர்கள் தலையில் கட்டி விடுவார்கள் என்ற பயம், சுயநலம்தான் இதற்குக் காரணம்.

அவள் இந்த வீட்டிற்கு வருவதற்கு முன் மாமியாரும், மைத்துனியுமே இந்த அனைத்து வேலைகளை செய்தனர். வீடு பெருக்கவும், சமையல் பாத்திரங்களை கழுவவும் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வேலைக்காரியை பணிக்கு வைத்திருந்தனர். வரலட்சுமி மருமகளாக வந்ததும் வேலைகாரியை நிறுத்தி விட்டனர். மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாரிடம் விரும்பிக் கேட்டு வாங்கியதில் வாஷிங் மிசின் முக்கியமானதாகும்! வாஷிங் மிசின் என்றாலும் அது தானாக அழுக்கான துணிகளை எடுத்து அதில் போட்டு, தானாக மின் பொத்தானை அழுத்தி கொள்ளுமா என்ன? வாஷிங்மிசினில் காலரில் அழுக்கு போக திரவத்தை தடவி அதில் போட்டு வரலட்சுமி ஒட விட்டாள். எல்லா வேலைகளை முடித்து நிமிர்கையில் மணி பத்தாகி விட்டது. அவசர அவசரமாய் காலை சிற்றுண்டியை முடித்தாள். வேளைக்கு சரியாக உணவு சாப்பிட்டால்தான் பால் சரியாக சுரக்கும். மகளுக்கு மேலும் கீழும் பால்பற்கள் முளைத்து விட்டது. சரியாகப் பால் வரவில்லையெனில் வெடுக்கென்று கடித்து விடுவாள்.

மகளை குளிப்பாட்டி புத்தாடைகள் அணிவித்தாள். மதியம் மாமனாருக்கு சூடான சாப்பாடு வேண்டும். அரிசியை ஊறப் போட்டாள். அதற்குள் செல்ல மகள் பசியில் சிணுங்கிக் கொண்டு அவளைச் சுற்றி வர ஆரம்பித்தாள். குழந்தையை மடியில் கிடத்தி அறையில் போய் அமர்ந்தாள்.

காலிங் பெல் அடித்தது.

"யாருன்னு…. பாரும்மா" என்று மாமியார் வேறு அறையில் இருந்து குரல் கொடுத்தாள். அவளால் சட்டென்று எழமுடியாமல் அளவிற்கு ஊதிப் போய் இருந்தாள்.

வரலட்சுமி கதவைத் திறந்தாள். அங்கு நீளமான நோட்டுகளுடன் கைப்பையுடன் நடுத்தர வயது பெண் ஒருத்தி வியர்த்து விறுவிறுத்து நின்று கொண்டு இருந்தாள். பள்ளி ஆசிரியையாக இருக்கும் என்று பார்த்ததும் தோன்றியது.

"வணக்கம்மா.. கவர்மெண்ட் டீச்சர்…. சென்சஸ்… மக்கள் தொகை கணக்கு.. எடுக்க வந்திருகேன்" என்றார் அந்த ஆசிரியை.

"கொஞ்சம் தண்ணி தாங்கம்மா…" என்று கேட்டாள்

இதற்குள் உள்ளே குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. ஆசிரியையிடம் தண்ணீர் தந்து விட்டு குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு சில நிமிடங்களில் திரும்ப வருதாக கூறி உள்ளே சென்றாள். குழந்தையை மாமியாரிடம் கொடுத்து விட்டு வந்தாள்.

பின் ஆசிரியை கேள்விகளுக்கு வரலட்சுமி பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

"வீட்டில் எத்தனை பேர்..?"

"எட்டு பேர்.. குழந்தைகளோடு சேர்த்து.."

"ஆண்கள் எவ்வளவு? பெண்கள் எவ்வளவு?"

அச்சடித்த நீண்ட தாளில் உள்ள வினாக்களை ஆசிரியைக் கேட்டுக் கொண்டே சென்றாள்

"மாமனார் வயது இன்னா..?"

