வேலையும்
ஊதியமும்
ஒரே மாதிரிதான்
எனினும்,
ஒரே மாதிரியல்ல
நீயும் நானும்.

கட்டாயத் தாலிக்கு
கட்டுப்பட்டு
குடும்பப் பெண்ணாகிவிட்ட
நிலையில் இருக்கிறேன்
ஒரே நிறுவனத்தில்
உன்னோடு நான்.

நமது
அதிகாரியின் முன் நின்று
அவர் புகழ்பாடிச் சிரிப்பதிலும்
அவர் பின் நின்று
புறம்பேசி மகிழ்வதிலும்
உன்னுடன் போட்டியிட்டு
ஒவ்வொரு முறையும்
தோற்றுக் கொண்டிருக்கிறேன்
கடந்த ஐந்து வருடங்களாக.

உன்னுடன்
பயணப்பட வேண்டிய
கட்டாயச் சூழல்களில்
உனது குணப்பிறவியாகவே
என்னையும் பார்க்கிறார்கள்,
பொது இடத்து நாகரீகமற்ற
உனது வார்த்தைகளைக்
கேட்ப்பவர்கள்.

உன்னோடு காணப்படுவதால்
என்னையும் குறைத்து மதிப்பிடும்
பெண்களிடம்
எப்படி நான் விளக்கித் தொலைப்பது
நீயும் நானும்
வேறு வேறூ என்று.

உனைக் குறித்த
எனது வேதனைகளின்
சிகரமாக,
உன்னல் என் நெஞ்சில் ஊறும்
கசடு துப்பி
'உடன் பணியாற்றுப்பவர்'
என்று நான் சொல்வதற்குள்
நீ முந்திக் கொண்டு
என்னை அறிமுகம்
செய்கிறாய்
'இவர் என் நண்பர்' என்று.

ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It