Houseசருகுகளான 'நினைவுகளில்':
பச்சையம் இழக்கா முதல் வீடு.
தோட்டக்கால் மண்ணில் 'கால்' அறுத்து
மூச்சுக்காற்றில் முகம் தேய
செங்கற் சூளைக்கு மரங்கள் தேட
காய்த்துக்குலுங்கிய புளியமரமும்
களையெடுத்த பனைமரங்களும்
சாம்பலானது.
சுபமுகூர்த்தத்தில் சூளைபிரிக்கவும்
மனைகோலவும்
சுத்த வாக்கிய தம்பிரான் மொழி.
உள்ளூரில் கிணறுகள்
கட்டிப் பழகியிருந்த
சின்னச்சாமி வகையறாக்கள்
உதவிக்கு வந்த ஓரிருமாதங்களில்
தெருவைப்பார்த்த
முதல் வீடு - அப்பாவீடு.
அடுப்படியில் அம்மாவின் குரல்
தெருத் திண்ணையில்
அப்பாவின் குரல்,
'உச்சு'கொட்டும் அவர்
சகாக்களின் குரல்
இடப்புற இருட்டறை
இடைக்கிடைத் துப்பும்
'பாட்டி'யின் குரல்
பின்னிரவு பூனையின் குரல்
முன்னே கிரீச்சிடும் எலியின் குரல்
தூண்களான தோட்டத்துமரங்களில்
தொட்டால் உதிரும் புள்ளினக்குரல்கள்.
அம்மா: கோ(டி)ட்ட பால், மோர் கணக்கு
அடுக்களை முதுகு,
மஞ்சள்குங்குமம் தின்று
செரிக்காத நடுவீடு,
முருங்கைகீரை சாம்பார் மணம்.
காலம்: கட்டிய சிலந்தி குளவிக் கூடுகள்
பலியுண்ட மூட்டை பூச்சிகள்
உடலொட்டிக் கிடக்கும்
உதிராதச் சிவப்பு சிந்திய
மஞ்சள் சளியின் முதிராத கறுப்பு.
அக்கா: தலைச்சன்பிள்ளைக்காக
தூலத்திலிட்ட கூறைப்புடவை தூளி,
மூத்திரவாடை, முலைப்பால் கவிச்சை.
அப்பா அம்மா நிழல் விளையாட்டைக் கண்ட
விளிம்பு இரவின் விழிப்பு,
இருபாலரையும் அருவருத்த இரண்டாம் நாள்.
காரணம் சிலிர்க்க மறைவில் குறியை விறைத்து....
கனவுற்ற வீடு

நிழலும் 'நானு'மாய் பறந்து மாய்ந்து
இறக்கைகள் குறைத்து பூமிக்கு வீங்கி
ராஜஸ்தான் மார்பிள், பிரெஞ்சு விண்டோஸ்,
கார் நிறுத்த போர்டிகோ,
குளிரூட்டிய அறை,
அட்டாச்டு பாத்ரூம்...
மனைவி பிள்ளைகள் சூழ
மனையில் உட்கார்ந்து
கிரகப்பிரவேசம்.
மறுநாள் தெருக்கதவில்
'வாடகைக்கு விடப்படும்'
பிறந்தமண் புது வீடு

கால மக்மாவில் கரியும் ஆயுள்
காதோரம் நரைக்கும்
அக்கரைப்பச்சைகள்
நிகழ்காலத்தில் தளும்பும்
கடந்த காலத்தின் கானல் நீர்
கால் இடற படிகள் ஏறவும்,
கை நடுங்கத் தீ மூட்டவும் - பால்காய்ச்சவும்
அலையும் 'இருப்பு'.
நாணல் வீடுகள்
கனவிடைத் தோயும்

நாகரத்தினம் கிருஷ்ணா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It