
பிச்சை கேட்குமிவன்
நிச்சயமாய் கேட்பது
ஒருநேர உணவு அல்ல
எழுதாத காகிதத்தின்
ஏக்கத்தின் சாயல் போல
விடியாத இரவு அதன்
விழிபூத்த சோகம் போல்
தாகத்தின் வேதனையை
தனக்குள்ளே புதைத்து
தவிக்கின்ற உள்ளத்தின்
தகிப்புக்கு தணிப்பு வேண்டி
வீடுதோறும் வாசலிலே
வரம் கேட்கும் இவன்
வித்தியாசமான ஒரு
விசித்திரப் பிச்சைக்காரன்
வயிற்றுக்குப் பசியென்று
வாடி அவன் நிற்கவில்லை
வாட்டும் கேள்விகளினால்
விழையும் அறிவுப்பசிக்காக ....
முகத்தில் தாடியுடன்
மூளையில் கேள்வியுடன்
முழுநாளும் அலைகின்றான்
முட்டாள்கள் உலகினிலே
தானாக விழுந்த விதை
தரம் பார்த்து விழுவதில்லை
தரணியிலே பிறக்கையிலே
தகுதி சேர்ந்து பிறப்பதில்லை
முக்கோண வடிவத்தில்
முடிக்காத பக்கம் ஒன்று
முழுமதியின் பரப்பினிலே
மிதக்கின்ற களங்கம் போல்
பிச்சைக்காரன் தான் அவன்
புரியாத உலகத்தில்; என்றுமே
பசிக்கு பிச்சை கேட்கவில்லை
பாஷைக்கு ஓசை கேட்கின்றான்
- சக்தி சக்திதாசன். (