"தொழிலா… வேலையா.."

"ரிட்டேயர்டு வாத்தியர்.. "

"அடுப்பில் பால் வைத்திருக்கின்றேன்.. அரிசியை குக்கரில் போட்டு விட்டு வந்து விடுகிரேன்.. இருங்க.."

வந்ததும் மீண்டும் கேள்விகள் தொடர்ந்தன

"கணவர் என்ன செய்கிறார்?"

"மாநில அரசாங்கத்தில் அக்கவுண்டட்…’

"சம்பளம் எவ்வளவு.."

சிறிது நேரம் யோசனை செய்து விட்டு.."சரியாய் தெரியாதுங்க.." என்றாள்.

"இந்த காலத்திலும்.. இப்படி இருகீங்கலேம்மா.. மாமனாரை கேட்டுச் சொல்லுங்க"

வரலட்சுமி உள்ளே போய் வந்தாள்.

"மைத்துனருக்கு… "

"சாப்ட்வேர் கம்பெனியில் வேலை…"

அதற்குள் குழந்தை இவளிடம் ஒடி வந்து விளையாட ஆரம்பித்தது….

"மாமியார் என்ன பண்றாங்க..?"

"சும்மா இருங்காங்க வீட்ல.."

குழந்தையின் தொல்லை அதிகமாகியது…

"இருங்க டீச்சர்..குழந்தைய மாமியாரிடம் தந்து விட்டு வருகிறேன்.." என்று மீண்டும் உள்ளே சென்று குழந்தையை மாமியார் பராமரிப்பில் விட்டு விட்டு வந்தாள்.

"….நீங்க வேலைக்குப் போறீங்களா..?"

சோகமான குரலில், "இல்லம்மா… சும்மாத்தான் வீட்ல இருக்கேன்.." என்று சொல்லிக் கொண்டே திடுமென நினைவு வந்தவளாக,

"சாரிம்மா… இட்லிக்கு கிரைட்டரில் அரிசி போட்டிருந்தேன்… அதை மறந்தே விட்டேன்…பார்த்திட்டு வந்திடுரேன்.."

மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியை கீழ்க்கண்டவாறு எழுதிக் கொண்டு சென்றாள்.

"பெயர்: வரலட்சுமி உறவு: மனைவி.."

வேலை: இல்லை/ஆம் என்ற பகுதியில் "நொ ஒர்க்.." என்பதை குறிப்பிட்டு, இல்லை என்பதனை சரி என்று பேனாவால் குறியிட்டாள். அதற்குள் அந்த ஆசிரியையின் செல்போன் மணி அடித்தது..

ஆசிரியையின் கணவர் பேசினார்..

"சாயந்தரம்…. பெர்மிசன் போட்டு விட்டோ..சொல்லி விட்டோ சீக்கிரம் வீட்டுக்கு போம்மா.. எல்லா வேலையும் அப்படி..அப்படியே கிடக்கு.. நா லேட்டா வருவேன்.. பங்க்‌ஷன் ஒன்னுக்கு போகனும்.. பையன் டியூசனில் கூப்பிடற‌தற்கு மறக்காம நீயே போயிட்டு வந்திடும்மா… மறக்காம நீ கேட்ட மதுரமல்லி வாங்கி வந்திடுரேன்ன்…" என்று பேசிக் கொண்டே சென்றாள்..ஆசிரியை பெருமூச்சு விட்டாள்.

பக்கத்தில் இருந்த சர்ச்சில் பகல் பன்னிரண்டு மணி அடித்தது.

"கர்த்தரே.. இவர்கள் தாங்கள் செய்வது என்ன தென்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியுங்கள்.. ஆமென்…" என்று கணீரென இறைவன் அறிவித்துக் கொண்டிருந்தான்!

*********

தொடர்புக்கு: கி.நடராசன் - 9840855078, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It