காதல்
ஒரு மோசமான வியாதி..
ஒவ்வொருவருக்கும்
விதவிதமாய் வந்துவிடும்..
ஒன்றைப் போலானதாய்
இன்னொன்று இருக்காது..
ஆரம்பத்திலேயே
அதன் அறிகுறிகளை
கண்டறிந்துவிட்டால்
குணமாக்க
நூறு சதவீதம் வாய்ப்புண்டு..
முற்றவிட்டுவிட்டால்
என்ன செய்தும்
யாராலும் காப்பாற்ற இயலாது..
மருந்திருந்தும்
குணப்படுத்த இயலாத
ஒரு மோசமான வியாதி..
இந்நோய்க்கான
மருந்து விசித்திரமானது..
ஒவ்வொருவருக்கும்
வேறுபாடானது..
பசி, தூக்கத்தில்
மாற்றமேற்படுவதே
முதல் அறிகுறி..
அப்போதே சரி செய்துவிட வேண்டும்..
முற்றிய நிலையில்
முற்றிலுமாய்
பசி, தூக்கம், வேலை
இன்னபிறவற்றையும்
செயலிழக்கச் செய்யும்..
இதற்கென
தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத
நிலையில்
எதிர்பாலரிடம் எச்சரிக்கை உணர்வும்
இதயத்தைப் பாதுகாத்துக் கொள்வதுமே..
தற்போதைய
தற்காப்பு முறையாக இருக்கிறது..
இதன் மூலம் தண்டோரா போட்டு
சொல்லப்படுவதென்னவென்றால்
காதல் எனும் வியாதி
வராமல் காத்துக் கொள்ளுங்கள்..
அறிகுறிகள் தெரிந்தால்
உடனே அக்கம்பக்கம் சொல்லி
அரற்றாமல்
தானே தீர்வு காணவும் முயலாமல்
தடுப்பூசி தேடி அலையாமல்
கிள்ளி எறியுங்கள்
சிறு தழும்போடு போய் விடும்..
முற்றிய நிலையில் உடலெங்கும்
உள்ளமெங்கும்
தழும்புகள் மட்டுமே
எஞ்சியிருக்கும்..
எச்சரிக்கை
இது ‘காதல்’ எச்சரிக்கை..
உயிரைப் பறிக்கும்
‘காதல்’ எச்சரிக்கை..
&&&&&&&&&&&&&&&&&&&&&&
நேற்றிரவு
உனதழைப்பையேற்க
இல்லச் சூழலும்
இதயச் சூழலும்
சரியாயிருக்கவில்லை..
ஏதேனும் ஒரு முடிவைச் சொல்
என வீட்டிலும்
இதுதான் என் முடிவென நீயும்
எனைத் துண்டாடிய போதும்
என் பயணத்தில்
யாதொரு மாற்றத்தையும்
புகுத்த விரும்பவில்லை..
மனிதனை வெல்லும்
சூழலைவிட
சூழலை வெல்லும் மனிதனை
நேசிக்கிறேன்..
அந்த நேசிப்பினூடே
சின்னஞ்சிறியதாய் துளிர்க்கிறது
இன்னுமாய் எனது வேர்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உன் இரவுகளில்
அனுமதியின்றி நுழைந்தமைக்காக
மன்னித்துவிடு..
என் இரவுகளை
நீ ஆக்கிரமிப்பு செய்ததற்கு
நன்றி..
உன் இமைகளை
வருடி திறந்தமைக்காக
மன்னித்துவிடு..
என் இதழ்களில்
தவழும் புன்னகையில்
தடுமாறியதற்கு
மன்னித்துவிடு..
என் இதழ்களில்
சிறிதளவேனும் புன்னகை தந்தமைக்கு
நன்றி..
உன் வார்த்தைகளை
என் வசதிகேற்றவாறு புரிந்துகொண்டதற்கு
மன்னித்துவிடு..
என் வார்த்தைகளை
நான் உதிர்க்காத போதும் புரிந்ததற்கு
நன்றி..
உன் அன்பினை
ஆயுள்வரை கேட்டு அடம்பிடித்தமைக்கு
மன்னித்துவிடு..
என் அன்பினை
கண்ணீர் வெள்ளமாக மாற்றியமைக்கு
நன்றி..
உன் ஆளுமையில்
நானறியாது வசப்பட்டதற்கு
மன்னித்துவிடு..
என் ஆளுமைகளின்
மொத்த வெளியிலும் நீ தெரிவதற்கு
நன்றி..
ஒருமுறை உனக்கு
உச்சபட்ச வலி தந்தமைக்கு
மன்னித்துவிடு..
தினந்தோறும் எனக்கு
வலியின்றி வேறெதுவும் தராமைக்கு
நன்றி..
நிகழ்காலத்தைப் பற்றி
உன்பின்னே அடிதொடர்ந்தமைக்கு
மன்னித்துவிடு..
இறந்தகாலத்தைப் பற்றி
எனதன்பினை ஏற்றுக்கொள்ளாமைக்கு
நன்றி..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஒரு இதயத்தின் துடிப்பை
நிறுத்த அதிக பிரயத்தனம்
செய்ய வேண்டியதில்லை..
அதன் நம்பிக்கையின் முனையில்
சற்றே ஒற்றைச் சொல்லால்
உராய்த்துச் செல்வதே
போதுமானது..
ஒரு மகிழ்வின வேரை பிடுங்க
அதிக முயற்சி தேவையில்லை..
அதன் பூக்களின் இதழ்களை
சற்றே காலடியில் மிதித்துச்
செல்வதே போதுமானது..
ஒரு மரணத்திற்கான
வரவேற்பிற்கு
எப்போதும் அதிக முயற்சியும்
பிரயத்தனமும் தேவையாயிருப்பதில்லை..
ஒரு பிறப்பிற்கான கடும்முயற்சியையும்
நம்பிக்கையையும் போல்..
- இவள் பாரதி (