ஏங்காத மனமரம்.
பொன்மஞ்சள் பூக்களும்
மெல்லிலைத் துளிர்த்தலும் அற்று.....
கொஞ்சம் நடந்தால்
கால் நனைக்கும் கரையுடைத்த
நீல நதியே
நினை நான் கண்டு பலநாள்.
நலம் வாழ்க!
இப்போதெல்லாம் நின்
சலசலப்பில்
சிலுசிலுக்குதில்லையே
என் நினைவுநதி.
புறந்தள்ளலில் பொசுங்காமல்
பொற்பூக் கொண்டையாட்டும்
புற்செடிகளே புலர்க!
ஒரு வழமையிதுவென நான்
ஒதுங்கி நடக்கையிலும் கூட.
இதோ.....
தீய்ந்த பாலாய்க் மணக்கிறது
முன்னொருனாள்
சுழித்துப் பிரவகித்திருந்த
கவிதைப் பாற்கடல்.
விரல்களின் முகநுனிகளில்
இன்னமும் ஒட்டியுள்ளன
எழுதுகோலால்
சொட்டப்படச் சோம்பலுற்ற
வார்த்தைகளின் பொன் துகள்கள்.
வண்ணத்திகளின்
அழகிய இறகுகள் தைக்காத
இந்த மனசினால்
இப்போதெல்லாம்
வானவில்லிலோ அன்றி
வெள்ளி மழைக்கம்பிகளிலோ
தூங்கியாடமுடியுதில்லை.
வாழப் புகுந்த நகரம்
தனது சகல சவால்களுடனும்
தலையில் விழுந்து கிடக்கிறதே
அதனால்.
- சாரங்கா தயாநந்தன்