உன்னைச் சந்திக்க கிளம்புகையில்
வாழ்வதற்கான பெருவிருப்பத்தோடு
இறங்கி நடக்கிறேன் சாலையில்..
என் அறையில் அணைக்க மறந்த
பண்பலையில் பைரவி ராகம்
கசிந்து கொண்டிருந்தது..
எதிர்வீட்டுத் தொட்டிச்செடியில்
இரண்டு பூக்கள் மலர்ந்திருந்தன..
வலதுபக்கத்தின் ஐந்தாவது வீட்டில்
குழந்தைகளின் சிரிப்பு சத்தம் கேட்டது..
தெருமுனையில் பிச்சைக்காரன் ஒருவனுக்கு
உணவளித்தாள் மூதாட்டி ஒருத்தி..
மூன்றாம் தெருவைக் கடக்கையில்
தாய்நாய் தன் குட்டிகளுக்கு
பாலூட்டியபடியிருந்தது..
உன்னை சந்தித்த பின்
மரணத்திற்கான யோசனையோடு
வீடு திரும்புகிறேன்..
தன் குட்டிகளிலொன்றை
விழுங்க முயற்சித்தபடியிருந்தது
தாய்நாய் மூன்றாவது தெருவில்..
அந்த மூதாட்டி பிச்சைக்காரனை
விரட்டினாள் தெருமுனையில்..
குழந்தைகளின் அழுகுரல் காதைக் கிழித்தது
இடது பக்கத்தின் ஐந்தாவது வீட்டில்..
பூக்களின் இதழ்கள் உதிர்ந்து கிடந்தன
எதிர்வீட்டுத் தொட்டிச் செடியில்..
எனது அறையிலிருந்த பண்பலையில்
முகாரிராகம் பாடிக் கொண்டிருந்தது..
=======
உனது காலம் முழுமைக்கும்
உடன் வர விருப்பப்பட்டனேயன்றி
வேறொன்றும் பெருங்குற்றம்
புரியவில்லை..
உனது தீரா அன்பின்
வெப்பத்தில் பயணிக்க துணிந்தனேயன்றி
வேறொன்றும் பாவச் செயல்
செய்யவில்லை..
உனது குறும்புன்னகையின்
சிதறல்களை ஆயுளுக்கும் சேர்க்க
முயன்றதேயல்லாமல்
வேறொன்றும் தீமையினை
நினைக்கவில்லை..
எனது செல்கள் அனைத்திலும்
ஊடுருவிய உன்னை
ஒளித்து வைக்க
உன்னையே நாடியதை தவிர
வேறொன்றும் அறியேன் பராபரமே..
=======
இருளுமென் பூமியைச் சுற்றி
வட்டமிடுகிறதுன் பார்வை..
காடடர்ந்த பகுதியில்
ஒளிந்திருக்குமென் நேசத்தை
தேடியலைகிறதுன்
காலம் தவறிய ஞானம்..
யாருடைய அச்சுறுத்தலுக்கும்
மித மிஞ்சிய அன்பிற்கும்
அடிபணியாத
என் ஆசைகளை
மரக்குகைகளுக்குள்ளும்
நதியினடிக்குள்ளும்
மறைத்திருக்கிறேன்..
நீயும் கூட அறிந்திராத
அப்பாதைப் பரப்புகளை
குறியீடுகளால் விளக்கவும்
செல்லும் வழிகளிலுன்
தாகம் தீர்க்கவும்
நிலப்பரப்பில் விட்டு வந்திருக்கிறேன்..
குருதி கொட்டும் காலடித் தடங்களையும்..
சுரந்தபடியிருக்கும் சில சொற்களையும்..
=======
சிறு ஓவியத்தையொத்த
நமது பயணத்தில்
கண்ணில் தென்பட்ட
அத்தனை வண்ணங்களையும்
குழைத்துப் பூசியிருந்தோம்..
கடலும், வானும் தோற்றுப் போகும்
நீலத்தில் நெருக்கத்தையும்
தும்பையும், நிலவும் பின்வாங்கும்
வெள்ளையில் தூய்மையையும்
குருதியும், ரோஜாவும் வெட்கப்படும்
சிவப்பில் சிந்தனையையும்,
கருவிழியும், இருளும் கண்டறியாத
கருப்பில் இரகசியங்களையும்
கதிரவனும், சூரியகாந்தியும் பார்த்திராத
மஞ்சளில் தெளிவினையும்
புல்வெளியையும், அடர்காடுகளையும்
மிஞ்சும் பச்சையில் விருப்பங்களையும்
சேர்த்து வரைந்த
ஓவியத்தையொத்த காட்சியை
இதுவரை பாதுகாத்து வருகிறோம்..
யார் கண்ணும் பட்டுவிடாமல்..
========
சில கனவுகளைச் சொல்லியும், சொல்லாமலும்
சில கவிதைகளை எழுதியும், எழுதாமலும்
சில வார்த்தைகளைப் பகர்ந்தும், பகராமலும்
சில இரவுகளைக் கொடுத்தும், கொடுக்காமலும்
சில கோபங்களைக் காட்டியும், காட்டாமலும்
சில சோகங்களை வெளியிட்டும், வெளியிடாமலும்
சில ரகசியங்களை மறைத்தும், மறைக்காமலும்
சில ஏக்கங்களைக் கூறியும், கூறாமலும்
சில நேரங்களைச் செலவிட்டும், சேமித்தும்
சில வலிகளைத் தாங்கியும், தாங்காமலும்
சில விருப்பங்களை அறிந்தும், அறியாமலும்
நகருமென் பொழுதுகள்
சில சமயங்களில் பிறப்பதும், மரணிப்பதுமாய்..
=========
-இசை பிரியா (