உதறிச் செல்..
உதாசீனப்படுத்து..
எடுத்தெறி..
எதிர் நின்று கொல்..
கைவிடு..
கடந்து போ..
விட்டொழி..
விரட்டியடி..
இத்தனைக்கும்
தாக்குபிடித்தால் பற்றிக் கொள்..
ஒருவேளை அந்த நேசம் உனக்காகவே
படைக்கப்பட்டிருக்கலாம்..
--------------
வேறெதிலும்
பதிய மறுக்கும் கவனம்
முழுமையும்
சுற்றி வருகிறதுன்னை..
கொஞ்சம்
ஆற்றுப்படுத்திச் செல்லேன்..
நானும்
என் நேசமும்
இம்மியளவேனும்
நலம் பெற..
-----------------
திட்டமிடப்படாத
பயணத்தில்
களைப்படுகிறது என் தேடல்..
வகைப்படுத்த இயலாத
முயற்சிகளின் எத்தனிப்புகள்
நின்றபாடில்லை..
தேற்றுதலில்லாத
உழைப்பின்
ஒவ்வொரு சொட்டும் உலர்கிறது..
உன்னுடனான பொழுதுகளில்
அனிச்சையாய்
எழுந்து மறைகிறது
ஒரு முடிவுக்கான சமரசமும்..
ஒரு தொடக்கத்திற்கான ஒப்பந்தமும்..
-----------------------------
அனுமதி
மறுக்கப்படும்
உன் தனிமைக்கு..
அனுமதித்தும்
ஆர்ப்பரிக்கும்
உன் அமைதி..
இரண்டுமற்ற பொழுதுகளில்
உன் நினைவிலறைந்து போகும்
எனது வார்த்தைகள்..
"பிறிதொரு ஜென்மம் இல்லை..
வாழ்ந்து விடலாம் இக்கணமே"
- இவள் பாரதி (