கீற்றில் தேட...


child labourகையேந்துபவர்கள்
அலைக்கழிக்கப்பட்ட
துயரத்தின் வெம்மைதான்
இந்த முடிவு நோக்கி
உன்னை நகர்த்தியிருக்கக் கூடும்

சிவப்பு ஒளிரக் காத்திருந்து
ஓடுகிறாய் வாழ்வில்
பயணிக்க வக்கற்ற
வாகனங்களின் பின்னே

பிஞ்சு ரேகை தேயுமளவு
அழுந்தத் துடைக்கிறாய்
எப்போதும் போகாத
கறையுடைய முதலாளிகளின்
வண்டிகளை

உழைப்புக்குக் கூலி கேட்டு
ஒடுங்கி நிற்குமுன்னை
உயிரோடு விடுவதே பெரிதென்று
பறக்கிறார்கள்

பத்தில் ஒருவரிடம்
மனிதம் மலரும் சித்தம் குறித்து
மகிழ்வதற்குள்ளாகவே
நிகழ்ந்துவிடுகிறது
தரைக்குச் சில்லறை வீசி
மீண்டும் உன்னை
அவர்கள் பிச்சைக்காரனாக்குவது

விலக நினைத்தாலும்
உன்னைத் திரும்ப அடைக்கும்
வாழ்வின் கொடூர சிறை குறித்து
வேறென்ன சொல்ல


மாறன்