warஇலையுதிர் காலங்களைக் கடந்து
எங்களின் வாழ்வு பயணிக்கிறது...

வளைந்து போகும் நதியில்
தொலைந்து போகும்
சருகுகளைப் போல் எங்களின்
கடந்த காலங்கள் போகட்டும்....

தமிழனின் புராணங்களில்
இருக்கும் வீரப்புதல்வர்களின்
வீர வரலாறுகள் போல் எங்களின்
விடுதலை வரலாறு எழுதப்படட்டும்...

எங்களின் உயிர்நெய்த வாழ்வின்
எழுத்துவடிவத்தை எதனாலும்
அழித்துவிட முடியாது....

புண்பட்டுப் போன இதயங்களின்
மனக்குமுறல்களில் இருந்து
இடையிடையே கவிதைகள் பிறக்கும்
இவையும் எங்களின் வரலாற்றில்
புனையப்படும் ஒரு பக்கத்தில்...

மனதின் கனதியில் இருக்கும்
ஊர் பிரிந்த அவலத்தில்
தேர் இழுத்தோம் வடம்பிடித்து
மேடுகள் கடந்து தீயினில் குளித்து
காலங்கள் நகர்கிறது எங்களின்
இலைத் துளிர் காலத்தை நோக்கி....

இப்போது
மழை எங்களின் காட்டில்
விழுகின்ற குண்டுகளோ
எங்களின் வீட்டில்?
பூக்கின்ற பூக்களோ
ஆயுதக் கரங்களோடு தங்களின்
வீடுதலையைக் கேட்கின்றன...
யார் கொடுப்பார்?

ஆல்பர்ட் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It