
மெல்ல ஆழ்கிறேன் சாந்தத்தில்
யார்மீதும் புகாரற்று விடிகிறது பொழுது
சேகேறிய மரத்தின் கிளைகளாய் விரிந்தோடி
பிரபஞ்சத்தையே தழுவ நீளும் என்கரங்களை
தோள்பட்டையிலிருந்து தசைகிழிய முறித்து
பின்புறமாய் நெறித்துக் கட்டிய
ஜென்மாந்திர எதிரிகளிடம் புன்னகைக்கிறேன்
ரோஷங்கெட்டவனென்று
கெக்கலிக்கின்றனர் அவர்கள்
இயல்பாய் புன்னகைப்பதும்
வலிந்து கெக்கலிப்பதும்
அனிச்சையாகிவிடுகிறது பகல் இரவுபோல
ரத்தமல்லாத வேறொன்றாய்
உள்ளிருந்து முடுக்கும் வன்முறையில்
அவர்களே
அவர்களுக்கு தளைபூட்டித்
தவித்த பின்னொரு நாளில்
மதில்தாண்டி விடுவிக்கப்போன என்னிடம்
புன்னகையோ கெக்கலிப்போ
மிஞ்சியிருக்கவில்லை
நானும் அவர்களும் இல்லாததைப்போலவே.
- ஆதவன் தீட்சண்யா (