தார்ச்சாலையின் காதல்நான்
இருளின் நிறத்தில் கரைந்துநிற்கும்
அதன் யெளவனம்
என்னைக் கிளர்வூட்டுகிறது
பிசிறுநீக்கிய ஓவியத்தின் நளினமென
அடர்மரங்களோடு நெளிந்துசெல்லும்
அதன் உயிரோட்டம்
என் பருவங்களை உடைக்கிறது
தன்னை நகர்த்தாமல் என்னை நகர்த்தும்
மாயத்தோற்றம்
கண்களைக் கூசப்பண்ணுகிறது
அருகமைந்த அறைக்குள்ளிலிருந்து
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
குளிர்ந்த மழையில்
அது வெற்றுடம்போடு குளிப்பதை
வெப்பத்தில் உடலுலர்த்திக் கொள்வதை
உயிர்களை விழுங்குகையில்
ஆண்வாசனை வீசுமதன்
நடுக்கமுற்ற மார்பில் முத்தமிடுகிறேன்
அளவுகூடிய மின்கசிவாய்
என் உதடுகளில் பரவுகிறது
தார்ச்சாலையின் ஊமைவலி.


சுகிர்தராணி
Pin It