
புணர்தலுக்காய்
சதாகாலமும்
பிரக்ஞையின்றி
அலைந்துகொண்டிருக்கும்
நதி.
நுங்கும் நுரையுமாய்
பொங்கும்
உணர்வுக் கெழுத்திகள்
தாவிக்குதிக்கும்
சதையென
நதி.
இலையுதிர்கால சருகுகளால்
மேனி மாசடைய
வசந்தகால மலர்களால்
மீண்டும் மெருகாகும்
நதி.
வறட்சியின்
உச்சம் சுடுகையில்
மடி வற்றி
காம்புகள் காய்ந்திடினும்
மழை நாவின்
மோகக்கிளர்வால்
அமிழ்து கொள்ளும்
விரிந்த முலையென
நதி.
ஆயுள் கரைத்த
சாம்பல்களும்
அழுகிய வாழ்க்கையின்
வாடைகளும்
கரையோர துரோகங்களும்
காற்றின் ரகசிய முத்தங்களும்
தூண்டில் குறிகளும்
துர்தேவதைகளும்
கற்பினை நெருங்கிடினும்
கண்ணகியாய்
நதி.
நதிமூலம் யாதெனில்
நகர்தல்.
கடல்மூலம் யாதெனில்
கவர்தல்.
கடல்நதி கலப்பு
சாசுவதம்.
சங்கமித்தலே
உலகச்சக்கரம்.
- நெப்போலியன்(