ஆகாய வெளிக்குள்
அகவும் அரூபக் குரலில்
அத்திப்பூ குலுங்கல்
ஆற்று மேட்டு அந்தியில்
அழகோவியம் யாருக்கோ

*
நேரம் கிடைத்தால் பேசுவது
காற்றோடு போகும்
நேரம் ஒதுக்கி பேசிப் பார்
மூச்சோடு தங்கும்

*
கலவியில் மட்டுமல்ல
கவிதையில் கூட
சத்தம் போடுவதில்லை
பெரும்பான்மை பெண் கட்டில்

*
கவிஞர்கள் கையில் மாட்டிக்கொண்ட
தேநீர்க் கோப்பை
வேடன் கையில் அகப்பட்ட
கழுத்து போலவே இருக்கிறது

*
தேகமற்ற புரிதலைக் கொள்ள
தேகமே துணை
யாவுமற்ற நாளைக் கொள்ள
நானுமற்ற நானே துணை

*
சட்டென உள் நோக்கி
குவிந்து கொள்தல்
தேவையாய் இருக்கிறது
மொழியற்ற மௌனம் தான்
எத்தனை தீவிரம்

- யுத்தன்