
இடம் தேடி
தவித்துக் கொண்டிருந்தேன்
ஆறுதலாய் அழைத்தது
உன் கதவு
வரவேற்று அமரவைத்து
உள்ளறைக்குச் சென்றாய்
என் சட்டைப் பையில்
துழாவ ஆரம்பித்தான்
உன் மகன்
முடிக்கற்றையை கத்திரியால்
சீர்படுத்தினாள் மகள்
என்னை முன்னிறுத்தி
நிகழ்ந்த
சமையலறைச் சண்டை
கேட்காவண்ணம்
காதைக் கழற்றி
வைத்தேன் தனியே
ரொம்ப நேரம் கழித்து வந்து
குவளை நீட்டிக் கேட்டாய்
‘தனிமை கிடைத்ததா?’
‘உலகின் இரைச்சலான இடம்
ஒரு குடும்பம்’ என்கிற கசப்பு
உன் காபியின் அடியிலேயே
பதிலாய்த் தங்கியிருந்ததை
அறிந்திருக்கவில்லை நீ.
- மாறன்