
வெயில் அங்கி
உடல் கன்றிச் சிவந்து
ஒளி குடிக்கும் தாவரம்
சிறு களைகொத்தியுடன்
தன் நிலம் திருத்தித் தவழும்
உடல் சுக்கென
வற்றி வதங்கிய
பெருந்தெய்வமென்
அன்னை
பனை தாங்கும்
வெப்பம்
தான் தாங்குமவள்
சரீரம் பூத்த
வியர்வையையும் விடாமல்
நக்கி உறிஞ்சும்
கொடுஞ் சூரியன்
கைக்குக் கிடைப்பானெனில்
இவ் அரிவாளால்
துண்டு துண்டாக
வெட்டித் தரிப்பேன்
ஒரு சுள்ளி போலே
- வே. ராமசாமி