
நிறைமாத கர்பிணியாய்
நிற்கிறது உன் நினைவுகள்..??
தொடங்க முடியாமலேயே
தொலைந்து போகிறது
என் தைரியம்..
உன்னை
பார்த்த நாள் முதல்
பந்தயக்குதிரையாய் மனது
முன்டியடித்து வந்தாலும்..
வார்தைகளேதுமில்லாமல்
வற்றிப்போகிறது
என் வாலிப நதி ..!!
தோழிகளின் நச்சரிப்பால்
உனக்கொரு கடிதம் எழுத
எழுதுகோலை எடுத்த போது
வெட்கம் என் விரலை
வெடுக்கென்று கிள்ளியது..!
தூக்கமில்லாமல்
துடிக்கும் ராத்திரிகளின்
இன்ப அவஸ்தைகளை ..
தலையணையோரம்
தவமிருக்கும்
என் தாவணிக் கனவுகளை
எப்படிச் சொல்வேன்..??
உனக்கென்ன காதலா..
அசுர வேகத்தில் வந்து
ஆட்படுத்திவிட்டாய்..
ஆனால் நானே
பதில் சொல்லத்தெரியாத
பச்சிளம் குழந்தையாய் ..!
உன் கண் பார்த்து
என் காதலை சொல்ல
தைரியமில்லை எனக்கு..!
தெருவில் நான்
போகும்போது தெரிந்து கொள்..
விளக்குக் கம்பத்தின்
வெளிச்சத்தில்
விட்டுப்போகிறேன் என் காதலை
தவற விட்ட
என் கைக்குட்டையில்
தலைப்புச்செய்தியாய்..!!
- அபிரேகா