ஆண்டுகள் பல கடந்த பின்
நிகழ்ந்த எதிர்பாராத சந்திப்பு அது.
கடைசியாக
பர ஸ் பரம் சொல்லிக்கொண்டு
பிரிந்த பின்
சொல்லிக்கொள்ளாமல்
கூடும் முதல் சந்திப்பு இது.
உனக்கும் எனக்குமிடையான
இடைவெளியில்
அமர்ந்திருக்கும் காற்று
மௌனத்தை
மெல்ல மெல்ல அறுத்தது
ஏதாவது பேசுங்கள் என்று.
பேசிப் பேசி
நாம் பொழுது கழித்த தினங்களில்
முகம் பார்த்து கள்ள மௌனம்
பேசியவர்களின்
மொழிகளைப்போல
சொற்கள் ஏதுமற்று அமர்ந்திருக்கிறோம்.
எப்படி துவக்குவதென்ற
முன் தயாரிப்புகள் ஏதுமில்லாவிட்டாலும்
இருவரின் உதடுகளிலும்
அமர்ந்திருக்கும் சொற்கள்
எதுவாக இருக்கும் என்ற
துடிப்பில் மேலும்
கொஞ்சம் கோபமாக வீசுகிறது காற்று
வானில் இருந்து
இறங்கி வந்த தேவமகனைப்போல
இறங்கி வந்தது மழை.
மௌனத்தை மேலும் அறுப்பது போல
இடித்துக்கொட்டும் மழைத்துளியை
உடைத்தவாறு
சொற்கள் உதிர்க்காமல்
பிரிகிறோம்
இனிமேல் சந்திக்கக்கூடாது
என்ற ஒப்பந்தத்தோடு . . . .
யாருமற்ற பெருவெளியில்
பெய்து கொண்டிருக்கும் மழை
இனிமேல் கதைத்துக்கொண்டிருக்கக்கூடும்
நாம் அமர்ந்திருந்த இடத்துடன்.
- ப.கவிதா குமார் (