கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்..
கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள்…
படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள்…
பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந் நிகழ்ச்சிகள்…

என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில்…
எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில்…
சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ!..
செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?...

வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ!
வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ!
ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்பதெலாம் உண்மையோ?...
ஒருமரத்துப் பறவைகட்கு முடிவிலாத கொடுமையோ?...

இந்தியனாய்ப் பிறந்ததனால் தமிழனுக்கு மௌனமா?
இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்கு மரணமா?
கண்திறந்து பார்க்க, இங்குத் தமிழனுக்கே வருத்தமா?
கனன்றெழுந்து கடிந்துரைக்கத் தலைவர்கட்கும் தயக்கமா?

மாடுமனை வீடிழந்து மறுகி வெந்து சாவதோ?
மண்டபத்து அகதிமுகாம் அடிமைமுகாம் ஆவதோ?
தேடிவந்த சோதரரைத் தேற்றுவதும் குற்றமோ?
தேசபக்தி பேசுவோர்கள் சிங்களர்தம் சுற்றமோ?

மண்மூடிப் போகுதடா மறத் தமிழன் குடிசைகள்..
மாற்றுவழி கேட்குதடா புத்தனின் அகிம்சைகள்…
கண்மூடித் தாக்குதடா காடையனின் முப்படை…
கௌதமனே, உன் மதத்தைக் கழுகுவசம் ஒப்படை!

சர்வதேச நாடுகளும் தமிழருக்(கு) இன்(று) எதிரடா!
சமாதானம் என்பதெலாம் கடைந்தெடுத்த புதிரடா!
பர்வதம்போல் பேச்சின்றிக் கிடப்பது பாரதமடா…
பைந்தமிழர் கண்களிலே வேண்டுதல் விரதமடா!....

எதைப் புகன்றும் தமிழர்மீது பரிவு இல்லை, பாரடா!
எந்த மன்றம் இவர்களுக்குத் தீர்ப்பு கூறும்? கேளடா!
இதைவிடவும் தமிழனுக்கு என்ன உண்டு தீங்கடா?
இரக்ககுணம் பூமியிலே எங்கிருக்கு? போங்கடா!...

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It